CWC 2019: உலகக்கோப்பை … இங்கிலாந்துக்கு!

 

இங்கிலாந்து 2019-க்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை ஜெயித்துவிட்டது. ஆனால், எதிர் அணியான நியூஸிலாந்து தோற்றுவிட்டதாகச் சொல்லமுடியாது! என்னப்பா சொல்ல வர்றே! -என்கிறீர்கள். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை காணாத அதிசயமாய் கதை விசித்திரமாய் விரிந்து அப்படித்தான் முடிந்தது. நியூஸிலாந்து வீரர்களுக்கு தங்களுக்கு ஏன் உலகக்கோப்பை கொடுக்கப்படவில்லை என்றே புரிந்திருக்காது என்று தோன்றியது. அப்படி ஒரு அதிர்ச்சியில் நியூஸிலாந்து வீரர்கள் ஓரமாய் நின்றிருந்தார்கள்.

பந்து பந்தாக விவரிக்காமல், சுருக்கமாகச் சொல்வோம்.   லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (14/7/19) நடந்த இறுதிப்போட்டியில், டாஸ் வென்றது, முதலில் பேட் செய்தது நியூஸிலாந்து. பிட்ச் மந்தமாக செயல்பட, நியூஸிலாந்து நினைத்த அளவுக்கு தாக்கி ஆட இயலவில்லை. ஹென்றி நிக்கோல்ஸ் 55, டாம் லேத்தம் 47, வில்லியம்சன் 30 என்றுதான் போனார்கள். இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 எடுத்தார்கள்.  இங்கிலாந்தின் தரப்பில் க்றிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் ப்ளங்கெட் சிறப்பாக வீசினார்கள்.

242 ஐ நோக்கி நன்றாகத் துவங்கியது இங்கிலாந்து. இதற்கு முந்தைய மேட்ச்சில் அம்பயரோடு(ஸ்ரீலங்காவின் குமார் தர்மசேனா) குஸ்திபோட்ட ஜேஸன் ராய் எளிதில் தூக்கப்பட்டார். ஜானி பேர்ஸ்டோ நிதானம் காட்டினார். விக்கெட்டுகள் சில விழுந்தன. த்டுமாற்றம். அப்போது  பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (59) சேர்ந்து ஸ்க்ரிப்ட்டை மாற்றி எழுதினர். ஒரு கட்டத்தில், இங்கிலாந்து எளிதாக கோப்பையைத் தட்டிச் செல்லும் எனவே தோன்றியது. 84/4 என்றிருந்த ஸ்கோரை 196 க்கு 5 விக்கெட்டுகள்(45 ஆவது ஓவர்) என வேகமாக அவர்கள் உயர்த்தியது, நியூஸிலாந்துக்கு பீதியைக் கிளப்பியது. அவ்வப்போது குதித்துக் காண்பித்த நியூஸி ரசிகர்கள் அடங்கிக் கிடந்தார்கள்.

