பாடலுக்கு இசை : கய்யாம்

 

பாலிவுட் பட உலகில் சுமார் 40 வருடம் இசையமைப்பாளராக, மனம்  விடாது மீட்டும் பல பாடல்களைத் தந்தவர். முகமது ஜஹூர் கய்யாம் ஹஷிமி. சுருக்கமாக கய்யாம் (Khayyam). பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே பள்ளி செல்ல விருப்பம் இல்லாமல் திரை இசையில் மயங்கிக் கிடந்திருக்கிறார் பையன்! 14 வயதில் பள்ளியிலிருந்து ஓட்டம் பிடித்து லாகூர் சென்று (அப்போதைய இந்தியா) அங்கிருந்த பஞ்சாபி பட இசையமைப்பாளரான பாபா சிஷ்டியிடம் சேர்ந்து இசையமைக்கும் நுட்பங்கள் சில கற்றார்.  பாபாவின்  உதவியாளராக நான்கு வருடங்கள். கிடைத்த சிறு சிறு வாய்ப்புகள் திருப்தியளிக்கவில்லை. டெல்லியிலிருந்த தன் மாமாவிடம் அவர் வந்து சேர்கையில் அவருக்கு வயது பதினேழுதான். மாமாவும்  பையனை பள்ளிக்கூடத்தில் மீண்டும் சேர்க்கப் பார்த்தார். ஆனால் கய்யாமின் இசைபக்தியைக் கண்டதும் மனமாறியது. இசை பயில அனுப்பினார். கய்யாமுக்கு கொஞ்சம் நிம்மதி. நம்மை புரிந்துகொண்ட ஒரு ஆத்மாவும் இருக்கிறதே.. சில டெல்லி வருடங்களுக்குப்பின், தன் லட்சிய நகரமான பம்பாய்க்கு வந்து சேர்ந்தார் கய்யாம்.

பம்பாயின் திரை உலகம் கனவுப் பாத்திரங்களால் ஆனதாக இருந்தது. அதாவது கலைஞர்களே கனவில்தான் பேசினார்கள், நடித்தார்கள், நடந்துகொண்டார்கள். இசையுலகம்..? கேட்கவே வேண்டாம்! இளைஞன் கய்யாமுக்கு எல்லாம் பிடித்துப்போயிற்று. ஆனால் நிறையப்பேருடன் சம்பந்தப்படவேண்டியிருந்தது. பணிந்துபோகவேண்டியிருந்தது.  உழைக்கவேண்டியிருந்தது. ரஹ்மான் எனும் இன்னுமொரு இளம் இசையமைப்பாளருடன் ஜோடி சேர்ந்து இசையமைக்க முற்பட்டார் கய்யாம். இருவரும் தங்கள் பெயரை ஷர்மா-வர்மா என மாற்றி வைத்துக்கொண்டனர். கய்யாம் -ஷர்மா. ரஹ்மான் -வர்மா. கவனியுங்கள் அப்போதே பாலிவுட்டில் பஞ்சாபி தாக்கம் அதிகம்! 1948ல் வந்த ஹீர் ராஞ்சா எனும்  ஹிந்தி படத்திற்கு இசை இந்த ஷர்மாஜி-வர்மாஜி ஜோடி ! படம் ஏதோ ஓடியது. ஆனால் வர்மாஜியும் ஓடிவிட்டார் – பாகிஸ்தானுக்கு. இந்தியப் பிரிவினைக் காலகட்டம். ரஹ்மான் பாகிஸ்தானைத் தனது நாடாக தேர்வு செய்தார். காணாமற்போனார்! கய்யாம்? இந்தியா எனது நாடு. பம்பாயே என் உலகம் என்றார். எப்போதும் இசையில் பேசினார். பழகினார். தூங்கினார். விழித்தார். ஹிந்தி திரையுலகம் அவரை ஏறிட்டு நோக்கியது. வாய்ப்புகள் நெருங்கின.

