டெல்லி சென்று மீண்டபோது ..

’அபாயகரம்’ என எச்சரிக்கப்படும் ’காற்றுமாசு அளவீடு’க்கும், அடாவடி கேஜ்ரிவாலுக்கும், மேலும் அரசியல்வாதிகள் பலரின் வாய்ச் சவடாலுக்குமாகப் பேர் ‘போன’ நகரம். நமது ராஜதானி – அதாவது நாட்டின் தலைநகரம். குளிர்காலத்தில் டெல்லியில் இருப்பதை பெரிதும் விரும்புபவன் நான். விண்டரில் டெல்லிக்கு என்றே ஒரு தனி அழகு. ஒரு புல்-ஓவரை அல்லது fleece-ஐ அணிந்துகொண்டு இஷ்டத்துக்கும் களைப்பில்லாமல் சுற்றலாம். சுற்றுகையில்  ப(Ba)ட்டூரே-(ச்)சோலே, குல்ச்சா என ஊருக்கேற்றபடி பஞ்சாபி ஐட்டம்களை சூடாக உள்ளே தள்ளும் வாய்ப்பும் வரும். சமீபத்தில் டெல்லி விசிட்டின்போது, சில நாட்களிலேயே போதும் போதும் என்றாகிவிட்டது. பேப்பரில், டிவி-யில் டெல்லியில் காற்று மாசு அபாயகரமான நிலையில் எனப்  படிப்பது, பார்ப்பது, கேட்பது வேறு. அங்கே போய்க் கொஞ்ச நாள் இருந்துவிட்டு, போன உடம்போடு திரும்பிவர முயற்சிப்பதென்பது, முற்றிலும் வேறு விஷயம். அவ்வளவு தூரத்துக்கு மோசமாகிவிட்டிருக்கிறது டெல்லியின் ’மாசு’ நிலை. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் டெல்லி பகுதியில் பரவும் புகைக்கு, பஞ்சாபின் விவசாயிகளைக் குறைசொல்லிப் பொழுதுபோக்கிக்கொண்டிருக்கும் முதல்வர் கேஜ்ரிவால் இன்றைய தலைவேதனை. இதற்கு முன்னான பின்னணி என்று பார்த்தால், ’தலைநகர்ப் பகுதி’யை (NCR-National Capital Region) வளர்க்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு டெல்லியைச்சுற்றி நோய்டா, காஸியாபாத், ஃபரிதாபாத், குருகிராம் பகுதிகளில் பெரு, சிறு தொழிலதிபர்களிடம் துட்டு வாங்கிக்கொண்டு நித்திய புகைக்கு வழிசெய்த, பாதுகாப்பற்ற தொழிற்சாலைகளுக்கு வித்திட்ட எண்பதுகளின் காங்கிரஸ் அரசுகளின் ’மக்கள் சேவை’ இப்படியாக வந்து விடிந்திருக்கிறது, தலைநகரவாசிகளுக்கு.

நவம்பர் கடைசியின் ஒரு மதியத்தில் டெல்லியின் விமானநிலையத்தில் நானிருந்த ஸ்பைஸ் ஜெட்  தரையிறங்க முயற்சித்து, கீழே கீழே தாழ்ந்துகொண்டிருக்கையில், ‘most polluted Indian city-ஆயிற்றே என்கிற நினைவில், குழப்பத்தோடு கீழே பார்த்தேன். அவ்வாறே வேறு சிலரும். ஒரு கர்னாடகா குண்டு – அரசியல்வாதிபோல் தெரிந்தது- பதற்றத்தில், கண்ணாடியை சரிசெய்துகொண்டு, கண்ணை உருட்டி உருட்டிக் கீழே பார்த்துக்கொண்டிருந்தது. அந்தப் பட்டப்பகலிலும் இம்மாம்பெரிய நகரின் சுவடுகூடத் தெரியவில்லை. பார்க்கும் கண்கள் பிசுபிசுத்ததுபோல் தோன்றியது. ஒரே இளம்பழுப்புநிற தூசிப்படலம் விரவிப் படர்ந்திருக்க, இந்திராகாந்தி இண்டர்நேஷனல் விமானநிலையப் பகுதியைத் துருவிக்கொண்டே கீழிறங்க முயன்றது விமானம். தூசுப்படலத்தைத் தாண்டித்தான் கீழே இந்திரப்பிரஸ்தா நகரம் இருக்கவேண்டும்! இருக்கும், இருக்கும். எங்கே ஓடிவிடப் போகிறது. மிகத் தொன்மையானதும், பெரும் ஆக்கிரமிப்பு, தாக்குதல் சரித்திரங்களை அனாயாசமாகத் தூக்கிப்போட்டதுமான நகரமாயிற்றே. ஒருவழியாக விமானம் இறங்கிவிட, baggage-களை அள்ளிக்கொண்டு வெளியே வந்து பார்த்தால், மந்தமான அரைகுறை வெளிச்சத்தில் மருளவைத்தது நகரம். ’காற்றாவது, மாசாவது.. சும்மா எதுக்கெடுத்தாலும் பயந்து சாகாம, உள்ளே வாங்கப்பா..’ என விஷமச் சிரிப்புடன் வரவேற்றது டெல்லி.

