உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவின் முதல் தோல்வி

நடப்பு உலகக்கோப்பைத் தொடரில், தன் முதல் தோல்வியை இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் இந்தியா தழுவியது நேற்று(30-6-19). வரிசையாக வந்த வெற்றிகளால் ஒரு மிதப்பில் இருந்திருக்கக்கூடிய இந்திய அணிக்கு இப்படி ஒரு அடி விழுந்தது சரிதான். கோப்பையின் அரையிறுதிக்குள் நுழைவதற்குமுன், தன்னை சரியாக நிமிர்த்திக்கொள்வது இந்தியாவுக்கு முக்கியம்.

ஒரு பெரிய ஸ்கோரை நோக்கியே இந்த ஆட்டம் செல்லும் என்பது ஆரம்பத்திலேயே தெளிவாகியிருந்தது. இங்கிலாந்தின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜேஸன் ராயும் (66), ஜானி பேர்ஸ்டோவும்(Jonny Bairstow) கொடுத்த அபார துவக்கமும், மேற்கொண்டு நடந்த ஆட்டமும் இங்கிலாந்து 370-380 வரை செல்லலாம் என நினைக்கத் தோன்றியது. இறுதியில் 337-ஐ ஸ்கோர் தாண்டவில்லை என்பதே கொஞ்சம் ஆச்சரியம்தான். பேர்ஸ்டோ சதம் (111), ராய் (66), ஸ்டோக்ஸ் (79) என முக்கிய தனிப்பட்ட ஸ்கோர்கள்.

இந்தியாவின் துவக்கத்தை அபத்தமாக ஆக்கிய ராகுல், தடவித் தடவி பூஜ்யஸ்ரீ ஆகி வெளியேறினார். ரோஹித் (102), கோஹ்லி(66) முதலில் மெதுவாக ஆரம்பித்து (அந்த பவர்-ப்ளேயில் இங்கிலாந்தின் பௌலிங் டாப்),  பின்னர் வேகம்பிடித்தனர். நாலாம் நம்பர் விஜய் ஷங்கரை பெஞ்சில் உட்காரச்சொல்லிவிட்டு, மைதானத்துக்குள் வந்த ரிஷப் பந்துக்கு கேப்டனின் உற்சாக சப்போர்ட் இருந்தது – தன் இஷ்டத்துக்கு அடித்து ஆட. அப்படித்தான் துவக்கினார் தன் முதல் மேட்ச்சை அவரும். ஆனால் இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்,  அவரை 32 ரன்களில் காவு வாங்கிவிட்டது. தோனிக்கு முன்பாக இறக்கப்பட்ட ஹர்தீக் பாண்ட்யா(45), அவரது வழக்கமான பாணியில் ஆடி ஸ்கோரை வேகமாக உயர்த்த முயன்றார். தோனி டெஸ்ட் மேட்ச்போல் ஆட ஆரம்பித்து, பின் வேகம் ’காட்டி’ , ஒன்றையும் சாதிக்கமுடியாமல் நாட்-அவுட்டாக(42) நின்றார். அவருடைய தனிப்பட்ட சராசரி  சரி! ஆனால், 338-ஐத் துரத்திய இந்தியக் கதை, 306-ல் சோகக்கதையாக முடிந்தது.  தோனியும், ஜாதவும் இன்னும் கொஞ்சம் முனைந்திருந்தால் அந்த இலக்கு கிட்டியிருக்கும். இங்கிலாந்து வீழ்ந்திருக்கும் என்று தோன்றியதைத் தவிர்க்கமுடியவில்லை.

பொதுவாக கிரிக்கெட் மைதானத்தின் பௌண்டரி நீளம் நாலாதிக்கிலும் சுமார் 70 மீட்டரிலிருந்து 89-90 மீட்டர் வரை இருக்கும். பர்மிங்காம் மைதானத்தின் ஒரு பக்க பௌண்டரி நீளம் 59 மீட்டர்தான். ரொம்பவே குட்டையான பௌண்டரி ஒரு பக்கத்தில்.  Bizarre and Crazy என்றார் தோற்றுவிட்ட கேப்டன் கோஹ்லி.  தோற்றதற்கு சறுக்கினது சாக்கா? அப்படியும் கொள்ளலாம்தான். இங்கிலாந்து பேட்டிங்கின்போது, அதாவது இந்திய ஸ்பின்னர்களின் பந்துவீச்சின்போது என்ன நடந்தது? இந்தியாவின் வலிமைமுகமான ஸ்பின் பௌலிங்கை பலவீனப்படுத்தி அழித்துவிட்டது இங்கிலாந்து. குறுகிய பௌண்டரி வழியே இந்திய ஸ்பின்னரகளை அலாக்காகத் தூக்கி வீசிவிட்டார்கள் இங்கிலாந்தின் முன்னணி வீரர்கள். குறிப்பாக  லெக்-ஸ்பின்னர் யஜுவேந்திர சஹலைக் குறிவைத்துத் தாக்கினார்கள். பேர்ஸ்ட்டோவின் 6 சிக்ஸரிகளில் ஐந்து, இப்படி அடிக்கப்பட்டதுதான். குல்தீப் யாதவும் பெரிசாக ஒன்றும் செய்ய முடியவில்லை. பொதுவாக எதிரி டீமைத் திணறவைக்கும் சஹல்-குல்தீப் ஜோடி, நேற்றைய போட்டியில் இப்படி ரன் தானம் செய்தது: சஹல் 10-0-88-0.   குல்தீப் : 10-0-72-1. அதாவது இங்கிலாந்தின்  ஒரே ஒரு விக்கெட்டை வீழ்த்த, 20 ஓவர்களில் 160 ரன்கள் எதிர் அணிக்கு இந்திய ஸ்பின்னர்கள் தாரைவார்க்கும்படி நேர்ந்தது. இந்தியா தன் ஸ்பின்னர்களுக்கு 20 ஓவர்கள் நிச்சயம் கொடுக்கும் என்பது இங்கிலாந்துக்குத் தெரியாதா? குட்டையான பௌண்டரியைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

