தாயைப் பாடவே தயக்கம் ..

ஜகன்மாதாவான அன்னை மகாலக்ஷ்மியை, பக்திமிகுதியால் புகழ்ந்து பாடல் இயற்றுமுன், கவிஞர் சற்றே தயங்குகிறார். தான் யார், தன்னுடைய தகுதி என்ன என சிந்திக்கிறார். மிகக்குறைந்த திறனுடைய தான், பிராட்டியைப்பற்றி எழுத முனைந்தது சரிதானா என யோசிக்கிறார். இத்தகைய மனநிலையில், அன்னையை நோக்கி சொல்வதாக ’ஸ்ரீலக்ஷ்மி ஸகஸ்ரம்’ கவிதைத் தொகுப்பின் ஆரம்பமாக அவர் எழுதியது:

ஆதிகாலத்தில் தோன்றிய அற்புதங்களானவையும், நித்தியங்களானவையுமான வேதங்களில் காணப்படும் அதிஅழகான அலங்கார வார்த்தைகள்கூட, அம்மா! உன் மாபெரும் சக்தியை, மகோன்னதமான பெருமையை வர்ணிக்கும் முயற்சியில் பரிதாபமாய்த் தோற்றுப்போயின. ’பதபாக்னி’ எனப்படும் பேரழிவுசக்தியுடைய அக்னியாலும்கூட, சமுத்திரத்தைப் பூராவும் உலரவைக்கமுடியாதே. உலகத்தில் மிகச்சிறிய ஒரு ஜீவன்களில் ஒன்றான கொசுவின் குஞ்சினால், ஒரு மகா சமுத்திரத்தின் நீரையெல்லாம் உறிஞ்சிக் குடித்துவிட முடியுமா ! அதைப்போல அற்பமான திறன் உள்ள நானா, உன் அளவிலாப் பெருமையை முழுமையாய் எழுதிவிடுவேன்? இது சாத்தியமில்லை, என மருள்கிறார்.

மேலும் ஒரு பாடலில், கவிதை எழுதுவதில் தன் மிகக்குறைந்த திறன்பற்றி நினைக்கையில் இப்படி அன்னையிடம் சொல்கிறார் :

ஒரு படைப்பு காவியமாய் விளங்க, எழுத்துக்கலையின் அடிப்படைகளான சக்யம், லட்சியம் போன்ற நவரசங்கள் ஒருவனது எழுத்தில் சீராக, சிறப்பாக வெளிப்படவேண்டும். இத்தகைய ரசங்கள் மீதான ஆளுமை எனக்கில்லை. மொழியின் வண்ணமிகு சொற்களால் வர்ணிக்கும் ஜாலமும் அறிந்திலேன். இப்படி ஏகப்பட்ட குறைபாடுகளுடன்தான், அன்னையே, உன் புகழ் பாடத் துணிந்துவிட்டேன். உன்மீது கொண்ட பக்தியினால்தான் இப்படி. மனிதரின் எத்தனையோ குற்றங்களை மன்னித்துக் காக்கும் மாதாவான நீ, இந்த எளியோனின் குறைபாடுகளையும் மன்னித்துக் கருணைகாட்டவேண்டும் என வேண்டி நிற்கிறார்.

கவிதை எழுத ஆரம்பிக்குமுன்பே,  தன் இயலாமை, குறைபாடுகள்பற்றி சிந்தித்து,  லக்ஷ்மித் தாயாரிடம் இப்படி அடக்கம்காட்டி வேண்டி நின்றவர், பிற்காலத்தில் ‘கவிதார்க்கிஹ சிம்ஹம்’ (கவிஞர்களில் சிங்கம்) என ஆன்மீக சான்றோர்களால் புகழப்பட்ட வேதாந்த தேசிகன். தமிழ், சமஸ்க்ருதம் என இருபெரும் மொழிகளில் வல்லவர் என அறியப்பட்ட மேதை. பக்தியோகத்தில் சிறந்து விளங்கிய ஞானி. காஞ்சீபுரத்துக்கு அருகிலுள்ள தூப்புல் எனும் கிராமத்தில் பிறந்தவர். ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன், ஸ்வாமி தேசிகன் என்றெல்லாமும் அழைக்கப்படும், ராமானுஜருக்குப் பின்வந்த ஹிந்துமத ஆச்சாரியரும் இவரே, இயற்பெயர் வேங்கடநாதன். தேசிகன் என்கிற வார்த்தைக்கு வடமொழியில் ‘குரு’, ‘ஆச்சார்யர்’ எனும் பொருள்.

