குழந்தையை இங்கிட்டுக் குடுத்துட்டு, போங்க உள்ளே !

 

நமது நாட்டில் நெருக்கடியான சமூக, அரசியல் சூழல்களிலும், அடிக்கடி தாக்கும் இயற்கைச் சீற்றங்களின்போதும் ராணுவம் மற்றும் துணைராணுவத்தினர் (para-military forces), தங்கள் பணி எல்லைகளைத் தாண்டி, ஒரு அவசர நிலையில், அதிரடியாக மக்கள் சேவைகளில் மத்திய அரசினால் ஈடுபடுத்தப்பட்டு  வருகிறார்கள். அஸ்ஸாம், மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம், ஒடிஷா, குஜராத், கேரளா ஆகிய மாநிலங்கள் கடந்த சிலமாதங்களாக கடும் மழை, ஆற்றுவெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு குடிசைகளும், சிறுவீடுகளும் அடித்து செல்லப்பட்டபோது,  ராணுவத்தினர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆற்றில் குதித்து, வெள்ளத்தில் சிக்கிய வயதானோர், குழந்தைகளை மீட்டுவந்தது, ஆங்காங்கே நிகழ்வுகளாகப் படங்களுடன் மீடியாவில் தெரியவந்தன. கூடவே, அவ்வப்போது மாநில காவல்துறை அதிகாரிகள், காவலர்களின் பணிகளும், சாதாரண மக்களுக்காக செய்த திடீர் ஒத்தாசைகளும் தெரியவந்ததில், பொதுவாக எதற்கெடுத்தாலும் குறைகூறிக்கொண்டிருக்கும்  ஜனங்களுக்கும் ஒரு அசாதாரண திருப்தி. அப்பாடா,  ஏதோ கொஞ்சம் நல்லவங்களும் இருக்காங்கபோலத் தெரியுதே!

எந்த வகையான அரசுப் பணியில் நியமிக்கப்பட்டாலும், இந்தியப் பெண்கள் தங்கள் பணி எல்லைகள், நெருக்கடிகள், சமயங்களில் தங்களின் இயலாமைகளைத்  தாண்டியும், சில காரியங்களை செய்துகாட்டி அசத்திவிடுகிறார்கள். அதீத கடமை உணர்வு, சுயகட்டுப்பாடு, சேவை மனப்பான்மை ஆகிய தளங்களில், ஆண் வர்க்கத்தினரை அஸால்ட்டாக அடிச்சுத் தூக்கிவிடுகிறார்கள் இவர்கள் என்பதும் தெரியவருகிறது..

‘நியூஸ்18’  மீடியா சமீபத்தில் ஒரு சிறு செய்தியைப் போட்டது. ட்விட்டரில் அதிர்ந்ததின் விளைவு. அஸ்ஸாம் மாநிலத்தில் இரண்டு மாணவிகள், TET (Teachers’ Eligibility Test) தேர்வெழுத என, தேர்வு மையத்திற்கு வந்துவிட்டார்கள். தேர்வு நேரம் நெருங்கியது. தேர்வெழுத வந்த மற்றவர்கள் தேர்வு மையத்திற்குள் ஒவ்வொருவராக நுழைந்தார்கள். இந்த இரண்டு பெண்களும் பேந்தப்பேந்த விழிக்க ஆரம்பித்தார்கள். ஒரு பிரச்னை விஸ்வரூபமெடுத்து அவர்களைத் தாக்கியது. என்ன, ஹால்டிக்கட்டை மறந்துவிட்டு வந்துவிட்டார்களா, அந்த அசடுகள்? இல்லை. இருவரின் கைகளிலும் கைக்குழந்தைகள். இளம் தாய்மார்கள் அவர்கள். வீட்டில் பார்த்துக்கொள்ள ஆளில்லை போலும்; எடுத்துக்கொண்டு பரீட்சை நடக்கும் இடத்திற்கே வந்துவிட்டார்கள். இங்கே அதிகாரிகள் சொல்லிவிட்டார்கள். குழந்தையை எடுத்து பரீட்சை ஹாலுக்குள் செல்ல அனுமதியில்லை.

என்ன படித்து என்ன பயன்? தேர்வெழுதவே முடியாது, வீடு திரும்ப வேண்டியதுதானா? நமக்கெல்லாம் இனி உத்தியோகம் கிடைத்து, அதைப் பார்த்ததுபோல்தான்..எல்லாம் வெட்டிப்பேச்சு, வெறுங்கனவு..’ மனம் வெதும்பி, புலம்பிக்கொண்டே திரும்பிப் படிகளில் இறங்கியபோது, எதிரே நெருங்கினார்கள், இரண்டு அஸ்ஸாம் பெண் போலீஸ் அதிகாரிகள். ‘என்னம்மா ? என்ன பிரச்னை? எதுக்கு அழுகை இப்போ!’ பெண்கள் இருவரும் காட்டினார்கள். பொட்டலங்கள்போல கைகளில், ஒருவயதிற்கும் குறைவான கைக்குழந்தைகள். சொன்னார்கள்: ‘வீட்டில் பார்த்துக்கொள்ள யாருமில்லை. இங்கே, உள்ளே குழந்தையோடு செல்ல அனுமதி இல்லை. தேர்வு எழுத முடியாது. சான்ஸ் போச்சு… போகிறோம்! எங்களின் வேலைவாய்ப்பும் போகிறது எங்களோடு..”

