ரூமி : கவிதைவழி வெளிப்பாடுகள்

 

சில சமயம் எதிர் இருப்பவரைப் பார்த்தும், சில சமயம் தன்னையே நோக்கியும், பிறிதொரு சமயம் காதல் என்றோ இறை என்றோ மனதில் எட்டிப்பார்த்ததையெல்லாம் எழுதி இருப்பதாக இவரது கவிதைகள் தோற்றம் தருகின்றன. எப்படியிருப்பினும், படிப்போரைப் பிடித்திழுக்கின்றன, ஒரு விளையாட்டுப்பிள்ளைபோல். சரி, மேலே ரூமி :

 

உன்னை நோக்கிவரும் அந்தக் குரல்
வார்த்தைகள் இல்லாதது
கவனி ..

**


மௌனமாக இரு
மௌனத்தின் உலகம்
பிரும்மாண்டமானது
முழுமையானது.

**


உன் பாதை அது
உனக்கானது மட்டுமே
உன்னோடு சிலர் பயணிக்கலாம்
ஆனால் அவர்களால்
உனக்காகப் பயணிக்கமுடியாது..

**
வாசிப்பதன் மூலம் கற்றுக்கொள்வாய்
ஆனால்
அன்பின் மூலமே புரிந்துகொள்வாய்

**
மகாசமுத்திரத்தின்
ஒரு துளியல்ல நீ
முழு சமுத்திரமே நீதான் -
ஒரு துளியாக.

**
ஒரு மரத்தைப்போல் இரு
பட்டுப்போனவற்றை
விட்டுவிடேன்.

**
வேரில் மட்டுமே கிடைக்கும் ஒன்றினை
ஒருவேளை
கிளைகளில் தேடிக்கொண்டிருக்கிறாயோ நீ?

**
தாளவொண்ணாத் துன்பத்தில்
தள்ளுகிறதே உன்னை - அதுவேதான்
உன்னை ஆசீர்வதிப்பதும்
இருள்தான்
உன் ஒளிவிளக்கு

**
இந்த மதங்கள் அனைத்தின்
துதிப்பாடல்கள் எல்லாம்
ஒரே பாடலாக..
உன்னில் அமைதி நிலவட்டும்

**

உளமிறங்கி நீ செய்த
உதவிகளெல்லாம்
அந்த மாபெரும் கருணையின்
அதிசயவண்ண இறக்கைகள்
நீ சென்றுவிட்ட பின்னும்
நீங்காது சிறகடிக்கும்
ஏனையோரையும்
ஏற்றிப் பிடிக்கும்

**
அலையடிக்கும் நீர்
அமைதி பெறட்டும்
நிலவும் நட்சத்திரங்களும்
உன் அகக்கண்ணாடியில்
ஜொலிப்பதைக் காண்பாய்
**

இறையைத் தேடுகிறாய்
அங்கேதான் பிரச்னையே
உன்னிலிருக்கும் அதுவோ
உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறது..

**
உனக்குள்ளேயே செல்வதான
அந்த நெடிய பயணத்தை
என்றுதான் தொடங்கப்போகிறாயோ?

**
பயணத்தைத் தொடங்குமுன்
வீட்டைவிட்டு வெளியில்
காலையே வைத்திராதவர்களின்
புத்திமதியைக் கேட்டுவிடாதே
**

தட்டு
அது திறக்கும்
மறைந்துபோய்விடு
ஆதவனென உன்னை ஒளிரவைக்கும்
வீழ்ந்துவிடு
சொர்க்கத்திற்கே கொண்டுபோய்விடும்
நான் என்பது ஒன்றுமேயில்லை என்றாகிவிடு
எல்லாமே நீதான் என ஆக்கிவிடும்

**

பின்வருவனவற்றில், தன்னைப்பற்றிய சிந்தனைகள் மேலிடுகின்றனவே ரூமிக்கு :

நேற்றுவரை
சாமர்த்தியசாலியாக இருந்தேன்
உலகை மாற்றிவிட விரும்பினேன்
இன்றோ
அறிவாளியாகிவிட்டேன்
என்னை மாற்றிக்கொள்கிறேன்
**

தேடுபவனாக இருந்தேன்
இன்னமும் அவ்வாறே ..
இப்போது
புத்தகம் என்ன சொல்கிறது
கோள்கள் என்ன சொல்கின்றன
என்பதையெல்லாம் விட்டுவிட்டு
என் ஆன்மா பேசுவதைக்
கேட்க ஆரம்பித்திருக்கிறேன்
**
பறவைகளைப்போலப் பாட விரும்புகிறேன்
யாரெல்லாம் கேட்பார்களோ
என்னவெல்லாம் நினைப்பார்களோ
என்கிற கவலை ஏதுமின்றி
**
என் ஆன்மா
எங்கிருந்தோ வந்திருக்கிறது..
அங்கே போய்ச்சேரவே
விருப்பம்.
**