பாலிவுட் இசையமைப்பாளர் கய்யாம்

கய்யாமின் இசை இந்தியத் திரைவானில் தவழ ஆரம்பித்தது. ஆங்காங்கே பல இடங்களில் ரீங்கரித்தது. 1953-ல் வெளிவந்த ஹிந்திப் படம் Footpath-ல் புகழ்பெற்ற ஹிந்திக் கவிஞர் ’மஜ்ரூ சுல்தான்பூரி’யின் பாடல். மீனா குமாரியின் அருகாமைக்காக, திலீப் குமார் ஏங்கிப் பாடுவதாக திரையில் அமைந்தது. தலத் மஹ்மூதின் இனிய குரலில் இசையில் விளையாடியிருக்கிறார் கய்யாம்: ‘ஷாம் ஏ கம் (gham: சோகம்) கி கஸம்.. அவுர் கம்கீன் ஹை ஹம்.. ஆ..பி..ஜா.. ஆ..பி..ஜா.. ஆஜ் மேரே சனம்..(இந்த மாலைப்பொழுது தரும் சோகத்தின்மீது ஆணையாக சொல்கிறேன்.. வா.. வா..   இன்று வந்துவிடு என் காதலியே..) ‘ என்று கேட்போரை உருக்கிவிடும் பாடல். கய்யாம் செய்த கமால்!

1958-ல் இரண்டு, மூன்று இப்படி: ராஜ்கபூர், மாலா சின்ஹா நடித்த ஹிந்திப்படமான ’ஃபிர் சுபஹ் ஹோகி’ (திரும்பவும் பகல்வரும்) படத்தின் பாடல்கள் மக்களை வெகுவாக ஈர்த்தன. உருது/ஹிந்திக் கவிஞர் சாஹிர் லூதியான்வியின் வரிகளில் நாட்டு நடப்பின் விவரிப்பு, ஹீரோவின் வாயிலிருந்து பாட்டாக கய்யாமின் இசையில் திரையில் பவனிவர, ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள். தங்களுக்குள் ’ஹம்’ பண்ணிக்கொண்டுபோனார்கள். கய்யாமின் இசையில் முகேஷ் பாடிய  அந்தப் பாடல் : ‘சீன் (cheen) ஓ அரப்(Arab) ஹமாரா..ஹிந்தூஸ்தான் ஹமாரா..ரேஹ்னே கி கர் நஹி ஹை.. சாரே ஜஹான் ஹமாரா..!’ (சீனாவும் அரேபியாவும் நமது தான்! ஹிந்துஸ்தானும் நமதே! வசிப்பதற்குத்தான் வீடில்லை.. எல்லா நாடுகளும் நமதே..!) லூதியான்வியின் கிண்டல், கேலி பாமர மக்களைக் கிளுகிளுக்கவைத்தது. கய்யாமின் இசை படத்தை நோக்கி இழுத்தது. கடவுளையும் விடவில்லை சாஹிர் லூதியான்வி இன்னொரு பாட்டில்! ‘ஆஸ்மான் பே குதா (khudha: கடவுள்).. அவுர் ஜமீன் பே ஹம்.! ஆஜ் கல் ஓ இஸ்த்தர… தேக்த்தாஹி கம்..!’ (வானத்திலே சாமி.. பூமியிலே நாம்.. இப்பல்லாம் இந்தப்பக்கமா பாக்கறதில்லை (சாமி)..! ) லூதியான்வி-கய்யாம்-முகேஷ்-ராஜ்கபூர் எனக் காம்பினேஷன் ரசிக மனங்களை அள்ளிச்சென்றது. ஹிந்தி திரை இசையில் தன்னை நிறுவிக்கொண்டார் கய்யாம்.

1967-ல் வெளியிடப்பட்ட ‘ஆக்ரி கத்’ (Aakri khat -கடைசிக் கடிதம்). ராஜேஷ் கன்னாவின் முதல் படம். கய்யாமின் இசையில் இந்திரானி முகர்ஜி பாடுவதாக அமைந்தது இந்த பிரபலமான பாட்டு:  ‘பஹாரோ.. மேரா தில் சவாரோ.. (வசந்தமே! என் மனதையும் (கொஞ்சம்) கவனியேன்..). கவிஞர் கைஃப் ஆஸ்மி (நடிகை ஷாபனா ஆஸ்மியின் அப்பா) எழுதிய கவிதை வரிகளுக்கு ஆனந்த இசை நம்ம கய்யாம்.  இந்தப் படத்திற்குப்பின் ஏழெட்டு வருடங்களுக்கு திரை வாழ்க்கையிலிருந்து ஒதுங்கிக்கொண்டார் கய்யாம். என்னவோ தெரியவில்லை. மீண்டு வந்தபோது,  மேலும் படங்கள் கிடைத்தன. நெகிழவைத்த இசையும் வந்து சேர்ந்தது ரசிகர்களுக்கு. அத்தகைய பல பாடல்களில் சில:

  1. Angry young man Amitabh Bachchan உச்சம்தொட்டிருந்த காலகட்டம். அடிதடியும், ரத்தமுமாக எத்தனை நாளைக்குத்தான் அமிதாப்பைக் காட்டுவது? ஒரு கோபக்கார வாலிபன் என்பதைத் தாண்டி, அவனுக்குள் ஒரு மனமும் உண்டு. அதில் உணர்வுகளும்.. என ’கபி.. கபீ..’ (Kabhi Kabhie..) பட இயக்குனர் யஷ் சோப்ரா காட்ட நினைத்தார். எப்படி? சவாலான கட்டம். இயக்குனர், கய்யாமை நெருங்கினார். ’கய்யாம் சாஹிப்! ஏதாவது செய்யுங்கள்..!’ அந்த ஒரு  பாட்டில் அமிதாபை வேறொரு உலகத்து மனுஷனாகக் காட்டிவிட்டார் கய்யாம். ’கபி..கபீ.. மேரே தில் (dhil) மேன்.. கயால் ஆத்தா ஹை…! கே ஜைஸே துஜ்கோ பனாயா கயா ஹை மேரே லியே..!’ (அவ்வப்போது என் மனதில் (அந்த) சிந்தனை வருகிறது.. எனக்காகத்தான் நீ படைக்கப்பட்டிருக்கிறாயோ என்பதாக…)  ஸாஹிர் லூதியான்வியின் வரிகளைத் தன் மென்னிசையில் குழைத்து, அமிதாபின் ஆக்ரோஷ பிம்பத்தை அசால்ட்டாக மாற்றி, வேறுவண்ணம் தீட்டிவிட்டார் கய்யாம். பாட்டு தூள் கிளப்பியது. ரசிகப்பட்டாளம் அசந்துபோய் நின்றது. க்யா கானா (ghaana) ஹை! ஏ கௌன் ஹை பாய், மியூஸிக் மாஸ்டர் ?

புகழின் உச்சியில் இருந்த ராஜேஷ் கன்னா  மஜூன் எனும் தன் புதுப்படம் ஒன்றிற்காக, கய்யாம் ஒரு பாடலுக்குப்போட்ட இசையில் மயங்கி, 1979-ல் அவருக்கு ஒரு காரைப் பரிசளித்திருக்கிறார். ஆனால் அந்தப்படம் சில காரணங்களால் வெளிவரவே இல்லை. இருந்தும் விஸ்வாசமாக, ராஜேஷ்  கன்னாவுக்கு அடுத்தடுத்து மூன்று படங்களில் இசை அமைத்துக்கொடுத்தார் கய்யாம்.

1981-ல் முஸாஃபர் அலியின் திறனான இயக்கத்தில் எடுக்கப்பட்ட ஹிந்தி க்ளாசிக் படம் ’உம்ராவ் ஜான்’ (Umrao Jaan).  உருது எழுத்தாளர் மிர்ஸா ஹதி ருஸ்வா-வின் ’உம்ராவ் ஜான் அதா’ (Umrao Jaan Ada) எனும் புகழ்பெற்ற நாவல்தான் இப்படிப் படமாக்கப்பட்டது.  கவிதை உள்ளம்கொண்ட நாட்டியக்காரி உம்ராவ் ஜான் -கதையின் மையப் பாத்திரம். உம்ராவ் ஜானாக  நடிப்பில் ஜொலித்தார் ரேகா. கூடவே ஃபாரூக் ஷேக், நஸிருத்தீன் ஷா. ஆஷா போன்ஸ்லேயின் போதைக் குரல். கய்யாமின் கனவான இசை. ரசிகர்கள் சொக்கி விழுந்தனர். படம் பயங்கர ஹிட். உருதுக் கவிதைகளாலான ‘க்ளாசிக்’-வகைப் படமாதலால், முதலில் தயங்கியிருக்கிறார் பாடகி ஆஷா போன்ஸ்லே. கய்யாம், ஆஷாவை உற்சாகப்படுத்தி ரேகாவுக்காக பாடச் செய்திருக்கிறார். விசேஷமாக, அந்த மூன்று பாடல்கள் இசைப்பிரியர்களைக் கிறங்கவைத்தவை:

’இன் ஆங்க்கோன் கி மஸ்தி’ (இந்தக் கண்களின் போதை..),  ’யே க்யா ஜகா ஹை தோஸ்தோன்..’ (இது என்னமாதிரி இடம், நண்பர்களே), மற்றும் ’தில் (dil ) (ச்)சீஸ் க்யா ஹைன்.. ஆப் மேரி ஜான் லீஜியே..!’ (மனமென்ன பெரிய மனம்! என் உயிரையே நீ எடுத்துக்கொள்ளேன்..!) – உருதுக் கவிஞர் ஷஹ்ரியார் (Shahryar)-ன் ரசமான கவிதைகளைக் கொண்ட படம். கவிதைகளுக்கு இசை கொடுப்பதென்றால் அலாதி இன்பம் கய்யாமுக்கு. மணிக்கணக்கில் ஆழ்ந்துபோய் இசையமைப்பார்.

1977, 1981 ஆகிய வருடங்களில் மூறையே கபி..கபீ..,  உம்ராவ் ஜான் ஆகிய படங்களுக்காக ஃபிலிம்ஃபேரின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுகள் அவரிடம் வந்துசேர்ந்தன. உம்ராவ் ஜானுக்காக தேசிய விருதும் மற்றும் 2007-ல் சங்கீத நாடக அகாடமி விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது. 2011-ல் தேசிய உயர் விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதினால் கௌரவிக்கப்பட்டார் கய்யாம்.

கய்யாம் பழகுவதற்கு மென்மையானவராக அறியப்பட்டவர். ஜக்ஜீத் கௌர் எனும் பஞ்சாபிப் பாடகியை மணந்துகொண்டார் (1954).  பிரதீப் என அவர்களுக்கு ஒரே மகன். 2012-ல் காலமாகிவிட்டார். மகனின் தர்ம உள்ளத்தை மனதில் கொண்டு, தன் சொத்துபூராவையும் ’கய்யாம்-ஜக்ஜீத் கௌர் அறக்கட்டளை’ என ஒன்றை நிறுவி எழுதிவைத்தார். இளம் இசையமைப்பாளர்கள், இசைக்கலைஞர்களுக்கு உதவியாக இது மும்பையில் இயங்கிவருகிறது.

ஆகஸ்டு 19-ல் கய்யாம் தன் 92-ஆவது வயதில் காலமானபோது, மக்களுக்கு இசையின்பத்தை வழங்கிய கலைஞருக்கு அரசு மரியாதையுடன் மும்பையில் அடக்கம் நடந்தது. கவிஞர்கள் குல்ஸார், ஜாவத் அக்தர், பாடகர் சோனு நிகம், நடிகை பூனம் தில்லோன் போன்ற பாலிவுட் பிரபலங்கள், நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தினர். லதா மங்கேஷ்கரும், அமிதாப் பச்சனும் கய்யாமின் அபார இசையமைப்பை அன்போடு ட்விட்டரில் நினைவுகூர்ந்தார்கள்.

இசையமைப்பாளர் கய்யாமின் மறைவுக்கு இப்படி அஞ்சலி  செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோதி: ’கய்யாம் சாஹிப் நமக்களித்த இனிமையான இசைக்காக இந்தியா அவருக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறது. வளர்ந்துவரும் இசையமைப்பாளர்கள், கலைஞர்களுக்கான அவரது கொடை என்றும் நினைவுகூரப்படும்’.

**

Picture courtesy: Google

4 thoughts on “பாடலுக்கு இசை : கய்யாம்

  1. கய்யாம் திறமைக்கு கபிக்கபி ஒன்றுபோதும். அதிலேயே இன்னொரு முகேஷ் பாடலும், கிஷோர் பாடலும் கூட நன்றாயிருக்கும்.

    Liked by 1 person

    1. @ sriram:
      ஆமாம். கிஷோர் குமார் – லதா மங்கேஷ்கர் டூயட்டுகளும் இதில் உண்டு.

      Like

Leave a comment