மேன்செஸ்டரில் மழை குறுக்கேவந்து போட்டுக்காட்டிய அதிரடி ஆட்டம் காரணமாக, இரண்டு நாள் நீடித்த செமிஃபைனலில், நியூஸிலாந்து, முதல் ரேங்க் அணியான இந்தியாவை உலகக்கோப்பையிலிருந்து வெளியே தள்ளியது. இன்று நடக்கவிருக்கும் அடுத்த செமிஃபைனலில் ஆடும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளில் ஒன்றை, கோப்பைக்கான இறுதிப்போட்டியில் (14/7/19) நியூஸிலாந்து சந்திக்கும்.
நேற்றோடு (10/7/19), ஒரு பில்லியன் மக்களின் உலகக்கோப்பைக் கனவு கலைந்து, காற்றோடு போய்விட்டது. என்ன ஆடி, எவ்வளவு மேலே வந்து, என்ன புண்ணியம்? எப்போது சாத்தவேண்டுமோ அப்போது பார்த்து, 1,1,1 என முதல் மூன்று மூர்த்திகள் அபத்தமாக சரிந்துவிழ, இந்தியாவின் கதை, இன்னிங்ஸ் ஆரம்பித்த நிமிடங்கள் சிலவற்றிலேயே சிதறிவிட்டது. ’ டேபிள்-டாப்பராக இருப்பதில் என்ன பயன்? ஒரு 45-நிமிட நேரம் சரியாக விளையாடாததால் நாங்கள் வெளியேறவேண்டுமா?’ என்பது இந்தியக் கேப்டன் கோஹ்லியின் அங்கலாய்ப்பு. ஆமாண்டா, கண்ணு! இங்கேல்லாம் அப்படித்தான். கரணம் தப்பினால் மரணம் தான்..
9/7/19-ல் செமிஃபைனல் போட்டி ஆரம்பிக்கையில், முக்கியமான டாஸை வழக்கம்போல் கோட்டைவிட்டார் கோஹ்லி. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து பிட்ச்சின் மந்த நிலையில், இந்திய பௌலர்களின் துல்லிய வீச்சைக் கவனமாக சந்தித்து ஆடியது. ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தும், கேப்டன் வில்லியம்சன் எதிர்பார்க்கப்பட்டபடி மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 67 ரன்கள் சேர்த்தார். அவரோடு ஆடிய முன்னாள் கேப்டன் ராஸ் டேய்லர் நிதானத்தின் உச்சத்தில் விளையாடினார். முதல்நாள் மாலையில் மழை குறுக்கிட்டு ஆட்டத்தை நிறுத்துகையில், நியூஸிலாந்து 211 க்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்திய பௌலர்கள் பும்ரா, புவனேஷ்வர், ஆல்ரவுண்டர் ஜடேஜா அபாரமாகப் பந்து வீசினர். ஜடேஜாவின் முதல் ஆறு ஓவர்களில் ஒரு பௌண்டரியும் அடிக்கமுடியவில்லை அவர்களால். (அதே சமயத்தில் இன்னொரு ஸ்பின்னரான சாஹல் அடிவாங்கினார்). மேலும் தாக்கிய மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டு, உலகக்கோப்பை விதிகளின்படி நேற்று (10/7/19), விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தது. 47-ஆவது ஓவரைத் தொடர்ந்து புவனேஷ்வர் குமார் வீச, ஜடேஜாவின் அபாரமான ஃபீல்டிங்கில் இந்தியா ஜொலித்தது. முதல்நாள் நாட்-அவுட் பேட்ஸ்மன்களுள் ஒருவரான டாம் லேத்தம் (Tom Latham) தூக்கிய பந்தை, பௌண்டரிக்குப் பக்கத்தில் பேலன்ஸ் இழக்காது உயர எம்பிப் பிடித்து லேத்தமை வீட்டுக்கு அனுப்பிவைத்தார் ஜடேஜா. குமாரின் விக்கெட். வேகமாக ரன் சேர்க்கமுயன்ற டேய்லரின் ஒரு ஷாட்டில் சீறிய பந்தை, மிட்விக்கெட்டில் அமுக்கி, ஒரு நேர்-த்ரோவில் ஸ்டம்பைத் தாக்கி ரன்-அவுட்டாக்கினார் ஜடேஜா. மூவண்ண ரசிகர்கள் சீட்டு நுனிக்கு வந்திருந்தனர். பும்ராவும், குமாரும் துல்லியமாகப்போட்டு நெருக்க, 8 விக்கெட்டுக்கு 239 ரன்களே நியூஸிலாந்தால் முடிந்தது என்பது இந்திய பௌலர்களின் திறனைக் காண்பித்தது. இதுவரை .. இந்தியக் கதை ஒரு த்ரில்லர்!