இறையை, ஆதிமுதலை, அன்பே என்கிறார், நண்பா என்கிறார் இப்படி தோன்றியபடியெல்லாம். தன் மனதின் அல்லாடலை அவதானிக்கிறாரோ இங்கே:

நம்பிக்கையை இழந்துவிடாதே மனமே
கண்ணுக்குப் புலப்படாத அவனில்தான்
அதிசயங்கள் உலவுகின்றன
உலகே உனை எதிர்த்தாலும்
உன் கண்களை அந்த நண்பனின்
மேலேயே வைத்திரு
**
மனக்காயத்தின் வழிதான்
மங்காத அந்த ஒளி
பிரவேசிக்கிறது உனக்குள்..
**

பறவைகளின் பாடல்
மனதின் ஏக்கத்திற்கு
ஒரு வடிகால் போன்றது
அவைகளைப்போல்தான்
குதூகலமாயிருக்கிறேன் நானும்
ஆனால்
சொல்வதற்கு ஏதுமில்லை என்னிடம்
பிரபஞ்ச ஆத்மாவே..
எனக்குள் வந்து
என் மூலமாக ஏதாவது
பாட முயற்சியேன்..

**
என்னாலான படகினில்
தாமதமாகத்தான் ஏறியிருக்கிறேன்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
வெளிச்சம் இல்லை
நிலமேதும் தென்படவில்லை
இருண்ட மேகங்களின் கீழே
நீருக்கு மேலிருக்க முயல்கிறேன்
எனினும் ஏற்கனவே கீழேபோய்
கடலோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

**

பெண், காதலி, காதலர்நிலை என்றெல்லாமும் சிந்தனை அவ்வப்போது .. :

பெண் என்பவள் 
அந்தப் பேராற்றலின் 
மெல்லொளி
**

உன்னை யார் கூப்பிட்டது இங்கே
கோபமே ரூபமாய் அவள் ..
உன் ஆன்மாதான் என்றேன்
மெதுவாக
**

ஒளியும் நிழலும்
அன்பின் நாட்டியமே
அன்பிற்குக் காரணம்?
ஏதுமில்லை
அது கடவுளின் ரகசியம்
அன்பு செலுத்துபவனும்
அன்புக்குரியவளும்
பிரிக்கமுடியாதவர்கள்
காலங்கடந்தவர்கள்
**
ரணகளமான இவ்வுலகிலும்
ரகசிய இடமொன்றைக் கண்டுபிடிக்கிறார்கள்
காதல்வயப்பட்டவர்கள்
அழகினை ஆரவாரமின்றிப்
பரிமாறிக்கொள்ள
**

இந்த இடத்தில் காதலியிடம் சொல்கிறாரா இல்லை, 
காலங்கடந்தவனிடம் பேசுகிறாரா, ஜலாலுத்தீன் ரூமி  :

நானொரு சிற்பி
உருவங்களை வடிவமைப்பவன்
ஒவ்வொரு கணத்திலும்
ஒரு தேவதையை வடிக்கிறேன்
இருந்தும், உன்னைப் பார்த்தவுடனே
அவற்றையெல்லாம் உருக்கிவிடுகிறேன்
ஆயிரம் உருவங்கள் செய்து
அவற்றில் ஆன்மாவைச் செலுத்திட முடியும்
ஆனால், உன் முகத்தைப் பார்க்கையிலோ
அவற்றைத் தீக்குள் எறிந்துவிடவே விருப்பம்
உன் சுகந்தத்தை அறிந்த என் ஆன்மா
உன்னில் கசிகிறது கலக்கிறது
அதிலாழ்ந்து மகிழ்கிறேன் நான்
நான் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும்
இந்த பூமியிடம் சொல்கிறது
காதலில் ஆழ்ந்திருக்கையில்
அன்போடு ஒன்றாகியிருக்கிறேன் என.
மண்ணும் நீருமான இந்த வீட்டில்
என் இதயம் நொறுங்கிக் கிடக்கிறது
ஒன்று, இந்த வீட்டினுள் நுழைந்துவிடு
இல்லை, என்னைப் போகவிடு
**

கீழ்வரும் கவிதையில் முதலில், மேற்கோளுக்குள் வருவது, ரூமியிடம் ஒரு பொழுதில், உயிர்நண்பன் ஷாம்ஸ் சொன்னதாக இருக்குமோ…

'உன் அன்பிருக்கும்
வீடு மட்டுமே நான்.
அன்பே அல்ல.
நிஜமான ஏக்கமென்பது
கண்டறிய முடியா அந்தப் புதையலை
நோக்கி இருக்கவேண்டும்
புதையலை வைத்திருக்கும்
பெட்டியை நோக்கி அல்ல'

அன்பெனும் உண்மை
தனித்துவமானது
உன்னுடைய ஆரம்பமும்
முடிவும் அதுவே
அதைக் கண்டபின்னே
உனக்கு வேறெதுவும் தேவைப்படாது
மாயமும் அதுவே
இறுதியில் சிக்குவதும் அதுவே
யாரையும் சார்ந்திராதது
உணர்வுநிலைகளின் தேவதை.
மாதமென வருடமென
காலத்தின் வடிவங்களெல்லாம்
நிலவின் அடிமைகள்
நிலவோ அது சொற்படிக் கேட்பது
அது விரும்புகையிலேதான்
உடம்பு ஆன்மாவாகிறது..

