இங்கிதம் தெரிந்த நண்பர்கள். நம்மில் பலருக்கு அதற்குத் தகுதியில்லை என்றாலும், எப்போதும் விஸ்வாசம் காட்டுபவர்கள். ஒன்றும் தராவிட்டாலும் ஓரவஞ்சனை செய்யாதவர்கள். அவர்களில், சிலருக்குத்தான் இருக்க வீடுண்டு, கொஞ்சுவதற்கு மனிதருண்டு. பலருக்குப் படுக்கக்கூட சரியான இடமில்லை. அன்போடு பார்க்கவும் யாருமில்லை. இன்னல்பல இருந்தாலும் இதமானவர்கள். இந்தப் பெரிய உலகில், சிறிய உருவோடு ஓரமாக அலைபவர்கள். மனிதன் சலிப்போடு ‘சீ! போ.. அந்தப் பக்கம்!’ என்று எரிந்து விழுந்தாலும், முகம் சுழிக்காதவர்கள், மனதில் வைத்துக்கொள்ளாதவர்கள். கொஞ்சம் தள்ளி நின்று அவனையே ஆர்வத்தோடு பார்ப்பவர்கள். அபலைகளாக இருக்கலாம். ஆனால் அன்பு தெரிந்த உயிர்கள்..
கிராமத்தில் வளர்ந்த இரு நாய்களின் நினைவு தட்டுகிறது. உன்னதமான உயிர்கள். எப்போதும் நேசம். விடாத பாசம். இறுதிவரை. பெங்களூரில் காலை நடையின்போது சில நாய்களை கவனித்திருக்கிறேன். யாராலும் வளர்க்கப்படாதவைகள். தெருநாய்கள். இருந்தாலும் ஒரு கட்டிடத்தையோ கடை வாசலையோ சார்ந்தே அவை இருக்கின்றன. அதன் வாயிலில்தான் படுக்கும். பகலில் உலவிக் கண்காணிக்கும். யார் நியமித்தது? தனக்குத்தானே தன் பணியென நியமித்துக்கொண்டு அந்த இடத்தின் பாதுகாப்பிற்கென விசுவாசமாக இருக்கும் நாய்கள். கடந்து செல்லும் மனிதர்களைக் கவனிக்கும். வேறு நாய்கள் அந்த இடத்தில் கடந்தால் குலைக்கும். ’’போ ..அந்தப்பக்கம்.. இந்தப்பக்கம் வராதே! இது என் ஏரியா’ என்பதுபோல். ஒரு ஏடிஎம் வாசலில் கொஞ்சம் வழிவிட்டு, ஒரு நாய் அமர்ந்திருக்கிறது. அது ஏடிஎம்-இன் காவலாளியின்பால் விசுவாசத்துடன் இருக்கிறது, அந்த இடத்தோடு தன்னை சம்பந்தப்படுத்திக்கொண்டதாய், அமர்ந்திருக்கிறது என்பது தெரிகிறது. அந்த செக்யூரிட்டி எப்போதாவது பிஸ்கட் போடுவாரோ? இருக்கலாம். ஆனால் அந்த நாய் அங்கேதான் படுக்கிறது. கண்காணிக்கிறது. சம்பளமில்லா ஆனால், விஸ்வாசம் கோடிக்கோடி எனக் காண்பிக்கும் அப்பாவி ஜீவன். பல சமயங்களில் காவலாளி தன் டூட்டியிலிருந்து அம்பேல்! நாயிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அங்குமிங்கும் கவலையின்றி சுற்றிவிட்டு எப்போதாவது திரும்பி வந்து தன் நாற்காலியில் உட்காருவார். நாய் நகலாது அந்த இடத்தை விட்டு. இது என் இடம். இதனைப் பார்த்துக்கொள்வது என் கடமை என வரித்துக்கொண்டுவிட்டது மனதில். அங்கேயே பழியாய்க் கிடக்கும். தூங்காது கணமும். வயிற்றில் பசியோடு வருவோர், போவோரைப் பார்த்துக்கொண்டிருக்கும்.
