எண்ணெய் வளமிக்க பாரசீகப் பிரதேசம் புகைந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் ஈரானிய ஜெனரல் சுலைமானி அமெரிக்கர்களால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, 7 ஜனவரியின் அதிகாலை ஈரான், ஈராக்கில் நிலைகொண்டுள்ள இரண்டு அமெரிக்க வான்படை தளங்களை ஏவுகணைகளால் தாக்கியிருக்கிறது. தாக்கிவிட்டு சும்மா இருந்ததா? வாயை உடனே பெரிசாகத் திறந்து தெரியப்படுத்தியது: ’சுலைமானியின் வீரமரணத்திற்கு, எதிரியைக் கடுமையாகப் பழிவாங்கிவிட்டோம். சுமார் 80 அமெரிக்கத் தீவிரவாதிகள் (அமெரிக்கப் படைகளை இனி அப்படித்தான் ஈரான் அழைக்குமாம்!) தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டனர்.’ கூடவே ஈரானிய ’ஸுப்ரீம் லீடர் ’அலி கமேனியின் அறிவிப்பும்: ’அமெரிக்காவின் கன்னத்தில் விழுந்தது அறை! ..’ Supreme ‘Cat and Mouse’ game!
அமெரிக்கா, இதுபோன்ற ஒரு எதிர்விளைவை, எதிர்பார்த்தே இருந்தது. தாக்குதலோ ஈராக்கின் மண்ணில் நிகழ்ந்துள்ளது. ஈராக் என்ன சொல்கிறது? தங்களுக்கு ஏவுகணைத் தாக்குதல்பற்றி ஈரான் முன்னறிவிப்பு செய்ததாகவும், தானும் அதை ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் வான்படைத் தலைமைக்கு, தாக்குதலுக்கு முன்னேயே தெரியப்படுத்தியதாகவும் இப்போது கூறியிருக்கிறது. அங்கிருந்த தனது முக்கிய அதிகாரிகள்/ வீரர்களை வேறுபகுதிக்கு அமெரிக்கா உடனே மாற்றியிருக்கும். சாவு எண்ணிக்கை/சேதம் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கலாம். ஈரானிய தாக்குதலுக்கு பதிலாக, ‘All is well ..!’ என்று ’கூல்’-ஆக ட்வீட்டியிருக்கிறார் அதிபர் ட்ரம்ப். ‘கூலாக’ இருப்பது அவரது சுபாவமில்லை என்பது உலகறிந்ததே. பின்னணியில், ஏதாவது ரகசிய ராணுவ/உளவு ஏற்பாடுகள் பென்ட்டகனில் (Pentagon) நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும். எல்லாமும் வெளியுலகத்திற்குத் தெரியவேண்டியதில்லையே.
ஈரானிய வெளியுறவு மந்திரி ஜாவத் ஜரீஃப் (Javad Zarif) தன் அறிக்கையில் : ’எங்கள் (ராணுவ) உயர் அதிகாரிகள், வீரர்கள் மீதான கோழைத்தனமான தாக்குதலுக்கு பதிலாக, எங்களின் தற்காப்பிற்காக, ’போதிய அளவில்’ எதிரிகளைப் பழிவாங்கிவிட்டோம். மேற்கொண்டு, போராக இது உருவெடுப்பதை ஈரான் விரும்பவில்லை’ என்றிருக்கிறார். எதிரியைத் திருப்பி உதைத்துவிட்டதாக எங்கள் மக்களுக்கும், இனக்குழுக்களுக்கும் காண்பித்துவிட்டோம். போருக்கு நாங்கள் தயாரில்லை’. ஈரானின் ராணுவ நிலைப்பாடு இது என்பதே ராஜீய வெளியில் இதன் மறைமுகப் பொருள்.
