இங்கும் .. அங்கும் ..

வழக்கம்போல நடைபயில என அந்தக் காலையில், குடியிருப்பு வளாகத்தைவிட்டு வெளியே வருகிறேன். பள்ளிக்குழந்தைகளின் அவசரங்கள், மஞ்சள் பஸ்களின் உறுமல்கள்  எனக் கடமையான பரபரப்புகளை ஒருவாறு கடந்தபின், சாலையில் சற்றே அமைதி. கால்கள் சீராக நடந்துகொண்டிருக்கையில், வழக்கம்போல் புத்தி ஏதோ சொல்லப் பார்த்தது; அதற்கும் பொழுதுபோகவேண்டுமே:  ‘சும்மாதானே நடந்துபோய்க்கொண்டிருக்கிறாய். கொஞ்சம் காயத்ரி மந்திரத்தை சொல்லிக்கொண்டே நடந்தால் என்ன.. அந்தப் பார்க் வருவதற்குள்….’

புத்தியின் விண்ணப்பத்தைக் கேட்டு அங்கீகரிக்கும் முன், மனம் – அதைப்பற்றி என்ன சொல்ல, அது ஒரு தேவகணம்.. ஆரம்பித்தது, கருமேகம் படர்ந்திருந்த  காலைவேளையில், ஒரு  மெல்லிய ஹம்மிங்குடன்:

ஓ….  ஹோ.. ஹோ…

மயங்கும் கண்ணைப் பாராமல் ..
கலங்கும் நெஞ்சைக் கேளாமல் ..

இது என்னடா புதுக் கஷ்டம் என நினைத்ததோ என்னவோ, மீண்டும் தீவிரமாகக் குறுக்கிட முயற்சி செய்தது புத்தி:  ‘நான் என்ன சொல்றேன்னா.. காயத்ரியைக் காலையில் கொஞ்சம் சொல்லிக்கொண்டே நடந்தால்…’

ம்ஹும். இதற்குள், அண்டம் முழுதும் அந்தப் பெண்குரலாய்ப் பரவி விட்டிருந்தது மனம்:

ஓ…. ஹோ…ஹோ….

மயங்கும் கண்ணைப் பாராமல் ..
கலங்கும் நெஞ்சைக் கேளாமல் ..
பிரிந்து செல்ல எண்ணாதே
என் கண்ணீர் பேசும் மறவாதே ..
மழை வந்த வேளை
மனம் தந்த பாதை
அவன் தந்த உறவல்லவா…  ஆ.. ஆ…

நானே வருவேன்
இங்கும் அங்கும்
நானே… வருவேன்… வருவேன்… வருவேன்…

நான் நடக்க, நடக்க, மனம் மிதந்துகொண்டே வந்தது. பார்க் பெஞ்சில் உட்கார்ந்தபின்னும் விடவில்லை. மொபைலைத் தட்டி, மெல்லக் கேட்கவைத்தது. இயர்ஃபோன் கொண்டுபோகாததால், பெஞ்சில் மொபைலைப் படுக்கவைத்து மெதுவாகப் பாடலைப் பரவவிட்டேன். நான் பெறும் இன்பம், இனிதே பெறுக இவ்வையகம்..

நானே வருவேன்.. இங்கும் அங்கும்…
நானே…வருவேன்… வருவேன்… வருவேன்…

Haunting … நான் லயித்திருக்க, பக்கத்து நடைபாதையில் ஒன்றிரண்டு ஓரப்பார்வைப் பெண்கள், இதழ்களில் முகிழ்க்கப் பார்த்த மென்னகையை அடக்கிக்கொண்டு வேகமாகக் கடந்தார்கள். பாவம், என்னமோ ஆயிடுச்சு இவனுக்கு…

மனம், நாளெல்லாம் இந்தப் பாடலை ரீங்கரித்துக்கொண்டேயிருந்தது. அதை ஒன்றும் சொல்வதற்கில்லை.    ‘…பொல்லாதது.. மனம் பொல்லாதது.. என்ன சொன்னாலும் கேளாதது !’

**
<<<<<<< “நானே வருவேன்… இங்கும் அங்கும்..”
பாடல்:கண்ணதாசன். இசை: வேதா.  குரல்: பி.சுசீலா.
{படம்: யார் நீ? (1966) (ஜெய்சங்கர், ஜெயலலிதா )} >>>>>>>

 

Advertisement

12 thoughts on “இங்கும் .. அங்கும் ..

