படிப்பு, படிப்பு, படிப்பு.. இப்படியும் ஒரு பெண் !

 

17-ஆம் நூற்றாண்டு. வெனிஸ் {இத்தாலியன்: வெனிஸியா  (Venesia)}. ஏட்ரியாட்டிக் கடலின் (Aedriatic Sea) 100 குட்டித்தீவுகளாலான, இத்தாலியின் வடக்குப் பிரதேசமான வெனிட்டோவின் தலைநகர். பொதுவாகவே வெனிஸ் நகரம் அதன் துணிச்சலான பெண்களுக்குப் பேர்போனது. இங்கே வாழ்ந்த ஒரு பிரபுவிற்கு (Lord), ஜூன் 5, 1646-ல் பிறந்த அந்தப் பெண்குழந்தை ஒரு prodigy-யாகப் பின்னாளில் அறியப்பட்டாள். எதிலும் கூர்மையான கவனம். ஆழ்ந்த வாசிப்புத் திறன். புத்தகத்தைக் கையிலெடுத்துவிட்டால் கீழே வைப்பதில்லை. எப்போதும் படிப்புதான். வேறெதிலும் மனம் செல்லவில்லை. தனது மாளிகையின் ஒரு மூலையில்,  அமைதியான சூழலில், ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு ஏதோ தியானத்தில் இருப்பதுபோல் மணிக்கணக்காக ஆழ்ந்திருப்பது அவளுக்குப் பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது. வசதியான அப்பாவும் வீட்டில் நிறைய வாங்கிப்போட்டார்.  சிறப்பாசிரியர்களை வீட்டிற்கே வரவழைத்து, மொழிகளில் தனிப்பயிற்சி. தன் ஏழாவது வயதிலேயே பல்மொழி வித்தகர் என அழைக்கும் அளவுக்கு ஆகிவிட்டாள். க்ரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளில் சொந்த ஊர் மாஸ்டர்களே அவளை நிபுணியாக்கிவிட்டார்கள். மேலும், ஃப்ரெஞ்ச், ஸ்பேனிஷ் ஆகியவற்றையும் கற்ற அந்தச் சிறுமி பிற்காலத்தில், ஹீப்ரூ, அரபி மொழிகளையும்  விட்டுவைக்கவில்லை.  கவனியுங்கள். நமது சமகாலப் பெண்ணொருத்தியின் கதையல்ல இங்கே படித்துக்கொண்டிருப்பது. ஐரோப்பாவில் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு விசித்திரமான பெண்பற்றியது. இத்தாலியின் பிரதான மதமான கிறித்துவமும், கட்டுப்பெட்டித்தனமான அந்தக்கால சமூகச்சூழலும், பெண்களை ஆண்களுக்கு சரிநிகராக நடத்துவதை விடுங்கள் – ஒப்பிட்டுப் பேசுவதைக்கூட, கடுமையாகக் கண்டித்த, நிராகரித்த ஒரு காலகட்டம். பிஷப் சொன்னால் போதும். அதுவே மந்திரம். அப்படியே தொடர்வதே வழக்கம். சாதாரண மக்களின் கடுமையான orthodoxy. இத்தகைய சூழலிலும் அதிசயமாக விளைந்துவிட்டது அந்த முத்து.

அந்த சிறுமி வளர்ந்து பெரியவளான பின்னும், அவளது படிப்பு பலதுறைகளுக்கும் நீண்டது.  தர்க்கவியல், இயற்பியல். வானவியலென ஈடுபாடு வளர்ந்தது. கணிதத்திற்குள் நுழைந்து ஆழ்ந்த நாட்களுமுண்டு. அவ்வப்போது, ஹார்ப், வயலின் போன்ற இசை வாத்தியங்களிலும் அவளுடைய விரல்கள் விளையாடிவந்தன. தொட்டதில் எல்லாம் ஒரு மேன்மை. சரஸ்வதி தேவியே இத்தாலியில் வந்து இறங்கிவிட்டாளா?

