நம்ம தமிழ்நாடு !

பேனா, வாட்ச் போன்ற சங்கதிகளை ஆசையாக சேகரிப்பதில், பயன்படுத்தி மகிழ்வதில்,  சிலருக்கு ஒரு விதமான பித்து இருக்கும். அடியேனும் கிட்டத்தட்ட அந்த ஜாதிதான்.  குழந்தைத்தனமான ஆசைகளும், விசித்திரப் பழக்கவழக்கங்களும் இல்லாதவனெல்லாம் ஒரு மனிதனா, என்ன !

90-களுக்கு முன், க்யூபா (Spanish -கூபா), வடகொரியா போன்ற ஒரு ‘சோஷலிச’ நாடாகப் பொழுதுபோக்கிக்கொண்டிருந்த இந்தியாவில், வெளிநாட்டுப் பொருட்கள் கிடைப்பதே அபூர்வம். யாராவது கொண்டு வந்து, இங்கு விற்றால்தான் உண்டு. அதையும் காதோடு காதுவைத்தாற்போல் விற்பார்கள், வாங்குபவர்களும் அப்படியே. ரகசியத்திலும் ஒரு பெருமை! அப்போதெல்லாம், ஒருவர் தன் கையில் ஒரு ஃபேவர் லூபா (Favre Leuba), டிட்டோனி (Titoni), கேமி (Camy), ஹென்ரி சாண்டஸ் (Henri Sandoz) என ஸ்விஸ் ரிஸ்ட்-வாட்ச்(!) கட்டியிருந்தால், கால் தரையில் படாது. அவரது மணிக்கட்டை பொறாமையோடு கவனிப்பார்கள் வாங்கமுடியாத அப்பாவிகள். அதே போல் இந்த பேனா விஷயமும். யாராவது, பைலட் அல்லது பார்க்கர்  பேனாவை சட்டைப் பாக்கெட்டிலிருந்து, எடுத்து கையை லேசாக சிலுப்பிக்கொண்டே எழுதினால், கையெழுத்துப் போட்டால், ரசனை உள்ள ஜனம் கவனிக்கும். பைலட் பேனாலன்னா எழுதறான்! இருபது வருடங்களில் எவ்வளவு மாறிவிட்டது நாட்டில். இப்போதைய இந்தியாவோ,  ஒரு சிறு உலகம். எந்த ஒரு தரமான நுகர்வோர் பொருளையும் எளிதாக வாங்கிவிடலாம். ஜனங்களிடம் பணமும்  அநியாயத்துக்குப் புழங்குகிறது!

சில மாதங்களுக்கு முன் கைக்கடிகாரங்களின் உலகில்,  புதிய வருகைகள், அந்தக்கால அரபு மற்றும் ரோமன் எண்கள் உள்ள ’கால எந்திரங்கள்’, நவீன மல்டி-டயல் க்ரோனோமீட்டர்கள்  எனத் தேடித் தேடிப் பார்த்துக்கொண்டிருந்தேன். இடையிடையே ’ஸ்மார்ட் வாட்ச்’களின் ஆட்டம் வேறு, காலத்தின் மாறும் கோலம். மனம் எதிலும் செல்லாவிட்டால், வாட்ச்சுகளையாவது உருட்டுவோம். 2019-ன் இந்தியப் புது வருகைகளில், நடுத்தரவகை கடிகாரங்களில், டைமெக்ஸ் (Timex), Citizen, ஃபாஸில் (Fossil), டைட்டன்(Titan) ஆகியவை முன் நின்று ஈர்க்கின்றன.

பிரதமர் மோதி கடந்த மாதம், தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் சீன அதிபருக்கு தமிழ் உணவுவகைகளை  விருந்தாக அளித்தது, தமிழ் வார்த்தைகளைப் பேசியது பத்திரிக்கைகளில் லேசாக வந்தது. மேலும், ஐநா-விலும், தாய்லாந்தின் சர்வதேச கூட்டம் ஒன்றிலும் தமிழ்க் கவிதைகளைக் குறிப்பிட்டு அவர் பேசியது மீடியாவிலும், தேசிய நாளிதழ்களிலும் பிரதானமானது. இதெல்லாம்  ஒரு காரணமாக இருக்குமோ? தமிழ், தமிழ் என தடதடக்கிறதே எங்கும்

