ரசிகர்களுக்கு அதிர்ச்சிதரும் வகையில் மகா மோசமாக ஆடி, உலகக்கோப்பையிலிருந்து வெளியேறிய தென்னாப்பிரிக்கா, தன் கடைசி போட்டியில் உலகக்கோப்பை ஃபேவரைட்களில் ஒன்றான ஆஸ்திரேலியாவை ஒரு போடு போட்டுவிட்டுப் போய்விட்டது. விளைவு? செமிஃபைனலுக்கான வரிசையில் இந்தியா முதல் இடத்துக்கு வந்துவிட்டது. கடைசி நிலையில் இருக்கும் நியூஸிலாந்தை 09/07/19 அன்று, முதல் செமிஃபைனலில் சந்திக்கிறது. ஆரம்பச்சுற்றில் மழையின் காரணமாக, இந்தியா-நியூஸிலாந்து போட்டி ரத்தானது. வியாழன் (11/7/19) வரும் இரண்டாவது செமிஃபைனலில், ஆஷஸ் (Ashes) எதிரியான இங்கிலாந்தை, ஆஸ்திரேலியா கவனிக்கும்!
வலிமையான அணியென மார்தட்டி நின்ற ஆஸ்திரேலியாவின் தலையில் அழுந்தக் குட்டி, ‘ஒன்னத் தெரியும்டா..டேய்.. !’ என்றது, தென்னாப்பிரிக்கா அன்று. போட்டியில் சதம் அடித்துக் காண்பித்த அணியின் கேப்டன் ஃபாஃப் தூ ப்ளஸீ (Faf du Plessis) , ’இந்தப் போட்டியின் முடிவு இந்தியாவுக்கு மகிழ்வு தரும் !’ – என்றிருக்கிறார். கூடவே, ’உலகக்கோப்பையிலிருந்து வெளியே செல்கையில், ஒரு சின்னச் சிரிப்புடன் போகிறோம்!’ என்றும் குறிப்பிட்டார் தென்னாப்பிரிக்கக் கேப்டன்.
இந்தியா தன் கடைசி ‘ரவுண்ட்-ராபின்’ போட்டியில் (6/7/19) ஸ்ரீலங்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சாதனை சதமாக உலகக்கோப்பையில் தன் 5-ஆவது சதத்தை அடித்த ‘hit-man ‘ ரோஹித் ஷர்மாவுடன், இன்னொரு துவக்க ஆட்டக்காரரான கே.எல்.ராஹுலும் சேர்ந்துகொண்டார். ஸ்ரீலங்காவுக்காக முன்னாள் கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ் பொறுமையாக ஆடி சதம் அடித்தார்.

ஓல்ட் ட்ராஃபர்ட், மேன்செஸ்டரில் (Old Trafford, Manchester), நியூஸிலாந்தை, இந்தியா விளையாடவிருக்கிறது. மழைமேகங்கள்வேறு கவியப்போவதாக சேதி. வருணபகவானும் செமிஃபைனல் பார்க்க ஆசைப்படுவாரோ! முன்னதாக, உலகக்கோப்பையின் ஹை-ப்ரொஃபைல் மேட்ச்சில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா, பாகிஸ்தானுக்கெதிராக 336 விளாசி வென்றது இங்கேதான். இதே மைதானத்தில், ஆஃப்கானிஸ்தானுக்கெதிராக விளையாடி வென்ற இங்கிலாந்து, 397 (உலகக்கோப்பையின் உச்ச ஸ்கோர்) எடுத்தது. வெஸ்ட் இண்டீஸை வென்ற நியூஸிலாந்து முதலில் பேட் (bat) செய்து 291 எடுத்தது. ரன் அதிகமாக வரும் இந்த மைதானத்தில், இந்தியா டாஸ் வென்று முதலில் பேட் செய்வது முக்கியம். இல்லாவிட்டால் நியூஸிலாந்து குவிக்க ஆரம்பித்துவிடும். விராட் கோஹ்லி என்ன செய்வாரோ?
