இருதரப்பிலும் ரசிகர்கள் துடிப்புடன் காத்திருந்து அனுபவித்த, மேன்செஸ்டரில் நேற்று (16-6-19) ஆடப்பட்ட உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் முன் பாகிஸ்தான், கல்லின் கீழ் கண்ணாடியென நொறுங்கியது. உலகக்கோப்பை வெற்றி ஸ்கோர் 7-க்கு 7. India in seventh heaven !

ஏகப்பட்ட hype-உடன் அரங்கேறிய போட்டியின் சில அம்சங்கள்:
டாஸ் வென்று இந்தியாவை முதலில் பேட் செய்ய அனுப்பிய பாகிஸ்தானுக்கு, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. 34 பந்துகளில் அரைசதம் கடந்த ரோஹித் ஷர்மா, உலகக்கோப்பைப் போட்டிகளில் தன் இரண்டாவது சதத்தை விளாசினார் (140). பாக். ரசிகர்கள் தலையைப் பிய்த்துக்கொள்ளும் அளவிற்கு, எதிரி பௌலர்களை புரட்டி எடுத்துவிட்டார் ரோஹித். முகமது ஆமீர் மட்டும் ஒரு விதிவிலக்கு. முதன்முறையாக ரோஹித்துடன் ஒரு-நாள் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய ராஹுல் அரைசதமடித்து வெளியேறினார், 77 ரன் எடுத்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த கோஹ்லி, ஆமீரின் பந்துவீச்சில், தான் காட்-பிஹைண்ட் ஆகிவிட்டதாக நினைத்துத் தானாகவே வெளியேறிவிட்டார். அம்பயருக்கே ஒருகணம் ஒன்றும் புரியவில்லை! இந்தக்காலத்தில் இப்படி ஒரு அசடு! ரீப்ளேயில் அவர் அவுட் இல்லை எனத் தெரிந்தது. நான்காவதில் வந்த பாண்ட்யா 26, தோனி 1 என நடையைக்கட்ட, உலக்கோப்பையில் முதல் மேட்ச் ஆடவந்த விஜய் ஷங்கரும், கேதார் ஜாதவும் கொஞ்சம் சேர்த்து, இந்திய ஸ்கோரை 336 எனக் காண்பித்தார்கள். இடையிலே, வருண பகவான் வந்து பார்த்துவிட்டுப் போனார்!
பாகிஸ்தானுக்கு வெல்ல, 337 தேவை. மழை திரும்பும் பயமுறுத்தலும் இருந்தது. பாகிஸ்தான் பேட் செய்கையில், ஐந்தாவது ஓவரிலேயே தொடையை இழுத்துப்பிடிக்க, நொண்டிக்கொண்டே பெவிலியனுக்குத் திரும்பிவிட்டார் இந்தியாவின் பிரதான பௌலர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமார். அவருடைய ஓவரில் இருந்த மீதமுள்ள இரண்டு பந்துகளை வீசி ஓவரை முடிக்கவென, ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கரை அழைத்தார் கோஹ்லி. என்ன ஆச்சரியம்! உலகக்கோப்பையில் வீசிய தன் முதல் பந்திலேயே பாகிஸ்தானின் இமாம்-உல்-ஹக் -ஐ தூக்கிக் கடாசிவிட்டார் ஷங்கர். கோஹ்லிக்கே தன் கண்ணை நம்பமுடியவில்லை. அடுத்த முனையில் வீசிக்கொண்டிருந்த இந்தியாவின் டாப் பௌலரான பும்ராவுக்கே இன்னும் விக்கெட் விழவில்லை..
பாண்ட்யாவும் ஷங்கரும் கொஞ்சம் வீசியபின், இடதுகை ரிஸ்ட்-ஸ்பின்னரான குல்தீப் யாதவிடம் பந்தைக் கொடுத்தார் இந்தியக் கேப்டன். நூறு ரன் பார்ட்னர்ஷிப் போட்டு அப்போது அருமையாக ஆடிக்கொண்டிருந்த பாபர் ஆஸம் (Babar Azam) மற்றும் ஃபக்ர் ஸமன் (Fakr Zaman) ஆகிய பாக் நட்சத்திர வீரர்களை அடுத்தடுத்து வீழ்த்தினார் யாதவ். பாகிஸ்தான் அதிர்ந்தது. இருந்தும் இன்னும் அவர்களிடம் இருக்கிறார்களே வீரர்கள்..
