கிரிக்கெட் : வாய்ப்பாட்டு – கோஹ்லி, தபலா-வில் சாஸ்திரி

 

வருஷத்துக்கு 10 கோடி என அடித்த கிரிக்கெட் போர்டு லாட்டரி, இதுவரை விராட் கோஹ்லிக்கு ’ஜிங்-சக்’ போட்டுக்கொண்டிருந்த  ரவி சாஸ்திரியை, ’தபலா’ ப்ளேயராக உயர்த்தியிருக்கிறது. சமீபத்தில் அவர் வாயினாலேயே வந்து விழுந்தது இது: இந்தியாவின் இளம் மிடில்-ஆர்டர் அதிரடி ரிஷப் பந்த் பற்றி – ‘சரியாக ஆடாவிட்டால், மணிக்கட்டில் ஒன்னு போடுவேன்..’ என்று பத்திரிக்கையாளர்முன் கெத்து காட்டுவதாக நினைத்து முதலில் உளறல். மேற்கொண்டு அவர்களின் கேள்விக்கு நம்ப கோச் தெள்ளுமணி அளித்த பதில்தான் இது: ’பின்னே என்ன, தபலா வாசிக்கவா நா கோச்சா வந்திருக்கேன்!’ அப்பிடிப் போடு.. நீயல்லவா கோச்சு !

ஜிங்-சக்-ஆ, தபலா-வா, அதாவது கர்னாடிக் மியூஸிக்கா அல்லது ஹிந்துஸ்தானியா -எதைப்போட்டு, கேப்டன் கோஹ்லியைக் கவர்வது என்பதில்தான் இந்தியக் கிரிக்கெட் பயிற்சியாளரின் முழு கவனம். கிரிக்கெட் ‘கோச்’ எனும் பதவியை, பொறுப்பை, உலகில் வேறெந்த அணியின் பயிற்சியாளனும் இந்த உயரத்துக்குக் கொண்டுசென்றதில்லை.  ஒரு இந்திய ‘ரெகார்ட்’! புதிதாக அணியில் வந்திருக்கும், அல்லது ’ரஞ்சி’யில் கஷ்டப்பட்டு விளையாடி ரன்னெடுத்து, தேசிய அணிக்குத் திரும்பியிருக்கும் வீரர்கள், தேசிய அணியில் சரியாக ஆடினால் என்ன, ஆடாவிட்டால் என்ன, டீம் ஜெயித்தால் என்ன, நாசமாய்ப் போனால்தான் என்ன, ’கேப்டன் கோஹ்லி என்ன சொல்றாரு, எதுக்கு சிரிக்கிறாரு, அதுக்கு ஏத்தபடி ஜிங்-சக்.. ஜிங்-சக்.. அல்லது தபலா தட்டல் .. சரியாப்போட்டு கச்சேரியை முடிக்கிறதுதான் கோச் ரவி சாஸ்திரியின் சித்தாந்தம். இந்த லட்சணத்துல இந்த  ’மூஞ்சி’யை ‘செலெக்ட்’ செய்ய மூன்றுபேர் கொண்ட கமிட்டியாம், அதுதான் தேர்ந்தெடுத்ததாம். ஏற்கனவே கடுப்பிலிருக்கும் ரசிகர்களுக்கு காதுகுத்திப் பார்க்கும் கிரிக்கெட் போர்டு.

தபலாவைத் தாண்டி, ரவி சாஸ்திரி பாங்கரா-வும் சேர்ந்து (Bangra – Punjabi dance form) கற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் அவருடைய திட்டங்களுக்குத் தோதாக இருக்கும். ஏனென்றால் விராட் கோஹ்லி ஒரு பஞ்சாபி. அவரது தர்மபத்தினி அனுஷ்காவும் அப்படியே. கிரிக்கெட் டூர்களின்போது கோஹ்லியை உற்சாகப்படுத்த அனுஷ்கா அந்தந்த ஊர்களுக்கு விசிட் செய்கிறார். அசட்டு ஜோக்கடித்து, சிரிக்கவைத்து, பக்கத்தில் நின்று பல்லைக்காட்டி செல்ஃபீ எடுத்து – இப்படி ஏதாவது செய்து அவரையும் இம்ப்ரெஸ் பண்ணுவதும் சாஸ்திரிக்கு நல்லது. எதுக்கும் ஒரு சேஃப்ட்டிக்குத்தான். அடுத்த கோச் காண்ட்ராக்ட் நிச்சயமாகிவிடும். மேலும் ஒரு பத்து கோடி. கவாஸ்கர் பள்ளியில் அந்தக்காலத்திலேயே ’தேறின’ மனுஷனாச்சே. எழுபதுகளின் இறுதியில், பாம்பேயின் பத்மாகர் ஷிவால்கர் போன்ற எவ்வளவோ  ஸ்பின்னர்கள் இந்திய அணிக்குள் வரத் தகுதியோடு துடித்துக்கொண்டிருக்க,  கொல்லைவழியாக ரவி சாஸ்திரி ‘நுழைந்ததே’, அப்போதைய இந்திய/பாம்பே கேப்டன் கவாஸ்கருக்கு ‘சேவை’ செஞ்சதனால்தானே.. அந்த வெற்றி ஃபார்முலா வாழ்நாளெல்லாம் இப்படிக் கைகொடுக்கிறதே, சித்தி வினாயகா!