அங்கு தங்கி இருந்தது ஒரு வாரம். முதல் இரண்டு நாட்களிலேயே உடம்பு முரண்டு பிடிக்கையில், change of weather between Bangalore and Delhi. அப்படித்தான் இருக்கும்; சரியாகிவிடும் என சமாதானம் சொல்லிக்கொண்டது மனது. மூன்றாவது நாளில் டெல்லியின் இரவுக் குளிரும், தீவிரக் காற்று மாசும் ஜோடிபோட்டுக்கொண்டு, விபரமாக விஜாரிக்கத் தொடங்கியிருந்தன என்பது தெரிந்தது! கண்களில் அவ்வப்போது எரிச்சல், தொண்டையில் இடையறாத கிச்..கிச்ச்.., மார்பில் இருக்கக்கூடாத சங்கதிகள் – எல்லாம் உள்ளே மண்டி, உடம்பை உண்டு, இல்லை எனச் செய்துவிட்டன சில நாட்களிலேயே. Severe air pollution, coupled with the onset of Delhi winter – ராஜதானியின் வரவேற்பு, சிறப்பு கவனிப்பு புரிந்தது.

குறிப்பாக குளிர்காலத்தில் டெல்லி வர நேர்ந்தால், அடுத்த நாளிலிருந்தே கனாட் ப்ளேஸ் என்றும், சௌத் எக்ஸ்டென்ஷனென்றும், ரெஸ்ட்டாரண்டுகள், புத்தகக் கடைகள், சாலையோரக் கடைகள், ஆர்.கே.புரம் கோவில் என, கொஞ்சம் சுற்றிவருவது உண்டு. இந்த முறை அதற்கெல்லாம் வாய்ப்பில்லாமல் போனதில்,  ஒரே இறுக்கமாக வீட்டுக்குள்ளேயே பெரும்பாலும் கிடந்ததில்,  பெரிதும் அலுப்புத் தட்டியது. ஒரு செவ்வாய்க்கிழமை காய்கறிச் சந்தைக்கு -வீட்டின் அருகில்தான் -ஒரு இரவு நேரத்தில் போய் நோட்டம்விட்டது ஒன்றுதான் கொஞ்சம் மாறுதல். அதுவும் வழக்கம்போல் கலகலப்பான, கலர்ஃபுல்லான விண்டர்-மார்க்கெட்டாக இல்லை. வெங்காயம் இல்லாத காய்கறிச் சந்தை, ஒரு சந்தையா?  உருளைக்கிழங்கும், வெங்காயமும் இல்லாமல் சமைக்கவே தெரியாத வட இந்தியப் பெண்டுகள், இங்கு படும்பாடு இருக்கிறதே, சொல்லிமுடியாது! குளிர்காலத்தில் ரொட்டிக்கு வெங்காயமில்லாமல் ஒரு ஸப்ஜியா.. அட.. சே! குடிமக்களுக்கு அத்தியாவசியமான வெங்காயம் சப்ளை பண்ண முடியல.. ஃப்ரீ வைஃபையாம், இலவச பஸ் பயணமாம்.. என்னடா சர்க்கார் நடத்துறானுங்க இவனுங்க? சாமானிய டெல்லிவாசிகளின் தீரா முணுமுணுப்பு.

