அரங்கன், வரதன், வேதாந்த தேசிகன் ..

 

13-14 ஆம் நூற்றாண்டு காலகட்டம். காஞ்சீபுரம். ஏனைய திருமால் கோவில்களைப்போலவே அப்போது புகழ்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலிலும் சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சனை, ஆராதனைகள் நிகழ்ந்த காலம். காஞ்சிப் பெருமாள் கோவிலின் சன்னிதியில் இராப்பத்து, பகற்பத்து உத்சவத்தின்போது, திருமாலின்மீது பக்திமிகுதியால் இயற்றப்பட்ட ஆழ்வார்களின் அமுதமான பாசுரங்களும் ஓதப்படவேண்டும் என்று வேதாந்த தேசிகன் முன்வைத்தபோது, காஞ்சீபுரத்தில் ஒரு சாரார், வடமொழியில் மட்டுமே ஓதுதல் இருக்கவேண்டும்; வேறுவகையில் மாற்ற சாஸ்திரத்தில் இடமில்லை  என அடம்பிடித்தனர்.  வடமொழியைப்போலவே நமது தமிழ்மொழியும் தெய்வமொழியே என அவர்களுடன் வாதித்த தேசிகன், பன்னிரு ஆழ்வார்கள் திருமாலை நினைந்துருகிப் பாடிய அழகுமிகு பாசுரங்கள் பக்திப் பிரவாகத்தோடு, வேதங்களின் கருத்தாழத்தையும் கொண்டிருப்பவை என்று எடுத்துரைத்தார். ஆதலால் பெருமாளின் சன்னிதியில் பாடப்பட மிகவும் உகந்தவை எனப் புரியவைத்து, எதிர்ப்பாளர்களை மசியவைத்து, ஏற்றுக்கொள்ளவைத்தார் தேசிகன். அவர் காலத்தில்தான் தமிழின் இறையமுதமான நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பாடல்கள் முதன்முறையாக காஞ்சி வரதனின் சன்னிதியில் சீராக ஒலிக்கத்தொடங்கின.

1327-ல் கொடுங்கோலனான மொகலாய மன்னன் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் காஃபூரின் (Malik Kafur) தலைமையில், துருக்கர் படை, எண்ணற்ற செல்வங்களைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு தென்னாடு நோக்கி வந்தது. பல சிற்றரசுகளை வீழ்த்திய மாலிக் காஃபூர், ஸ்ரீரங்கத்தின் செல்வம்பற்றிக் கேள்விப்பட்டு அதனையும் தாக்கி அழித்துச் சூறையாடினான். ஊரை சிதறவிட்ட காஃபூரின் நாசகாரப் படைகள், அரங்கனின் கோவிலை நோக்கி முன்னேறினர்.  மதவெறியனான மாலிக் காஃபூரின் படைகளை, கோவிலைப் பாதுகாத்து நின்ற வைணவர்களும் அரங்கனின் ஏனைய அடியார்களும் கடுமையாக எதிர்கொண்டு போராட, பொதுமக்களும் சேர்ந்துகொண்டனர். இறுதியில், சுமார் 12000-க்கும் மேற்பட்ட  ஸ்ரீரங்கத்து அடியார்களும், மக்களில் ஒருபகுதியினரும் கோவில் வாசலிலேயே மாலிக் காஃபூர் படைகளினால் கொன்று குவிக்கப்பட்டனர். ஸ்ரீரங்கம் தாக்கப்படும் தகவல் முன்னரே தெரியவந்து, கோவிலின் மூலவர் விக்ரகம்  அழிக்கப்பட்டுவிடாதபடி பாதுகாக்க, மூலவர் சன்னிதிக்கு முன்னால் ஒரு கற்சுவர் எழுப்பி அதன் முன்னே வேறொரு போலி விக்ரகமும் செய்துவைத்து, இப்போது நாம் தரிசித்து மகிழும் ஸ்ரீரங்கநாதனை, மூலவரைக் காத்தவர், சிற்பக் கலை, கட்டிடக்கலை ஆகியவற்றிலும் தேறியிருந்த வேதாந்த தேசிகன்.  கோவிலின் உத்சவப் பெருமாள், தாயார் விக்ரஹங்களை மாலிக் காஃபூரின் சைன்யங்கள் சிதைத்துவிடாதபடி, எடுத்துக்கொண்டு ஓடிவிடாதபடி,  ஆச்சாரியர்களின் சிறு  குழு ஒன்று மறைத்து  எடுத்துக்கொண்டு, இரவோடு இரவாக திருமலைக்குக் கால்நடையாகப் பயணித்துவிட்டனர்.  முதுபெரும் வைணவ ஆச்சார்யரான சுதர்ஷன பட்டர் எழுதிய  ஸ்ரீபாஷ்யத்துக்கான விளக்கவுரையின் ஏடுகளை எடுத்துக்கொண்டு, பட்டரின் புதல்வர்களையும் பாதுகாக்கும்பொருட்டு அவர்களுடன் மேலக்கோட்டை (கர்னாடகா) நோக்கிப் பயணமானார் தேசிகன்.