முகமது ஹஃபீஸ், விக்கெட் எடுக்க முயன்ற யஜுவேந்திர சாஹலை சிக்ஸருக்குத் தூக்கி ஏதோ சொல்லமுயன்றார். ஆனால் அந்தப்பொழுது வேறோன்றைச் சொன்னது. திரும்பவும் அழைக்கப்பட்ட ஹர்தீக் பாண்ட்யா, அடுத்தடுத்த பந்துகளில் ஹஃபீஸையும், ஷோயப் மாலிக்கையும் பிடுங்கி எறிந்தார். 18 பந்துகளில் 4 விக்கெட்கள் வீழ, பாக். ரத்த அழுத்தம் எகிறியது. புவனேஷ்வர் குமார் இல்லாத நிலையில், கோஹ்லிக்கு வேறு வழியில்லை. வாப்பா.. விஜய் ஷங்கர்! ஷங்கரின் மீடியம்-பேஸ் (medium pace) தொடர்ந்தது. தன் ஐந்தாவது ஓவரில், முன்னே வந்து ஆட முயன்ற பாக். கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதின் பின்னே, சிவப்பு விளக்கு எரியவைத்தார் ஷங்கர். ஸ்கோர் 35-ஆவது ஓவரில் 166/6. பாக். முதுகெலும்பில் விரிசல்! பச்சை-வெள்ளைக் கொடிகள் பறப்பதை நிறுத்திக்கொண்டன. பாரத் ஆர்மியின் மேளதாளம்.. பாக். ரசிகர்களில் சிலர் மெல்லக் கழண்டுகொண்டார்கள்.
திரும்பி வந்த மழை, ஆட்டத்தை நிறுத்தியது. மழை ஒருவழியாக நின்று, சென்று, ஆட்டம் மீண்டும் தொடங்கியபோது , டக்வொர்த்-லூயிஸ் முறைப்படி, 40 ஓவர்களில் 302 எடுத்தால்தான் வெற்றி என்கிற மோசமான நிலை பாகிஸ்தானுக்கு. இந்திய பௌலர்களின் இறுக்கமான பந்துவீச்சினால் ஏற்கனவே ரன்விகிதம் குன்றிப்போயிருந்தது. இறுதியில் 212/6 ரன்களே முடிந்தது. 89 ரன் வித்தியாசத்தில், பலமாக அடிவாங்கி வீழ்ந்தது பாகிஸ்தான். இந்தியாவின் கையில், இன்னுமொரு மோசமான தோல்வி. பாகிஸ்தானில் ஏகப்பட்ட டிவி- செட்டுகள் உடைந்து நொறுங்கியதாகக் கேள்வி.. ’அப்பாக்கள் தின’த்தன்றா இப்படியெல்லாம் செய்வது !
**
டக்வர்த் முறையில் ஓவருக்கு 25 ரன்னுக்கு மேல் எடுக்கணும் என்ற நிலை, மழை நின்றபிறகு பாகிஸ்தானுக்கு வந்தது, ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்திருக்கும்.
விஜய் சங்கர், விக்கெட் எடுக்காமல் ரன் கொடுத்திருந்தால், ரசிகர்கள் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகியிருப்பார். கடைசி ஓவர்களில் பேட் செய்ய வந்து டெஸ்ட் மேட்ச் ஆடினதை யார் பொறுத்திருப்பார்கள்? அவரது அனிமேடட் (அடடா சிக்சருக்கு அடிக்கலையே என்பதுபோல) முக பாவம், எரிச்சலை உண்டாக்கியது. 350க்குமேல் போகவேண்டியதைத் தடுத்துவிட்டார் விஜய்.
LikeLiked by 1 person
@ நெல்லைத் தமிழன்:
மேட்ச்சின் ஆரம்பத்திலும் டெத் ஓவர்களிலும் பந்த்போட்டது யார்? பாகிஸ்தானின் பெஸ்ட் பேசர் முகமது ஆமீர். ரோஹித்தே அவரை விளாசுவதைத் தவிர்த்தார். ஆமீரைக் கடைசி ஓவரில் சிக்ஸர் சிக்ஸராக அடித்திருக்கமுடியாது!
விஜய் சங்கருக்கு ஹேட்டர்ஸ் உண்டு! அவரது 5.2 ஓவர் பௌலிங் அன்று நன்றாகவே இருந்தது – 2 முக்கியமான விக்கெட்டுகளும், ஒரு கேட்ச்சும்கூட. டெண்டுல்கர் கூறியதுபோல் தன் முதல் உலகக்கோப்பை போட்டியில் சங்கர் தன்னை நிரூபித்துவிட்டார்.என்றே தோன்றுகிறது.
LikeLike
நேற்று பங்களாதேஷ் ரெகார்ட் சேஸ் போல… மிரட்டி இருக்கிறார்கள்.
LikeLiked by 1 person
@ ஸ்ரீராம்:
கெய்ல் ஃப்லாப் ஆகியும் வெஸ்ட் இண்டீஸ் முன்னூறைத் தாண்டியது சாதனை. இருந்தும் பங்களா அதை ஊதித்தள்ளியது சற்றே ஆச்சரியம் தந்த விஷயம்.
LikeLike
இந்த மாட்சில் பாகிஸ்தான் தோற்றது என்னவோ உண்மை அதையே பணிந்தது என்று சொல்வதைத் தவிர்த்திருக்கலாமோ
LikeLike
@ Balasubramaniam G.M.:
’பாகிஸ்தான் தோற்றது என்னவோ உண்மை’- யா ? தெளிவாகத்தானே சொல்கிறீர்கள்.. சந்தேகமில்லையே !
’பணிந்தது’ என்று சொல்வதைத்தவிர்த்திருக்கலாமோ’ – வா!
ஏன்!
LikeLike