உடம்பு ஒத்துழைக்க மறுக்க, Paracetamol, cough syrup, ’அத்ரக் சாய்’ (இஞ்சி டீ) என மாற்றி மாற்றிப் பொழுதை ஓட்டி, வியாதிக்காரனுக்காகக் காத்திருக்கும்(!)  டாக்டர் கழுகிடம் சிக்கிவிடாமல் இருப்பதில் ப்ரயத்னம் எடுத்துக்கொண்டேன்.  டாக்டரிடம் போய்ப் புலம்பி, ஒரு ஏழெட்டு கம்பல்சரி டெஸ்ட்டுகள் செய்துகொண்டு, பத்துப்பனிரெண்டு கலர்க்கலர் மாத்திரைகளாக வாங்கி  விழுங்கிக்கொண்டு, அதன் பக்க அல்லது பின்-விளைவுகள் என்னவாக இருக்கும் என மண்டையைப் பிய்த்துக்கொள்வதை விட, ஒரேயடியாக அந்த ஸ்டெதஸ்கோப்-வாலாவை டபாய்த்து, ஏர்ப்போர்ட் பாய்ந்து, விஸ்தாரா பிடித்துப் பறந்துவிட்டேன், நம்ம பெங்களூருக்கு. பெங்களூர் மற்றும் சுற்றுவட்டாரத்தின் ’காற்றுத்தர அளவீடு’ (Air Quality Index -AQI) பொதுவாக 50-லிருந்து 170 வரைதான் இருக்கிறது. அதாவது காற்றுமாசு – ’பாதுகாப்பான அளவிலிருந்து சற்றே மோசமான நிலை’ வரை! டெல்லியைப்போல் 400, 500 என கிரிக்கெட் ஸ்கோர் போல,  ‘அபாய’ நிலைக்குத் தாவிக் குதிப்பதில்லை என்பதில் ஒரு ஆசுவாசம்.

Bye, bye Delhi, for the time-being! அதற்குள் காற்று மாசு, சேற்றுமாசு என்று எல்லாவற்றையும் சரிசெய்துகொண்டு, அப்பறமா நிதானமாக் கூப்பிடு. அவசியம் வர்றேன்..!

**

11 thoughts on “டெல்லி சென்று மீண்டபோது ..

  1. பிடிக்காத மருமகள் கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்பார்கள்

    Like

  2. //சுற்றுகையில் ப(Ba)ட்டூரே-(ச்)சோலே, குல்ச்சா என ஊருக்கேற்றபடி பஞ்சாபி ஐட்டம்களை சூடாக உள்ளே தள்ளும் வாய்ப்பும் வரும்//

    ஆனா நான் அறிஞ்சது, அங்கு ஒரு கொடுமை.. காலைச் சாப்பாடு நம் ஊர்களைப்போல 6 மணிக்கெல்லாம் கிடைக்காதாமே, ரீ கூட வாங்க முடியாதாமே.. அனைத்துமே 10 மணிக்குமேல்தானே திறப்பார்களாம், அதை நினைக்கத்தான் மோடி அங்கிளைச் சந்திகப்போகப் பயமாக்கிடக்குது:)).. ஏனெனில் எனக்கு கண்ணை முழிச்சதும் நல்ல ஸ்ரோங் ரீ வேணும்:).

    Like

  3. நானும் அறிஞ்சேன், அது ஏன் அப்படி பொலூசன் டெல்லியில் மட்டும்.. எனப் புரியவில்லை.. நீங்கள் ஸ்கொட்லாந்து வந்து பாருங்கோ ஏ அண்ணன், இங்கு அப்படி ஒரு சுத்தக் காத்து, நெருக்கடி இல்லாத வாழ்க்கை, கண் எல்லாம் பிரகாசமாவது, மூச்சு விடுவது கூலாக இருப்பது எல்லாம் தெரியும், இங்கு காற்றில் ஈரப்பதன் அதிகம்.

    இங்கு வருவோர் சொல்வது, கண் எரிச்சல் இல்லாமல் நல்ல கிளீனாக இருக்குது என.

    அதனாலோ என்னமோ இங்கு மக்கள் ஹப்பியாக இருப்பது அதிகம்.

    Like

  4. குளிர் காலத்தில் டில்லி சென்று சாலையோரக் கடையில் சமோசா சாப்பிட்டு, சூடாக மலாய் சாய் குடிக்க வேண்டும் என்பது என் சின்ன சின்ன ஆசைகளுள் ஒன்று. நீங்கள் சொல்வதைப் பார்த்தால், அது நடக்காது போலிருக்கிறதே. 

