கிரிக்கெட் : பூனேயில் இன்னிங்ஸ் வெற்றி

 

வெஸ்ட் இண்டீஸ் மாதிரி விளையாடியிருக்கிறது தென்னாப்பிரிக்கா. டெஸ்ட் அரங்கில் அதிர்ச்சி. அந்த அணியில் டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெய்ன் (Dale Steyn), ஹஷிம் ஆம்லா போன்ற ஜாம்பவான்கள் தற்போது இல்லை என்பது பலவீனம்தான். இருந்தும், உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டிகளில் ஒன்றாயிற்றே.. ஒரு பிடி பிடிக்கவேண்டாம்? எதிர்த்து ஒரு முறை, முறைக்கவேண்டாம்? இப்படியா நான்காவது நாளிலேயே சரண்டர் ஆகி வழிவது? எங்க கோஹ்லிக்கு இனி, கால் தரையிலேயே படாதே!

முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா சோர்வு தரும்  வகையில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்குத் திரும்பிய உமேஷ் யாதவ் தென்னாப்பிரிக்காவுக்கு ஆரம்ப அதிர்ச்சியைக் கொடுத்தார். மிடில் ஆர்டராவது டீமைத் தூக்கி நிறுத்தும் என்று எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். கேப்டன் டூ ப்ளஸீ (64) சமாளிக்கப் பார்த்தார். முடியவில்லை. கடைசியில் 9, 10 வரிசை-நிலைகளில் வந்த கேஷவ் மஹராஜும், வெர்னன் ஃபிலாண்டரும், நிதானமாக ஆடி நூறு ரன் பார்ட்னர்ஷிப் கொடுத்து தென்னாப்பிரிக்கா 250-ஐத் தாண்டவைத்தார்கள். கேஷவ் டாப் ஸ்கோர் 72. இங்கே எழுந்தது கேள்வி. பௌலர்களால் இப்படி ஆடமுடிகிறதென்றால், தென்னாப்பிரிக்க ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மன்கள் என்ன செய்தார்கள் ?

நான்காவது நாள் (13/10/19), இந்திய கேப்டன் ’ஃபாலோ ஆன்’ (follow on) கொடுக்க, தென்னாப்பிரிக்கா தன் இரண்டாவது இன்னிங்ஸை சேர்த்து ஆடும்படி ஆனது. இப்போதாவது  தென்னாப்பிரிக்கா, கொஞ்சம் ஆட்டம், கொஞ்சம் கட்டை என்று போக்குக் காண்பித்து, க்ரீஸில் நின்று பொழுதைப் போக்கி, ஆட்டத்தின் முடிவை ஐந்தாவது நாளுக்குக் கொண்டுபோகலாமே? டாப் ஆர்டர் பேட்ஸ்மன்கள் கொஞ்சம் அடித்துத் திறமையைக் காண்பிக்கலாம்.. ம்ஹூம். எல்கர் – 48 தான் டாப் ஸ்கோர். தென்னாப்பிரிக்கர்கள், இந்திய ஸ்பின்னர்களிடம் திணறியதோடு, வேகப்பந்துவீச்சாளர்களிடமும் சிக்கி விழித்தார்கள். வரிசையாக விழுந்து, வீட்டுக்கு ஓடினார்கள். உமேஷ், ஜடேஜா – தலா 3 விக்கெட், அஷ்வின் 2 எனச் சாய்க்க, தென்னாப்பிரிக்கா 189-ல் ஆல்-அவுட். மோசமான இன்னிங்ஸ் தோல்வி.  இன்னும் ஒரு டெஸ்ட் பாக்கி. 19 அக்டோபரில் ராஞ்சியில் (Ranchi, Capital of Dhoni’s Jharkhand!) துவங்கும்.

