உனக்குப் பின்னே நான் !

காலைவணக்கம், Good morning, ஸுப்ரபாத் என்று விசிறிவிடும் விதவிதமான அச்சுபிச்சு  வாட்ஸப் மெஸேஜ்களுக்கிடையே, காலையில் ஒரு வித்தியாசமான மெசேஜ் வந்தது. ஒரு ’பெற்றவளின்’  விடிகாலை ஞானமோ அல்லது உள்முகிழ்த்த பெருமையோ, ஏதோ ஒன்று: ’ஒரு பிள்ளையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தின் பின், தீவிரமாக இயங்கும் அம்மா உண்டு’ என்று சொல்லி ஒரு அம்மா-பிள்ளை படத்தோடு சிரித்தது அந்த வாட்ஸப். கூடவே குட் மார்னிங் என்றுவேறு சொல்லிவைத்ததா எனப் பார்த்தேன். இல்லை. நல்லது. இத்தகைய மெசேஜ்களை பார்த்துப் பொதுவாக நகல்வதே வழக்கம். இங்கே அப்படிச் செய்யாமல், ஒரு சிறிய பதில் போட்டேன், எங்கள் குடியிருப்பு வளாகத்திலேயே வசிக்கும், சமீபத்தில்தான் அறிமுமாகியிருந்த அந்த இளம் தாய்க்கு. அவளும் பதிலுக்கு ‘புன்னகை எமோஜி’ ஒன்றை அனுப்பித் திருப்தியாகியிருந்தாள். என் பதிலில் கொஞ்சம் கோபப்படுவாளோ என்று சந்தேகித்திருந்தேன்!

தன் மகன் அல்லது மகளுக்காக, அவர்களின் படிப்பு, மேற்படிப்பு போன்றவைகளில் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக இந்திய அம்மா, அப்பாக்கள் ரொம்பவும் கவலைப்படுகிறார்கள். நிறையப் பேசுகிறார்கள். நிறைய செய்யப் பார்க்கிறார்கள். எல்லாக் குழந்தைகளும் அப்படியான – பெற்றோரின் எதிர்பார்ப்புக்கேற்ற- முன்னேற்றத்தைக் காண்பிப்பதில்லை என்றபோதிலும். சிலசமயங்களில், அதிகம் அலட்டிக்கொள்ளாத சில பெற்றோர்களின் பிள்ளைகள் தடதடவென்று படிப்பிலும், விளையாட்டு, இசை போன்றவைகளிலும் மேலேறுவதைக் கவனிக்கமுடிகிறது. பெற்றோர்கள் பெரிதாக உந்திவிடவில்லை இங்கே. இருப்பினும், எவன் முன்னே வர வேண்டுமென இருக்கிறதோ, அவன் வந்துவிடுவான். எது நடக்கவேண்டுமோ, அது நடந்துவிடும். அதுதான் நடக்கும். இதையே, வடக்கத்திக்காரர்கள் அடிக்கடி இப்படிச் சொல்வார்கள்: ஜோ ஹோனா ஹை, ஓ ஹோ ஜாயேகா!