தென்னாட்டை அழித்தும், சூறையாடியும் கொண்டாடிய மொகலாயப் படைகள் வடக்கு நோக்கி ஒருவழியாக விரட்டப்பட்டபின்னும், சுமார் 48 வருடங்கள் ஆகின ஸ்ரீரங்கமும், சுற்றுப்பிரதேசங்களும் முழுதுமாக இயல்புநிலைக்குத் திரும்ப. அப்போது செஞ்சியை ஆண்ட மன்னனின் தளபதியான போப்பனாரியன் (Boppanaaryan)  உதவியால் அரங்கனின் திருக்கோவிலுக்கு உத்சவ மூர்த்திகள் மீண்டும் கொண்டுவரப்பட்டன. கோவில் திறக்கப்பட்டு, போலிச்சுவர் அகற்றப்பட்டு, மூலவர் காட்சி தர,  மக்கள் பெரிதும் மகிழ, பூஜைகள் நிகழ ஆரம்பித்தன. அப்போது ஒரு நாள், தமிழுக்கு நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை அருளிய பன்னிரு ஆழ்வார்களின் சிலாரூபங்களை அழகாகச் செய்த பக்தர்கள் சிலர், ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பிரதிஷ்டை செய்ய ஆசையாக எடுத்துவந்தனர். அதற்கும் ஒரு சாராரிடமிருந்து எதிர்ப்பு வந்தது. பன்னிருவரில் ஓரிரு ஆழ்வார்களைத் தவிர, மற்றோர் அந்தணர் அல்லாதோர் என்பது அவர்களது குதர்க்க வாதம். அப்போது அங்கு வந்திருந்த வேதாந்த தேசிகன், எதிர்ப்பவர்களை சந்தித்து சாந்தப்படுத்தி விளக்கலானார். வெவ்வேறு ஊரிலிருந்து, வெவ்வேறு பின்புலத்திலிருந்து வந்திருந்தாலும், நாம் வணங்கும் அதே திருமாலைத்தான், அரங்கனைத்தான் ஆழ்வார்களும் சரணடைந்தார்கள். அவனையன்றி வேறு நினைவின்றி வாழ்ந்து மறைந்த மகான்கள் அவர்கள். அத்தகைய திருமால் அடியாரை,  தாழ்ந்தோர் எனக் கூறுவது மட்டுமல்ல, அப்படி நினைப்பதே கூட பாபத்தில் நம்மைக் கொண்டுபோய் விட்டுவிடும் என அறிவுறுத்தி, எதிர்த்த அசடுகளைப் பணியவைத்தார் தேசிகன். அதன்பின்னரே அரங்கனின் கோவிலில் ஆழ்வார்களின் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு முறைப்படி பூஜை செய்யப்பட்டன, என்கின்றன கர்ணபரம்பரைக் கதைகள். ஆழ்வார்களின் பிரபந்தப் பாசுரங்களின்மூலம்,  வேதங்களில் மறைபொருளாகப் பேசப்படும் இறைரகசியங்கள் பலவற்றைத் தான் அறிந்ததாகக் கூறியவர் தேசிகன்.