240 எடுத்தால் ஃபைனல் என்கிற நிலை. ரோஹித், ராஹுல் ஆட இறங்கினார்கள். சாதாரணமான நாட்களில், இந்த இலக்கு இந்திய அணிக்கு ஒரு ஜூஜூபி. ஆனால் நேற்றைய தினம் வேறு கதையை இந்தியாவுக்காக வைத்திருந்தது.
ஆட விட்டால் ஆடிக்கொண்டே இருப்பார்கள் இந்தியர்கள் என்பதை நியூஸிலாந்து கேப்டன் அறிந்திருந்தார். இந்திய முன்னணி வீரர்களை குறிவைத்துத் தாக்கி வீழ்த்தினால்தான் விடிமோட்சம் நியூஸிலாந்திற்கு என்பது அவரது பொறியில் தட்டியது. தனது வேகப்பந்துவீச்சாளர்கள், ஃபீல்டர்களை வைத்துக் கடுமையாக வியூகம் அமைத்தார் வில்லியம்ஸன். அப்படியே, கேப்டன் விரும்பியபடியே செய்துகாண்பித்தனர் ஆரம்ப பந்துவீச்சாளர்களான மேட் ஹென்றியும் (Matt Henry), ட்ரெண்ட் போல்ட்டும்(Trent Boult). குறிப்பாக ஹென்றியின் துல்லிய இன்-ஸ்விங்கர்கள் இந்திய ஸ்டாரான ரோஹித் ஷர்மாவையும், கே.எல்.ராஹுலையும் நிற்கவிடாது, அடுத்தடுத்து காவு வாங்கிவிட்டன. மறுமுனையில் பதற்றத்தோடு ஆடமுயன்ற கோஹ்லியை, நேரத்தை வீணாக்காது டிஸ்மிஸ் செய்தார் போல்ட். இந்தியா 5 ரன்களில் 3 விக்கெட்டுகள். என்ன நடக்கிறது என்று கோஹ்லி புரிந்துகொள்ளுமுன்பே, ரிஷப் பந்த்தும், கார்த்திக்கும் மைதானத்தில் இறங்கி தடவிக்கொண்டிருந்தனர்.
கார்த்திக் கொஞ்சம் நின்று, விளையாட முயன்றார். முடியவில்லை. இப்போது ஹர்தீக் பாண்ட்யா, ரிஷப் பந்துடன். இருவரும் தங்கள் இயற்கையான ஆட்டத்தை மாற்றியமைத்து, மெல்ல ஓட்டிப் பார்த்தனர் கொஞ்ச நேரம். நியூஸிலாந்தின் ஸ்பின்னர் சாண்ட்னர் இறங்கி பந்து போட்டது, ரிஷப் பந்தின் சிக்ஸர் பசியை ஒரேயடியாகக் கிளப்பிவிட்டது. சாண்ட்னரின் ஒரு சுழல் பந்தை மண்டிபோட்டவாறு தூக்க, பௌண்டரியில் அதற்காக நிறுத்தப்பட்டிருந்த ஃபீல்டரிடம் பந்து சரணடைந்தது. பந்த் அசடுவழிய வெளியே வர, கோஹ்லியின் ரத்தம் சூடாகிவிட்டது. மேலே எங்கோ உட்கார்ந்திருந்தவர் வேகமாகஇறங்கி வந்தார் கோச் ஷாஸ்திரியிடம். ஏதோ வாக்குவாதம். என்ன ப்ரயோஜனம்?
நியூஸிலாந்தின் வில்லியம்சன், சுழல், வேகமென மாறி மாறிப்போட்டு நெருக்கினார் பாண்ட்யாவையும், தோனியையும். சிங்கிள்களில் எத்தனை சேர்க்கமுடியும்? ஓவர்கள் வேஸ்ட்டாகின. பொறுமை இழந்த பாண்ட்யா, ரிஷப் பந்த் செய்த தவறைச் செய்தார். தூக்கினார் உயர. வில்லியம்சனிடம் பிடிபட்டு, முகம் வெளிறி வெளியேறினார். 240-ஐ மறந்துவிடுவது நல்லது. 150 கூட வரமுடியாது, இந்தியா அவமானத் தோல்வியடையும் என்கிற நிலை.