கடந்த இரு வருடங்களாக இந்த கோஹ்லி-சாஸ்திரி ஜோடியின் கேலிக் கூத்துகளால் ஆங்காங்கே அடி வாங்கி வீங்கிக்கிடக்கிறது இந்திய கிரிக்கெட். உலகக்கோப்பைக்கு முன்பிருந்தே, அதற்கான தயார்நிலை போட்டிகளில் நான்காம் நிலை ஆட்டக்காரர் தேர்வு என்று சொல்லிக்கொண்டு எத்தனை வீரர்களின் கேரியருடன் விபரீத விளையாட்டு. சுரேஷ் ரெய்னாவிலிருந்து தொடங்கி, மனிஷ் பாண்டே-யை ‘சோதித்து’, பின்னர் அம்பத்தி ராயுடு. ராயுடுதான் எங்கள் நம்பர் 4 பேட்ஸ்மன் என்று வெளிப்படையாகவே சொல்லிவந்தார் கோஹ்லி. திடீரென அவரை அலட்சியப்படுத்தி நீக்கினார்கள். பின்னர் விஜய் ஷங்கர். ‘த்ரீ-டைமன்ஷனல் ப்ளேயர்’ என தேர்வுக்குழுவின் விளக்கம் வேற. அவரை சேர்த்து இரண்டொரு போட்டிகளில் போட்டு, ட்ரிங்க்ஸ் தூக்கவைத்து, உட்காரவைத்து, காயம் என்று விரட்டி.. என ஒரு பக்கக் காட்சி. இடையில், பெஞ்சிலேயே உட்கார்ந்துகொண்டிருந்த தினேஷ் கார்த்திக்கின் ஞாபகம் செமி-ஃபைனலின்போது கோஹ்லி-சாஸ்திரிக்கு வர, அவர் அந்த போட்டியில் தடுமாறி பலி. இந்தியாவும் காலி! அதே மேட்ச்சில், தோனியை ஏழாம் நம்பரில் அனுப்பி அணிக்கு ஏற்பட்ட அவமானம். கடைசியில் இந்த முட்டாள்தனத்திற்காக பலி கொடுக்கப்பட்டது பேட்டிங் கோச் சஞ்சய் பங்கர் (Sanjay Bangar). இந்தியா வெளியேறிய அந்த செமிஃபைனலில், தோனி அவுட்டாகி, திரும்பிவந்து பெவிலியன் படிகளில் ஏறும்போது, அவசரமாக அவர்முன்னே ஓடிவந்து சமாளிக்க முயன்ற ரவி சாஸ்திரியின் முகத்தைக் கூடப் பார்க்காமல், ட்ரெஸ்ஸிங்க் ரூமுக்குள் பறந்த தோனி.. எல்லாவற்றையும் ரசிகர் பார்த்தார்கள். பார்த்துவருகிறார்கள்.

உலகக்கோப்பை அவமானத்துக்குப் பின், சாஸ்திரியை தூக்கி எறிய அருமையான சான்ஸ் கிடைத்தது போர்டிற்கு. ஆனால், போர்டு என்ன செய்தது? கபில் தேவ், அன்ஷுமன் கேய்க்வாட், ஷாந்தா ரெங்கஸ்வாமி (முன்னாள் பெண்கள் அணி கேப்டன்) என மதிக்கத்தகுந்த பேர்களைக் கொண்ட கமிட்டியை உருவாக்கி, இந்த அணி அடுத்த ‘கோச்’-ஐத் தேர்வு செய்யும் என்று தப்பிக்க வழிபார்த்தது. அந்தக் கமிட்டியிடம் கோச் பதவிக்காக, ரவி சாஸ்திரியோடு, மைக் ஹெஸ்ஸன் போன்ற வேறு தகுதியான விண்ணப்பங்களும் வந்து சேர்ந்தன. இடையில்  மெத்த புத்திசாலியான கேப்டன் கோஹ்லி என்ன செய்தார்? ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டார்: ’ரவி சாஸ்திரி தேர்வானால் நன்றாக இருக்கும்!’ க்ளீயர் சிக்னல். ’கமிட்டி’ கேப்டனின் விருப்பத்தை நிறைவேற்றி ஒதுங்கிக்கொண்டது. அனில் கும்ப்ளேயை, கோஹ்லியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு போர்டு முட்டாள்தனமாக கோச் பதவியிலிருந்து நீக்கியபோது, முன்னாள் வீரர் மதன் லால் சொன்னது ரசிகர்களின் நினைவில் இன்னும் இருக்கும்: ’கோஹ்லியின் இஷ்டப்படிதான் எல்லாம் நடக்கவேண்டுமா! பின்னே, இந்தியாவுக்கு கோச் எதற்கு? கேப்டனே எல்லாவற்றையும் பார்த்துக்கட்டுமே!’