அந்தக் காலகட்டத்தில், சமூகத்தின் ஒருசாரார் மட்டுமே வேதசாஸ்திரங்களைப் பயிலவேண்டும் என்கிற அபிப்ராயம், பாமரர்களைத் தாண்டி பண்டிதர்களிடமும் வெகுவாகக் காணப்பட்டது. ராமானுஜரைக் கொண்டாடிய வேதாந்த தேசிகன் அதனை மறுத்து வாதம் செய்தார்.அதனால் கடுமையாக விமரிசிக்கப்பட்டார்.  வேதங்கள், உபநிஷதங்கள் ஆகிய பண்டைய சாஸ்திரங்கள் மனிதன் இம்மண்ணுலக வாழ்வைக் கடந்த, ஞானத்தின் உயர்நிலையான பிரும்மத்தை நோக்கிப் பயணிப்பதற்கான வழிமுறைகளைக் காட்டுபவை. ’இறுதி உண்மை’ எனப்படும் பிரும்மத்தைப்பற்றிப் பேசுவதால் வேத சாஸ்திர தத்துவங்கள் அனைவருக்கும் பொதுவானவை என தர்க்கம் செய்தார் தேசிகன். இறைவழி செல்வோர் யாராகிலும், பெண்கள் உட்பட அனைவரும் கற்றுக்கொள்ளக்கூடியதுதான் அத்தகைய வேதங்கள், பிரமாணங்கள் போன்றவை எனத் தெளிவுபடுத்தினார் அவர். அதோடு நில்லாமல், சாதாரணருக்கும் புரியும்படியாக  வேதக்கருத்துக்களின் சாரத்தை சுருக்கமாக  ‘சில்லரை ரகஸ்யங்கள்’ எனும் நூலாக (மணிப்பிரவாள நடையில்) இயற்றினார்  தேசிகன்.

சமஸ்க்ருதம், ப்ராக்ருதம் ஆகிய மொழிகளிலும், மணிப்ரவாளத்திலும் (தமிழ், சமஸ்க்ருதம் கலந்த மொழிநடை)  பல புகழ்பெற்ற பக்தி நூல்களைப் புனைந்த தூப்புல் ஞானி வேதாந்த தேசிகன், தாய்மொழியான தமிழில் ஏதும் எழுதவில்லையா என ஆச்சரியப்பட்டுக் கேட்பவர் உண்டு. தமிழ் மொழியின்மீது மிகுந்த மதிப்பும், திராவிடவேதம் என அழைக்கப்படும் பிரபந்தங்களைப் படைத்த ஆழ்வார்களின்பால் ஆழ்ந்த பக்தியுமுடைய தேசிகன், தமிழில் எழுதாமல் எப்படி இருந்திருப்பார்? எழுதியிருக்கிறார். ஒன்றல்ல, இரண்டல்ல.  24 தமிழ் நூல்கள். அவற்றில் ஐந்து நூல் தொகுப்புகள் காலப்போக்கில், நமக்குக் கிடைக்காதுபோயின. மீதியுள்ள பத்தொன்பதில் சில கீழே:

கீதார்த்த சங்கிரகம், சரம சுலோகச் சுருக்கு ஆகிய நூல்கள் – கீதையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்குத் தன்னை சரணாகதி அடைந்து அமைதிபெறுவதுபற்றி சொன்ன உபதேசங்களின் சுருக்கம்.

திருமந்திரச் சுருக்கு, துவயச் சுருக்கு ஆகியவை – (மந்திரப்பொருளின் சுருக்கமான விளக்கம் தரும் நூல்கள்)

அடைக்கலப் பத்து – ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் விளக்குகிற சரணாகதித் தத்துவம்பற்றிய  நூல்.

அத்திகிரி மகாத்மியம், அத்திகிரி பஞ்சகம் – காஞ்சீபுரம் அத்திகிரி வரதராஜப் பெருமாள்பற்றிய வரலாற்றுச் சுருக்கம், துதிப்பாடல்கள்

மும்மணிக்கோவை – பரப்பிரும்மமாகிய நாராயணனைப் போற்றிப் பாடிய பாடல்களின் தொகுப்பு

நவரத்தினமாலை – திருவஹீந்திரபுரம் பெருமாள்பற்றிய பாடற்தொகுப்பு

பிரபந்த சாரம் – திருமாலைப் பாடிய ஆழ்வார்களின் வாழ்க்கை சரிதம், அவர்கள் இயற்றிய நாலாயிரப் பிரபந்தத்தின் சிறப்புபற்றி வர்ணிப்பது.

