சுஜாதாவை மிரட்டிய பூனை!

 

புத்தாண்டு பிறப்பதற்கு சில மணிநேரம் முன்பு வரை, அதாவது டிசம்பர் 31 இரவில் சென்னையில் புத்தகக் கடைகள் திறந்திருந்ததோடு, 10%, 20% தள்ளுபடியோடு புத்தகங்கள் விற்கப்பட்டன என்கிறது 2020-ன் முதல் நாள் காலை இதழ் ஒன்று. சமீபத்தில் புதுச்சேரியில் நடந்து முடிந்த பத்துநாள் புத்தக விழாவில் ரூ.80 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பில் புத்தகங்களை வாசகர்கள் வாங்கிச்சென்றார்கள் எனவும் படித்தேன். எதிர்பார்த்ததைவிட ரூ.10 லட்சம் அதிகமான மதிப்பில், வெவ்வேறு வகைப் புத்தகங்கள் வாசகர்களைக் கவர்ந்ததோடு,  வாங்கவும் வைத்திருக்கின்றன. எப்போதும் ஃபோன் நோண்டி, எதிர்வரும் முகம் பார்க்கா ஒரு விசித்திர காலகட்டத்தில், இது ஒரு வரவேற்கத்தக்க நிகழ்வு. கிட்டத்தட்ட சாதனை. மேன்மேலும் வாசிப்புப் பழக்கம் – அது இணையத்திலோ,  கிண்டிலிலோ, அச்சுவடிவத்திலோ-  தமிழரிடையே வளர்ந்து செழிக்குமாக! சரி, விஷயத்துக்கு வருவோம்:

சுஜாதா

எழுத்தாளர் சுஜாதாவுக்கு, அவரது எண்ணற்ற வாசகர்களில் சிலரோடு எதிர்பாராத சந்திப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. அகாலநேரத்தில் வீட்டுக்குவந்து கதவைத் தட்டிய வாசகரும் உண்டு என ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். இது கொஞ்சம் வேறுமாதிரி.  சுஜாதாவின் எழுத்திலேயே பார்ப்போம் :

”ரயில் பயணத்தின் போது ஏற்படும் அனுபவங்கள் சில மறக்க முடியாதவை. கீழ் வரும் அனுபவத்தை சந்தோஷமா, சங்கடமா என்று நீங்களே தீர்மானியுங்கள்.

ஒரு முறை பெங்களூரிலிருந்து சென்னைவரை பிருந்தாவனில் பயணம் செய்தபோது, ஒரு மாமா எதிர் ஸீட்டில் உட்கார்ந்துகொண்டு என்னையே ஐந்து மணி நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் தாங்க முடியாமல், அரக்கோணம் தாண்டியதும் கேட்டேவிட்டேன்.

“உங்களுக்கு ஏதாவது பேசணுமா ?”

“இல்லை” என்று தலையாட்டினார்.

ஒருவேளை ஊமையோ என்றால்,  ஜிலேபிகாரரிடம் சில்லறை கேட்டு வாங்கும்போது பேசியிருக்கிறார்.

“ஏன் என்னையே பார்த்துண்டிருக்கீங்க ?”

“நீங்கதானே இந்தக் கதையெல்லாம் எழுதறவர் ?” என்று கையில் மானசீகமாக எழுதிக் காட்டினார்.

“ஆமாம்…” என்றேன்.

“அந்தப் பூனையை அந்தக் கதையில, ஏன் ஸார் சாகடிச்சீங்க ?”

“எந்தப் பூனையை, எந்தக் கதையில ?”

“உங்க கதைகளைப் படிக்கறதையே அதுக்கப்புறம் நிறுத்திட்டேன்.”

“எந்தப் பூனை ?”

“ஒரு படப்பிடிப்பில் கறுப்புப் பூனை…”

எனக்குச் சட்டென்று கதை ஞாபகம் வந்தது. படப்பிடிப்புக்காக எடுத்துச் சென்ற பயிற்சி பெற்ற பூனை, வில்லனைப் பிறாண்டி விடுவதால், அதன் ஓனர் அதை… வேண்டாம், நீங்கள் படித்திருந்தால் you get the idea .

