சந்திரயான் 2 : ஒரு அபூர்வ விண்சாதனை

 

இந்தியப் பொதுமக்கள் சரியாகத் தூங்காத செப்டம்பரின் அந்த இரவு! இந்தியாவின் சந்திரயான் – 2 விண்பயணத்தின் தொடர்ச்சியாக, அதன் லேண்டரான(Lander) விக்ரம், நிலவின் இருண்ட பரப்பில் தரையிறங்கப்போகிறது, அதன் பின்னே, உள்ளே அமர்ந்திருக்கும் ரோவரான(Rover) ’ப்ரக்யான்’(Pragyan) மெல்ல வெளியில் வந்து சந்திரத் தரையில் ஓட ஆரம்பிக்கும் என்பதான  பெரும் விஞ்ஞான எதிர்பார்ப்பு. முடிவில், சரியாக இன்னும் தெரியவராத தொழில்நுட்பப்பிரச்னையினால், விக்ரம் தன் தகவல் தொடர்பை இழந்து,  திட்டமிட்டபடி நிலவுப்பரப்பில் இறங்காமுடியாதுபோன  ஏமாற்றம் தந்த அதிர்ச்சி, சோர்வு, விண்வெளி விஞ்ஞானிகளின் உலகையும் தாண்டி, இந்திய மக்கள்தொகையையே ஒட்டு மொத்தமாக கலங்கவைத்துவிட்டது. குறிப்பாக இந்தியப் பள்ளிமாணவர்களின் ஏமாற்றம் சொல்லி முடியாது. இந்தியா என்கிற நாடு எப்படி ஒன்றுபட்டிருக்கிறது என்பதை சந்திரயானின் அந்த இரவு தெளிவாகக் காட்டியது என்றார் பிரதமர் மோதி.

சராசரி இந்தியன் – அடடா, தரையிறங்குவதற்கு முன்னான கடைசி நிமிடங்களில் இப்படி ஒரு சோதனையா.. விக்ரமுக்கு என்ன ஆச்சோ.. எங்கேபோய் விழுந்திருக்கோ தெரியலையே.. என்றெல்லாம் கவலைதோய்ந்த மனத்தோடு அரற்றிக்கொண்டிருக்கிறான். விஞ்ஞானிகள் அணியும் அதிர்ச்சியைக் கடந்து அரக்கப்பரக்க வேலை செய்துகொண்டே இருக்கிறார்கள் விக்ரம்பற்றி ஏதாவது தகவல் கிடைக்குமா என்று. இதுவரை கிடைத்திருக்கும் விஞ்ஞானத் தகவல்களை, இரவும் பகலுமாக ஆய்ந்துகொண்டிருக்கிறார்கள்.  தகவல் தொடர்பிலிருந்து திடீரென விட்டுவிலகிப்போய்விட்ட ‘விக்ரம்’ விழுந்து நொறுங்கியிருக்கும் எனப் பெரிதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில்,  36 மணி நேர மிகக் குறைந்த அவகாசத்தில், ஆர்பிட்டர் எனும்  100×100 கி.மீ. சுற்றுவட்டப்பாதையில் சந்திரனை வெற்றிகரமாக சுற்றிக்கொண்டிருக்கும் சந்திரயான் -2 தாய்க்கலம், ஒரு நல்லகாரியம் செய்தது. தன் சுற்றுப்பாதையில் தான் எடுத்த ஒரு   thermal image மூலம், விக்ரம் சந்திரனின் தரையில் உடையாமல் உட்கார்ந்திருப்பதைக் கண்டுபிடித்துக் காட்டியது. இடிந்துபோயிருந்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் மனதில் ஒரு சந்தோஷக்கீற்று. முந்தைய ஏற்பாட்டின்படி,  மெதுவாக தரை இறங்கி (7-9-2019), ஸ்திரமாக உட்கார்ந்து விஞ்ஞான சோதனைகளை ஆரம்பிப்பதற்குப் பதிலாக, கொஞ்சம் சாய்வாக தன் இஷ்டத்துக்கு அமர்ந்து, சந்திரப் பரப்பை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது விக்ரம்! கரடுமுரடான, பள்ளத்தாக்குகள் நிறைந்த சந்திரத் தரையில் விழுந்து, உடைந்தோ, நொறுங்கியோ போய்விடாமல், திட்டமிட்ட இடத்திலிருந்து சற்றுத் தள்ளிப்போய் ’இறங்கி’, முழுசாக உட்கார்ந்திருக்கிறதே… அட! இதுவும் ஒரு சாதனையில்லாமல் வேறென்ன! டாக்டர் கைலாசவடிவு சிவன் தலைமையிலான இஸ்ரோ விஞ்ஞானிகளே.. உங்களுக்கு ஒரு பெரிய வணக்கம். நீங்கள் கில்லாடிகள்தான், சந்தேகம் ஏதுமில்லை எங்களுக்கு.