வைணவ தினசரி – திருமாலின் தொண்டனானவன் தினசரி கடைபிடிக்கவேண்டிய பக்திசார்ந்த நெறிமுறைகள் பற்றி விளக்கும் நூல்

ஆகார நியமம் – வைணவனானவன் தன் தினசரி சாப்பாடு விஷயத்தில் எப்படிக் கட்டுப்பாடோடு இருக்கவேண்டும், கொள்ளவேண்டிய உணவு, தள்ளவேண்டிய விஷயங்கள் ஆகியனபற்றி அறிவுறுத்தும் நூல்

நாற்பது வருஷ நீருக்கடி வாசத்திற்குப்பின், இப்போது மேல்வந்து அடியார்களுக்குக் காட்சிதரும் அத்திகிரி வரதன்பற்றி வேதாந்த தேசிகன் இயற்றிய தமிழ்ப் பாடல்களில் இரண்டு கீழே:

பத்தி முதலா மவற்றிற் பதியெனக்குக் கூடாமல்

எத்திசையும் உழன்றோடி இளைத்துவிழும் காகம் போல்

முத்திதரு நகரேழில் முக்கியமாம் கச்சிதன்னில்

அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே

 

வாழி அருளாளர் வாழி அணி அத்திகிரி

வாழி எத்திராசன் வாசகத்தோர் – வாழி

சரணாகதி என்னும் சார்வுடன் மற்றொன்றை

அரணாகக் கொள்ளாதார் அன்பு

 

-வேதாந்த தேசிகன்

**

9 thoughts on “அரங்கன், வரதன், வேதாந்த தேசிகன் ..

  1. மாலிகாஃபூர் காலத்தின் போது அரங்கன் தில்லிக்குத் தான் எடுத்துச் செல்லப்பட்டான். அதன் பின்னர் வந்த உல்லுக்கான் காலத்தின் போது தான் அரங்கனை ஊர் ஊராகத் தூக்கிக் கொண்டு அலைந்தனர். பல வருடங்கள் மேல்கோட்டையில் தங்கிய அரங்கன் பின்னர் தான் திருமலைக்குக் கொடவர்கள் சிலரால் எடுத்துச் செல்லப்பட்டான். அங்கிருக்கும் அவனைக் கண்டு பிடிக்க முடியாமல் இங்கே ஶ்ரீரங்கத்தில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசர்கள் கோயில் வழிபாட்டைத் துவக்கும்போது உற்சவர் இல்லை என்பதால் வேறொரு விக்ரஹம் செய்து வைத்துவிட்டார்கள். ஆனால் பின்னார் அரங்கனைக் கண்டு பிடித்துத் திரும்பக் கொண்டு வந்து வைக்க முயன்றபோது கோயில் ஊழியர்களில் சிலர் இவர் உண்மையான பெருமாள் இல்லை. இப்போது இருப்பவர் தாம் உண்மையான பெருமாள். ஆகவே இவருக்கு இங்கே இடம் இல்லை என்று சொல்ல மனம் நொந்த அடியார்கள் ஶ்ரீரங்கத்திலேயே மிகவும் வயதான வண்ணார் ஒருவரைக் கொண்டு அரங்கனுக்குத் திருமஞ்சனம் செய்வித்து அந்தத் துணியை அவரிடம் கொடுத்து அடையாளம் கேட்க, திருமலையிலிருந்து வந்த அரங்கனே “நம்பெருமாள்” எனச் சரியாக அடையாளம் காட்டினார் அந்த வண்ணார். அதிலிருந்தே அழகிய மணவாளன் என்னும் பெயரில் இருந்த நம் அரங்கன் நம்பெருமாளாக மாறிப் போனார்.