முதல் ஏழு மேட்ச்சுகளில் கோஹ்லி-ஷாஸ்திரி ஆகிய மேதைகளின் கவனத்திற்கு வந்திராத ரவீந்திர ஜடேஜா, 8-ஆவது ஆளாக இப்போது பிட்ச்சில் இறங்கியிருந்தார். தோனியோடு கொஞ்சம் பேச்சு. அடுத்த சில பந்துகளிலேயே ஆவேசம் தெறித்தது. நியூஸிலாந்தின் சிறப்பான வேகப்பந்துவீச்சாளர்களான ஹென்றி, போல்ட், ஃபெர்குஸன்..யாரையும் விடவில்லை. வெறியோடு தாக்கினார் ஜடேஜா. ஃபீல்டர்களைப் பின்னுக்குத் தள்ளுவதும், பௌலர்களோடு பேசுவதுமாக டென்ஷன் காட்டினார் வில்லியம்சன். ஜடேஜாவிடம் மாற்றமில்லை. பௌண்டரிகள், பின் அனாயாச சிக்ஸர்கள். மூஞ்சி தொங்கி உட்கார்ந்திருந்த ரசிகர்கள் துள்ளிநின்றார்கள். இது யாருடா இப்ப? ஏற்கனவே ஓவர்கள் குறைந்திருக்க, இப்போது ரன்கள் எகிறின. தோனி அவ்வப்போது சிங்கிள் எடுத்து ஜடேஜாவை முன்னே பாயவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில் நியூஸிலாந்தின் ஃபீல்டிங்கும் பிரமாதம். இல்லாவிட்டால் ஜடேஜா-தோனி ஜோடி, இன்னும் ரன் சேர்த்திருக்கும்.
நமது ஆரம்ப வீரர்கள், மிடில்-ஆர்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகள் தடவித் தடவி, ஏகப்பட்ட பந்துகளை வீணடித்ததால், வரப்போகும் பந்துகள் வெகுவாகக் குறைந்திருந்தன. எடுக்கவேண்டிய ரன்களோ மலைபோல் முன்னே. ஜடேஜா-தோனி ஜோடியின்மீது அளவிலா அழுத்தம். எங்கோ காணாமல் போயிருந்த இந்திய ஸ்கோரை, 200-க்குமேல் இவர்கள் கொண்டுவந்ததே ஒரு சாதனை. தோனியிடமிருந்து பௌண்டரி வராது போக, 48-ஆவது ஓவரில் போல்ட்டின் ஒரு பந்தை, முன்னே பாய்ந்து நேராக சிக்ஸருக்குத் தூக்க முயன்றார் ஜடேஜா. துரதிருஷ்ட வசமாக கேட்ச் ஆகி அவர் வெளியேறுகையில், மைதானம் அமைதியில் உறைந்தது. 59 பந்துகளில் 77 ரன்கள். அதில், 4 பௌண்டரிகள், 4 சிக்ஸர்கள். இந்தக் கட்டத்தில் தோனி அடித்தது ஒரேயொரு பௌண்டரி. தோனி-ஜடேஜா ஜோடி அசத்தலாக, 106 ரன் பார்ட்னர்ஷிப் கொடுத்தது. அதில் ஜடேஜா 77. தோனி 29. ஆட்டம் எந்த கதியில் இருந்திருக்கும் என்பது புரிந்திருக்கும். ’ஜடேஜாவும் தோனியும் பிட்ச்சில் தொடர்ந்திருந்தால், எதுவேண்டுமானாலும் நடந்திருக்கும்!’ என்கிறார் ஆட்டத்துக்குப்பின், நியூஸிலாந்தின் ட்ரென்ட் போல்ட்.
ஜடேஜா வெளியேறியபின், நாலே பந்துகளில் தோனி, மார்ட்டின் கப்ட்டிலின் நேர்-த்ரோவில் துரதிர்ஷ்டமாக ரன்-அவுட் ஆனார். 50 ரன்கள் (பௌண்டரி 1, சிக்ஸர் 1). அதற்கப்புறம் என்ன, புவனேஷ்வர், சாஹல் பின்னாடியே பெவிலியனை நோக்கி ஓட, 221 ஆல்-அவுட். ஒரு இந்தியக் கனவு இசகு-பிசகாக முடிந்தது.
