கிரிக்கெட்: மனைவி எனும் மந்திரம் !

 

நேற்று (12-6-19) நடந்த உலக்கோப்பைப் போட்டியில் அதிகம் சிரமப்படாமல், சாதாரணமாக பாகிஸ்தானை வீழ்த்திக் காட்டியது ஆஸ்திரேலியா. 307 ரன் எடுத்து அசத்திய ஆஸ்திரேலிய பேட்டிங்கில், டேவிட் வார்னரின் சதம் வைரமென மின்னியது.

கடந்த வருடம் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடந்த டெஸ்ட்டின்போது நடந்த பந்தை சேதப்படுத்துதல் (ball tampering) சர்ச்சையில் வசமாக மாட்டி, ஒருவருட விளையாட்டுத்தடைபெற்ற மூவரில் ஒருவர் இந்த வார்னர். அவருடைய சர்வதேச கிரிக்கெட் கேரியர் கிட்டத்தட்ட அஸ்தமித்துவீட்டதுபோன்ற நிலை அப்போது. ‘அவந்தான் பண்ணச்சொன்னான்!’,  ‘நா ஒன்னும் பண்ணல.  அவன் தப்பு பண்றதப் பாத்தேன்.. ஆனா பண்ணாதேன்னு சொல்லாமப்போய்ட்டேன்!’ என்பதுபோல பான்க்ராஃப்ட்டும் (Cameron Bancroft), கேப்டன் ஸ்மித்தும், பத்திரிக்கைக்காரர்கள் முன் அழுது, மூஞ்சி சிவந்து காட்சிகள் போட்டுக்கொண்டிருக்கையில்,  வார்னர் ஒன்றும் சொல்லாது ஒதுங்கிக் கிடந்தார்.  எதையாவது உளறி கிளறிக்கொட்டி,  மேற்கொண்டு மாட்டிக்கொள்ளவேண்டாம் என நினைத்திருக்கலாம்.. அல்லது நொறுங்கிப்போய் மூலையில் விழுந்திருக்கலாம். இப்படி ஏதோ ஒன்று.

ஒருவருடம் என்பது ஒரு விளையாட்டுவீரருக்குப் பெரிய காலவெளி. நேஷனல் டீமிலிருந்து விலக்கப்பட்டுவைக்கப்பட்டிருப்பது என்பது தண்டனை என்பதோடு ஒரு பெரும் அவமானமும்.  ஒரு முனைப்பான சிறப்பு ஆட்டக்காரருக்குக் கடும்சோதனை. இத்தகைய மோசமான சூழலில், மனதைத் திடப்படுத்தி, உடலையும் கட்டுக்கோப்பாக வைத்து,  ஆடி, ஓடி, வாயை மூடி, திரும்பவும் அணியில் இடம்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், வார்னர் மற்றும் ஸ்மித் விஷயத்தில் இது நடந்திருக்கிறது.

உலகக்கோப்பைத் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்தபின்னரும், வார்னர் கிரிக்கெட் விமரிசகர்களால் தூற்றப்பட்டார். ஏன்? வழக்கத்துக்கு மாறான மந்தமான ஆட்டம். இப்படி கட்டையைப்போட்டு ஓவர்களை வேஸ்ட் செய்வதா ஒரு ஸ்பெஷலிஸ்ட்டோட வேலை? – என அவரைக் கடுமையாகச் சாடினர். வார்னர் பதில் சொல்லவில்லை. ’சிறப்பான பங்களிப்பு அளிக்கவேண்டும்’ என்கிற அழுத்ததில் ஆடுகிறார் அவர் என்றார் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச்.

நேற்று பாகிஸ்தானுக்கெதிராக கவனமாக ஆட ஆரம்பித்து இறுதியில் சதம் போட்டபின்தான், வார்னர் பழைய வார்னராகக் காணப்பட்டார். ஆள் சமநிலைக்கு வந்திருக்கிறார். மீடியாவின் கேள்விகளுக்குப் பதில் சொல்கையில், நேற்று இப்படிக் கூறினார்:

மனைவி, குழந்தைகளுடன் டேவிட் வார்னர்

அந்த மூன்று மாதங்கள் (விளையாடத்தடை விதிக்கப்பட்டதன் பின்னான) கொடுமையானவை. நான் என்னை, எல்லாவற்றிலிருந்தும் விலக்கிக்கொண்டேன். மூலையில் விழுந்துகிடந்தேன். என் மனைவிதான் தினமும் வந்து, வந்து  என்னைத் தட்டி எழுப்புவாள். உடற்பயிற்சி செய்யச்சொல்வாள். சின்னச் சின்ன டி-20 போட்டிகளில் கலந்துகொண்டு ஆடச்சொன்னாள். உடற்தகுதியும், தொடர்ந்த கிரிக்கெட் ஆட்டமும் எனக்கு இந்தக் காலகட்டத்தில் கண்டிப்பாக இருக்கவேண்டும் எனப் பிடிவாதமாக இருந்தாள். விடாத முனைப்புக் காட்டி என்னை விரட்டிக்கொண்டிருந்தாள். என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தாள். இலக்கை நோக்கித் தீவிரமாகத் திருப்பிவிட்டாள். வலிமையான, நம்பமுடியாத பெண் அவள்!’ என்று தன் மனைவி கேண்டிஸ் (Candice Warner)-இன் புகழ்பாடுகிறார் வார்னர்.