இந்திய அரசு கடிகாரத் தயாரிப்பாளரான ஒருகாலத்தில் கோலோச்சிய ஹெச்.எம்.டி (hmt) -க்குப் பின், இந்தியாவின் டாப் வாட்ச் ப்ராண்டாக வலம் வரும் டாடாவின் டைட்டன், தனது கவனத்தை தமிழ்நாட்டின் பக்கம் திருப்பியிருக்கிறது. உற்பத்திசாலை துவங்கப்போகிறதா புதிதாக? இல்லை. ‘நம்ம தமிழ்நாடு’ எனும் சிறப்புப் பதிப்பாக தமிழ் எழுத்துக்களுடன், சித்திரங்களுடன் கைக்கடிகாரங்களை வெளியிட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன் டைட்டனின் ப்ரிமியம் ரேஞ்ச் கடிகாரங்களைப் பார்க்கையில், பெங்காலிகளைக் குஷிப்படுத்தும் விதமாக பெங்காலி மொழி எழுத்துக்கள், குறியீடுகளுடன் கைக்கடிகாரங்கள்-சில மாடல்கள் டைட்டனிலிருந்து சில வருடங்களுக்கு முன்னரே வந்திருப்பது தெரியவந்தது. அதேபோல், மும்பை நகரின் பாரம்பர்யம் பற்றியும் ஒரு வெளியீடு. ஏன், தமிழ் இவர்களுக்கு ஞாபகம் வரவில்லையா.. என சிந்தனை ஓடியது அப்போது. பதில் கிடைத்துவிட்டது இப்போது!

உலகின் மிகத்தொன்மையான மொழிகளில் ஒன்றான, இந்தியாவின் பாரம்பரியம் மிக்க தமிழ் மொழி, தமிழ்நாடு ஆகியவற்றை சிறப்பிக்க எண்ணி, மொழி, கலாச்சாரம், பெருமை மிகு தமிழ்க்கோவில் சிற்பங்கள் எனக் காட்டும் வகையில் புதிய பதிப்பாக ‘நம்ம தமிழ்நாடு’ கடிகார வகைகள் (Limited Edition), உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறது டைட்டன் நிறுவனம். தமிழ்நாட்டின் மீதான எங்களின் சிறு கவிதை முயற்சி என்கிறது! (சரி.. சரி..காதுல விழுந்தாச்சு). டைட்டன் அறிமுகப்படுத்தியிருப்பது தினசரி வாழ்க்கைக்கான Workwear, day-today-wear அல்ல; கொஞ்சம் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள்.

தமிழ் விஷயத்தில் டைட்டன் வேகமாக இயங்குகிறதே என வியந்து, தேடியதில், சில படங்களும், விபரங்களும் கிடைத்தன.

1. புதிய மாடல் ஒன்றில், இத்தகைய சிறப்புகள்: Mother of Pearl Dial, டயலின் மேற்பகுதியில் கடிகாரத்தின் பெயர் ‘டைட்டன்’ எனத் தமிழிலேயே. (தமிழைக் கடிகார டயலில் பார்த்துப் பழக்கப்படாத கண்கள் கொஞ்சம் விரிகிறது!) எண்கள் இருக்கும் இடங்களில், புள்ளியோ, கோடோ இருப்பதற்குப் பதிலாக,  ‘இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, பத்து’ என கருப்பில் தமிழ் எழுத்துக்கள். 12 இருக்கும் இடத்தில் Titan’s Brand Logo. டயலின் கீழ் பகுதியில் ’தேதி’. கடிகாரத்தின் கேஸ், ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் மற்றும் ரோஸ்கோல்ட் வண்ணத்தில். ஸ்டைலான metal strap in same colours.  ‘மினரல் கிளாஸ்’ பொருத்தப்பட்ட கடிகாரம்.  ஆண், பெண் இருபாலருக்கும் கிடைக்கிறது. ஸ்டீல்/ரோஸ் கோல்ட் நிறம் பிடிக்காதவர்களுக்கென, Gold case/ strap வகையும் உண்டு.

2. இரண்டாவதில் இப்படி அம்சங்கள்: ரோஸ் கோல்ட் கேஸ். டயலில் சில சிறப்புகள்: தமிழ்நாட்டுக் கோவில் கோபுரம் மற்றும் கோவில் தூண்களில் காணப்படும் யாளி சிற்பம் ஆகியவை கோட்டோவியமாக பிண்ணனியில்  பொறிக்கப்பட்டுள்ளது அழகு. இதில் தேதிக்காக ஒரு ’ஜன்னல்’ வைத்து ஓடிவிடாமல், வலது புற மேல்பக்கத்தில் ஒரு சிறு ‘Date dial’-தனி முள்ளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ‘டைட்டன்’ எனத் தமிழில் மேல்பகுதியில் எழுதியிருக்கிறார்கள். கட்டிக்கொள்ள பரௌன் கலரில் லெதர்-ஸ்ட்ராப். மினரல் க்ளாஸ் டயலை மூடியிருக்கிறது.

