பாக். ரசிகர்களே.. கூல் !

 

யாரிடம் தங்களது கிரிக்கெட் அணி தோற்றாலும் பாக். ரசிகர்களுக்கு அதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. உலகக்கோப்பையின் ஆரம்ப போட்டி ஒன்றில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தானை செமயா நகட்டிவிட்டது.  ம்..ஹூம்.. அலட்டிக்கொள்ளவில்லை, பச்சைச் சட்டைகள்.

ஆனால்… இந்தியாவிடம் மட்டும் தோற்றுவிடக்கூடாது! (இந்தியர்களில் பலரும் கிட்டத்தட்ட இப்படித்தான்!) இந்தியாவிடம் தோல்வியென்றாலே பாகிஸ்தான் அலற ஆரம்பித்துவிடுகிறது. வருகிற கடுப்பில், பாக். ரசிகர்கள் அவர்களது கேப்டனில் ஆரம்பித்து யாரையும் விடுவதில்லை. கிழித்துவிடுகிறார்கள் கிழித்து. போதாக்குறைக்கு, பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் போன்ற சில முன்னாள் வீரர்கள்வேறு, எரியும் நெருப்பில் நெய் வார்த்துக்கொண்டிருக்கிறார்கள்! கடந்த இரண்டு தினங்களாக டிவி-சேனல்களிலும், ட்விட்டர்களிலும் பச்சைகளின் அலம்பல், அக்கப்போர் தாங்கமுடியவில்லை! சில மனோரஞ்சகம். சில டமால்!  சில உருக்கம்.. பார்ப்போம்:

Shabbir – ஒரு பாக் ரசிகர் ட்விட்டுகிறார்:

இந்தியாவுடனான ஆட்டத்திற்கு முதல் நாள் பாக். ரசிகர்கள்: Rain, rain go away.. We want Pak to play..

ஆட்டத்தின்போது: Rain..rain.. where are you ? Come back !

*

ஷப்பீர் – இன்னுமொரு ட்வீட்: பாகிஸ்தான் எந்த மாதிரி டீம்னா, இவனுங்க பௌலிங் போட்டா, பிட்ச் பேட்டிங் பிட்ச்சாத் தெரியுது.. பேட்டிங் செஞ்சானுங்கன்னா, பிட்ச் பௌலிங் பிட்ச்சா மாறிடுது!

*

அலீனா என்கிற பாக். ரசிகை:  ‘இந்தியா, பாகிஸ்தான் என நாட்டைப் பிரிக்காது இருந்திருந்தால், இந்த அவமானம் ஏற்பட்டிருக்குமா!’

*

Hassan என்றொருவர்: டாலரோட ரேட்டு, இந்தியாவோட ரன்ரேட்டு.. கண்ட்ரோல் நம்ம கையில இல்லப்பா!

*

ட்விட்டரில் இன்னொருவர்: ’ஒரு-நாள் போட்டிகளில் இந்தியாவின் விராட் கோலி மட்டும் அடித்த சதம்: 41. பாகிஸ்தானின் ஒட்டுமொத்த அணியும் சேர்ந்து அடித்த சதம்: 41. எந்த அணி சிறந்தது என்பதற்கு இதைவிட வேறு நிரூபணம் தேவையில்லை!’

*

வைரலான பாக். கேப்டனின் கொட்டாவி !

இந்தியா-பாக் ஆட்டத்தின் முதல் மழை-இடைவெளிக்குப் பின் ஆடவந்த பாக் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது விக்கெட்டிற்குப் பின் நிற்கிறார். பாவம். மனுஷனுக்கு அசதி.. கொட்டாவி விடுகிறார்.. இந்தப் படத்தைச் செமயா பிடித்துக்கொண்டார்கள் பாக் ரசிகர்கள். வைரல்தான்!

கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதின் கொட்டாவிப்படம் போட்டு, பாக். ரசிகரின் மீம்ஸ் : ’இத.. இதச்செய் முதல்ல..! கிரிக்கெட்லாம் அப்பறம் பாத்துக்கலாம்!’

*

பாகிஸ்தானின் மனிதவள மேம்பாட்டுத்துறைக்கான பெண் அமைச்சர் ஷிரீன் மஸாரி சேர்ந்துகொண்டார்: ’இதை ஒத்துக்கொள்வது வெறுப்பாக இருக்கிறது. ஆனால் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்: ஒருபக்கம் ஒருவரோடொருவர் நன்றாக இணைந்து செயல்படும் ஒரு ப்ரொஃபஷனல் டீம்.. இன்னொரு பக்கம் ஒருத்தருக்கொருவர் சம்பந்தமே இல்லாத ஒரு அணி.. அதற்கு கொட்டாவி விடும் ஒரு கேப்டன்! கஷ்டம்..!’

*

பாக். ரசிகரைத் தேற்றும் பாலிவுட் ஸ்டார் ரன்வீர் சிங்

ஒரு பாகிஸ்தானி, இந்தியாவிடம் தோற்ற துக்கத்தின் உச்சியில் ட்விட்டுகிறார்: ’நான் இறந்தால், என்னை இந்த சர்ஃப்ராஸ் அகமது சவக்குழியில் தள்ளட்டும். அதுவே என்னை அவன் கடைசிமுறையாகக் கீழே தள்ளுவதாக இருந்துவிடட்டும்!’

*

ஒரு ரசிகர் கொஞ்சம் மென்மையாக ட்விட்டரில்: ’இது ஒரு விளையாட்டுத்தாம்பா.. விடுங்க..!’

அடுத்தவரின் பதிலில் அரசியல் நெடி! ‘இந்த அரசாங்கம் (இம்ரான் கானின் அரசைச் சொல்கிறார்) பதவியேற்றதிலிருந்து, நல்ல நியூஸே வரமாட்டேங்குதே!’

*

பாக் டிவி சேனலில் வருகிறது, இந்தியா-பாக். ஆட்டம்பற்றிய  ரசிகர்களின் நேர்காணல் நிகழ்ச்சி. அதில் ஒரு பாக். ரசிகர் ஹைப்பர்.. சூப்பர் ஹைப்பர்! இந்தியாவிடம் தோற்ற அவமானம் தாங்கமுடியவில்லை.. பாகிஸ்தான்  கேப்டன் சர்ஃப்ராஸைப் போட்டுக்கிழிக்கிறார். மற்றவர்கள் அவரை சமாதானப்படுத்த முதுகில் மெல்லத் தட்டுகிறார்கள். அவரால் அடக்கமுடியவில்லை:

’மழை இடைவேளையில சிக்கன் பிரியானியும், க்ரீம் ஷேக்கும் அடித்துவிட்டுவந்தா, கொட்டாவி வருமா..வராதா!  சொல்லுங்க.. இவன்லாம் ஒரு கேப்டனா..’ என்கிற ரீதியில் எகிற, தட்டிக்கொடுத்த நண்பர்கள் அவரை அடக்குவதாக எண்ணி, அடிப்பதுபோல் முதுகில் ரெண்டு போடுகிறார்கள். ரசிகர் மேலும் ஆத்திரமாகி கத்துகிறார்: ‘அடிங்கப்பா! அடிங்க! என்னய மொதல்ல அடிங்க.. அவன (பாக். கேப்டனை) ஒன்னும் கேட்டுராதீங்க.. என்னயப்போட்டு சாத்துங்க.. அதான் சரி!’

இந்த இடத்தில் நமக்கே பாவமாயிருக்கிறது. அவர் பாகிஸ்தானியாக இருந்தாலென்ன? தன் நாட்டு அணி, எதிரியிடம் இப்படி அவமானத்தோல்வி அடைந்துவிட்டதே என ஓவர்-உணர்ச்சியில் படபடக்கிறார் மனுஷன்.. அவரால் முடியவில்லை.