 1. முன்பெல்லாம் இம்மாதிரி நடை பயிலும்போது நிறையவே பதிவுக்கான விஷயங்கள் கிடைத்ததுண்டு போய்ச் சேர் வீடு நோக்கி என்னும் பதிவும் அப்படிஎழுதியதுதான்

  Liked by 1 person

  1. @ Balasubramaniam GM :

   மனிதனைத் தனியாக விட்டால்தான், சிந்தனையெல்லாம் தோன்றும். அதை உடனே எடுத்து எழுதுகிறோமா என்பது வேறு விஷயம்..!

   Like

 2. ///மயங்கும் கண்ணைப் பாராமல் ..
  கலங்கும் நெஞ்சைக் கேளாமல் ..
  பிரிந்து செல்ல எண்ணாதே
  என் கண்ணீர் பேசும் மறவாதே ..///
  ஆஆஆ ஆரை ஏமாத்த நினைச்சீங்க ஏ அண்ணன்?:).. ஹையோ அந்தக் கண்ணீர் சும்மா விடாதாக்கும்..

  வரிகள் அருமை கண்ணதாசன் அங்கிளோ கொக்கோ:)).. பாடல் தேடிக் கேட்கிறேன்.

  Liked by 1 person

  1. @ அதிராமியா:

   வாங்க! நீங்க கவனீப்பீங்கன்னு தெரியும்!

   இப்பவே யூ-ட்யூபிலபோய் அந்தப் பாட்டைப் பிடிங்க.. கேளுங்க.. தனிமையில். முடிந்தால் இரவின் தனிமையில். உங்க அனுபவம் எப்படின்னு பின்னாடி வந்து சொல்லுங்க..
   சுசீலாவா கொக்கா!

   Like

   1. ஆஆ.. என்ன கொடுமை ஜாமீ ஒரு அப்பாவி, சுவீட் சிக்ஸ்ரீன் இளவரசியை[என்னைச் சொன்னேன்:)] இப்பாட்டை நைட்டில கேட்கச் சொல்லிட்டீங்களே கர்ர்ர்:)) நல்லவேளை இரவாகுமுன் கேட்டுவிட்டேன். இல்லை பார்த்துவிட்டேன், காதில் விழுந்த பாடல்தான், ஆனா வீடியோவாக இன்றுதான் பார்த்தேன்ன்… அம்மாடி புதன்கிழமை எங்கள்புளொக்கிலிருந்து மூவ் ஆகிவிட்டது போலும் ஆவி:) ஏ அண்ணன் வீட்டுக்கு:)) ஹா ஹா ஹா.

    Like

 3. ஆஹா ஏகாந்தன் அண்ணா.. ஆஆஅ ஹைஃபைவ்!!! எனக்கும் இந்தப் பாடல் கொஞ்ச நாளாக மனதில் ஓடியது…

  இந்தப் பாட்டை நான் எழுதும் கதையில் கொண்டு வந்தேன்!!! இதென்ன சமீப காலமாக நான் எழுதுவதெல்லாம் ஆங்காங்கே வருகிறது!! அப்ப அத்தனை டெலிபதி!! சேம் பிஞ்ச்??!!! எண்ணங்கள் ஓடுதே!!

  அண்ணா இந்த புத்தியும் மனமும் இருக்கு பாருங்க…அதுங்க ரெண்டும் பண்ற அட்டகாசம் தாங்க முடியலை பல சமயங்கள்ல.. புத்தி அழகா சொல்லிக் கொடுக்கும். நல்லது சொன்னா இந்த மனசுக்குத்தான் ஆகாதே அது தான் பிடிச்ச முயலுக்கு மூணுகால்னு நிக்கும்..அப்புறம் புத்திக்குப் போரடிச்சு, சலிச்சு ஒழிந்து போ…நான் சொல்றத சொல்லிட்டேன் அப்புறம் உன் பாடு…அப்புறம் பின்வினை நினைச்சு வருத்தப்பட்டு எங்கிட்ட வந்து அழக்கூடாதுன்னு எச்சரித்து விட்டுரும்…(இதுவும் எழுதி வைச்சுருக்கேன்…எங்கேனும் யூஸ் செய்ய ஹிஹிஹிஹி)

  பரவால்ல உங்க மனசு பாட்டைத்தான் நினைச்சுருக்கு!!! அழகான பாடல்..

  கீதா

  Like

 4. அட எபிலருந்து பேய் எங்கிட்டத்தான் வந்துச்சுனா உங்க கூட வாக்கிங்கும் வந்து பார்க்கிலும் உக்காந்துச்சா?!!! ஹா ஹா ஹா..

  எனக்கும் வாக்கிங்க் போகும் போது பதிவுக்கான விஷயம் நிறைய சிக்கும். கதைக்கான வசனம் எல்லாம்…கிச்சன்ல சமைக்கும் போது., நேரங்கெட்ட நேரத்துல வரும் ஆனா எழுத உக்காரும் போது எதுவும் நினைவுக்கு வராது!!!