ஆரஞ்சு-நீல இந்திய அணி !

இந்திய பேட்ஸ்மன்களும், நீளக் குறைவான பௌண்டரிவழியே இங்கிலாந்தின் ஸ்பின்னர்களைத் தூக்கி அடித்திருக்கலாமே.. ரன் சேர்த்திருக்கலாமே.. எனக் கேட்கும் புத்திசாலிகள் கவனிக்க: அவர்கள் அணி சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களால் ஆனது – மார்க் உட், லியாம் ப்ளங்கெட், க்றிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) என நீள்கிறது லிஸ்ட். அணியில் ஒரே ஒரு ஸ்பின்னரை (ஆதில் ரஷீத்)- சாஸ்திரத்துக்காக-வைத்திருந்தார்கள். அவருக்கு 10 ஓவர் கொடுத்தால் ரோஹித், பந்த், பாண்ட்யா போன்ற அதிரடிப் பேய்கள் பின்னிவிடுவார்கள் எனத் தெரிந்தே, அவருக்கு வெறும் 6 ஓவர்கள் கொடுத்து விலக்கிக்கொண்டார்கள். நிறைய வேகப்பந்துவீச்சாகப் போட்டு இந்தியாவைத் தாளித்துவிட்டார்கள்.

பேட்ஸ்மன்கள், பௌலர்களின் தனிப்பட்ட திறமைகளினால் மட்டும், ஆட்டத்தின் வெற்றி, தோல்வி எப்போதும் நிகழ்வதில்லை என்பது இங்கே ஓரளவு புரிந்திருக்கும். ஒருபக்கம் குட்டையான பௌண்டரி உள்ள மைதானமாகவைத்து, ஸ்பின் பௌலிங்கில் சிறந்த அணிக்கெதிராக அதிகபட்ச ஸ்கோர் கொடுத்து ஜெயிக்கமுடியும். இது ஒரு வியூக மிக்ஸர்:  நல்ல கிரிக்கெட் + கொஞ்சம் குள்ளநரித்தனம். லேட்டாகத்தான்  தலைக்கு மேலே பல்ப் எரிந்திருக்கிறதுபோலிருக்கிறது, ரவி சாஸ்திரி, விராட் கோலி கூட்டணிக்கு!  அதனால்தான் போட்டியின் இறுதியில் பொறுக்கமுடியாமல் வாயைத் திறந்து, கொஞ்சம் மேட்டுக்குடித்தனமாக, அல்லது நாகரீகமாக, பர்மிங்காம் மைதானத்தை bizarre, crazy என்றெல்லாம் சொன்னார் கோஹ்லி! ’ஆடத்தெரியாத நங்கைக்கு மேடை கோணலாகத் தெரிந்ததோ..!’ என நாமும் நாகரீகமாக நமது கேப்டனைத் திட்டலாம்தான்.. அவர் சொன்னதிலும் பாய்ண்ட் இருக்கிறது என்பதைத் தவறவிடலாகாது.

கொசுறு:  தன்னுடைய இரண்டாவது ஜெர்ஸியான ஆரஞ்சு-நீலத்தில் இந்தியா நேற்று விளையாடியது. ஜெர்ஸி பிரகாசம்.  ஆட்டம்.. ம்ஹூம்..!

**

9 thoughts on “உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவின் முதல் தோல்வி

 1. இந்தியா இதை வேறு விதமாகக்கூட சமாளிக்கலாம். “நாங்கள் ‘சில அணிகளை’ அரையிறுதிக்கு வரவிட விரும்பவில்லை!” என்று சமாளிக்கலாம். என்ன செய்ய? தோற்றது தோற்றதுதான்.
  ஷமி விக்கட் எடுத்தாலும் ரன்கள் கொடுப்பதில் வள்ளலாக இருந்தார். தோனி இன்னும் கொஞ்சமே கொஞ்சம் வேகம் காட்டியிருந்தால் எட்டியிருக்கலாம் இலக்கை… ஆனால் நாம் விரும்புவது இப்படிப்பட்ட முடிவை.. யார் ‘இந்த’ முடிவை விரும்பினார்களோ… என்ன லாபமோ…!