இந்தியாவின் தரப்பில், ரசிகர்கள் பார்க்க வந்திருந்த ரோஹித், க்ளிக் ஆகவில்லை. இளம் மயங்க் அகர்வால் சதமடித்துச் சிரித்தார். கேப்டன் கோஹ்லியின் 254 நாட் அவுட் masterclass. இது கோஹ்லியின் 7-ஆவது இரட்டைச்சதம். கேட்கவே பிரமிப்பாக இருக்கிறது. அன்றிருந்த ஃப்ளோவில் அவர் நினைத்திருந்தால் இன்னும் ஒரு மணிநேரம் இந்திய பேட்டிங்கை நீட்டித்து, தன் தனிப்பட்ட ஸ்கோராக 300-ஐ எட்டி, சாதனை படைத்திருக்கலாம். ’முச்சதம்’ விளாசுவதற்கான வாய்ப்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரையும் அவ்வளவு எளிதில் நெருங்காது என்பது, கிரிக்கெட்டின் சுமார் 150 வருட சரித்திரத்தைப் பார்த்தால் புரியும். ஆனால்  தன்னோடு ஆடிக்கொண்டிருந்த ஜடேஜாவின் சதத்திற்காக காத்திருந்த கோஹ்லி, ஜடேஜா 91-ல் அசட்டுத்தனமாகத் தூக்கி கேட்ச் கொடுத்து காலியானவுடன், இந்தியாவின் ஸ்கோர் 601 என்கிற நிலையில் உடனே டிக்ளேர் செய்துவிட்டார். கோஹ்லியின் வாய்தான் அகலம் என்று நினைத்துவிடக்கூடாது! மனமும் பெரிசுதான்…

Saha catches one-handed in Pune

பூனே ஆட்டத்தில், வ்ருத்திமான் சாஹா பிரமாதம். குறிப்பாக அவர் இந்திய ஸ்பின்னர்களுக்கு விக்கெட் கீப்பிங் செய்தவிதம் (Saha is a great keeper for spinners: Ashwin), உமேஷ் பௌலிங்கில் லெக்-ஸைடில் பாய்ந்து தூக்கிய கேட்ச்சுகள் – விமரிசகர்களை தாராளமாகப் பாராட்டவைத்திருக்கிறது. ஏற்கனவே ஒரு டெஸ்ட்டில் (Cape Town, 2018) அதிகபட்ச கேட்ச்சுகள்(10) பிடித்த  ரெகார்டு அவரிடம்தான் இருக்கிறது. ஹனுமா விஹாரியின் இடத்தில், அணிக்குத் திரும்பிய உமேஷ் யாதவின் வேகப்பந்து வீச்சும் ஒரு ப்ளஸ்.

இதை எழுதிக்கொண்டிருக்கையில், செய்தி. அடுத்த போட்டியில் தென்னாப்பிரிக்காவின் ஸ்பின்னர் கேஷவ் மகராஜ் ஆடமாட்டார். ஃபீல்டிங்கின்போது ஏற்பட்ட தோள்ப்பட்டைக் காயத்தினால் திருப்பி அனுப்பப்படுகிறார். அவர் இடத்தில் வருகிறார் 27-வயதான ஜார்ஜ் லிண்ட் (George Linde). ஸ்பின் -ஆல்ரவுண்டர். ராஞ்சியில் ஆடுவாரா? பொறுத்திருங்கள்…

**

 

10 thoughts on “கிரிக்கெட் : பூனேயில் இன்னிங்ஸ் வெற்றி

 1. பிக் பாசில் கமல் கூறும் வார்த்தை எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது மூன்றாவது டெஸ்டில் அது நடக்குமா

  Liked by 1 person

  1. @ Balasubramaniam GM :

   Big Boss பிரியரா நீங்கள்!
   மூன்றாவது டெஸ்ட் ஆடப்படவிருக்கும் ராஞ்சி, pacer-friendly pitch-ஆக இருந்தால், ஒரு வேளை, எதிர்பாராதது நடக்கலாம். மற்றபடி டிராவுக்குக்கூட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

   Like

 2. /கோஹ்லியின் வாய்தான் அகலம் என்று நினைத்துவிடக்கூடாது! மனமும் பெரிசுதான்…// – இந்த ஒன்றில் மட்டும் எனக்கு கோஹ்லியின் மேல் குறை கிடையாது. எப்போதும் தன்னுடைய மைல் ஸ்டோனுக்காக விளையாடியதில்லை. ஆனால் சச்சின் அப்படி விளையாடுவார். நிறைய தடவை கோஹ்லி அணிக்காக முடிவு எடுப்பதைப் பார்த்திருக்கிறேன் (48 ரன்களில் மத்தவங்களை அடிக்கவிட்டு டிக்ளேர் செய்வார். சச்சினா இருந்தால் ஒன் டே என்றாலும் கட்டை போட்டு 50 என்ற மைல் ஸ்டோனை அடைய எண்ணுவார்)

