” ஜெகம் புகழும் புண்ய கதை ….

 

.. ராமனின் கதையே..! அதை செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே !” – என்று ஒரு அமர கீதம். தமிழ் சினிமாவின் பொற்காலத்தின் ஒரு பகுதியான அறுபதுகளில், திரையில் எதிரொலித்துப் பரவியது. ரசிகர்களிடையே பிரபலமான பாடல், இன்றும் பரவசத்தோடு கேட்கப்படுகிறது. ஒரு பாடலைக் கேட்டு ஆனந்திப்பார்களே ஒழிய, இதை எழுதியது யார் என நமது இனிய தமிழ் மக்கள் சிந்திக்கமாட்டார்கள் – பொதுவாக இதுதான் நிலைமை! கவிஞர் மருதகாசியின் கைவண்ணம் இது. 1963 -ல் வெளிவந்த ’லவகுசா’ திரைப்படத்தில் வருகிற இந்தப் பாடலில், ராமாயணக் காவியத்தையே ஒற்றைப் பாடலில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் மருதகாசி. ராமன், சீதை – தெய்வீக ஜோடியின் புத்திரர்களான சிறுவர்கள் லவன், குசன் ஆகியோர், தாங்கள் யார், தங்கள் தந்தை யார் எனத் தெரியப்படுத்திப் பாடுவதாகத் திரையில் வெளிப்பட்டது. கேட்டோரின் காதுகளில், குறிப்பாக ராம பக்தர்களின் செவிகளில் ரீங்கரித்து நின்றது. அந்தப் பொடியன்களுக்குப் பொருத்தமான நளினமான இளங்குரலில் பி.சுசீலாவும், பி.லீலாவும் இழைத்திருக்கின்றனர். பி.லீலாவுக்கு அமைந்த முதல் திரைப்படப் பாடலும் இதுதானாம். கே.வி.மகாதேவன் இசைத்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்ட படம் லவகுசா. சூப்பர்-டூப்பர் ஹிட் இரண்டு மொழிகளிலுமே. என்.டி. ராமாராவும் அஞ்சலிதேவியும் ராமர், சீதையாகக் கலக்கிய திரைக்காவியம். தமிழ் ’லவகுசா’வில் ஜெமினி கணேசன், ராமனின் தம்பி லக்ஷ்மணனாக வருகிறார். அப்போது இளமையோடு லக்ஷணமாக இருந்திருப்பாரோ…! தெலுங்கு நடிகர் சோபன் பாபு நடித்திருக்கிறார் தம்பி சத்ருக்னனாக. குணச்சித்திர நடிகை பி.கண்ணாம்பா ராமனின் அன்னை கோஸலையாக நடிக்க, பூமாதேவியாக நடித்திருப்பவர் எஸ்.வரலக்ஷ்மி. பின்னாளின் இரண்டு பெருநட்சத்திரங்கள் இப்படத்தில்..பாவம், சிறு பாத்திரங்களாக.   துணிவெளுப்பவர், அவரின் மனைவி ரோல்களில் எம்.ஆர். ராதா, மனோரமா!

மருதகாசியை ராமன் ஏற்கனவே பிடித்துவிட்டிருந்தார்! ‘சம்பூர்ண ராமாயணம்’(1950) படத்தில் ராவணன் பாடுவதாக வரும், சி.எஸ்.ஜெயராமன் பாடிய, ‘இன்றுபோய் நாளை வாராய்.. என, எனை ஒரு மனிதனும் புகலுவதோ…..! ’ என்ற உருக்கமான பாடலும் ஐயா மருதகாசியின் சித்திரம்தான்.

இவருடைய திரையுலகப் பிரவேசம் திருச்சி எஸ்.லோகநாதனின் உதவியுடன் நிகழ்ந்திருக்கிறது. மருதகாசியின் முதல் திரைப்படப் பாடல் ’மாயாவதி’ எனும் படத்தில் வந்தது. ‘பெண் எனும் மாயப்பேயாம் பொய் மாதரை என் மனம் நாடுமோ..’ என ஆரம்பித்திருக்கிறார் அந்தப் பாடலை. எந்தப் பெண், எப்படி ஏமாற்றினாளோ இவரை.. ஒன்றும் தெரியவில்லை! அதற்கப்புறம் பொன்முடி, மந்திரிகுமாரி, தூக்குத்தூக்கி, அமரகவி, மக்களைப்பெற்ற மகராசி, பாவை விளக்கு என புகழ்பெற்ற பல படங்களில் இவரது பாடல்கள் ஒலித்து ரசிகர்களை வசப்படுத்தின. ‘வாராய்…நீ.. வாராய்! போகுமிடம் வெகுதூரமில்லை..நீ வாராய்..!’, ‘உலவும் தென்றல் காற்றினிலே…’,  ‘எந்நாளும் வாழ்விலே…கண்ணான காதலே…!’, ’காவியமா நெஞ்சின் ஓவியமா..’, ‘மாசிலா.. உண்மைக்காதலே…’ மற்றும்,  ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே.. ஏனோ அவசரமே.. எனை அழைக்கும் வானுலகே’ போன்ற இனிமையான பாடல்களை வழங்கிய கவிஞர்.