இந்த நிலையில் ஒரு கட்டத்தில், இறையியல் (Theology) அந்த இளம்பெண்ணின் மனதை வெகுவாகக் கவர்ந்திழுத்தது. அதில் பட்டப்படிப்பிற்காக, வெனிஸுக்கு அருகிலிருந்த, உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான பதுவா பல்கலைக்கழகத்தில் (University of Padua, founded in 1222) சேர்ந்து பயின்றுவந்தாள். பட்டம் கிடைக்க இருக்கையில் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து முணுமுணுப்பு, எதிர்ப்பு. ஒருவழியாக பல்கலைக்கழகத்தினர் அவர்களை சமாளித்து, அந்தப் பெண்ணிற்குப் பட்டம் கொடுத்துவிட்டனர்.

Elena Cornaro Piscopia

சரி,  படிக்கும் ஆசை இப்பவாவது கொஞ்சம் குறைந்ததா? இல்லை. அது தீயாய் வளர்ந்துகொண்டிருந்தது. இறையியலில் நீங்காத கவனம். மேற்படிப்பை மேலும் தொடர்ந்தவள், இறையியலில் முனைவர் பட்டத்திற்கு (Doctor of Theology,)  பல்கலைக்கழகத்தில், தன் பெயரைப் பதிவுசெய்து, படிக்க ஆரம்பித்தாள். 1669-ல் தன் 26-ஆவது வயதில், The Colloquy of Christ (அல்லது Dialogue of Christ – யேசுவின் உரையாடல்)-ஐ ஸ்பேனிஷிலிருந்து இத்தாலிய மொழிக்கு, திறம்பட மொழியாக்கம் செய்துவிட்டாள். கேள்விப்பட்ட, பதுவா மற்றும் வெனிஸ் நகர அறிஞர்கள், பேராசிரியர்கள்  அரண்டுபோயினர்.

வருடம் 1672-ல் முனைவருக்கான மேற்படிப்பு முடிவுபெற்று, டாக்டர் பட்டம் கொடுக்கப்பட இருக்கும் நாளும் நெருங்கியது. வெனிஸின் கிறிஸ்துவ சபை, பெண்களை இறையியல், தத்துவம் போன்ற விஷயங்களில் தலையிடுவதைத் தடைசெய்திருந்த காலகட்டம். ஒரு பெண்ணிற்கு டாக்டர் பட்டம் கிடைக்கவிருக்கிறது என்கிற செய்தி நகரில் கசிய ஆரம்பித்தது. அவ்வளவுதான். பொங்கிவிட்டது கத்தோலிக்க கிறிஸ்தவ சபை. குறிப்பாக, பதுவா நகர பிஷப் (Bishop of Padua), க்ரெகோரியோ கார்டினல் பார்பரிகோ (Gregorio Cardinal Barbarigo). ‘அவள் எவ்வளவு புத்திசாலியாக இருந்தால்தான் என்ன? போயும் போயும் ஒரு பெண்ணுக்கா டாக்டர் பட்டம் தருவது? சமூகத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கறதா பல்கலைக்கழகத்தில நீங்கல்லாம் கூடி முடிவு பண்ணிட்டீங்களா?  – என்கிற ரீதியில் பெருஞ்சத்தம்போட்டு, பலவிதத் தடைகளை எழுப்பி, அந்தப் பெண்ணிற்கு டாக்டர் பட்டம் தரப்படுவதற்குக் குறுக்கே வரிசைகட்டி நின்றனர். ஆறு வருட ஓயாத போராட்டத்துக்குப் பின் கத்தோலிக்க திருச்சபை மசிந்தது. எதிர்ப்புகள் ஒருவழியாக சமாளிக்கப்பட்டன.  அவளுக்கு டாக்டர் பட்டம் அளிக்க பதுவா பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டன. அதன் இறுதிக்கட்டமாக, அறிஞர், நிபுணர் குழுவொன்றினால் அவள் நேர்முகத் தேர்வு செய்யப்படுவாளென அறிவிக்கப்பட்டது. பல்கலையின் மாணவர்கள், பழைய மாணவர்களோடு, இத்தாலியின் ஏனைய பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், வெனிஸ் செனட்டர்கள்,  பல்துறை அறிஞர்கள் உட்பட பலர், இதுவரை நிகழ்ந்திராத,  அந்த நம்பமுடியாத காட்சியைப்  பார்க்க விரும்பியதால், பல்கலைக்கழக வளாகத்தில் தேர்வை நடத்தமுடியாது எனப் புரிந்துகொண்டார்கள். 1678-ல் அந்த நேர்முகத்தேர்வு பெரும்பாலானோரின் விருப்பப்படி, பதுவா நகரின் கத்தீட்ரல் முன் உள்ள பெரும் மைதானத்தில் நிகழ ஏற்பாடு செய்யப்பட்டது.