டாக்டர் கே. சிவனைப் பாராட்டும் பிரதமர் நரேந்திர மோதி

விக்ரமோடு தகவல்தொடர்பை மீட்க, கடும் முயற்சிகளைத் தனது அணி மேற்கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார், இஸ்ரோவின் ’சந்திரயான் -2 திட்டத் தலைவ’ரான டாக்டர் கே. சிவன். பத்திரிக்கையாளர்களிடம் மேற்கொண்டு பேசுகையில், ’தாய்க்கலம் பொதுவாக ஒரு வருட காலம் சந்திரனைச் சுற்றிவந்து ஆய்வுகள் நடத்துமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. சந்திரயான் 2 விண்கலம் சந்திரனை நோக்கிய தன் பயணத்தில் எடுத்துக்கொண்ட சுருக்குப்பாதையின் காரணமாக, ஏகப்பட்ட எரிபொருள் மிச்சப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் சந்திரயான் 2 தாய்க்கலம் (orbiter) இன்னும் 7 ஆண்டுகள் சந்திரனைச் சுற்றிவர வாய்ப்புள்ளது’ என்று அறிவித்து இந்தியமக்களோடு, அமெரிக்க நாஸா மற்றும் ரஷ்ய, சீன, ஃப்ரெஞ்ச் மற்றும் இஸ்ரேலிய விண்வெளி  விஞ்ஞானிகளையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

ஒரு வேளை, இஸ்ரோ விஞ்ஞானிகளால் விக்ரம் மீண்டும் செயல்படுத்தப்பட முடியாதுபோனால் (அதற்கான வாய்ப்புதான் அதிகம் எனத் தோன்றுகிறது) –  இஸ்ரோவுக்குக் கொஞ்சம் நஷ்டம் உண்டுதான். லேண்டர் ‘விக்ரம்’ மற்றும் ரோவர் ‘ப்ரக்யான்’ மூலம் சந்திரனின் பரப்பில் ஐந்து விஞ்ஞான சோதனைகள் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. அவை நடக்காது போகலாம். மலைகள், பள்ளத்தாக்குகளால் நிரம்பிய, பனிக்கட்டிகளாய் உறைந்துகிடக்கும் சந்திரனின் நிலப்பரப்பு, அதன் விசித்திர மேலான வாயுமண்டலம், ஆகியவற்றோடு குறிப்பாக சந்திரனின் தென் துருவத்தில் பல்லாண்டுகளாக பனிப்பாறைகளாக உறைந்துகிடக்கும் தண்ணீரின் குணம், அளவு ஆகியவற்றையும் ஆய்வு நடத்த 8 அதிமுக்கியமான விஞ்ஞான சோதனைகள், தற்போது சிறப்பாக இயங்கிவரும் சந்திரயான் 2 தாய்க்கலத்தினால் (orbiter) நிகழ்த்தப்படவிருக்கின்றன. சந்திரயான் 2, இத்தகைய வரலாற்று சிறப்புமிகு சோதனைகளை மேற்கொண்டு, விஞ்ஞானத் தகவல்களை, thermal image-களை இஸ்ரோவுக்கு தொடர்ந்து அனுப்பிவரும். இந்தியா நடத்தப்போகும் இத்தகைய சோதனைகள், அதன் ஆச்சரியம்தரக்கூடிய முடிவுகளுக்காக உலகின் விண்வெளிநாடுகள் ஆவலோடு காத்திருக்கின்றன. இஸ்ரோவின் அருமையான முயற்சியை அமெரிக்காவின் நாஸா ஏற்கனவே பாராட்டியிருப்பதோடு, சூரியமண்டலத்தை ஆராயும் எதிர்கால விண்வெளிமுயற்சிகளில் நாங்களும் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறோம் என்றும் சொன்னது.