சக கலைஞர்களை மதித்துப் போற்றிய மாமனிதர் மருதகாசி. பிரபல கவிகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை தன் தம்பி போன்றும், உடுமலை நாராயண கவியைத் தன் அண்ணனெனவும் மதித்தாராம். வாலி, டி.எம்.எஸ். ஆகியோருக்கும் திரையுலகவாழ்வில் ஆரம்பத்தில் உதவியிருக்கிறார். முப்பதாண்டுகளுக்குமேல் தமிழ்த் திரையுலகில் சிறந்த பாடலாசிரியராய் பிரகாசித்தவர். 4000 -த்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பெருங்கவிஞர் மருதகாசி. திருச்சி மாவட்டம் மேலக்குடிகாட்டில் பிறந்து கும்பகோணத்தில் படித்துவளர்ந்தவர்.   2007-ல், மருதகாசியின் பாடல்கள், புத்தகங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு, தேசிய உடைமை ஆக்கியது. ஏதோ, அவர்களால் முடிந்தது..

சனிக்கிழமையாயிற்றே எனக் கோவிலுக்குப்போய், திரும்பி வந்து டிவி-யைப்போட்டால்.. தீர்ப்பு என்கிறார்கள், ஜென்மபூமி என்கிறார்கள்.. கோவில் என்கிறார்கள்…ராம் ராம் என்கிறார்கள். மனம் பரபரத்து,  அடி அடுக்கிலிருந்து தேடி எடுத்துக்கொடுத்தது  – ‘ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே..’ . கூடவே ஏதேதோ கதையெல்லாமும் வந்து சேர்ந்துகொண்டது.

**

11 thoughts on “” ஜெகம் புகழும் புண்ய கதை ….

  1. இடுகை எதை நோக்கிப் பயணிக்கிறது என்று தெளிவாக இல்லையே

    Liked by 1 person

  2. @ நெல்லைத் தமிழன்:
    இதில் பெரிய பயணம் ஏதுமில்லை. சும்மா ‘ராம்..ராம்’ என மனம் ஆரம்பிக்க, இடுகை மருதகாசியில் போய் நின்றது.. அவ்வளவுதான்!

    Like

  3. ஜெய்ராம் ஜிகி! இன்று காலை எழுந்ததுமே தீர்ப்பு என்ன என்று தான் பார்த்தோம். “தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்! தர்மம் மறுபடி வெல்லும்!”

    ஆனால் நம் தமிழ் ஊடகங்கள் இதைத் திரித்து வாத, விவாதங்கள் நடத்தாமல் இருக்கணும் என்றும் மனம் விரும்புகிறது. 😦

    Like

    1. @ Geetha Sambasivam :

      தமிழ் ஊடகங்கள் ஒரு பக்கம் இருக்க, நேற்று முளைத்த சினிமா நடிகர்கள் கூட தங்களை அறிவுஜீவிகளாக பாவித்துக்கொண்டு சகட்டுமேனிக்கும் கருத்துக்கள் கூறுவார்கள். தங்களின் பிராபல்யத்தைக் காண்பிக்க முயற்சிப்பார்கள்…
      இதுகளைப் பொருட்படுத்துவது பண்பாளர்கள், படித்தவர்களுக்கு அழகல்ல!

      Like

  4. அறிய தகவல்களை அள்ளித் தந்திருக்கிறீர்கள்.

    Like

  5. தீர்ப்பினால் விளைந்த எண்ணத்தில் பாடலைப் பகிரப்போய் கவிஞர் பற்றிய ஏராளமான தகவல்களைத் தந்திருக்கிறீர்கள்.  சுவாரஸ்யம்.

    Like

    1. @ துரை செல்வராஜு:

      வில்லம்போடு அலைபவனின் வேலைதான் எல்லாம் ..!

      Like

Leave a comment