’சூப்பர்’ சோகம் : நியூஸிலாந்து கிரிக்கெட்

நடந்து முடிந்த நியூஸிலாந்து-இந்தியா கிரிக்கெட் தொடர்பற்றி என்ன சொல்வது? இந்தியா, கடந்த மாதம் நியூஸிலாந்தின் கரைகளில் வந்து இறங்குகையில், யாரும் டி-20 தொடரில் இப்படி ஒரு முடிவை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். 5-0 – இந்தியாவின்  வெற்றி. இந்த மார்ஜின் இந்தியர்களுக்கே ரொம்ப ஓவராகத்தான் தெரியும்! அப்படி என்ன மோசமான அணியா நியூஸிலாந்து என்றால், இல்லை என்பதே உடனடியான பதில். கடைசி மூன்று போட்டிகளில் கருப்புத்தொப்பிகளுக்கு என்னதான் ஆனது? உலகக் கோப்பையில் இங்கிலாந்திடம் தோற்றது(? )- இங்கிலாந்து வென்றதாக பலர் இன்னும் நம்ப மறுக்கின்றனர் என்பது கிரிக்கெட்டின் மர்மக்கதை- இன்னுமா அந்த சோகம் உளவியல் ரீதியாகப் பீடித்திருக்கிறது நியூஸிலாந்தை?சந்தேகிக்கவேண்டியிருக்கிறது.

Kane Williamson & Virat Kohli

விராட் கோஹ்லியின் இந்தியா முதல் இரண்டு டி-20 போட்டிகளில் வென்றதும், மூன்றாவது போட்டியில் நியூஸிலாந்து, செமயாகத் திருப்பிக் கொடுக்கும் எனத்தான் எதிர்பார்ப்பு, எல்லா திசைகளிலிருந்தும். அவர்கள் நன்றாகத்தான் விளையாடினார்கள். ஜெயித்திருக்கவேண்டும். ஆனால் முகமது ஷமி வீசிய கடைசி ஓவரில் 9 ரன் எடுக்கமுடியாமல் தடுமாற்றம். சூப்பர் ஓவருக்கு அனாவசியமாக மேட்ச்சை அனுப்பினார்கள். தோல்வி. அதிர்ச்சி. உலக்கோப்பைப் பேய் விஷமம் செய்கிறதா?

நான்காவது போட்டியில், மீண்டும் நியூஸிலாந்து நல்ல நிலையில் இருந்தது. இந்தியா, தான் தோற்றுவிட்டோம் என்பதை உணர ஆரம்பித்திருந்தது கோஹ்லியின் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் என்ன நடந்தது? ”தோல்வி எங்கே.. தோல்வி எங்கே.. என்று தேடு! அது எங்கிருந்தபோதும், அதை நாடி ஓடு..!” என்று பாடிக்கொண்டே ஆடினார்கள்போலும்  நியூஸிலாந்தின் வீரர்கள். சரிவுதான் நமக்குச் சரி என்று எண்ண ஆரம்பித்து விட்டார்களோ? ஷர்துல் டாக்குர் (Shardul Thakur) அப்படி ஒன்றும் ப்ரமாத பௌலர் இல்லை. கோஹ்லி ’நாம் தோற்றுவிட்டோம்’ என நினைத்துத்தான், தொலையட்டும் என டாக்குரிடம் கடைசி ஓவரைக் கொடுத்தார். ஆனால், மறுபடியும் நியூஸிலாந்தின் மண்டைக்குள் அந்த மர்மப்பேய் உட்கார்ந்து மந்தகாசமாய்ப் புன்னகைத்தது. கடைசி ஓவரில் அசட்டுத்தனமாக விக்கெட்டுகளை இழந்தது நியூஸிலாந்து. சித்தம் கலங்கிய நிலையில், மீண்டும் ‘டை’ (tie) ஆக, மேட்ச் ’சூப்பர் ஓவ’ரில் வந்து நின்றது! ரசிகர்களுக்கே தங்கள் கண்களை நம்பமுடியாத அதிர்ச்சிநிலை. கோஹ்லி கொண்டாடினாரே ஒழிய, அவருடைய அசட்டுச் சிரிப்பில், அவருக்கே ஒரு எழவும் புரியவில்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது: ’நாம் தோற்றிருக்கவேண்டிய போட்டி, சூப்பர் ஓவருக்கு எப்படி வந்தது!’ சூப்பர் ஓவரில் இந்தியா தாக்க, அவமானத் தோல்வி மீண்டும் நியூஸிலாந்தை இறுகக் கட்டித் தழுவியது. ஒரு தரமான சர்வதேச அணி இப்படியா 20-ஓவர்களில் வெல்லமுடியாமல், அடுத்தடுத்து இரண்டு மேட்ச்களில் ’சூப்பர் ஓவர்கள்’ விளையாடும்? இரண்டிலுமே மண்ணைக் கவ்வும்? என்னடாது.. அந்த இரவில், சித்தப் பிரமையில் இருந்திருக்கவேண்டும் முழு நியூஸிலாந்தும். உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வல்லுனர்களும் அதிர்ந்துபோனார்கள் -என்ன நடக்கிறது நியூஸிலாந்தில்?