சுற்றுமுற்றும் கவனிக்கையில் ஒன்று அடிக்கடி படுகிறது. சில, பல இளம் தாய்மார்களின் ஆர்வம் தோய்ந்த அதீத கவனம், தங்களின்  மகனின் பேரிலேதான் அதிகமாக இருக்கிறது. அதனால் பெண்குழந்தையின்மேல் அவர்களுக்குப் பாசமில்லை என அர்த்தமில்லை. ஆனால் அசையாத கவனமும், அடிக்கடி தலைகோதிவிடுதலும், தட்டிக்கொடுத்தலும், கன்னத்தை இழைப்பதும் இத்தியாதி சுகங்களெல்லாம் ஆண்பிள்ளைக்குத்தான். எங்கள் வளாகத்திலேயே இந்த தரிசனம், குழந்தைகள் காலையில் பள்ளிக்கூட பஸ்களுக்காக காத்திருக்கும் வேளையில் அடிக்கடி காணக் கிடைக்கிறது. அதனால் அந்தப் பையன் படு ஸ்மார்ட், வகுப்பில் இவன் தான் டாப் என்றெல்லாம் நினைக்கவேண்டியதில்லை. சராசரிக்குக் கொஞ்சம் மேலே இருப்பான். அவ்வளவுதான். அவனைத் தூக்கி மேல் நிறுத்த, உச்சியில் வைத்து அழகு பார்க்க,  அம்மாக்களின் அயராத முயற்சி. ஆனால், இதில் ஒரு பகுதியைக்கூட, அந்தப் பையனோடு பள்ளி செல்லும், அவன் சகோதரியிடம் காட்டுவதில்லை இந்தத் தாய். பெண் குழந்தையிடம் அத்தகைய ஆர்வமோ, கனிவோ காட்டப்படாமல் இருந்தாலும், அதுகள் தாங்களாகவே நன்றாகப் படிப்பதை, நன்னடத்தை, பொறுப்புணர்வு காட்டுவதை, தங்கள் தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக்கொண்டு முன்னேறுவதை ஆங்காங்கே காணமுடிகிறது. ஆனால், படிப்பில் பெண் குழந்தைகளின் பர்ஃபார்மன்ஸ், தங்களை சரியாக நடத்திக்கொள்ளும் கெட்டிக்காரத்தனம் ஆகியவை இத்தகைய தாய்மார்களுக்கு ஏனோ, கிளுகிளுப்பூட்டுவதில்லை ! டெல்லியில் வசிக்கும்போதும் இதைக் கவனித்து, ஏற்கனவே அறிமுகமாகியிருந்த ஒரு வட இந்தியத் தாயிடம் இதுபற்றி லேசாக விஜாரித்தபோது(!), அவர் சொன்ன பதில் திடுக்கிடவைத்தது: ‘அரே! லட்கியோம் மே க்யூன் த்யான் தேனா ஹை!’ (அட, சிறுமிகள்மீது ஏன் அக்கறை காட்டவேண்டும்?); அவர்கள் இன்னொரு வீட்டுக்குப் போகப்போகிறவர்கள்தானே!’ அந்தப் பெண்ணிடம் மேற்கொண்டு பேச மனமில்லை. ஸ்டைலாகத் தலைவாரி, ஸ்கூல் யுனிஃபார்ம், சாக்ஸ், ஷு-வென மிடுக்காக பக்கத்தில் பஸ்ஸிற்காகக் காத்திருக்கும் அந்த அழகு சிறுமியைக் கவலையோடு பார்த்துவிட்டு நகர்ந்தேன்.

எனக்கு மெசேஜ் அனுப்பிய அந்தப் பெண், அப்படிப்பட்டவளல்ல. அவளுக்கு இரண்டும் பெண் குழந்தைகள் என்பதும் காரணமோ! இருக்காது. நன்கு படித்த, ஓரளவு மனப்பக்குவமும் தென்படும் பெண்தான் அவள். சரி, பிள்ளையின் அதீத முன்னேற்றத்தின் பின்னணியில், தீவிரமாக இயங்கும் தாயுண்டு என்றவளுக்கு என்ன பதில் சொன்னேன் வாட்ஸப்பில்? இப்படி: ’ஆனால், ஒன்றை நினைவில் கொள்க. உங்கள் குழந்தை என்பது நீங்களேயல்ல! அது, கடவுளால் அழகாகச் செதுக்கப்பட்டு உங்களிடம் விடப்பட்டிருக்கும் புத்தம்புது ஜீவன்!’ ஆங்கிலத்தில் அனுப்பினேன். பின்னே?  பெங்காலிப் பெண்ணுக்குத் தமிழில் சொல்லமுடியாதே?

**

10 thoughts on “உனக்குப் பின்னே நான் !