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் சந்திரனில் தங்கள் விண்கலங்களை வெற்றிகரமாக இறக்கியிருக்கின்றன – நிலவின் இறங்க எளிதான மத்தியரேகைக்கு அருகிலான  பிரதேசத்தில். மேலும்,  எந்த ஒரு நாடும் நிலவின் தரையிறங்கலில் தன் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றதில்லை.  சில தோல்விகளைக் கடந்துதான் இது சாத்தியமானது அவர்களுக்கு. கடந்த ஆண்டில், இஸ்ரேலின்  முதல் முயற்சி தோல்விகண்டது. அவர்களது லேண்டர் நிலவில் மோதி நொறுங்கியது.

இந்தியா அனுப்பிய சந்திரயான் -2 விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவெனில், இதுவரை எந்த நாடும் முயற்சித்திராத,  நிலவின் பனிப்பாறைகள் உறைந்திருக்கும், கணிக்கமுடியாத குளிர்ப் பிரதேசமான தென் துருவத்தை நோக்கிக் குறிவைத்ததாகும். அத்தகைய மோசமான பகுதியில்தான் இஸ்ரோ  விக்ரமை இறக்க முயற்சித்து, தகவல் தொடர்பை இழந்தும்,  கிட்டத்தட்ட அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது. நிலவின் தென் துருவப் பகுதியில் இறங்க முயற்சிப்பது ’ஏறக்குறைய நிகழ்த்தமுடியாத ஒரு சந்திரவெளி ஆய்வுமுயற்சி’ (’almost impossible lunar mission’) ஆக முடியும் என அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் விண்வெளி விஞ்ஞானிகளால் கருதப்பட்டு கைவிடப்பட்டிருக்கிறது. முடியாது என உலகினால் முடிக்கப்பட்டதை, முடியும் என முடிக்கப் பார்த்தார்கள் நம் விஞ்ஞானிகள். அதுவும் நிலவில் தரையிறங்குவதற்கான இந்தியாவின் முதல் முயற்சியிலேயே இப்படியோரு கடினமான இலக்கை நோக்கிப் பயணித்தார்கள். இந்த சவாலான, நுட்பமான பின்னணியில்தான், டாக்டர் சிவன் மற்றும் அவரது திறன்மிகு விஞ்ஞானிகளின் அணியின் செயல்பாட்டை நாம் பார்த்துப் பெருமைகொள்ளவேண்டும்.  எத்தனைக் கடுமையாக, ராப்பகல் பார்க்காது அவர்கள் பணியாற்றியிருக்கின்றனர் என்பது அப்போதுதான் கொஞ்சமாவது உணரப்படும். இதுபோன்ற அர்ப்பணிப்பு, நாட்டிற்கான தன்னலம் கருதா உழைப்பு போன்ற சிறப்பியல்புகளை, இஸ்ரோவின் விஞ்ஞானிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தீரமிக்க இந்திய ராணுவம் போன்றோரிடம் மட்டும்தான் நாம் காணமுடியும்; நம்பிக்கையுடன் மக்கள் நல்லதை எதிர்பார்க்கமுடியும். அத்தகைய உன்னத எதிர்பார்ப்பில்தான் இந்தியாவே விழித்திருந்தது அன்று.