5-ஆவதும் இறுதியுமான போட்டியிலும்,  சோகம் நியூஸிலாந்தைத் துரத்தத் தவறவில்லை. நியூஸிலாந்து ஆரம்பத்திலிருந்தே அருமையாக ஆடி, வெற்றியை நோக்கி சீராக நகர்வதாகத்தான் தோன்றியது. ஸைஃபர்ட் (Seifert), ராஸ் டைலர் (Ross Taylor) ஆகியோரின் திறனான அரைசதங்களும், கடைசி மேட்ச்சில் நியூஸிலாந்தை வெற்றிப்பாதையில் அனுப்புவதாய்த் தெரிந்தது. இந்தியாவின் ஷிவம் துபே (Shivam Dube), இந்தப் போட்டியை எப்படியாவது நியூஸிலாந்து ஜெயிக்கவேண்டும் என நினைத்துவிட்டாரோ? 10-ஆவது ஓவரை ராஹுல் (Stand-in Skipper), துபேயிடம் கொடுக்க, ஷிவம் எதிரணி வீரர்களை ஆனந்தத் தாண்டவம் ஆடவைத்தார்! ஒரே ஓவரில் 34 ரன்கள். நியூஸிலாந்து ரசிகர்களின் மனதில் பால்வார்த்தார், நம்ப ஹீரோ.. இது எப்படி இருக்கு! அந்த நிலையில் நியூஸிலாந்து மேட்ச்சை எளிதில் கைப்பற்றிவிடும் என்றே தோற்றம். அதற்கப்புறம் பந்துவீசிய, ஜஸ்ப்ரித் பும்ரா (Jasprit Bumrah) படபடவென ஸ்க்ரிப்ட்டை மாற்றிவிட்டார். அவருடைய யார்க்கர்கள் ஸ்டம்ப்புகளை பிளக்க, நியூஸிலாந்து குப்புற விழுந்தது. மீண்டும் அதே கதை.. தோல்வி தேவதையின் ருத்ரதாண்டவம்..

இப்படியுமா ஒரு அணி தோற்றுக்கொண்டே இருக்கும்? நியூஸிலாந்து என்ன ஜிம்பாப்வேயா! தொடரின் ஆரம்பத்தில் கேப்டன் வில்லியம்சன் சொன்னார் : ’நான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவது அணிக்கு உதவுமென்றால், நான் தள்ளி நின்றுகொள்கிறேன்’ என்று. யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. அவர் அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மன். அதிரடியாக ஸ்கோர் செய்பவர், செய்கிறார். சந்தேகத்துக்கிடமின்றி நல்ல கேப்டனும். (முதல் மூன்று போட்டிகளில் அவர்தான் கேப்டனாக இருந்தார். காயம் காரணமாக வில்லியம்சன் விலக, கடைசி மேட்ச்சில் டிம் சௌதீ (Tim Southee) நியூஸிலாந்தின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அதேபோன்று, இந்தியாவுக்கு கே.எல்.ராஹுல் கேப்டன் ஆனார் (கோஹ்லி பெஞ்சில் உட்கார விரும்பியதால், ரோஹித்திற்கு காலில் அடிபட்டதால்). தொடர் முடிவில், நியூஸிலாந்து அணிபற்றி கருத்துச்சொன்ன விராட் கோஹ்லி, ‘தொடரின் முடிவு எதைச் சொன்னாலும், வில்லியம்சனே நியூஸிலாந்தைத் தலைமை தாங்க சரியானவர். அவரைப்போல் ஒரு வீரர் கிடைப்பது அரிது’ என்பதாகப் புகழ்ந்திருக்கிறார். கிரிக்கெட் தெரிந்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள்.

பிப்ரவரி 5-ஆம் தேதியிலிருந்து மூன்று போட்டிகள் கொண்ட ’ஒரு-நாள்’ தொடர் இரண்டு அணிகளுக்குமிடையே ஆரம்பிக்கும். அதன்பின், இரண்டு ‘டெஸ்ட்’ போட்டிகள்.  கதை மாறுமா? சோகம்தான் வாழ்வா, நியூஸிலாந்துக்கு?

**

3 thoughts on “’சூப்பர்’ சோகம் : நியூஸிலாந்து கிரிக்கெட்

  1. NOTHING SUCCEEDS LIKE SUCCESS இந்தியாவுக்கு இது பொருந்துகிறது

    Like

  2. ஒவ்வொரு மேட்சும் ஜெயித்தபோது எனக்கும் அதே ஆச்சர்யம்.  தோற்றுவிடும் என்று நம்பிய கேம் கூட ஜெயித்தது ஆச்சர்யம்!!!    உங்களிடமிருந்து முன்னரே பதிவொன்று எதிர்பார்த்தேன்!

    Like

    1. @ பாலசுப்ரமணியம் ஜி.எம். அந்த ஆங்கில பழமொழியைப்போலவே நம்ம தமிழில் – ‘பட்ட காலிலே படும்..’ என ஒன்று நினைவுக்கு வருகிறது நியூஸிலாந்தை நினைக்கையில்..

      @ ஸ்ரீராம்: பொருளாதார மந்தநிலை போல மனதின் மந்த நிலை! சில கட்டுரைகளும் கதைகளைப்போலவே வேகமாக ஆரம்பிக்கப்பட்டு ஆங்காங்கே கவனிப்ப்புக்காகக் காத்திருக்கின்றன!

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s