இன்னொரு ஸ்லோகத்தில் தேசிகன் தொடர்கிறார்:

தாயே.. உனது புகழைப்போற்றிப் பாடுகையில் அடியேன் படைப்புக்கடவுளான பிரும்மாவுக்கு சமம் என  ஆகிவிடுகிறேன்! – என்று எழுதிவிட்டார். எப்படிச் சொன்னார் தேசிகன் இப்படி? அவரே விளக்குகிறார் : இரவில் வரும் சந்திரனின் எங்கும் பரந்து வியாபித்திருக்கும் பிரகாசமான குளிர்ந்த ஒளிப் பிரவாகத்தை, அந்த இரவினில் அங்குமிங்குமாகப் பறக்கும் மின்மினிப்பூச்சியின் மினுக்கும் சிறு ஒளித்துகளோடு ஒப்பிடலாகுமா? கூடாதுதான். ஆனால் பகலில், சூரியனின் பிரும்மாண்ட ஒளிவீச்சுக்கு முன்னே, இவை இரண்டுமே காணாமற்போய்விடுமல்லவா? அப்படிப் பார்த்தால் இவையிரண்டும் ஒன்றுதானே! அதைப்போலவே, கிட்டத்தட்ட ஒன்றுமில்லை எனும் அளவினதான என்னுடைய மிகக்குறைந்த திறனும், பிரும்மதேவனின் எல்லையில்லா அறிவும், அம்மா, தங்களின் மகிமைக்குமுன் ஒன்றுமே இல்லைதானே.. இந்த வகையில் நானும் பிரும்மாவும் ஒன்றல்லவா ! – எப்படி இருக்கிறது நமது கவிஞரின் ஒப்பீடு !

அன்னை மகாலக்ஷ்மியின் கருணையை நினைந்துருகி, அவர் வடமொழியில் இயற்றிய புகழ்பெற்ற பாடற்தொகுப்பு ’ஸ்ரீஸ்துதி’. அதன் ஒரு பாடலில், தாயாரைப் போற்றிப் பாடல்கள் இயற்ற ஆரம்பித்தபின், தனக்குள் உருவாகியிருக்கும் மனநிலைபற்றி இப்படிக் கூறுகிறார் ஸ்வாமி தேசிகன்:

அம்மா! உன் திருவடியில் என்னை சமர்ப்பித்த பிறகு, என்னில் ஏற்பட்டிருக்கும் புதிய மனநிலைகள்தான் என்னே! கடும் இருளை விரட்டிவிடும் சூரியனைப்போல், தொடர்ந்துவரும் சம்சார பந்தம் விளைவிக்கும் நீங்காத பயத்திலிருந்து என்னை அவை விடுவிக்கின்றன. உனது கருணையினால் ஏற்பட்ட இத்தகு உயர்மனநிலைகள், பல்வேறு கல்யாணகுணங்களை உடைய எம்பெருமானிடம் (மகாவிஷ்ணுவிடம்) எனது பக்தியை  மேலும் மிகுதிப்படுத்துகின்றன. அபரிமித சக்தி நிறைந்த உனது கருணையினால், இத்தகைய நன்மைகளையெல்லாம் நீயாகவே எனக்கு வழங்கிவருகிறாய்.