அடுத்த பக்கத்தில் விக்கெட்டுகள் சரிய, ஸ்டோக்ஸ் மட்டும் அஞ்சாது ரன் சேர்த்துக்கொண்டிருந்தார்.  அவரது துணிச்சலும், இலக்கில் குவிந்த கவனமும் பாராட்டத்தக்கது. 9 பந்துகளில் இங்கிலாந்து 22 ரன் அடித்தாகவேண்டிய நிலையில், ஸ்டோக்ஸ் உயர அடித்த ஷாட்டை பௌண்டரி லைனுக்கு முன்னாள் எம்பிப் பிடித்த நியூஸி ஃபீல்டர் ட்ரெண்ட் போல்ட், அதனை உள்ளே  எறிவதற்குள் தடுமாறி வெளியே காலை வைத்துவிட்டார். சிக்ஸர்! கடைசி ஓவரில் மேலும் ஒரு பயங்கரம். 3 பந்துகளில் 9 ரன்கள் தேவை. ஸ்டோக்ஸ் இருக்கிறாரே..அவரடித்த பந்து ஃபீல்டாகிவிட இரண்டாவது ரன்னுக்காக விக்கெட்கீப்பர் பக்கம் மட்டையைத் தூக்கிக்கொண்டு பாய்ந்தார். நியூஸி ஃபீல்டர் ஃபீல்ட் செய்து வீசிய பந்து ஸ்டோக்ஸின் மட்டையைப் பதம்பார்த்து, கோபித்துக்கொண்டு பௌண்டரியை நோக்கி ஓடிவிட்டது! அம்பயர் தர்மசேனா ஆனந்தமாகி, 2+4=6 ரன் என விரல்களைக் காண்பித்துவிட்டார். இப்படியெல்லாமா ஒரு துரதிருஷ்டம் வரும் நியூஸிலாந்துக்கு. கடைசி பந்தில் இரண்டு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பேட்ஸ்மன் மார்க் உட் ரன் -அவுட் ஆகிறார். ஸ்கோர் இங்கிலாந்து 241 ஆல் அவுட் (பென் ஸ்டோக்ஸ் 84 நாட்-அவுட்). நியூஸிலாந்தின் ஸ்கோர் 241/8.  உலகக்கோப்பையின் முதல் Tie!

இங்கேதான் காரியத்துக்கு வருகின்றன ஐசிசி-யின் விதிமுறைகள் – இந்த உலகக்கோப்பைக்காக விசேஷமாகத் தயாரித்தவை! ஃபைனலில் ஸ்கோர் ‘டை’ஆனால், சூப்பர் ஓவர் விளையாடி முடிவு செய்யவேண்டும். ஒவ்வொரு அணியும் ஒரு ஓவர் விளையாட, எந்த அணி அதிகபட்ச ஸ்கோர் செய்கிறதோ அதுதான் சேம்ப்பியன்.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அவர்களது ராசிக்காரர்களான ஸ்டோக்ஸ், பட்லர் ஆகியோரை அனுப்பியது. இங்கே பௌலரைத் தேர்ந்தெடுப்பதில் நியூஸி. கேப்டன் வில்லியம்சன் தப்பு செய்துவிட்டார் எனத் தோன்றுகிறது. ட்ரென் போல்ட் நியூஸிலாந்தின் டாப் பௌலர் என்றாலும், நேற்று அவர் வீசிய லட்சணம் சரியில்லை. ஏகப்பட்ட ரன் கொடுத்தார். விக்கெட் எடுக்கவில்லை. பழைய ரெப்யூட்டேஷனை மனசில் கொள்ளாமல், ஃபெர்குஸன், மேட் ஹென்றி ஆகிய இருவரில் ஒருவருக்கு சூப்பர் ஓவரைத்தந்திருந்தால் இங்கிலாந்து இப்படி அடித்திருக்காது எனத் தோன்றுகிறது. ஆளுக்கொரு பௌண்டரி அடித்த இங்கிலாந்து ஜோடி, 15 ரன்கள் எடுத்துவிட்டது. இருபக்கத்து ரசிகர்களும் உலைபோல் கொதித்துக்கொண்டிருந்தனர்.

இங்கிலாந்து உலக சேம்பியன் !