**

7 thoughts on “சந்திரயான் 2 : ஒரு அபூர்வ விண்சாதனை

    1. அட! இதுவும் ஒரு சாதனையில்லாமல் வேறென்ன! டாக்டர் கைலாசவடிவு சிவன் தலைமையிலான இஸ்ரோ விஞ்ஞானிகளே.. உங்களுக்கு ஒரு பெரிய வணக்கம். நீங்கள் கில்லாடிகள்தான், சந்தேகம் ஏதுமில்லை எங்களுக்கு.//நல்ல செய்திகளுக்கு மிக நன்றி ஜி.
      பாரதம் முன்னேறும். அது நிச்சயம். அருமையான விஞ்ஞானிகளின் கடும் முயற்சியும்,
      தூக்கமில்லா இரவுகளும் வீணாகாது.
      இறைவன் என்றும் நம் பக்கம்.
      வாழ்க பாரதம். வெல்க தாய்த்திரு நாடு.

      Liked by 1 person

  1. @ Sriram, @ Revathi Narasimhan :

    கருத்துக்களுக்கு நன்றி.

    இந்தியாவின் மிகப் பெரிய வரப்ரசாதம் எப்போதுமே நமது விஞ்ஞானிகள். India’s most talented, capable and dedicated community of scientists and technocrats. மாறும் உலகில், மாறா வளத்தை தாய்நாட்டுக்குக் கொண்டு வர, இடைவிடாது முயற்சிக்கும் மகாஇந்தியர்கள் இவர்கள். Hats off to them !

    Like

  2. இந்த சரிவு என்ன மாதிரியான சவால்களை நம் விஞ்ஞானிகள் எதிர்கொள்ள வேண்டும் என்னும்பாடம் புகட்டி இருக்கும்

    Liked by 1 person

    1. @ பாலசுப்ரமணியம் ஜி.எம். :

      இஸ்ரோ தன் அரைநூற்றாண்டு வாழ்வில், எத்தனையோ பின்னடைவுகளைக் கண்டுதான், போராடித்தான் முன்னேறியிருக்கிறது. All in the game !

      Like

  3. நாம் நிறைய தோற்றிருக்கிறோம். பிஎஸ்எல்வி ராக்கெட்டே வானம் தொடாமல் பாதாளம் நோக்கிப் பாய்ந்ததுண்டு. பெருந்தொகையைக் கரியாக்கி ஜிஎஸ்எல்வி தீக்குளித்து கடலுக்குள் விழுந்திருக்கிறது. அனைத்தும் படிக்கற்களே. ஆர்பாட்டமில்லாது இலக்கு நோக்கி நகர்வோம்.

    Liked by 1 person

  4. @ Pandian Ramaiah :

    வாங்க, பாண்டியன்! விண்வெளி ஆய்வுகள் ரஷ்யா, அமெரிக்கா போன்ற வல்லரசுகளையும் தலையைப் பிய்த்துக்கொள்ளவைத்திருக்கின்றன. அமெரிக்காவின் தோல்விகளையும் அடுக்கலாம். கூடவே ஏகப்பட்ட பணத்தை விழுங்குபவை. அதனால்தான் ஜப்பான், சீனா போன்ற நாடுகள் அதிகம் மூக்கை நுழைப்பதில்லை. ஃப்ரான்ஸ் போன்ற நாடுகள், மற்றவர்களின் விண்கலங்களில் தங்களுடைய payloads-ஐ அனுப்பிவிட்டு சுருக்கமாக, செலவில்லாமல் ஆராயப் பார்க்கிறார்கள்.

    Like

Leave a comment