நிலைமை இப்படி இருக்க, அடியேன் உன்னிடம் பிரார்த்தித்துப் பெற்றுக்கொள்ள என்று தனியாக என்ன இருக்கிறது தாயே!

**

9 thoughts on “தாயைப் பாடவே தயக்கம் ..

 1. >>> நன்மைகளையெல்லாம் நீயாகவே எனக்கு வழங்கிவருகிறாய்…
  நிலைமை இப்படி இருக்க, அடியேன் உன்னிடம் பிரார்த்தித்துப் பெற்றுக்கொள்ள என்று தனியாக என்ன இருக்கிறது தாயே!.. <<<

  எனினும் நீயாக (இந்தப் பாத்திரத்தைப் பார்த்து) ஏதாகிலும் போடு…

  இது பிச்சைப் பாத்திரம் அல்ல தாயே!..
  நீ நடத்தும் நாடகத்துள் நானும் ஒரு பாத்திரம்!..

  Liked by 1 person

 2. அருமை. நீங்கள் சகாஸ்கிருதம் அறிவீர்களா?

  சேங்காலிபுரம் பிரவசனம் கேட்பதுபோல இருக்கிறது.

  Liked by 1 person

  1. சமஸ்கிருதம் படிக்க வாய்ப்பிருந்தும் படிக்காது போய்விட்டோமே என்கிற வருத்தம் இருக்கிறது மனதில். ஒரிஜினலில் இன்னும் ரசிக்கலாமே..

   Like

 3. மிக அருமையாக ஆழ்ந்து ரசித்துச் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் சம்ஸ்கிருத அறிவும் பிரமிக்க வைக்கிறது. பிரம்மாவுடன் ஆன ஒப்பீடு அருமை! தாயைப் பாடவே தயக்கம் என்றதும் என்னவோ என நினைத்தேன். தயங்கினாலும் வர்ணனையிலும் ஆழ்ந்த பொருளோடு எழுதி இருப்பதிலும் தயக்கமே இல்லை.

  Liked by 1 person

  1. தேசிக ஸ்தோத்திரம்டெல்லியில் கொஞ்சம் கேட்டிருக்கிறேன் – கற்றோரின் மத்தியில் உட்கார்ந்து கொண்டு. அவ்வப்போது மொழிபெயர்ப்புகளைப் படித்தே வியந்திருக்கிறேன் – இவ்வளவு அருமையாக எழுதியிருக்கிறாரே என்று..

   Like

 4. //மாநாதீத ப்ரதித விபவாம் மங்களம் மங்களானாம்//

  என்று எங்கள் ஆசிரியர் தொடங்கும் போதே மனம் கரையும்.
  ஸ்ரீ தேசிகன் அனுபவித்த அத்தனை அத்புதங்களையும்
  அப்படியே எங்களுக்கு, மாமியாருக்கும் எனக்கும்

  துளியாவது பதியும் படி எடுத்து உரைப்பார்.

  கல்யாணானாம் அவிகல நிதிஹி// என்று கடைசி ஸ்லோகத்துக்கு வந்து
  கவிதார்க்கிஹ என்று சொல்லும்போது நாமும் அந்தத் தாயுடன் பாற்கடலுக்குப் போய்விட
  முடிந்தால் எத்தனை அனுக்கிரஹம்
  என்று உணர்வோம்.

  இவ்வளவு நினைவுகளையும் மீட்டது உங்கள் அருமைப் பதிவு.
  அவ்வளவு பெரிய சாகரத்தை இந்தப் பத்து வரிகளில் சொல்லி முடியாது.
  உங்கள் அனுபவம் மஹா கருணை.
  மிக மிக நன்றி .

  Liked by 1 person

  1. நீங்களும் தேசிக அனுபவத்தில் ஈடுபட்டவர் என அறிந்ததில் மகிழ்ச்சி.

   Like

 5. பயணத்தில் இப்போது. மூவருக்குமான பதில்கள் சரியான இடத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறதா எனத் தெரியவில்லை !

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s