“அந்தப் பூனை உங்களை என்ன பண்ணித்து ? எதுக்காக வாயில்லா ஜீவனைப் போய்க் கொன்னீங்க ?” என்று அவர் கேட்டபோது, அவர் கண்களில் நீர் ததும்பியது.

“பூனையைப் பத்தி என்ன ஸார் தெரியும் உங்களுக்கு ? எத்தனை மில்லியன் வருஷங்களா அது மனிதனோட வாழறது தெரியுமா ? கிளியோபாட்ரா காலத்தில் அதைத் தெய்வமா மதிச்சாங்க. எத்தனை வருஷமானாலும் ஒரு பூனையால மனிதனைச் சாராமல் வாழ முடியும், தெரியுமா ?”

நான் மையமாகப் புன்னகைத்தேன்.

“நீங்க அதைக் கொன்னுருக்கக் கூடாது. அதை அவன் ரோட்டுல விட்டிருந்தாக் கூட, எங்கேயாவது பிழைச்சுப் போயிருக்கும்…”

“வீட்டுக்குத் திரும்பி வந்துடுமே ஸார் ?”

”அதைவிட்டுட்டு சுவத்துல… சொல்லவே கூச்சமா இருக்கு. கிராதகன் ஸார் நீங்க! அஞ்சு மணி நேரமா, உங்களை என்ன பிராயச்சித்தம் பண்ணவைக்கலாம்னு யோசிச்சிண்டிருந்தேன். நீங்க உங்க கதைல பூனையை ஒரு அதிர்ச்சிக்காகக் கொன்னிருக்கீங்க. எங்காத்துல எட்டுப் பூனையை வளர்த்தவன் நான். எவனும் அப்படிச் செய்ய மாட்டான்.”

தனது மஞ்சள் பையில் கைவிட்டு எதையோ ஆராய்ந்தார். எனக்குத் திக்கென்றது. ஆயுதம் தேடுகிறாரா, என்ன?

”ஸாரி..  நான் பல கதைகளில் பல மிருகங்களைக் காப்பாற்றியிருக்கிறேன். எனக்கு மிருகங்கள்னா பிரியம். இந்தக் கதையில் அவனுடைய ஆத்திரத்தின் வெளிப்பாடு…”

“வெளிப்பாடாவது, உள்பாடாவது.. ” அவர் சமாதானமாகவில்லை.

வண்டி சென்ட்ரலில் வந்து நின்றதும், “நீங்க கொன்ன அந்தப் பூனைக்கு ஒரே ஒரு ப்ரீத்தி பண்ணிடுங்கோ. ஒரு எய்ட் ஹண்ட்ரட் ருபீஸ் செலவழிச்சா, அந்த ஜந்துவைக் கொன்ன பிரம்மஹத்தி உங்களைத் துரத்தாது. ஏற்பாடு பண்ணவா ?”

“என்கிட்டே எய்ட் ஹண்ட்ரட் இல்லை.”

“செக்கா கொடுத்தாலும் பரவாயில்லை…”

எப்படித் தப்பித்தேன் ?

“ஒண்ணு பண்ணுங்கோ… அது என்ன பூஜைன்னு சொல்லுங்கோ.  எனக்குத் தெரிஞ்ச வாத்தியாரை வெச்சிண்டு பண்ணிடறேன்.”

அவர் என்னைக் கடைசிவரை சபித்துக் கொண்டுதான் சென்றார். அதிலிருந்து கதைகளில் நான் பூனைகளைக் கொல்வதில்லை.”

**

சுஜாதா தன்னுடைய கட்டுரை ஒன்றில். நன்றி: சுஜாதா.

**

அன்பான வாசக, வாசகியருக்கு மதுரமான புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இறையருளால், இனிதாக நகரட்டும் ஒவ்வொரு நாளும்..

**

15 thoughts on “சுஜாதாவை மிரட்டிய பூனை!