    Like

    1. @ திண்டுக்கல் தனபாலன்: வாங்கய்யா! ரொம்ப நாளாச்சு. மாசு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என நம்புவோம்.

      @ அதிரா மியா: தமிழ்நாட்டிலும், பொதுவாக தென்னிந்தியாவிலும் திறப்பதைப்போல் காலை 6 மணிக்குக் கடை திறந்து ஆவிபறக்க, காப்பி, டீ, இட்லி, தோசை கிடைக்காதுதான் டெல்லியில். குளிர்காலத்தில் ஊர் எழுந்திருக்கவே 8, 81/2 ஆகும்!
      ஸ்காட்லாந்திற்கு ஒரு ரிடர்ன் டிக்கெட் அனுப்புங்க. வந்து பாத்து, கண்டு களித்து, ஒரு தடவை மூச்சை இழுத்து விட்டுத் திரும்பிடறேன்!

      @ பானுமதி V. : குளிர்கால டெல்லியின் காலை, அல்லது மாலையில், சூடான பஞ்சாபி சமோஸா (உருளை பதித்த குண்டு சமோஸா), அல்லது மட்ரியோடு மசாலா டீ, அல்லது மலாய் போட்ட டீ அருந்தினால் பிரமாதமாக இருக்கும். சில இடங்களில் சாலையோரக் கடைகளில் கிடைக்கும்.புறநகர்ப்பகுதிகளிலும், நகரின் பழமையான இடங்களிலும் டாபாக்களில் (Dhaba) இது சாத்யம்தான் இப்பவும்.

      அதேபோல், மாலையில் உருளைக்கிழங்கு மசியலாக+மட்டர்..போட்டுத் தட்டிய டிக்கி (Tikki) – winter special!- சுடச்சுட பெரிய தோசைக்கல்லில் வட்டவட்டமாக டிக்கி சூடுபடுத்தப்பட்டு தயாராகும் அழகே அழகு. குளிர்காலத்தில் வாங்கிச் சாப்பிட்டால் (with sauce or ketchup) ஆஹா! பஞ்சாபிப் பெண்கள் அந்த டிக்கிக்காரனையே சுத்தி சுத்தி வருவார்கள். எத்தனை உள்ளேதள்ளினாலும் ஆசை விடாது!

      நகரின் மத்தியில் சின்ன, சின்ன ரெஸ்டாரண்டுகளும் கொஞ்சம் சாவகாசமாகத்தான் திறக்கும். ஆட்களும் வரவேண்டுமே!

      Like

  5. டெல்லி போகணும்னு நினைக்கவே பயம்மா இருக்கும் போல! ஏன் அங்கே இப்படி ஒரு மோசமான நிலையை வர வைச்சுட்டாங்கனும் புரியலை!

    Like

    1. @ Geetha Sambasivam : ஷீலா தீக்ஷித் முதல்வராக இருந்தபோது (2009-14), டீஸல் வாகனங்கள் ஒழிக்கப்பட்டு, CNG-யில் இயங்கும் வாகனங்கள், டாக்ஸி, ஆட்டோ என அறிமுகப்படுத்தப்பட்டு, காற்று மாசு வெகுவாகக் கட்டுக்குள் வந்திருந்தது. சிலபல முயற்சிகள் அரசினால் செய்யப்பட்டன.
      அதற்கப்புறம் கேஜ்ரிவாலின் பொற்காலம். இஷ்டத்துக்கும் ஆண்டுகொண்டு, பேசிக்கொண்டு, இலவசங்கள் கொடுத்து மீண்டும் திரும்ப முயற்சிக்கும் இன்னுமொரு அரசியல்வாதி. இன்னும் என்னென்ன பாக்கியிருக்கிறதோ..

      Like

  6. ஐ ஐ டி மாணவர்கள் ஏதோ இந்த  காற்றுமாசுக்கு மாற்று கண்டு பிடித்திருப்பதாய்ப் படித்த ஞாபகம்!

    Liked by 1 person

    1. @ Sriram:
      ஐஐடி மாணவர்கள் ஒரு பென்சிலைத் தூக்கிக் காண்பித்தாலும் எதையோ கண்டுபிடித்துவிட்டதாக எழுதுவார்கள் நம் நாட்டில்! காற்று மாசுக்குப் பல காரணங்கள் இருக்கும். எளிதாகப் போகப்போவதில்லை இது!

      Like

Leave a reply to Aekaanthan Cancel reply