  கோஹ்லிக்கும் தோணிக்கும் உள்ள வித்தியாசம்.. தோணி வெற்றி பெற்றே ஆகவேண்டும் ஒவ்வொரு மேட்சிலும் என்று எண்ணுவார். வெற்றி பெற வேண்டிய டி 20 சீரீசை தன் அசட்டுத் தனத்தினால் டிரா செய்தவர் கோஹ்லி.

  அது இருக்கட்டும்… ஏன் டெயில் எண்டர்ஸ், 90, 100 என பார்ட்னர்ஷிப் போடும்படி நம் பெளலிங் மோசமா இருக்கு?

  Like

  1. @நெல்லைத்தமிழன்:

   நீங்கள் குறிப்பிட்ட டெய்ல்-எண்டர்ஸ் தென்னாப்பிரிக்கர்கள். இந்திய டெய்ல்-எண்டர்ஸ் அல்ல- மூணுபந்தில் முணகி ஓடுவதற்கு!

   ஃபிலாண்டர் First Class போட்டிகளில் 17 அரைச்சதங்களும், 3 சதங்களும் எடுத்துள்ளார். டெஸ்ட் டாப் ஸ்கோர் 74.
   கேஷவ் மஹராஜ் First Class கதை: 11 அரைச்சதங்கள். 2 சதங்கள். டெஸ்ட் அதிகபட்சம் 72.

   இருவரும் பேட்டிங் தெரிந்தவர்கள்! நன்றாக ஆடினார்கள். அதனால், இந்திய பௌலிங் சரியில்லை என்று அர்த்தமல்ல!

   Like

 3. ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குமேல் பிட்ச் ஒத்துழையாமை,  பந்து பழசாகிவிடுவது,  பௌலர்கள் களைப்பு….   இப்படி டெயில் எண்டர்சை எடுக்க முடியாததற்கு பலகாரணம் சொல்லலாம்.  எப்படியோ ஜெயித்திவிட்டது!

  Like

  1. @ Sriram: எப்படியோ ஜெயித்துவிட்டதா.. இப்படியெல்லாம் சொன்னால் கிங் கோஹ்லி என்ன நினைப்பார் !

   Like

  2. ஏகாந்தன் சார்… எனக்கும் மனசுல தோணிச்சு. குனஷ்டைக்கு பேர் போன கோஹ்லி, வீம்புக்கு ஒரு செஷன் பேட்டிங் பண்ண ஆரம்பிச்சுடுவாரோன்னு. சில சமயம், டாஸில் வென்றாலும், எதிர் கேப்டன் என்ன தேர்ந்தெடுப்பாரோ அதுக்கு ஆப்போசிட்டாகத்தான் கோஹ்லி தேர்ந்தெடுத்து தோல்விக்கு வழி வகுப்பது வழக்கம்.

   Like

 4. பொதுவாக தோனி இது மாதிரி சமயங்களில் ஃபாலோ ஆன் தராமல் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிவிட்டு தருவது நடந்திருக்கிறது.

  Like

 5. @ நெல்லைத்தமிழன், @ ஸ்ரீராம்:

  நானும் நினைத்தேன். அடுத்த நாள் கோஹ்லி பேட்டிங் செய்வாரென்று!

  இப்போதெல்லாம் ஃபாலோ-ஆன் கொடுக்கும் டெஸ்ட் கேப்டன்கள் குறைந்துவருகிறார்கள். மேலும் டெஸ்ட் உலகக் கோப்பை போட்டிகளில், இன்னிங்ஸ் வெற்றிக்கு எக்ஸ்ட்ரா பாய்ண்ட்ஸ் கொடுத்திருக்கவேண்டும் ஐசிசி. அது போட்டியை இன்னும் கடுமையாக்கும்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s