தேர்வின்போது, தேர்வுக்குழுவின் துறைசார்ந்த நிபுணர்களால், சில நேரான, சில கடுமையான, மேலும் சில குண்டக்க மண்டக்கக் கேள்விகளுக்கு ஒரு பெண் – ஆ.. ஒரு பெண் – நேர்கொண்ட பார்வையில், நிதானமாக, தெளிவான குரலில், சரியான பதிலளித்தது, அனைவரையும் வாய்பிளக்கவைத்தது. அட, இப்படியெல்லாமா இந்த நாட்டில் நடக்கும் ! நேர்முகத்தேர்வுக்குப் பின் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அறிஞர்கள், செனட்டர்கள் என குழுமியிருந்த பிரமுகர்கள்முன் பேச அழைக்கப்பட்டாள் அவள். தனது வளமான குரலில், க்ளாசிக்கல் லத்தீன் மொழியின் அழகுபொங்க,  சுமார் ஒருமணிநேரம் தத்துவஞானி அரிஸ்டாட்டிலின் படைப்பு ஒன்றைப்பற்றி தத்ரூபமாக விளக்கி அவள் பேசியபோது, அனைவரும் அசையாதிருந்து, உன்னிப்பாக அவளது பேச்சைக் கேட்டார்கள். இறுதியாக, அந்த அதிசயப்பெண், உயர் மதிப்பெண்களுடன் டாக்டர் பட்டத்திற்கு தேர்வாகிவிட்டதாக பல்கலைக்கழகக் குழுவினரால்  அறிவிக்கப்பட்டபோது, பதுவா நகர் மட்டுமல்ல, கேள்விப்பட்ட முழு இத்தாலியே ஆச்சரியத்தில் உறைந்தது. ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கும் செய்தி வேகமாகப் பயணித்து பெரும் அதிர்ச்சியைத் தந்தது.   என்ன! நிஜந்தானா? ஒரு லேடி  பி.ஹெச்.டி..?

1678-ஆம் ஆண்டிலேயே, பதுவா பல்கலைக்கழகம் அவளை கணிதப் பேராசிரியராக நியமனம் செய்தது. பேராசிரியராகப் பணியாற்றியபோதும் மேலும் படிப்பு படிப்பெனவே அவள் மனம் சென்றது.  அவளது படிப்பும், பண்பும், உழைப்பும், மாட்சிமையும் ஐரோப்பாவின் கல்விவெளியில்  நன்கு பரவ ஆரம்பித்திருந்தது.

என்ன தோன்றியதோ அவளுக்கு, தன் 11-ஆம் வயதில்,  வாழ்நாள் முழுதும் கன்னியாகவே இருப்பேன் என சங்கல்பித்துக்கொண்டிருந்தாள் அந்தப் பெண்.  அப்படியே இருக்கவும் செய்தாள். பின்னாளில், அவளுடைய தகுதிக்கு ஏற்ற சில அழகான ஆண்கள் அவள் கரம்பற்ற விரும்பியபோதும், இணங்கவில்லை அவள். டாக்டர் பட்டம் பெற்றபின், அடுத்த ஏழாண்டுகள் மேலும் படிப்பிலேயே ஆழ்ந்திருந்தாலும், தான, தர்ம காரியங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டினாள். அவளுடைய 38-ஆவது வயதில் கொடும் காசநோய் அவளைத் தாக்கியது. அதே வருடம்(1684), இவ்வுலக வாழ்வினிலிருந்து விலகிச் சென்றாள் அவள். வெனிஸ், பதுவா, ஸியெனா, ரோம் நகரங்களில் அவளுக்காக சிறப்பு இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அவள் படித்த பதுவா பல்கலைக்கழகம், தன் வளாகத்தில் அவளை சிலை ரூபமாக வரித்து வைத்துக்கொண்டது.