அஸ்ஸாம் பெண் போலீஸ் சேவை!
Courtesy: Twitter/News 18

போலீஸ் அதிகாரிகள் அதிர்ந்தார்கள். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். கைகளை நீட்டினார்கள். ’ கொடுங்கள் எங்களிடம். குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறோம். கவலைப்படாதீர்கள் அம்மா! உள்ளே ஓடுங்கள். பயப்படாமல், பரீட்சையைப் பார்த்து எழுதுங்கள்!’ இதை எதிர்பாராத அந்த இளம்பெண்கள் திடுக்கிட்டார்கள். வேறுவழியின்றி, தயக்கத்தோடும், பயத்தோடும் சின்னக்குழந்தைகளை பெண் போலீஸ் அதிகாரிகளிடம் கைமாற்றினார்கள். உள்ளே போய் தேர்வு எழுதினார்கள். இரண்டு மணிநேரம் கழித்து வெளியே ஓடிவந்து, அரக்கப் பரக்கப் பார்த்தார்கள். இரண்டு பெண் போலீஸ்களும், கொஞ்ச தூரத்தில், குழந்தைகளைக் கையிலேந்தி அங்குமிங்குமாக நடந்துகொண்டிருப்பதைக் கண்டு இழுத்து மூச்சுவிட்டுக்கொண்டார்கள்.  அவர்களிடம் போய், கலங்கிய கண்களுடன் கைகூப்பிவிட்டு,  குழந்தைகளை வாங்கிக்கொண்டு, வீட்டுக்கு நடையைக் கட்டினார்கள், நாளைய குழந்தைகளின் வருங்கால ஆசிரியைகள்.

’அஸ்ஸாம் போலீஸ் (AP)-இன் இந்த இரண்டு பெண் அதிகாரிகள் கையில் குழந்தையுடன் உலவும் படம், ட்விட்டரில், இப்படியான வாக்கியங்களுடன்  வந்தது:

‘அம்மா ‘என்பது ஒரு வினைச்சொல் . அது நீங்கள் யார் என்பதை அல்ல, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது !’

ட்விட்டர்வாசிகளுக்குத் தலைகால் புரியவில்லை!

**

3 thoughts on “குழந்தையை இங்கிட்டுக் குடுத்துட்டு, போங்க உள்ளே !

 1. நானும் இதை பாசிடிவ் செய்திகளுக்கு எடுத்து வைத்திருக்கிறேன்.

  அது சரி பரீட்சையை பார்த்து எழுதச் சொன்னார்களா?  

  தப்பில்லையோ?!!!

  Liked by 1 person

 2. எல்லாம் சரி, ஏகாந்தன் சார், பரிக்ஷை எழுதும் ஒரு நாளுக்கே குழந்தையைப் பார்த்துக்க ஆளில்லாதவங்க பள்ளியில் வேலை கிடைச்சதும் குழந்தையை எங்கே விட்டுட்டு வேலைக்கு வருவாங்க? அதையும் இப்போவே யோசிக்கணும்! 😦 என்னால் இதைப் புரிஞ்சுக்க முடியும். நானும் குழந்தையைப் பார்த்துக்க யாரும் இல்லாமல் தான் வேலையையே விட்டேன். :)))))

  Like

 3. @ ஸ்ரீராம்: பார்த்துப் பரீட்சை எழுதச்சொன்னார்கள். பாத்துப் பாத்து அல்ல! மேலும் இது நடந்தது அஸ்ஸாமில். சட்டம், ஒழுங்கை மதிப்பவர்கள். பீஹார் என்றால்… நீங்கள் சொல்கிறபடி சிந்திக்கலாம்..!

  @கீதா சாம்பசிவம்: இந்தப் பதிவு, போலீஸ் தங்கள் பணிஎல்லையைத்தாண்டியும் எப்படி மனிதாபிமானம் காட்டினார்கள் என்றுதான் அடிக்கோடிடுகிறது. அந்தப் பெண்களுக்கு வேலை கிடைத்தால், குழந்தையை எங்கே விடுவார்கள்.. என்பதையெல்லாம் ஆராய்ந்தால், அது தொடர்கதையில் கொண்டுபோய்விடும், இல்லையா!

  என்ன செய்வது, நமது நாட்டின் ஏழை, நடுத்தரவர்க்கப் பெண்களின் பிரச்னைகளுக்கு எல்லையில்லை. முடிவில்லாத் நெடுங்கதை அது..

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s