  Like

 2. தினேஷ் கார்த்திக்கை பந்து பொறுக்கிப்போட அழைத்துச் சென்றிருக்கிறார்கள் போலும். ரிஷப பந்த் இடத்தில பாண்டியாவை இறக்குவார்கள் என்று எதிர்பார்த்தேன். அதுவும் இல்லை. சமீப காலங்களில் கோஹ்லியால் அரை சதத்தை முழு சதமாக்க முடியவில்லை என்பது ஒரு சோகம், ஆச்சர்யம்.

  Liked by 1 person

  1. @ ஸ்ரீராம் : //..யார் இந்த முடிவை விரும்பினார்களோ ..//
   என்ன இப்படிச் சொல்கிறீர்கள்! வதந்தி பரவுகிறதோ..!

   பாண்ட்யா நாலாவது இடத்தில் வந்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.. பந்த் முயற்சி செய்தார். ஆனால் பாண்ட்யா நன்றாக ஆடினார். தோனிக்கு அணியைத் தாண்டியும் சொந்த அளவில் ஏதேனும் திட்டமிருக்கிறதோ !

   ஜடேஜாவையும், கார்த்திக்கையும் ஃபீல்டிங் செய்யமட்டும்தான் செலெக்ட் செய்தார்களா என்கிற கேள்வி அடிக்கடி வருகிறது

   கோ

   Like

   1. வக்கார் யூனிஸ் கிட்டத்தட்ட இந்தக் கருத்தைச் சொல்லி இருக்கிறார். அதனாலேயே எனக்கு இந்தக் கருத்தின்மேல் அவநம்பிக்கை வந்துவிட்டது.

    Liked by 1 person

 3. கோஹ்லி சரியா விளையாடவில்லையே..4 மேட்சுக்கு ஒரு முறை சென்சுரி அடிக்கணும்…இன்னும் 80ஐத் தாண்ட முடியவில்லையே. எதிராளி யார் யாரைவைத்து ஆடப்போகிறார்கள் என்று தெரிந்துகொள்ளவில்லையா? குட்கா புகழ் சஹல், இப்படி ரன்கள் தானம் செய்துட்டாரே..

  ஒருவேளை பாகிஸ்தானை கழட்டிவிட இதுமாதிரி விளையாடினார்களா?

  பங்களாதேஷுடனாவது தினேஷ் கார்த்திக் விளையாடுவாரா? இல்லை, கடைசிப் போட்டியில் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு இந்தியா கொண்டுவந்துவிட்டுடுமா?

  Liked by 1 person

 4. @ நெல்லைத் தமிழன்:
  இல்லை. இது பாக்.கைக் கழட்டிவிட ஆடிய ஆட்டமில்லை. அப்படியெல்லாம் பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் செய்யலாம். இந்தியா தனது வாய்ப்பையே இழந்து தடுமாறுமே தவிர, இப்படியெல்லாம் தான் வேண்டுமென்றே தோற்று, அடுத்தவனின் வாய்ப்பைக் கெடுக்கும் அணியில்லை. அதுவே நல்லதும்.

  கோஹ்லியிடமிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸ் over-due. தோனிக்குத் திட்டுகள் விழ ஆரம்பித்துவிட்டன. இன்னும் சிக்கல்கள் , சர்ச்சைகள்..

  Like

 5. @ Sriram :
  வக்கார் வேறே வழிந்திருக்கிறாரா தோனிபற்றி. படிக்கவில்லை இன்னும்.
  பாகிஸ்தானின் Dawn நாளேடு இங்கிலாந்தின் இந்த வெற்றி, பாக்.கின் செமிஃபைனல் எண்ட்ரியை இன்னும் கடினமக்கிவிட்டது எனப் புலம்பியுள்ளது! தோனியைப்பற்றிய ஹர்ஷா போக்ளே, டெண்டுல்கர் விமரிசனத்தைக் குறிப்பிட்டதோடு, தோனி ஆஃப்கானிஸ்தானிற்கெதிராக 52 பந்துகளில் 28 எடுத்ததைக் கோடிட்டிருக்கிற்து!

  Like

  1. வக்கார் யூனுஸ் சொல்லியிருப்பதற்கு வாசிம் அக்ரம் பதில் அளித்திருக்கிறார். கும்ப்ளே பத்து விக்கெட் எடுத்த மேட்சில் கடைசி விக்கெட் ஜோடியாக வாசிம் அக்ரமும், வக்காரும் விளையாடிக்கொண்டிருந்தனராம்.. வக்கார் நடுவில் வந்து அக்ரமிடம் கேட்டாராம்..”நம்மிலொருவர் ரன் அவுட் ஆகிவிட்டாலென்ன?”

   Like

   1. @ ஸ்ரீராம்:
    வக்கார் மாதிரி ஆட்கள் அப்போதும் இருந்தனர், இப்போதும் இருக்கின்றனர் பாக் டீமில்,,. இவர்கள்தாம் தோனியை, விமர்சிப்பவர்கள், எதிர்காலத்தில் கோஹ்லி, ரோஹித் போன்றவர்களை விமர்சிக்கப்போகிறவர்கள்!

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s