நியூஸிலாந்து சூப்பர் ஓவர் ஆட, மார்ட்டின் கப்ட்டில் (ஃபார்மில் இல்லாதவர்) மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோரை அனுப்பியது. இவர்கள் 16 எடுத்துவிட்டால் நியூஸிலாந்து உலக சேம்ப்பியன். ஆனால், விதிக்கு பிடித்த ஆட்டமாயிற்றே கிரிக்கெட்! அது 23-ஆவது ப்ளேயராக மைதானத்தில் ஏற்கனவே இறங்கியிருந்தது. இங்கிலாந்து தன் சூப்பர் பௌலராக,  உலகக்கோப்பைக்கு சில மாதங்கள் முன்புதான் அணியில் சேர்க்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சரை பந்துபோடச் சொன்னது.  ஆர்ச்சருக்கு இது முதல் இண்டர்னேஷனல் டூர்னமெண்ட். பதற்றம் முகத்தில். அடிக்கடி அருகில்போய் கேப்டன் மார்கன் ஏதேதோ சொல்கிறார். ஆர்ச்சரின் ஒரு பந்தை ஆவேசமாகத் தூக்கி சிக்ஸருக்கு அனுப்பிவிட்டார் நீஷம். நியூஸியின் பல்ஸ் ஏறியது! ஆனால் அனுபவசாலியான கப்ட்டில் ஒன்று, இரண்டு என்று ஓடினார். நியூஸியின் வேதனை. கடைசி பந்து. 2 ரன் தேவை நியூஸிலாந்துக்கு. ஆர்ச்சருக்கு அட்வைஸ் கேப்டனிடமிருந்து. கீழே குனிந்து தலையாட்டிய ஆர்ச்சர் வேகமாக ஓடி வந்து, எதிர்த்துத் தாக்கமுடியாத லெந்த்தில் பந்தை இறக்கினார். கப்ட்டில் பதறி லெக்சைடில் அடித்துவிட்டு ஒரு ரன் ஓடினார். ரெண்டு ரன் வேண்டுமே..திரும்பிப் பாய்ந்தார். அந்தோ! இங்கிலாந்து ஃபீல்டிங் நேராக  விக்கெட் கீப்பருக்கு அனுப்ப, பட்லர் பெய்ல்ஸைத் தட்டி,  ரன் -அவுட் செய்துவிட்டார். என்ன ஃபைனல்டா இது.. ஒரே பேஜாராப்போச்சே. சூப்பர் ஓவரும் டை Tie). இரு அணியும் எடுத்தது , தலா 15 ரன்கள்!

சோகமே உருவாக நியூஸிலாந்து

வேறொரு ஸ்போர்ட்டாக இருந்திருந்தால், இந்த இடத்தில் முடிவு வந்திருக்கும். நியூஸிலாந்து, இங்கிலாந்து இரு அணிகளும் ஜாய்ண்ட்-வின்னர்ஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும். அதுவே நியாயமானதாகவும் இருந்திருக்கும். ஆனால் ஐசிசி-யின் குதர்க்கம் நிற்காதே. சூப்பர் ஓவர் பற்றி அவர்கள் அசரீரி கேட்டு, மேலும் ஒன்று எழுதிவைத்திருந்தார்கள். சூப்பர் ஓவர் ’டை’ ஆனால், எந்த அணி நிறைய பௌண்டரிகள் அடித்ததோ அதுவே வின்னர்.. கோப்பை அதற்குத்தான். வேகவேகமாக எண்ணி, இங்கிலாந்து உலகக்கோப்பையை வென்றதாக அறிவித்துவிட்டார்கள். நியூஸிலாந்து உறைந்து நின்றது. இவ்வளவு சிறப்பாக ஃபைனலிலும் ஆடி என்ன பயன்? வெறும் ரன்னர்ஸ்-அப் தானே கடைசியில்.  நியூஸிலாந்துக்கு இல்லையே கோப்பை..

’’எல்லாம் ‘டை’, ‘டை’ என்றானபின், அடித்த பௌண்டரிகளை எண்ணி, உலகக்கோப்பையை அறிவிக்கிறார்களே.. என்னால் ஜீரணிக்கமுடியவில்லை’’ என்றார் சோகம் ததும்பும் குரலில் நியூஸி. கேப்டன் வில்லியம்சன்.  மிகவும் மென்மையானவர். மேற்கொண்டு சொல்லமாட்டார்.  ‘’உலகக்கோப்பையில் 22 ஹீரோக்கள். யாருக்கும் வெற்றியில்லை!” என்று தலைப்பு கொடுத்த ’நியூஸிலாந்து ஹெரால்ட்’ என்கிற நாளேடு, மேலும் கேள்வி கேட்டது: ”ஓவர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)-விற்கு 5 ரன் தானே தரவேண்டும். 6 ரன் ஏன் கொடுக்கப்பட்டது?’’ நியூஸிலாந்தின் இன்னுமொரு பத்திரிக்கை, ’பௌண்டரி எண்ணுகிறேன் என்று சொல்லி, எங்களது கோப்பையைத் திருடிவிட்டார்கள்!’ என்கிறது.