இதோ, தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு வந்து,  விளையாடிக்கொண்டிருக்கிறது. டி-20 தொடரை சமன் செய்துவிட்டது.  இரண்டாவது போட்டியில் இந்தியாவைப் பதற அடித்தனர். அக்டோபர் 2-ல் டெஸ்ட் ஆரம்பம். ஏற்கனவே, புத்திமதிகளால் குழம்பி நிற்கும் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பந்த் பற்றி விமரிசிக்காதவர், யாருமில்லை! (He is fearless, but careless!) கேப்டனும், கோச் சாஸ்திரியும்வேறு சேர்ந்துகொண்டு அவரைத் திட்டி, துவட்டிக் காயப்போட்டுப் பார்க்கிறார்கள்! போதாக்குறைக்கு  இரண்டு நாட்கள் முன்பு, அஷ்வின் பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையிடம் ரவிசாஸ்திரியின் உளறல்:  “அஷ்வின் ஒரு உலகத்தரமான ஸ்பின்னர். ரவி ஜடேஜாவும் அப்படியே. குல்தீப் யாதவும் உலகத் தரத்துக்கு வந்துகொண்டிருக்கிறார். மேலும் ஸ்பின்னர்கள் உலகத் தரத்துக்கு வருவார்கள் ! அதனால், அஷ்வின் ஆட்டோமேட்டிக் சாய்ஸ் என்று சொல்லமுடியாது! “  அடடா! என்ன ஒரு தெளிவு..  தீர்க்கதரிசனம்…டெஸ்ட்டில் நம்பர் ஒன் வி ‘க்கெட் கீப்பரான வ்ருத்திமான் சாஹா பாவம். என்ன செய்வதெனத் தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டு உட்கார்ந்திருக்கிறார் ஒரு மூலையில். பார்க்கப்போனால் தென்னாப்பிரிக்காவுக்கெதிரான இரண்டு டெஸ்ட்டுகளிலும் சாஹாதான் விக்கெட்-கீப் செய்யவேண்டும். என்ன நடக்குமோ..  ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் கேரியரையும் காவு வாங்கிவிடுவார்களோ என்கிற அச்சமும் ரசிகர்களின் மனதில் ஏற்பட்டிருக்கும். இன்னும் என்னென்ன பாக்கியிருக்கிறதோ, கோஹ்லி-சாஸ்திரி  கூட்டணி ஆட்சியில் ! எல்லாம் நம் தலைவிதி…

**

6 thoughts on “கிரிக்கெட் : வாய்ப்பாட்டு – கோஹ்லி, தபலா-வில் சாஸ்திரி

 1. நான் நினைத்ததை நீங்களும் எண்ணுவதறிந்து மகிழ்ச்சி.

  கோஹ்லி தவறுகளுக்கு மேல் தவறுகள் செய்கிறார். அதற்கு ரவி சாஸ்திரி ஜால்ரா போட்டு இந்திய கிரிக்கெட்டையே காவு வாங்குகிறார். பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் தோற்ற போதே இருவரில் ஒருவரை கழட்டி விட்டிருக்கவேண்டும்.

  கிரிக்கெட் குழுவின் பார்ட்டிகளுக்கு அனுஷ்காவுக்கு ஏன் அழைப்பு? அவருக்கு என்ன வேலை? நான் படித்தது, கேப்டன் மாத்திரம் அவர் மனைவியை எப்போ வேணுமானாலும் ஆட்டம் நடக்கும் நாடுகளுக்கு அழைத்துக்கொள்ளலாம், தன்னுடன் தங்கவைத்துக்கொள்ளலாம் என்று. இதற்கு ரவி சாஸ்திரி உடந்தை.