அமெரிக்காவும் இந்த ‘அளவான எதிர்த்தாக்குதலில்’ ஒருவேளை, திருப்தியுற்றிருக்குமோ? மேற்கொண்டு நிலைமை மோசமாகாதிருப்பதே இப்போதைக்கு நல்லது என நினைத்திருக்குமோ? சற்றுமுன் கிடைத்த அமெரிக்கத் தரப்பு ஆய்வின்படி, ஈரானிய ஏவுகணைகள் (மொத்தம் 22) அமெரிக்க தளங்களுக்கு சற்றே வெளியேயுள்ள நிலப்பரப்பைத்தான் தாக்கியிருக்கின்றன. ஈரானால் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு ,மிகக்குறைவான இழப்பை அமெரிக்காவுக்கு விளைவிக்கும் வகையில், இது நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்கிறது நிபுணர் குழாம். ஏன் இப்படி? ஈரான் பதிலடி கொடுத்ததாகக் காண்பிக்க விரும்பியதே தவிர, போராக இது மாறுவதை அது நினைத்தும் பார்க்கமுடியாத நிலை, அதன் ’வாய்ச்சவடால்’ வழக்கம்போல் உச்சத்தில் இருந்தபோதிலும். அமெரிக்காவும் ‘நாம் எதிரியின் முக்கியமான ஆளைப் போட்டுத் தள்ளிவிட்டோம். இவன்க ஏதோ ரெண்டு ஏவுகணைகளை வீசிவிட்டுப் போய்த் தொலையட்டும். இதுவே இப்போதைக்கு சரி’ என நிலைப்பாடு எடுத்திருக்க வாய்ப்புண்டு.
புதிதாகப் பதவியேற்றிருக்கும், சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் வலதுகையான, (ஜான்சனின்) பிரிட்டிஷ் அரசின் நிலைப்பாடு என்ன? ‘சுலைமானி கொல்லப்பட்ட பின்னணியில் நாங்கள், எங்களது கூட்டாளி அமெரிக்காவோடு ‘ஒரே பக்கத்தில்’ இருக்கிறோம்’ என்றது முதலில். ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின், ‘தேவைப்பட்டால் நொடியில் பாரசீக வளைகுடாவில் போய் இறங்க எங்களது படைகள் தயார்’ என்கிறது பிரிட்டன். இத்தகு சூழலில், ஈரானின் ஜென்ம விரோதியான இஸ்ரேல், இப்போது திருவாய் மலர்ந்திருக்கிறது. ‘நாங்கள் தாக்கப்பட்டால், எதிர்விளைவுகள் கடுமையாயிருக்கும்.’ தினம்தினம் முஷ்டி உயர்த்துதல், சூடான வார்த்தைப் பிரயோகங்கள்..
ஒரு பக்கம் ’போரை நாங்கள் விரும்பவில்லை’ என அதிகாரபூர்வ அறிக்கைகளை, கூட்டுசேரா நாடுகள் மற்றும் ஐநா-போன்ற அப்பாவி அமைப்புகளுக்குப் போக்குக்காண்பிப்பதற்காக விடுவதும், இன்னொரு பக்கம் – ‘வரட்டும்; விடமாட்டோம். அழித்துவிட்டுத்தான் மறுவேலை!’ என்பதுமாய் ராணுவ வலிமை மிக்க நாடுகள் உறுமிப் பார்ப்பதும் – நல்லதற்கில்லை. பதற்றம் அதிகரிக்கவே வழிகோலும். ஏற்கனவே மத்திய கிழக்கில், சில வருடங்களாக நடந்துவந்த போர்களினால் சுமார் 2 1/2 கோடி ஏமன் நாட்டவரும், 1 1/4 கோடி சிரிய மக்களும், சிதறி வெளியேறி, வாழவழியின்றி தவித்தலைகிறார்கள். ஒரு பக்கம் செல்வக்கொழிப்பைக் காண்பிக்கும் மத்திய கிழக்கு, மறுபக்கத்தில் அகதிகளின் பெரும் கூடாரமாக வேகமாக மாறிவருகிறது. கச்சா எண்ணெயை வைத்தோ, ஏகாபத்திய ஆசைகளினாலோ அல்லது எதிரும் புதிருமான இஸ்லாமிய இனக்குழுக்களின் ஆதிக்க முயற்சிகளினாலோ, நாளையோ அல்லது நாளை மறுநாளோ அங்கே ஒரு யுத்தம் வெடிக்கலாம். அப்படி நிகழ்ந்தால் அது, பாரசீக வளைகுடா மக்களின் நீண்டகால அமைதிக்கும், வாழ்விற்கும் கடும் குந்தகம் விளைவிப்பதிலேதான் போய் முடியும். அத்தகைய போர் மேலும் பரவாது, வளைகுடாப் பிரதேசத்துடன் அமுங்கிவிடும் என்கிற உத்தரவாதம் ஏதும் அதில் இருக்கமுடியாது.