    பரிதாபி வருஷம் வைகாசி மாதம் 17 ஆம் நாள் கி.பி. 1371 ஆம் ஆண்டில் அரங்கன் கருவறையைச் சேர்ந்தான்.

    https://aanmiga-payanam.blogspot.com/2015/04/blog-post_6.html

    Liked by 1 person

    1. @ கீதா சாம்பசிவம் : நான் இந்தக் கட்டுரையை ‘வேதாந்த தேசிகரும் தமிழும்’ என்கிற நோக்கிலேயே எழுத ஆரம்பித்தேன். ஏனெனில், பொதுவாக அவர் சமஸ்க்ருத அறிஞர், கவிஞராகவே அறியப்படுகிறார் – காரணம், விஷ்ணு கோவில்களில் பாடப்படும் அவருடைய சமஸ்க்ருத ஸ்லோகங்கள் ஸ்ரீஸ்துதி, கோதா ஸ்துதி, தயா சதகம் போன்றவை. அதை ஆர்வத்தோடு பயிலும், ஓதும் வைணவர் பலருக்கும், தேசிகன் தமிழிலும் எழுதியிருப்பது தெரிந்திருக்கவில்லை. ஆழ்வார்களின் மீது, தமிழ்ப் பாசுரங்கள்மீது அவருக்கிருந்த ஈர்ப்பு என்றெல்லாம் தேடிப் படித்தபின் கொஞ்சம் மெட்டீரியல் சேர்த்தேன். சுருக்கித்தான் இந்தக் கட்டுரையை வடித்தேன். தப்பித் தவறிப் படிக்க வருகிறவர்கள் மிரண்டு ஓடிவிடக்கூடாதே!

      நீங்கள் சொன்னதைக் கவனித்தேன். குறிப்பாக உல்லுக்கான் (முகமது-பின் -துக்ளக்) தாக்குதல். மேலும் ஸ்ரீரங்கம்/ மதுரை இவற்றின்மீது முகமதியப் படையெடுப்புபற்றிக் கொஞ்சம் படித்தேன். மாலிக் காஃபூர் 1327-ல் ஸ்ரீரங்கத்தைத் தாக்கியதாகவே தெரிகிறது. உத்சவ விக்ரங்களோடு தேசிகன் திருமலை சென்றதாக கட்டுரையில் நான் குறிப்பிட்டிருப்பதில் தவறு இருக்கிறது. மாற்றியிருக்கிறேன். இரு குழுக்களில் ஒன்று விக்ரகங்களுடன் திருமலை சென்றது. தேசிகன் ஸ்ரீ பாஷ்ய நூலைப் பாதுகாக்கவென அதனை எடுத்துக்கொண்டு மேல்கோட்டை இப்போதைய கர்னாடகா சென்றார். srivaishnavam.com இப்படிச் சொல்கிறது:
      In the year 1327, Srirangam city was invaded by Muslims. Malik Kafur, the General of Allauddin Khilji, Sultan of Delhi came to Srirangam to rob the temple and kill the satvic devotees. Fear gripped in the minds of every one and they afraid how to preserve the glory of the temple. It was decided that Swami Desika will travel to Karnataka along with the manuscripts of Sri Bhashya commentry along with the sons of Sri Sudarshana bhattar, a great acharya who wrote commentry for Sri Bashya. Other acharyas left to Thiruppathi with the idol of Ranganatha. The temple was closed and many bhagavathas were killed by the brutal invaders and even Swami desika has to hide among the corpses (dead bodies) for one night before travelling to Karnataka.
      மேலும் துருவியதில் : விஜய நகர தளபதியும் செஞ்சிக் கோட்டையின் தலைவனுமாகிய கோப்பணார்யன் என்னும் ஆஸ்திக அரசன் திருவரங்கத்தை மீட்டு நம்பெருமாளை மீண்டும் கொணர்ந்தான். இதற்கு நன்றி சொல்லும் விதமாக விஷ்வக்சேனர் சன்னிதிக்கு முன், அரங்கன் சன்னிதியின் கீழைச்சுவரில் கோப்பணார்யனைப் பற்றி இரண்டு ஸ்லோகங்கள் எழுதியுள்ளார் ஸ்வாமி தேசிகன்.(reference: https://amaruvi.in)
      தென்னாட்டின்மீதான மொகலாயப் படையெடுப்புகள்பற்றி சரித்திர ஆசிரியர்களுக்குள்ளும் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம்.