  இனி ரெக்கார்ட் பண்ணிட வேண்டியதுதான்னு நினைச்சுருக்கேன்..!!! கௌ அண்ணா கொடுத்த ஐடியாபடி…

  கீதா

  Like

 5. சுசீலாம்மாவின் மிக இனிய குரல்.  நீங்கள் ஹிந்திப் பாடலும் கேட்டிருப்பீர்கள்.  ஹிந்தியில் லதாம்மா குரலும் மிக இனிமையாக இருக்கும்.  எனக்கும் மிகவும் பிடிக்கும்.

  நிற்க!   இல்லையில்லை…   நீங்கள் பாட்டுக்கு பெஞ்சில் உட்காருங்கள்!  அந்த மொபைல் பத்திரம்!

  அதே படத்தில் (ஹிந்தியிலும் சரி…   இன்னும் சொல்லப்போனால் ஹிந்திப் பாடல்தான் என் முதல் தெரிவு)  பொன்மேனி தழுவாமல் பாடல்…    ச்ச்ச்ச்ச்ச்ச்சே…    என்ன பாடால் ஸார் அது…    அதைவிட இனிமையான பாடலிருக்க முடியுமா?  அந்த இடை இசை…   அந்தக்குரல்…    அந்த டியூன்…

  Like

  1. @ அதிரா: ஓடிப்போய் பாட்டைக் கேட்டதோடு, வீடியோவையும் பார்த்திருக்கிறீர்கள். ஆளில்லா ஊஞ்சல், படகு… ராத்திரியில் சரியாகத் தூங்கினால் சரி!

   @கீதா: உங்களையும் இதே பாடல் விரட்டியதா! என்னமோப்பா , நாட்டில் எதுவுமே சரியா இல்லை. பேய் வாழும் வலைத்தளங்கள் என்று ஆகிவிடப்போகுது! ஏற்கனவே வாசகர்கள் அருகி வருகிறார்கள்..

   ஒரு அந்நிய நிலத்துப் பெண் எழுத்தாளர்.. வாக்கிங்க் போகும்போது மரக்கிளையில் பேப்பரும், பென்சிலும் சொருகிவைத்துவிட்டு வாக் போவாராம். திடீரென சிந்தனைத் தாக்கினால், வேகவேகமாகப் போய் குறித்துவைத்துக்கொள்ள..! இரண்டு மூன்று நாட்கள் முன் படித்தேன். மறந்தேன் பெயரை..

   @ஸ்ரீராம்: நீங்கள் ஹிந்திப் படப் பாடலைக் குறிப்பிடுவீர்கள் என எதிர்பார்த்தேன். லதா நன்றாகப் பாடியுள்ளார். ஆனால், எனக்குத் தமிழ் அதிகம் பிடிக்கிறது -காரணம், சுசீலாவும், கண்ணதாசனும். வேதாவையும் விட்டுவிடமுடியாது.

   நீங்கள் சொன்ன அடுத்த பாடலையும் கேட்டுப்பார்க்கிறேன்..

   Like

 6. எனக்கு இந்தப்படமும் பிடிக்கும், ஹிந்திப்படமும் பிடிக்கும். ஜெய்சங்கர், ஜெயலலிதா சேரமுடியாமல் போன ஜோடி என்பதும் நினைவுக்கு வந்து தொலைக்கும். 😦 பாடல் அருமையோ அருமை. உங்களையானும் புத்தி உங்களுக்கு புத்தி சொல்லும்போது மனம் குறுக்கிடுகிறது. எனக்கெல்லாம் புத்தியே இல்லை! என்ன செய்வது. மனம் போன போக்குத் தான்! :))))))

  Liked by 1 person

  1. @ கீதா சாம்பசிவம்:

   ஜெயலலிதாவும், ஜெய்ஷங்கரும் வாழ்வில் சேர்ந்திருந்தால் கதை வேறுமாதிரிப் போயிருக்கும். ஆனால் விதி என்று ஒன்று எல்லோருக்கும் இருக்கிறதே.. அது யாரைப் பிராண்டாமல் விட்டது?

   ’மனம்போனபோக்குத்தான்’ – இப்படித்தான் ஒரு ஜோஸ்யர் என் கையைப் பார்த்துவிட்டுச் சொன்னார் என் இருபதாவது வயதில். நம்ப சுபாவமும் கிட்டத்தட்ட அப்படித்தான்..!

   தீபாவளி நல்வாழ்த்துகள்.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s