ஒரு நாள். காலை நடையிலிருந்து வீடு நோக்கித் திரும்புகையில் ஒரு காட்சி. சாலையின் இடப்புறம் வரிசையாக அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸுகள், அவற்றின் வண்ண, வண்ண கேட்டுகள். அத்தகைய ஒரு காம்ப்ளெக்ஸ் வாசலில், நின்றுகொண்டிருக்கும் காவலாளி அங்கிருக்கும் ஒரு நாய்க்கு பிஸ்கெட் போடுகிறான். அது ஆனந்தமாய் சாப்பிடுகிறது. மேலும் மேலும் அதன்முன் தூக்கிப் போடுகிறான். அடுத்தக் கட்டிட வாசலில் இன்னுமொரு நாய். சாம்பல்நிறத்தில் ஒல்லியாய்.. நல்ல பசியில் இருக்கிறதுபோலும். இந்தப் பக்கம் நடக்கும் பிஸ்கெட் வினியோகத்தை ஆவலோடும் ஏக்கத்தோடும் பார்க்கிறது. தன்னையறியாமல் அதன் கால் மேல் தூக்குகிறது, நடக்க எத்தனிப்பதுபோல். ஒரு கணம். அந்த கேட்டுக்குப்போய் நாமும் ஒரு பிஸ்கெட் வாங்கி சாப்பிடுவோமா என்பதுபோல் ஒரு துடிப்பு அதனுள். ஆனாலும் அடக்கிக் கொள்கிறது. தன் கேட்டை விட்டு ஒரு இன்ச் அசையவில்லை. அந்த நாய் சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டே தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு தன் கேட்டிலேயே சோகத்தோடு நிற்கிறது. அதற்கு பிஸ்கெட் போட ஒருவருமில்லை. எல்லோருக்குமா கிடைக்கும் பிஸ்கெட்? மேலும் நினைவாக நடக்கிறேன். மெதுவாகக் கடந்து செல்லும் கார் ஒன்றின் ஜன்னலிலிருந்து அழகிய வெள்ளைநாய் ஒன்று ஆனந்தமாக எஜமானியின் மடியில் உட்கார்ந்துகொண்டு, எல்லாவற்றையும் பார்த்தவாறே பயணிக்கிறது. ஓ! நாய்க்கும் உண்டல்லவா விதி ?
நாயை, யாருமில்லா நாயின் ஒரு நாளை, கவனித்துப் பார்ப்பது என்பது நமது வாழ்க்கையையே தள்ளி நின்று நாம் அவதானிப்பது போன்றது. எத்தனை வசவுகள், அடிகள், உதைகள், ஏளனப் பார்வைகள்..அவமானங்கள். எத்தனை எத்தனைப் பட்டினிப் பகல்கள், படுக்க இயலா இரவுகள்.. இருந்தும், கழிக்கவேண்டுமே இவ்வுலக வாழ்க்கையை அதுகளும்.
ஒரு விஷயம் எங்கோ படித்த நினைவு. வியட்நாம் மக்களிடையே ஒரு நம்பிக்கை. படாதபாடெல்லாம் பட்டு இறுதியில் இவ்வுலக வாழ்வைத் துறக்கும் நாய்கள் அடுத்த ஜென்மத்தில் மனிதர்களாகப் பிறக்குமாம். பொதுவாகவே நாயின் அடுத்த ஜென்மம் மனிதன் என்கிற நம்பிக்கை அங்கே. எவ்வளவு தூரம் சரி என அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. தான் வாழ்வதற்காக, பிற உயிர்களை மனம் கூசாது துவம்சம் செய்யும் மனிதனின் அடுத்த பிறவி என்னவாக இருக்கும்? நினைக்கவே கலக்கமாக இருக்கிறது.
நேற்று (26/8/19) செய்தி மீடியாவை மேய்கையில் கண்ணில்பட்டது. அம்மாவுக்கு ஒன்று, அப்பாவுக்கு ஒன்று, நண்பனுக்கு ஒன்று என நாளை ஒதுக்கிய மனிதன், போனால் போகிறதென்று இதற்கும் ஒரு நாளை ஒதுக்கிவிட்டானே! International Dogs Day.. ஆச்சரியம்தான். விஸ்வாசத்தைத் தவிர வேறொன்றையும் அறிந்திராத ஜீவன்களே.. உங்களுக்கு இதெல்லாம் எங்கே புரியப்போகிறது ?