*

பாக். ரசிகர்களின் ஆத்திரத்தில் நம் நாட்டு டென்னிஸ் ஸ்டார் சானியா மிர்ஸாவும் மாட்டிக்கொண்டார். சானியாவின் கணவர் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மன் ஷோயப் மாலிக் ஆயிற்றே.. மேன்செஸ்டரில், பாக். அணியில் சிலருக்கு டின்னர் தந்திருக்கிறார்கள் சானியாவும், அவர் கணவர் ஷோயப்பும். பாட்டிலும், புகையுமாக பாக். வீரர்கள் ‘ஷீஸா’ எனப்படும் அந்த ரெஸ்ட்டாரண்டில் அமர்ந்திருக்கும் அந்தப்படம் பாக். ரசிகர்களிடம் சிக்கிவிட்டது. படத்தில் சானியா, ஷோயப், ஹாசன் அலி, இமாத் வாசிம், வஹாப் ஆகியோர் தெரிகிறார்கள். இன்னுமொரு பெண்ணும்.. பாகிஸ்தான் ரசிகர்கள் விடுவார்களா! ட்விட்டரில் ஒரே ரகளை..

’முக்கியமான ஆட்டத்திற்கு முதலான ராத்திரியில் இப்படி 2 மணிவரை ‘ஹூக்கா’   பிடித்துக்கொண்டு, தின்னு, கூத்தடிச்சா, அடுத்த நாள் ஆட்டம் நாசமாத்தானே போகும்? பாக். டீம்ல ஒருத்தனுக்காவது டிஸிப்ளின் இருக்கா? கோச், கேப்டன்லாம் என்னடா செய்றான்க !

*

கூடவே இன்னுமொரு ட்வீட், சானியாவை நோக்கி: ஏம்மா! பாகிஸ்தான் டீமுக்கு டின்னர் கொடுக்க ஒனக்கு இப்பதான் நேரம் கெடச்சுதா!

இந்தியாவின் சண்டைக்கோழியான சானியா மிர்ஸா விடுவாரா? ட்விட்டிவிட்டார்:

’முதல்ல இந்த படத்த எங்க அனுமதியில்லாமப் போட்டதே தப்பு.. தோக்கற டீம் டின்னர் சாப்பிடக்கூடாதுன்னு யாரு சொன்னது! மந்தங்களா.. போய் வேற காரணத்தத் தேடுங்க!

**

 

2 thoughts on “பாக். ரசிகர்களே.. கூல் !

  1. பகிரப்பட்டிருக்கும் ட்வீட்டுகள் மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தன. எல்லோரும் ரொம்பச் சொல்லிச் சொல்லி ஏற்றிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆனாலும் அநியாயக் கூட்டம் மேட்ச் நடந்த அன்று. இன்று ஆப்கானிஸ்தான் நிலை ரொம்பப் பரிதாபமாக இருக்கிறது. ஆப்கானிஸ்த்தானிடம் ரொம்ப எதிர்பார்த்துவிட்டோம் என்று நினைக்கிறேன்.

    Like

  2. @ Sriram: ஐசிசி எதிர்பார்த்த கூட்டந்தான். பிரிட்டனில் பெருகிவரும் பங்களா, ஸ்ரீலங்க கூட்டத்தையும் கவனியுங்கள்.

    ஆஃப்கானிஸ்தான் உலகக்கிரிக்கெட்டில் வேகமாக முன்னேறிவரும் நாடு. இருந்தாலும் உலகக்கோப்பை என்பதன் கதையே வேறு. இங்கிலாந்தின் மார்கன் உலக ரெகார்டு ஏற்படுத்த இது தான் நாள், இது தான் அணி எனக் குறித்துவைத்திருந்தார் போலும். பாகிஸ்தானுக்கெதிராக ஆடியபோது இவரது வீரம் எங்கிருந்ததோ!

    Like

Leave a comment