 1. அது என்ன பிள்ளை உயர்த்தி, பெண் தாழ்த்தி! இதை நான் நிறைய அனுபவிச்சிருக்கேன். என் அப்பா அப்படித்தான் சொல்லுவார். நீ படிச்சு என்ன செய்யப் போறே? உப்பு, புளி, மி.வத்தல் வாங்கவும், பால் கணக்கு எழுதவும் இது தெரிந்தால் போதாதா என்பார்!

  Liked by 1 person

 2. கால காலமாக நடத்தப்படும் கணக்குகள்.

  பெண்குழந்தைகளையும் கவனிக்கத் தான். அவர்கள் இன்னோருவர் வீட்டுக்குப் போவதாலியே

  இன்னும் கவனிக்கணும்.

  நல்ல கருத்தை அனுப்பிய அந்தப் பெண்ணிற்கும்
  உங்களுக்கும் நன்றி.

  Liked by 1 person

 3. ஒன்றை கவனித்திருக்கிறீர்களா ஆண்பிள்ளைகளைக் விட பெண்குழந்தைகளே எதிலும் முந்தி இருக்கிறார்கள்

  Liked by 1 person

  1. @ Geetha Sambasivam : பிள்ளைதான் உசத்தி எனும் எண்ணமா இல்லை, அவன் தான் நம்மை நாளைக்குத் தாங்குவா என்கிற சுயநலம்தான் காரணமா? எதுவோ.. இப்படித்தான் சில இடங்களில் நடக்கிறது.

   @ Revathi Narasimhan : சரிதான். பெண்குழந்தைகள் இன்னொரு குடும்பத்துக்கு ஒருநாள் போய்விடுவார்களே என வாஞ்சையும், கவனமும் இங்கேதான் இருக்கவேண்டும். ஆனால் கேஸ் உல்ட்டாவாக இருக்கிறதே!

   @ Balasubramaniam GM : பெண்குழந்தைகள் படிப்பில் சுழட்டி சுழட்டி அடிக்கிறார்கள் , இப்போதெல்லாம். Confidence level is also high, which is a welcome sign.

   Like

 4. இந்தக் காலத்திலும் இப்படி பேதம் பார்க்கிறார்கள் என்பது ஆச்சர்யம்தான்.   சொல்லப்போனால் ஆண்களைத்தான் கொஞ்சம் குறைவாக நடத்த வேண்டும்!  காலம் அப்படி!

  Like

  1. @Sriram: ’இந்தக்கால’த்தைப்பற்றி மீடியா காண்பிக்கும் காட்சி வேறு. நிதர்சனம் வேறு எனத் தோன்றுகிறது இத்தகைய விஷயங்களில். காலங்காலமாக செட் ஆகியிருக்கும் மனப்போக்கு அவ்வளவு எளிதாக மாற்றம் காண்பதில்லை.

   Like

 5. நான் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பில், பையன்கள் தனியாக வந்து பள்ளிப் பேருந்துக்கு காத்திருக்கிறார்கள். பெண் குழந்தைகளை மட்டும், அவர்களின் தந்தை அல்லது தாய் அல்லது இருவருமே சேர்ந்து வந்து அனுப்பி வைக்கிறார்கள்,

  Like

  1. @ கௌதமன்: பெரிய வகுப்புப் பையன்கள் இங்கும் தனியாகத் தான் வருவார்கள் ஸ்கூல் பஸ்ஸுக்காக! அவ்வாறே சில மாணவிகளும். அப்பா, அம்மா கூடவே வந்தால் வெட்கக்கேடு என நினைப்பவர்கள்!

   Liked by 1 person

 6. பெண் பிள்ளைகளோடுதான் பெற்றோர் இருக்கோணும் என, வழக்கத்தை மாற்றி விட்டால், பின்னர் பெண் குழந்தைகளைத்தான் விழுந்து விழுந்து கவனிப்பார்கள்.

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s