இதற்கு முந்தைய போட்டியில் ஸ்ரீலங்காவை தோற்கடித்த இந்திய அணியில் நாளைய அரையிறுதிக்காக மாற்றம் இருக்கலாம். புவனேஷ்வர் குமார் போன மேட்ச்சில் சரியாக ஆடவில்லை. கிட்டத்தட்ட குல்தீப் யாதவின் நிலையும் அதேதான். முகமது ஷமி புவனேஷ்வரின் இடத்தில் உள்ளே வருவதே நலம். பேட்டிங்கில், நம்பர் 6, 7 ஆவது இடங்களில் எம்.எஸ்.தோனியும், ரவீந்திர ஜடேஜாவும் அவசியம் இறங்கவேண்டும். மிடில் ஆர்டர் அசடு வழிந்தால், கீழ்வரிசையில், டெத்-ஓவர்களில் (death-overs) தாக்கி ஆட, ஜடேஜாவால் முடியும். அவருக்குப் பின் வரும் பௌலர்கள் குல்தீப், சாஹல், ஷமி, பும்ரா (8,9,10,11) – பேட்டிங்கில் வெறும் தெண்டம். அவர்களால் டீமிற்கு ரன் சேரும் என நம்பினால், இந்தியா காலி.
நியூஸிலாந்து டீமில் காயத்தால் கடைசி போட்டிகளில் ஆடாதிருந்த, டாப் பௌலரான லோக்கி ஃபெர்குஸன் (Lockie Ferguson), நாளை இந்தியாவுக்கு எதிராக இறங்குவார் என எதிர்பார்க்கலாம். அவரோடு ட்ரெண்ட் போல்ட் (Trent Boult), இடதுகை ஸ்பின்னர் சாண்ட்னர் (Mitchell Santner) ஆகியோர் இந்திய பேட்ஸ்மன்களை புரட்டிப்போடப் பார்ப்பார்கள். இவர்களையும், நியூஸியின் அருமையான ஃபீல்டிங்கையும் தாண்டி, மேன்செஸ்டரில் முதலில் பேட் செய்தால், இந்தியா 320-க்குமேல் எடுக்கவேண்டியிருக்கும். இதற்குக் குறைந்தால், கதை தேறாது. ரோஹித், கோஹ்லி, ராஹுல் ஆகியோரின் ரன்சேர்க்கை, வேகமாகவும், விரைவில் விக்கெட் இழக்காமலும் அமையவேண்டும். இளம் ரிஷப் பந்த், ஹர்தீக் பாண்ட்யா ஆகிய பெரிதாகப் பேசப்படும் பேட்டிங்-புயல்கள், தங்கள் வேலையை எதிரிக்குக் காட்டவேண்டிய தருணம் இது.
நியூஸிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்ட்டில் (Martin Guptill), மிடில்-ஆர்டரில் கேப்டன் வில்லியம்ஸன், ராஸ் டேய்லர் ஆகியோரைக் குறிவைத்து விரைவில் தூக்கிவிடுவதே உத்தமம். இவர்கள் வெகுநேரம் தாக்குப்பிடித்தால் அது, இந்தியா ஃபைனலில் நுழைவதைத் தடுத்துவிடும். இவர்களை பிட்ச்சில் செட்டில் ஆகவிடாமல் விரட்டுவதில், பும்ராவுக்கும், ஷமிக்கும், இரண்டாவது பவர்-ப்ளேயில் பௌலிங் செய்யும் சாஹல், குல்தீப் ஆகியோருக்கும் ( இருவரும் ஒருவேளை ஆடினால்) முக்கியப் பொறுப்பு இருக்கிறது. இடதுகை சுழல் ஜடேஜா ஒருபக்கம் ரன் கொடுக்காது அழுத்தி, எதிரியை நெருக்குவார் என எதிர்பார்க்கலாம்.
நாளைய முதல் செமிஃபைனலில், இந்தியாவில் ஐபிஎல் ஆடிய அனுபவம் நியூஸிலாந்தின் வில்லியம்ஸனுக்கும், ட்ரெண்ட் போல்ட்டிற்கும் கைகொடுக்கும் என்கிறார் நியூஸிலாந்தின் முன்னாள் கேப்டனும், ஐசிசி-யின் கிரிக்கெட் பத்தி-எழுத்தாளருமான டேனியல் வெட்டோரி. இந்த மதிப்பீடு சரியாக இருக்கலாம். இருவரும் ரோஹித், ராஹுல், கோலி, பாண்ட்யா போன்றவர்களுக்கெதிராக நிறைய ஆடியவர்கள். அப்படிப் பார்த்தால், இந்திய வீரர்களும்தான் இவர்களுக்கெதிராக ஐபிஎல் ஆட்டம் போட்டிருக்கிறார்கள்!