**

உன் ஒளி என்மீது விழ
அன்புமயமாகிறேன்
உன் பேரழகை உணர்கையில்
கவிதை வருகிறது
யாரும் பார்க்கமுடியாதபடி
என் நெஞ்சில் ஆடுகிறாய்
சிலசமயங்களில்
பார்த்தும்விடுகிறேன்
என்மேல்பட்ட அந்த ஒளிதான்
இந்தக் கலையாக
மாறியிருக்கிறது

**

காலமெனும் வாள் அதன்
உறையினின்று வெளியே
நெருங்கி நெருங்கி வரும்
உடலின் ஆசை..
கலந்துவிட ஆசைப்படாதே
அதைவிட நெருக்கமானது ஒன்றுண்டு
கடவுளுக்கு இன்னொரு கடவுள்
ஏன் வேண்டும்?
எல்லா சம்பந்தங்களிலிருந்தும்
அது உன்னை விடுவிக்குமாறு
அன்பு செலுத்து
ஆத்மாவின் ஒளி அன்பு
காலைப்பொழுதின் ருசி
’நான்’ இல்லை, ’நாம்’ இல்லை
’இருத்தல்’ என்பதாக ஏதுமில்லை
தன் குறைகளை அழிக்க
நெருப்பு தன்னை எரித்துக்கொள்கையில்
எழும் புகையே இந்த வார்த்தைகள்
அமைதியில், அழுகையில்
கண்களின் அல்லது முகத்தின் நிலைபோன்று.
அன்பை வார்த்தைகளில்
கொண்டுவரமுடியாது

**





8 thoughts on “ரூமி : கவிதைவழி வெளிப்பாடுகள்

  1. ரசிக்க முடிந்த கவிதைகள். நம்மை நம்மை நோக்கித் திருப்பும் எண்ணங்கள்.

    //வேரிலிருந்து மட்டுமே காணப்படும் // – வேரில் மட்டுமே காணப்படும் என்று இருந்திருக்கணுமோ? இல்லை ‘வேர்ப்பகுதியில் காணப்படும்’ என்று பொருளா?

    Liked by 1 person

    1. @ நெல்லைத் தமிழன் :
      டைப்போதான். திருப்பித் திருப்பி எடிட் செய்கையில் இப்படி ஏதாவது நிகழ்ந்துவிடுகிறது.

      Like

  2. மிக அழகான வரிகள்.   எல்லாமே ரசிக்க வைக்கின்றன. உங்கள் மொழிபெயர்ப்பு நன்றாய் இருக்கிறது.

    Like

    1. @ ஸ்ரீராம்:

      நன்றி.

      நிறைய கவிதைகள் கண்ணில்பட, குறைவாகவே கொடுத்திருக்கிறேன். நீளத்தைக் கண்டு மிரண்டுவிடக்கூடாதே நம்ப வாசகர்கள் !

      Like

  3. aருமை அருமை அத்தனையும் ரசிக்க வைக்கும் வரிகள்.. ஆனா ஒரேயடியாக எடுட்த்ஹு வந்து கொட்டிப்போட்டீங்க:)..

    //உன் பாதை அது
    உனக்கானது மட்டுமே
    உன்னோடு சிலர் பயணிக்கலாம்
    ஆனால் அவர்களால்
    உனக்காகப் பயணிக்கமுடியாது..//

    அருமை.. அழுதழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும் மொமெண்ட்:))

    Liked by 1 person

    1. @ athiramiya:

      ஒரேயடியா கொட்டிட்டேனா! நான் குறைத்துக் கொடுத்ததாக அல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன்..

      Like

      1. இல்லை ஏகாந்தன் சார்… கவிதைகள் ரசித்துப் படிக்கவேண்டியவை. இடுகை இரண்டு மடங்கு நீளம் என என் மனசுக்குப் பட்டது. இரண்டு இடுகைகளாகக் கொடுத்திருக்கலாம்.

        Liked by 1 person

  4. @ நெல்லைத் தமிழன்:

    பொதுவாக என் பதிவுகள் 1-3 பக்கங்கள் வரையே அமையும். நீளம் பற்றிய கவனம் எனக்குண்டு. இது இரண்டு மடங்கு நீளந்தான். இரண்டு பகுதிகளாக அமைத்தால், முதல் பகுதியைப் படிப்பவர் பொறுமையாக இரண்டாவதிற்குப் போவாரா என்கிற சந்தேகம் உண்டு.

    நீளமாக பதிவு இருந்தாலும், கவிதைகளை நிதானமாக, ஒரு இடைவேளை கொடுத்து வாசகர் படிப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லையே!

    Like

Leave a reply to Aekaanthan Cancel reply