மேலும், ‘என்னுடைய மனைவி, குழந்தைகள் என, குடும்பம்தான் எனக்குத் துணையாக இருந்தது இந்தக் காலகட்டத்தில். அவளுக்குத்தான் எல்லா க்ரெடிட்டும்!’ என்கிறார் வார்னர்.

நல்ல மனைவிமார்கள் நம்ப நாட்டில்தான்! –  என இறுமாப்புகொள்ளவேண்டாம் என்பதற்காகவும் இந்தக் கட்டுரை!

**

 

7 thoughts on “கிரிக்கெட்: மனைவி எனும் மந்திரம் !

  1. மனைவி அமைவதெல்லாம் என்று பாடலாம் வார்னர்

    Like

  2. உண்மைதான். நம் நாட்டில்தான் ஏதோ பெண்களை மதிக்கிறோம், குடும்ப உறவுகள் பெரிது என்று சொல்கிறோம். இப்படிக் காட்சிகள் வரும்போதுதான் அவர்களும் அபப்டி என்று தெரிகிறது. ஒரு கடுமையான காலகட்டத்தைத் தாண்டி வந்திருக்கின்றனர் வார்னரும், ஸ்மித்தும்.

    Like

    1. @ Sriram : ஜூன் மாதத்தில் ஏன் தான் உலக்கோப்பையை இங்கிலாந்தில் கொண்டுபோய் வைக்கிறார்களோ ஈஸ்வரனுக்கே வெளிச்சம். அடுத்த ஹாஃப் நன்றாக இருந்தாலும், முதல் பாதியிலேயே பல அணிகள் இப்படி ஒவ்வொரு பாய்ண்ட் வாங்கியே புட்டுக்கும்!

      நாம் டிவி யில் பார்க்கிறவர்கள். நமக்கே இப்படி வேதனை. டிக்கெட் வாங்கி உட்கார்ந்து மேலே பார்த்துக்கொண்டிருப்பவர்களை நினைத்துப் பாருங்கள்.

      Like

  3. வெளிநாட்டுல இந்த மாதிரி ஒற்றுமையா இருக்கறவங்களும் இருக்காங்க, ஆனா பெரும்பாலும் அவங்க டிரான்ச்பரண்டா இருக்கறதுனால இது சாத்தியமாகுது. இருவரும் பிரிவது, அவர்களது சொந்த முடிவாக இருக்கும்.

    நம்ம நாட்டுல, குடும்ப அமைப்பே, இரு குடும்பங்களின் உறவு என்பதாலும், சமூகக் கட்டுப்பாடுகளாலும், பிடிக்கலைனாகூட உறவு தொடருது. அதுனால ரொம்ப நம்ம நாட்டைப் பற்றி பெருமை கொள்வதில் அவ்வளவு அர்த்தம் இருக்கிறதுபோல் தெரியலை. ஆனாலும் பெரும்பான்மை, எப்படி இருந்தாலும் இவளுடந்தான் வாழ்க்கை என்று இருக்கிறார்கள்.

    இந்தத் தடவை இந்த ஒற்றைப் பாயிண்டை வாங்கியே பாகிஸ்தான் ப்ளே ஆஃபுக்கும், தகுதியான டீம் வெளியேறுதலும் நடக்குமா?

    Like

    1. @ நெல்லைத் தமிழன்:
      உண்மை. நம் நாட்டு சமூக, குடும்ப மதிப்பீடுகள் வேறுமாதிரியானவை. பிடிக்காவிட்டாலும், தாம்பத்யம், குடும்பம், பெரியவர் பேச்சு, ஒருவரின் சகிப்புத்தன்மை என மதிப்பு கொடுத்து கதை ஓட்டிக்கொண்டே செல்வார்கள், தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டாலும். இதிலும் நிறைய இருக்கிறது , பல நல்லவிளைவுகள், குறிப்பாக குழந்தைகள் வளர்ப்பு விஷயத்தில் நிகழ்கின்றன. ஒருவரின் கஷ்டம், தியாகம், இன்னொருவரின் வளர்ச்சிக்குத் துணையாகிறது. இப்படி பல வேறு கோணங்கள்.

      ஞாயிறின் மான்செஸ்டர் வெதர் சரியாக இல்லை எனவே தோன்றுகிறது. அடுத்த ஒரு பாய்ண்ட்தானா இந்தியாவுக்கு? இந்த மழை விவகாரத்தினால் ஒரு சில முக்கிய டீம்கள் அரையிறுதியில் நுழையாது வெளியேறும் ஆபத்துண்டு. இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மட்டும் முன்னேறிவிடும் ,,!

      Like

Leave a reply to நெல்லைத்தமிழன் Cancel reply