  முதுகெலும்பில்லாத பிசிசிஐ, இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறது. எனக்கு அதிகாரம் இருந்திருந்தால், ரோஹித்தை ஒரு நாள் மற்றும் டி.20 அணிக்கு கேப்டனாக்கியிருப்பேன். நமக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்தது தோனி. தோனி, இந்தியாவின் வெற்றி என்ற ஒன்றை மட்டுமே பார்ப்பார், வெற்றிக்கு உதவி செய்யாதவரை உடனே கழட்டி விடுவார். இப்போது கோஹ்லியும் ரவி சாஸ்திரியும் இந்திய அணிக்கு வேட்டு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். கோஹ்லி அணித் தலைவர் என்ற பதவியிலிருந்து தூக்கி எறியப்படவேண்டியவர். (எனக்கு எப்போவுமே அனுஷ்கா சர்மா ராசிதான் கோஹ்லியைப் படுத்துது என்று எண்ணம் ஹாஹா)

  Liked by 1 person

  1. @ நெல்லைத் தமிழன்:

   ரோஹித்தின் ‘class’ அவருக்கு டெஸ்ட்டுகளில் கைகொடுக்கும் என நம்பிக்கை. அவரது இப்போதைய ’ஸ்டார்’ என்ன சொல்கிறதோ!

   நம்பர் 4 fiasco பற்றி இப்போது யுவராஜும் பேசியிருக்கிறார். முதலில், ’முதல் இரண்டை’ ஆட விடுங்கள். அப்புறம் 3,4 -க்கு வரலாம் என இந்த மரமண்டைகளிடம் யார் சொல்வது?

   லுங்கி இங்கிடி, ரபாடா, ஃபிலாண்டர் ஆகியோரைக்கொண்ட தென்னாப்பிரிக்க pace attack இந்தியாவை பெண்டெடுக்கும் எனத் தோன்றுகிறது. இந்திய ஸ்பின் கண்டிஷன்களுக்கு அவர்களிடம் கேஷவ் மஹராஜ் மற்றும் ஆஃப் ஸ்பின்னர் டேன் பீட். பார்ப்போம்..

   கோஹ்லியை அனுஷ்கா ஆங்கிள் வேறு படுத்துகிறதா? இருக்கலாம்!

   Like

   1. ரோஹித்லாம் தெக்கினிக்கு உள்ளவர். 5 ஆட்டங்களில் 10 ரன்கள் மட்டும் எடுத்தாலும் தொடர்ந்து டீமில் இருக்க வேண்டியவர். கோஹ்லி எத்தனை முறை சிங்கிள் டிஜிட் எடுத்தாலும் கேப்டனாக இருப்பது போல.

    இன்னொண்ணு, கோஹ்லி ரன்கள் குவிக்கலாம். ஆனால் கேப்டனுக்கு ரோஹித் தான் லாயக்கு. தோனி இல்லாத அணியில் கோஹ்லியின் கேப்டன்சி திறமை விரைவில் பல்லிளிக்கும் பாருங்கள்.

    Liked by 1 person

 2. @ நெல்லைத்தமிழன் :

  கோஹ்லியின் கேப்டன்சி பல இடங்களில் ஏற்கனவே பல்லிளித்திருக்கிறது. மற்றவர்களின் பர்ஃபார்மன்ஸினால் அவ்வப்போது தப்பிப்பது அவரது ராசி! இந்த தடவை, அவர் வசமாக தென்னாப்பிரிக்காவிடம், அதுவும் ஹோம்-ஸீரீஸில் மாட்டிக்கொண்டார் எனத்தான் தோன்றுகிறது.

  ரோஹித் , சேஹ்வாக் போன்றவர். டூர் மேட்ச்சில் அவர் சூன்யத்தில் அவுட்டானது ஒரு விஷயமே அல்ல. அவர் யாருக்கும் தன் திறனை நிரூபிக்கவேண்டியவரல்ல. அவ்வப்போது ரன் எடுக்காமல் போனாலும், அவர் அணியில் தொடரத்தக்கவரே. இதை முன்பே நமது கேப்டன் -கோச் கூட்டணி புரிந்துகொண்டிருந்தால், மேலும் சாதனைகளை நிகழ்த்தியிருப்பார் ரோஹித்.

  Like

 3. பணம்…..   பணம்…    பணம்….  மேலும் பணம்…

  இதுதான் நம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் பலம்,  பலவீனம், அகந்தை எல்லாமே…

  Like

  1. @ ஸ்ரீராம்: பணபலத்தில் தவறில்லை. ஆனால் மனபலம் இல்லையே. யாரைப்போடுவது, யாரைத் தூக்குவது என்பதில் தெளிவில்லாமல் ஆடுகிறதே..

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s