 1. ஹா…    ஹா…   ஹா…    சுஜாதாவிடமே சம்பாதிக்க முயற்சித்திருக்கிறார் போல!   ஆனால் அவர் எழுதிலிடம்பெற்று விட்டார்.    ஆனால்பெரும்பாலும் இவை சுஜாதாவின் சுவாரஸ்யமான கற்பனையாகவும் இருக்கும்!

  Like

 2. தலைப்பில் பூனை எனப் பார்த்ததும், சுவர் ஏறிக் குதிச்சு உள்ளே ஓடி வந்தேன்.. ஹா ஹா ஹா இது என்ன சுஜாதா அவர்களுக்கு வந்த சோதனை… அதுதானே பூனை ஏன் கொன்றார்?:).. இதை முன்பும் எங்கோ படிச்சேன்ன்…

  இப்படி அடிக்கடி பூனைக் கதைகள் சொல்லுங்கோ ஏ அண்ணன்.

  Like

 3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஏ அண்ணன். இன்று உங்களுக்குப் பிடிச்ச கீரை வடை சாப்பிடுங்கோ:).

  Like

  1. @ Sriram : நடந்ததைத்தான் எழுதியிருக்கிறார் மனுஷன்! BELஇலும் சிறப்பாகப் பணியாற்றி, எழுத்தையும் கவனித்துக்கொண்டு, விழாக்களையும், நண்பர்களையும் கவனித்துக்கொண்டு படுபிஸியாக இருந்த ஒரு எழுத்தாளர். அவர்போகும்போது நான் ஹவானாவில் இருந்தேன். துக்கம் மிக அதிகமாக இருந்தது.

   @ Durai Selvaraju : வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். எளிதாகவும், இனிமையாகவும் இனி கடக்கட்டும் நாட்கள் இறையருளால்.

   @ Athira miya : பூனையென்றதும் குதித்திவிட்டீர்களே.. இந்த பூனை ரொம்பப்பேரைப் பாடாய்ப் படுத்துகிறது. என் தங்கை ஒரு பூனைப் பிரியை.
   வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
   எனக்குக் கீரை வடை பிடிக்கும் என்பது அதிராவுக்குத் தெரிந்ததெப்படி!

   Like

   1. //எனக்குக் கீரை வடை பிடிக்கும் என்பது அதிராவுக்குத் தெரிந்ததெப்படி!//

    அச்செச்சோ.. விடுங்கோ என்னை விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போகப்போறேன்ன்..:)).. உங்களுக்குக் கீரை வடை பிடிக்குமென்றுதானே எங்கள்புளொக்கில் சுட்டு வச்சேன்.. மறந்திட்டீங்கள் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இப்பவே போகிறேன் பிரித்தானியா ஹாண்ட் கோர்ட்டுக்கு:)

    Like

 4. சுஜாதாவை நினைவு கூர்ந்துபகிர்ந்தமைக்கு நன்றி. எங்க வீட்டிலும் பூனைகள் தாமாக வளர்ந்திருக்கின்றன. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  Like

 5. கதையை கற்பனையாக அணுகாமல் அதை வைத்துக்ஹு காசுபண்ணப்பார்த்ததும் கற்பனை தானோ

  Like

  1. @ Geetha Sambasivam: கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

   @ Balasubramaniam : அப்படித் தோன்றவில்லை.

   Like

 6. சுஜாதாவின் கதைகளுக்கு நான் ரசிகை அல்ல. அதேபோல கொலைக்கதைகளுக்கும் ரசிகை அல்ல. அதனால் கருத்து எதுவும் சொல்லவில்லை.
  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  Like

 7. @ ranjani135 :

  ’… கருத்து எதுவும் சொல்லவில்லை’ என்பதே உங்கள் கருத்து! நன்றி.

  உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

  Like

 8. இதை ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கும் பொழுதும் ஸ்வாரஸ்யமாகத்தான் இருந்தது. அதுதான் சுஜாதா இல்லையா? பகிர்வுக்கு நன்றி. 

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s