சிறப்பான தலைமை, வியூகம், ஆட்டம் என சரியான தருணத்தில் வெளிக்கொணர்ந்த நியூஸிலாந்து, 2019 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
கொசுறு: சில நாட்களுக்கு முன், ஸ்டார்-இன் வர்ணனைப்புலியான சஞ்சய் மஞ்ச்ரேகர், ரவீந்திர ஜடேஜாவை ‘bits and pieces cricketer’ என்றார். ட்விட்டரில் செமயா வாங்கிக்கட்டிக்கொண்டார்! இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும் மஞ்ச்ரேகரைக் கிழித்திருந்தார். நேற்றைய ஜடேஜாவின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தில் ட்விட்டர்வாசிகள் திளைத்திருக்கிறார்கள். மஞ்ச்ரேகர்? கீழே குனிந்து bits and pieces-ஆப் பார்த்துப் பொறுக்கிக்கொண்டிருக்கிறதே ஒரு அசடு? ஓ.. அதுதானா அது?
**
Picture Courtesy: Google
ஒன்று கவனித்தீர்களா ரோஹித்ஷர்மா முக்கிய ஆட்டங்களில் கோட்டை விடுவதை ஜெயித்திருக்க வேண்டிய மாட்ச் அநியாயமாக கோட்டை விடப்பட்டது
LikeLiked by 1 person
@ GM Balasubramaniam:
இந்தியாவின் 1,2,3, 5 எண் பேட்ஸ்மன்கள் முறையே 1,1,1,6 என ஸ்கோர் செய்தால் அந்த டீமை எப்படிப் பிழைக்கவைப்பது? Jadeja and Dhoni attempted the impossible ! Kudos to them..
LikeLike
நிறைய பேர்கள் இன்னும் அந்த சோகத்திலிருந்து மீளவில்லை. முக்கிய ஆட்டத்திலக்கோட்டை விடும் நம் பழக்கம் தொடர்கிறது. தோணிகடைசிவரை பார்முக்கு வரவே இல்லை. இதோ இங்கிலாந்தைப் பாருங்கள்… நேற்றைய இந்திய ஆட்டத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டிருக்கும்… என் விருப்பம் இங்கிலாந்தும் நியுஜிலாந்தும் இறுதி ஆட்டத்தில் விளையாடவேண்டும். அனைவரின் விருப்பமும் இப்போது அதுவாகத்தான் இருக்கும். இருவரில் யார் கோப்பை வாங்கினாலும் முதலாவதாக….
LikeLiked by 1 person
@ ஸ்ரீராம்:
இந்தியாவிலும் உலகெங்குமான பெரும் எதிர்பார்ப்பு, தூள்தூளானதை எப்படித் தாங்குவார்கள் ரசிகர்கள்- அதுவும் உலகின் நம்பர் 1 அணியின் தோல்வி..
200-ஐ த் தாண்டியவுடன், தோனியும் பௌண்டரி விளாச ஆரம்பித்திருக்கவேண்டும். ஜடேஜாவின் மீது ப்ரஷர் கூட, தோனி காரணமானார் என்றால் அது சரிதான். கடைசி ஓவரில் ஃபினிஷ் செய்ய முயற்சிப்பது எப்போதுமா நடக்கும்? தோனி இதனை இத்தனை காலத்தில் அறிந்திருக்கவேண்டும்!
இங்கிலாந்து நியூஸிலாந்தை இறுதியில் சந்திக்கும் எனத்தான் தோன்றுகிறது.
LikeLike
அருமையான ரெவியூ! ஹாஹாஹா! *நல்ல sense of humor உள்ளவர்கள் ஷார்ட் டெம்பேர்ட் ஆக இருப்பதையும், அவர்களின் கோபத்தில் அந்த நகைச்சுவை உணர்வு பீறிடுவதையும் பார்த்திருக்கிறேன். உங்கள் பதிவிலும் அது ரசிக்கும்படி வெளிப்பட்டது.
*அதற்காக ஷார்ட் டெம்பர்ட் ஆட்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கும் என்று கற்பித்துக் கொள்ளக்கூடாது.
LikeLiked by 1 person
@ Banumathy V. :
ரசனைக்கு நன்றி.
//.. அதற்காக ஷார்ட் டெம்பர்ட் ஆட்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கும் என்று கற்பித்துக் கொள்ளக்கூடாது.//
இல்லை. கற்பித்துக்கொள்ளவில்லை!
LikeLike