**
தண்ணீர் காரணமாகத்தான் அடுத்த உலகப்போர் நிகழும் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் இந்தப் பதட்டம் சீக்கிரம் தணிந்து விடும் என்று எதிர்பார்க்கலாம்… தணிந்து விடவேண்டும்!
LikeLiked by 1 person
இன்னொரு உலகப்போருக்கு யாரும்தயாராய் இல்லை ஒரு போர் மிகவும் அழிவைத்தான் தரும் இது அமேரிக்காவுக்கும் தெரியும்இருந்தாலும் sabre ratling குக்கு எல்லோரும் தயார் ஆகவேண்டும்
LikeLike
@ Sriram : தண்ணீர் வற்றுகிறவரை யுத்தங்கள் காத்திருப்பதில்லை!
@ Balasubramaniam GM : அமெரிக்காவும், ரஷ்யாவும் நேரடிப் போரில் இறங்க முயற்சிக்காது. ஆனால், தூரத்துப் பிரதேசத்தின் சண்டைகளில் மூக்கை நுழைப்பதை அவை தவிர்க்காது. அவர்களது ஆயுதங்களை விற்பனை செய்து காசு சம்பாதிக்கவேண்டுமே!
அதனால், உலகப்போரே வராது. எல்லோரும் உஷாராக இருக்கிறார்கள் என்றும் தீர்ப்பு எழுதிவிட முடியாது. முதல் உலகப்போர் முடிந்த 20 வருடத்தில் அடுத்த உலகப்போர் மூண்டது. ஏற்கனவே கண்ட பேரழிவை வல்லரசுகள் மறந்தா போயிருந்தார்கள் அப்போது?
LikeLike
ஜார்ஜ் புஷ் WMD என்ற ஒரு புரளியை வைத்து ஈராக் போரை துவங்கினார். அது போன்ற ஒரு காரணம் தற்போது டிரம்புக்கு தேவைப்படுகிறது. ஒப்பந்தம் முறியடிக்கப்பட்டாலும் தடைகள் நீக்கப்படாத போதும் ஈரான் தன தரப்பு விதிகளை கடைப்பிடித்து அணு ஆயுதம் அடையும் முயற்சியை கை விட்டிருந்தது. தற்போது டிரம்ப் ஈரானை அணு ஆயுத தயாரிப்பு முயற்சியில் ஈடுபட வைக்க வேண்டி இந்த தாக்குதலை நடத்த்தியுள்ளார். ஈரான் அவ்வாறு இறங்குமானால் அதையே சாக்காக வைத்து போரை துவங்கலாம். இதுவே அமெரிக்காவின் தந்திரம்.
LikeLiked by 1 person
@ Jayakumar chandrasekaran : ஓரளவுக்கு அமைதியாக இருந்த மத்திய கிழக்கை சிதற அடித்த ’பெருமை’ அப்பன், மகன் இருவரையுமே (புஷ் 1, புஷ் 2) சாரும். வியட்நாமில் கரி பூசப்பட்டபின், விஷமம் செய்ய அமெரிக்கர்களுக்குக் கிடைத்த பிரதேசம் மத்திய கிழக்கு. அமெரிக்கா புகுந்த இடம் ஆமை புகுந்த வீட்டைக் காட்டிலும் பயங்கரமான விதியைச் சந்தித்ததாக உலக சரித்திரம் பின்னாட்களில் கூறும்.
ஈரான் ’ சர்வதேச ஒப்பந்தப்படி’, அப்படியே நடக்கிற நல்லபிள்ளை அல்ல! அப்படி நடப்பதாக காட்டிக்கொண்டு, வேறு ’வேலைகளை’ , மசூதிகளுக்குப் பின்புறமாக ஆய்வகங்கள், ரகசிய தொழிற்சாலைகளை வைத்துக்கொண்டு செய்துவரும் ஒரு தேசமது! போகப்போகத் தெரியும்..
LikeLike