**
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துவ் வுலகு
LikeLike
@ திண்டுக்கல் தனபாலன்:
இந்த உலகின் பெருமைகளுக்குக் குறைவில்லை!
LikeLike
மனிதனின் அடுத்த பிறவி மனிதனாகதான் இருக்க முடியும் என்கிறது விஞ்ஞானம். ஜீன் மியூட்டேஷனில் பின்னே போக முடியாது பாருங்கள்!
இன்று ஒரு அம்மா தன் ‘நாட்டு செல்ல’த்தை கையில் தூக்கி, அணைத்தபடி மோட்டார் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்ததை பார்த்தேன். எங்கே சென்று கொண்டிருந்தாரோ… போட்டோ எடுக்க இரண்டுமுறை முயற்சித்தும் கைகூடவில்லை.
LikeLiked by 1 person
@ sriram :
விஞ்ஞானம் அடுத்த பிறவிபற்றிப் பேச ஆரம்பித்துவிட்டதா, சபாஷ்! முன்னேற்றம் தெரிகிறது..
LikeLike
இங்கே இரு செல்லங்கள் அவைகளுடைய
எஜமானரின் ஆரோக்கியத்துக்காகத் தினம் இரு வேளை
நடக்கின்றன.
அவருக்கு 80 வயதாகிறது.
அவைகளுக்கு ஓடும் சக்தி இருந்தும், அவரது நிதான நடைக்கு அவை நடந்து செல்லும்
அழகே தனி.
மிக நன்றி ஏகாந்தன் ஜி.
LikeLiked by 1 person
@ Revathi Narasimhan :
பண்பு தெரிந்தவை. எஜமானரின் காலசைவுக்கேற்பத் தன் உடல் அசைவுகளை வைத்துக்கொள்பவை.
LikeLike
நாய் ஒன்று வேண்டும் தான். ஆனால் அதைப் பிரிவதை நினைத்தால்! அதுவும் துன்பப்படும், நமக்கும் துன்பம். வேண்டியது அனுபவித்துவிட்டு இப்போ வேண்டாமென்று இருக்கோம்.முடியவும் இல்லை; இனிமேல் முடியவும் முடியாது!
LikeLike
@ கீதா சாம்பசிவம்:
நாயையோ வேறு pet-ஐயோ வளர்த்தால், அதைவிட்டுவிட்டு எங்கும் செல்லமுடியாது. வெளியூருக்குப்போனால் கூடவே தூக்கிக்கொண்டு போகவும் வாய்ப்பில்லை. தர்ம சங்கடம். என் பெண் அடிக்கடி ‘நாய் ஒன்று வளர்க்கலாமா’ எனக் கேட்கிறாள். மேல் சொன்ன காரணத்துக்காக மறுத்துவருகிறேன்.
LikeLike
நம் இலக்கியங்களில் நாய் ஒரு கேடுகெட்ட பிறவியாக நினைக்கப் படுகிறது
LikeLike
@ பாலசுப்ரமணியம் ஜி.எம். :
இலக்கியம் தேடிப்போனால் என்னென்னவோ கிடைக்கும்! பக்தி இலக்கியத்தில் பைரவரின் வாகனமாக கௌரவிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் கவனிக்கவேண்டும்.
பொதுவாக ‘நாய்’ என்கிற வார்த்தையையே ஒரு வசவுச் சொல்லாக ஆக்கிவிட்ட சமூகம் நம்முடையது. (வெளிநாட்டுக்காரர்களும்தான்!) ’நாயே!’ என மனிதனைத் திட்டுவது, நாய்க்குத்தான் பெரும் அவமானம். என்ன செய்வது? மனிதன் தன்னைத் தாழ்த்திக்கொண்டதோடு, சக உயிர்களைப் புரிந்துகொள்ளும் அவனுடைய லட்சணமும் இப்படித்தான் இருக்கிறது.
LikeLike