3. மூன்றாவது மாடல் பிரத்யேகமாகப் பெண்களுக்கானது. காஞ்சீபுரம் தீம். டயலின் இடது பாதி mother of pearl finish. நம்பர் 9 வரும் இடத்தில் தமிழில் ‘டைட்டன்’ என எழுத்துக்கள்.  வலது பாதி ஜரிகையில் மயில் வடிவமொன்று -காஞ்சிப் பட்டை மனதில் கொண்டு.  அழகான கருப்பு லெதர் ஸ்ட்ராப்புடன் வருகிறது. இதில் தேதி இல்லை. 

மூன்று மாடல்களும் தரமானவை -Water Resistant: 5 ATM. Quartz movement. சர்வதேச பிராண்டுகளைப் போல ‘quartz movement’-க்கு இரண்டு வருட வாரண்ட்டி கிடைக்கிறது. தமிழ் லிமிட்டெட் எடிஷன் வாட்ச்களின் விலை Rs. 4495 – 6995 ரேஞ்சில்.

CNBC மீடியா, தமிழைக் கொண்டாடும் டைட்டனின் இம்முயற்சியை ஸ்லாகித்து எழுதியிருக்கிறது. முதன் முறையாக, தமிழ் எழுத்துக்கள், சிற்பங்களுடன் இந்தமுறை மார்க்கெட் களத்தில்! சும்மா, தமிழ்..தமிழ்.. என்று பாட்டுப்பாடிக்கொண்டிராமல், தமிழ்ப் பாரம்பர்யத்தைக் கோடிடும்  ஒரு தமிழ் வாட்ச்சை வாங்கிக் கையில் கட்டிப்பாருங்கள்.. கர்வம், பெருமைன்னா என்னன்னு புரியும்!

**

6 thoughts on “நம்ம தமிழ்நாடு !

  1. பெருமை, புதுமைதான். ஆனால் தமிழிலேயே இருந்தால் அதைக்கொஞ்சம் மதிப்புக்குறைச்சலாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.  ஆங்கிலத்தில் இருந்தால்தான் மதிப்பு, ஒரிஜினல் என்று நினைப்பார்கள்!

    Liked by 1 person

    1. @ sriram :

      உண்மை. தமிழ் நாட்டிலிருந்து வந்திருந்தும் வேறு மாநிலங்களில் வேலை செய்பவர்கள் தங்கள் தமிழ் ஜூனியர்களுடன் ஆங்கிலத்திலோ, ஹிந்தியிலோ முனைப்பாக உறவாடும் அழகை நான் பலவாறாகப் பார்த்திருக்கிறேன். அலுவலகத்தைத் தாண்டியும் தனிப்பட்ட வாழ்க்கையில், குறிப்பாக வெளிமாநிலங்களில் வசிக்கையில், தாங்கள் தமிழர் என்று அடையாளப்படுத்திக்கொள்வதைத் தவிர்க்கும் மூதேவிகளையும் ஒரு அயர்வோடு நோக்கியிருக்கிறேன். என்ன செய்ய, தமிழன்கள் பலவிதம் !
      பெருமைக்குரிய தமிழனைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது சில சமயங்களில்..

      Like

  2. முற்றிலும் புதிய செய்தி. டைடன் வாட்ச் தொழிற்சாலை தமிழ்நாட்டின் ஹோசூரில் தானே இருக்கு? அப்புறம் தமிழில் எழுத்துக்களைக் கொண்டு வருவதில் என்ன புதுசா இருக்க முடியும்! வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்களே! விலைதான் அதிகமா இருக்கு. சாமானியர்கள் வாங்கும் விலையில் இல்லை.

    Like

    1. @ கீதா சாம்பசிவம்:

      விலை சாதாரணர்களுக்கானதல்ல. ஸ்பெஷல் எடிஷன் எல்லாமே விலை அதிகமாகத்தான் இருக்கும். இது collector’s item.

      Like

  3. டைட்டன் தமிழ் வாட்சிற்கான விளம்பரம் பார்த்தேன். விளக்கம் அருமை, படங்கள் சேர்த்திருக்கலாமோ?

    Like

    1. @ Banumathy V. : படங்கள் சேர்க்க முயற்சித்தேன். ஏனோ சரியாக வரவில்லை. விட்டுவிட்டேன்.

      Like

Leave a comment