ஆட்டத்தை அந்த நாட்டில் விடிய விடிய பார்த்துக்கொண்டிருந்த நியூஸிலாந்தின் பெண் பிரதமர்  ஜஸிண்டா ஆர்டன் (Jacinda Ardern) சொல்கிறார். ’’என்ன ஒரு நம்பமுடியாத மேட்ச். இப்படி ஒன்றை வாழ்நாளில் பார்த்ததில்லை. கிரிக்கெட் சரித்திரத்தில்  ஒரு அருமையான போட்டியாக இது நிற்கும். ஆயினும் முடிவு கண்டு, என் நாட்டினரைப் போலவே நானும் புத்தி பேதலித்துப்போயிருக்கிறேன். என்ன செய்வது? எங்களது அணி நாடு திரும்பட்டும். அவர்களுக்கு நியூஸிலாந்தின் உயர் ஹீரோக்களுக்கான சிறப்பான வரவேற்பைத் தருவேன்!’’

**

Pictures courtesy: Google

6 thoughts on “CWC 2019: உலகக்கோப்பை … இங்கிலாந்துக்கு!

  1. என்னைப்பொறுத்தவரை நியூசிலாந்துதான் சேம்பியன். அந்த ஆறு ரன்கள் கொடுத்திருக்கக் கூடாது. இன்னொரு முக்கியமான விஷயம் தர்மசேனாவை உலகக்கோப்பையில் நடுவராக நிறுத்தக் கூடாது. அல்லது நடுவர் பொறுப்பிலிருந்தே நீக்க வேண்டும்.

    Liked by 1 person

    1. @ ஸ்ரீராம்:

      பலர் இந்த ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கோப்பை நியூஸிலாந்திற்குக் கொடுக்கப்படாதது ஸ்போர்ட்ஸ் உலகின் பகற்கொள்ளை.
      சர்வதேச மீடியாவில் மேலும் விமரிசனங்கள்..

      Like

  2. இந்த ஆட்டம் செம !ஸ்டோக்ஸ் சொன்னாராமே ஃப்லூக் என்று

    Liked by 1 person

    1. @ GM Balasubramaniam:
      சில அபத்தங்கள் நிகழ்ந்திராவிட்டால், செம ஆட்டந்தான்.

      ஸ்டோக்ஸ், வெற்றியை fluke என்று சொல்லவில்லை. (ஒரு இங்கிலீஷ்காரனும் தன் வெற்றியை அப்படிச் சொல்லமாட்டான்! ) ஆனால், ‘அந்தத் தவறுக்காக வாழ்நாள் முழுதும் வில்லியம்சனிடம் நான் மன்னிப்புக் கோருவேன்!’ என்று ஒரு நியூஸிலாந்து பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் ஸ்டோக்ஸ். அவர் குறிப்பிட்டது கப்ட்டிலின் ‘த்ரோ, ’ தான் நீட்டிய பேட்டில் பட்டு பௌண்டரிக்குப் போனதால், தங்களுக்கு எதிர்பாராதவிதமாக கிடைத்த 4 எக்ஸ்ட்ரா ரன் பற்றி.

      Like

  3. இந்த போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் மறந்தாலும் க்விஸ் மாஸ்டர்கள் மறக்க மாட்டார்கள்.

    Liked by 1 person

    1. @ Banumathy V :

      உண்மைதான். ‘Quiz masters’-களுக்கு நிறையவே மசாலா இருக்கு இதில். சின்னப்பசங்களும் நெறய அடிச்சுக்குவான்க, ஆளாளுக்கு ஆர்க்யூ பண்ணிண்டு..!

      Like

Leave a comment