மைதான நிலவரத்தை பூரணமாகப் புரிந்துகொண்டு, எதிர் அணிக்கெதிராக சரியான வியூகம் அமைத்து, சிறப்பான கிரிக்கெட்டைத் தரும் அணியே வெற்றி பெற்று, உலகக்கோப்பையின் ஃபைனலுக்கு முன்னேறும். அது இந்தியாவாக இருக்கவேண்டுமே என்கிற ஏக்கம், நமக்கு இருப்பது நியாயம்தான்!
**
புவனேஷ்குமார் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை. உண்மைதான். ஷமி விக்கெட் எடுக்கிறார்.உண்மைதான். ஆனால் ரன்கள் வாரி வழங்குகிறாரே… நமக்கு ஆசை இருக்கிறது பைனல் செல்ல… தகுதியும் இருக்கிறது.எனினும் இந்த கிரிக்கெட் அன்றன்றைய ஆட்டங்களால் ஆனது. பத்தொன்பது வயதுக்குக்குக் குறைவானோர் உலகக்கோப்பையில் இதே கோஹ்லியும், வில்லியம்சனும் மோதியது நினைவுக்கு வருகிறது. அன்று வில்லியம்சந்தோல்வி முகம் கண்டார். இப்போது என்ன ஆகுமோ? அவர்களின் ஃபீல்டிங் மகத்தானது.
LikeLiked by 1 person
@ ஸ்ரீராம்:
ஆமாம். குல்தீப் யாதவ் பொதுவாக இங்கிலாந்து பிட்ச்சுகளில் வெற்றிகரமாக இல்லை. சாஹலும் இங்கிலாந்துக்கெதிராக செமயா வாங்கிக்கட்டிக்கொண்டார். நியூஸிக்கெதிராக இவர்கள் இருவரும் ஆடினால், லைன், லெந்த் சரியாகப் போடவேண்டும்.
வில்லியம்சன், டேய்லரை எவ்வளவு சீக்கிரம் தூக்குகிறார்களோ அவ்வளவுக்கவ்வளது இனிதாய் நமக்கு முடியும்.
2008-ல் அண்டர்-19கோப்பையில் செய்ததுபோல் இங்கேயும் கோஹ்லி, வில்லியம்சனை சாய்ப்பாரா? பார்ப்போம்.
LikeLike
ஆசை இருக்கு தாசில் பண்ண…அதிருஷ்டம் இருக்கு………
பயிற்சி ஆட்டத்தில் நம்மைப் புரட்டிப் போட்டதுபோல், நியூசிலாந்து டாஸ் வென்று முதலில் 300+ அடித்து நாம் 150 அடிப்பதற்குள் நாக்கு தள்ளிவிடுவோமா?
நாளை தெரியும் கதை… எனக்கென்னவோ ஆஸி-நியூ ஃபைனல், ஆஸி உலகக்கோப்பை பெறும் என்று தோன்றுகிறது.
LikeLiked by 1 person
@நெல்லைத்தமிழன்:
நியூஸிலாந்து டாஸ் ஜெயித்துவிட்டால், இந்தியா ஆரம்பத்திலேயே சிக்கலில் மாட்டிக்கொள்ளும். நமது தர்மவான்கள் ரன்களை வாரி இறைக்காது இருக்கவேண்டும், வெண்ணெய் விரல்கள் கேட்ச்சுகளை நழுவவிடாது இருக்கவேண்டும்.. எனப் பிரார்த்திப்போம்.
ரொம்பப்பேர் ஆஸ்திரேலியா தான் வின்னர் எனவே கணிக்கிறார்கள். ஆனாலும், கிரிக்கெட் என்பது கிரிக்கெட் இல்லையா!
LikeLike
நினைப்பதுபோல் ஆடினால் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது
LikeLiked by 1 person
@ ஜி.எம். பாலசுப்ரமணியம்:
இந்தியாவிடம் திறமை இருக்கிறது. உழைப்பும் இருக்கிறது. இருந்தும் கிரிக்கெட்டில் இதெல்லாம் தாண்டியும் ’அந்த நாளில்’ வேறொன்று தேவைப்படுகிறதே!
LikeLike