      Like

  2. //தேசிகனும் அவரைச் சார்ந்த சிறு தொண்டர் குழுவும் மறைத்து எடுத்துக்கொண்டுப் பதுங்கிப் பதுங்கி இரவோடு இரவாக திருமலைக்குக் கால்நடையாகப் பயணித்துவிட்டனர். // – இதில் வித்தியாசம் உண்டு. தேசிகன் நம்பெருமாளுடன் பயணித்த மாதிரி தெரியலை.

    மற்ற தகவல்கள் (ப்ரபந்தம் கோவிலில் சேவிக்க தேசிகன் காரணம், பன்னிரு ஆழ்வார்கள் மூர்த்தி தேசிகன் காலத்தில்தான் கோவிலில் வைக்கும் நடைமுறை துவங்கப்பட்டது போன்றவை) நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அப்படி இருக்காது என்று நான் நினைக்கிறேன். அவருக்கு முன்பே ஆழ்வார்கள் மூலவருக்கு முன் மண்டபத்தில் எழுந்தருளச்செய்யப்பட்டிருக்க வேண்டும் (இராமானுசர் காலத்திலோ அதற்கு முன்போ).

    பிற்காலத்தில்தான் வேதாந்த தேசிகனின் பெருமை மேலோங்க, அந்தச் சமயத்தில் மணவாள மாமுநியை சிலர் தூக்கிப்பிடிக்க, கருத்து வித்தியாசம் வந்து பிரிவுகள் தோன்றியிருக்கணும் (500 ஆண்டுகளுக்கு முன்பு). இதை contest செய்யும் கருத்துக்கள் நிறைய இருக்கும்.

    Like

  3. நான் நினைத்த்க்கொள்வதுண்டு. வேதாந்த தேசிகரின் பாதம் பட்ட, இராமானுசரின், திருக்கச்சி நம்பிகளின், எங்கள் குல முன்னோர் நடாதூர் அம்மாளின் பாதம் பட்ட வரதராஜப் பெருமாள் கோவிலைச் சுற்றிப்பார்க்கவே ஒரு வாரத்துக்கும் மேல் வேண்டும் என்று.

    அப்படீன்னா வைணவ குலத்தின் மூன்று இடங்களான திருவரங்கம், காஞ்சீபுரம், திருப்பதி இவைகளுக்கு எவ்வளவு நாட்கள் தேவையாயிருக்கும் (அப்போதும் திருப்தி வராது)

    Like

    1. @ நெல்லைத் தமிழன்: நீங்கள் சொல்வது சரி. திருமலை சென்ற குழுவில் தேசிகன் இருந்திருக்கவில்லை. அவர் பாதுகாக்கவேண்டிய பாஷ்ய நூலை எடுத்துக்கொண்டு மேலக்கோட்டை, கர்னாடகா நோக்கிப் புறப்பட்டிருக்கிறார். திருத்தியிருக்கிறேன் இப்போது.

      ஸ்ரீரங்கம் கோவிலில் ஆழ்வார் விக்ரஹங்கள் ஏற்கனவே, அதாவது ராமானுஜர் காலத்தில் அல்லது முன்பே இருந்தனவா எனத் தெரியவில்லை. இம்மாதிரியான விஷயங்களில், பெரும்பாலும் கர்ணபரம்பரைக் கதைகளையே நம்பவேண்டிய நிலை பின் வந்தோருக்கு.

      ஸ்ரீரங்கம், காஞ்சீபுரம், திருமலைக் கோவில்கள்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் ஏகப்பட்டது இருக்கின்றன. ஆழ்வார்களுக்குப் பின் வந்த ஞானிகள் பலர்பற்றியும் போதிய குறிப்புகள் இல்லை; அல்லது இழந்திருக்கிறோம் காலப்போக்கில்.

      Like

  4. ஏகாந்தன் அண்ணா உங்கள் பதிவு மற்றும் கீதாக்கா, நெல்லை இவர்களின் கருத்துகளிலிருந்து தகவல்கள் அறிய முடிகிறது.

    தேசிகன் தமிழிலும் எழுதியிருக்கிறார் என்பது அறிந்திருக்கிறேன். திருவனந்தபுரத்தில் இருந்த போது.

    கீதா

    Liked by 1 person

Leave a comment