ஆண்களுக்கு நிகரான பெண்களின் சமத்துவம், முன்னேற்றம் நிகழ்ந்திராத ஒரு பின்புலத்தில், அந்தக் காலத்திலேயே டாக்டர் பட்டம் வாங்கிக் கலக்கிய,  உலகின் முதல் பெண்மணி எனப் போற்றப்படுகிறார்  இத்தாலிய தர்க்கவியலாளரும் (logician), அறிஞருமான எலினா பிஸ்கோப்பியா (Elena Piscopia). (முழுப்பெயர் Elena Cornaro Piscopia).  பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் (degree) வாங்கிய உலகின் முதல் பெண்ணும் இவரே.

Lady Elena, Lady Cornaro என்றெல்லாம் பின்னாளில் அழைக்கப்பட்ட எலினா பிஸ்கோப்பியாவின் வாழ்வுபற்றி ‘The Lady Cornaro : Pride and Prodigy of Venice’ எனும் ஒரு புத்தகம் 1999-ல்  Jane Smith Guernsey எனும் எழுத்தாளரால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கிறது.

**

Picture courtesy: Google

6 thoughts on “படிப்பு, படிப்பு, படிப்பு.. இப்படியும் ஒரு பெண் !

  1. இந்தியாவில் பெண்களை அந்நாட்களில் முன்னேற விடாமல் தடுத்தார்கள் என்று சொல்வார்கள். இங்கும் அதே தடைகளிருந்துள்ளன என்று தெரிகிறது.

    Like

  2. அங்கே அதாவது ஐரோப்பாவில் – இத்தகைய கெடுபிடிகள் அதிகமாகவே இருந்தன அப்போதெல்லாம். அவர்களது மறுமலர்ச்சி, முன்னேற்றம் எல்லாம் 19-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தான். ஒரு 200 வருடத்திற்குள்தான்- ஐரோப்பியர்கள் குறிப்பாக, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், இத்தாலி, க்ரீஸ், ஸ்பெய்ன் போன்ற நாடுகளின் ஆட்டபாட்டம் -women’s emancipation, women’s lib போன்ற ’புரட்சிக’ளெல்லாம். 11-ஆம் நூற்றாண்டிலிருந்து 18-ஆவது வரை அவர்களின் கதை, அவர்களின் குடும்ப வாழ்க்கை போன்றவைகளில் சுவாரஸ்யம் அதிகம்! சில பீரியட் ஹாலிவுட் படங்களைப் பார்க்க நேர்ந்தது!

    Like

  3. அருமையான தகவல். பகிர்வுக்கு நன்றி. இவர் பற்றிய டாகுமெண்ட்ரி படம் ஏதாவது வந்திருக்கிறதா?

    Liked by 1 person

    1. @ Banumathy V :

      டாக்குமெண்ட்ரி வெளிவந்திருப்பதாகத் தெரியவில்லை.

      எலினா பிஸ்கோப்பியா பற்றி மேலும் சில விபரங்கள் கிடைக்க, இப்போது சேர்த்திருக்கிறேன். படித்துப் பார்க்கவும். நன்றி.

      Like

  4. வியக்கவைக்கும் பெண்மணி. அறிந்திராத செய்தியை இப்பதிவு மூலமாக அறிந்தேன். நன்றி.

    Liked by 1 person

Leave a reply to ஸ்ரீராம் Cancel reply