சுஜாதா காட்டிய ஆக்டன் நாஷ்

சுஜாதா ஒரு கவிதை  ப்ரியர். தமிழ் மட்டுமல்ல. ஆங்கிலக் கவிஞர்களையும் ஆசையாகப் படித்திருக்கிறார். அவர் யாரைத்தான், எதைத்தான் படிக்காமல் இருந்திருக்கிறார்? அல்லது  படித்ததில் தனக்குப் பிடித்ததுபற்றி எழுதாமல் இருந்திருக்கிறார்? சங்கக் கவிதையாக இருக்கட்டும்; சற்றுமுன் பிறந்து எழுத ஆரம்பித்துவிட்ட  கவிஞனாக இருக்கட்டும். தன்னிடம் வந்துசேர்ந்தால், அவர் அதை அக்கறையோடு படித்திருக்கிறார். தன் வாசகர்களுக்காக அதை எழுதி வைத்திருக்கிறார்.

அமெரிக்க சமகாலக் கவிஞரான ஆக்டன் நாஷ்-ஐ (Ogden Nash), ஐயா ரசித்திருக்கிறார் என அவரது கட்டுரை ஒன்றிலிருந்து தெரிகிறது. யாரிந்த நாஷ் எனத் தேடியபோது அவரைப்பற்றி இப்படி ஒரு கமெண்ட் கிடைத்தது: An Ogden Nash poem a day, keeps the sadness away ! அட, அமெரிக்க ஆப்பிளே! மரபிலிருந்து மாறுபட்டு, சுயமாக  வார்த்தைகளை சிருஷ்டித்தும்கூட எழுத்தில் சாகஸம் காட்டியவர் நாஷ். மென் கவிதைகள். எளிதாகத் தோன்றும் வரிகளில், ஹாஸ்யத்தோடு, தன்னை சுற்றி இருக்கும் சூழலின் ஆழ்ந்த அவதானிப்பையும் வெளிப்படுத்தியிருப்பார் .

அவரது சிறு கவிதைகள் சிலவற்றை எடுத்து, இங்கே மொழியாக்கம் செய்திருக்கிறேன்:

 

நடுவில்

காலையை எப்படியெல்லாம் தொடர்ந்தது மாலை

கடந்துபோன அந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்

எனக்குப் பிடித்தமான எவ்வளவோ விஷயங்கள்

இன்னும் இருக்கின்றன மறைந்துவிடவில்லை

இன்னமும் எனக்குப் பிடிக்கும் பல சங்கதிகள்

இன்னும்.. பிறக்கவே இல்லை

**

இந்தக் குயில்கள்

குயில்கள் மரபெதிர் வாழ்க்கையையே வாழ்கின்றன

கணவனாக மனைவியாக அவை தோற்றுப்போகின்றன

அதனால் மற்றவைகளின் மணவாழ்க்கையை

மறவாது தூற்றிப் போகின்றன..

**

அணில்

நான் கூச்ச சுபாவமுடையவன்

என் நண்பர்களனைவருக்கும் தெரியும்

என்னைவிட இரட்டிப்புக் கூச்சம்

அந்த அணிலுக்கு உண்டு

சின்னத்திரையின் ஒளிர்வரிகளைப்போல்

தீர்மானிக்கமுடியா மனதோடு

திகைப்போடு தாவும் இங்குமங்கும்

மேகத்தின் நிழலைப்போன்றது அல்லது

எமிலி டிக்கின்சனின்* சத்தமாக

வாசிக்கப்பட்ட கவிதை.

* Emily Dickinson: ‘The poet of paradox’ என அழைக்கப்பட்ட, 19-ஆம் நூற்றாண்டு அமெரிக்கப் பெண் கவிஞர்.

மோசமான தாத்தா

 

அப்பறமா வாங்கித்தரேண்டா கண்ணு!

என்று தாத்தா சொன்னாரானால்

எப்போதுமே அது கிடைக்கப்போவதில்லை

எனப் புரிந்துகொள்ள ஒரு குழந்தைக்கு

பெரிய புத்திசாலித்தனம் தேவையில்லை

*

விளம்பரப் பலகைகள்

 

மதர்ப்பாய் உயர்ந்து எங்கும் நிற்கின்றன

இந்த விளம்பரப் பலகைகள்

இதுகள் ஒழிந்தாலன்றி

மரங்களைப் பார்க்கும்

வாய்ப்பு வரப்போவதில்லை

**

அவன்

 

இந்தக் கல்லுக்குக் கீழேதான்

அவன் தூங்கிக்கொண்டிருக்கிறான்

விளம்பரத்தைப் பார்த்துக்கொண்டே வந்தவன்

வீதியைப் பார்க்க மறந்துவிட்டான் !

**

வள்ளுவர் பாணியில், கபீரின் சாயலில், க்ரிஸ்ப்பான   ஈரடிக் கவிதைகள் சில எழுதியிருக்கிறார் நாஷ். அதில் ஒன்றை அப்படியே ஆங்கிலத்தில் தந்திருக்கிறேன்.  மொழியாக்கம் செய்தால், முக அழகு  போய்விடும்!

God, in his wisdom,  made the fly

And then,  forgot to tell us why

**

கவிஞன் என்பவன் ஒரு கடவுள். அவனது எழுத்து அவனது சிருஷ்டி. அது எப்படியோ அது அப்படித்தான். இலக்கண சட்டகங்களை மற்றும் அற்பமான அளவுகோல்களைத் தாண்டியது அவனது கலை, என இங்கே புரிதல் வேண்டும். கீழ்வரும் கவிதையில், இலக்கணக்குற்றம் ’கண்டு’ முகம் சுழிக்கும் ’பண்டிதர்கள்’, இந்த இடத்தில் விலகிக் கொள்ளுங்கள். ஆசுவாசமடையுங்கள். ஆண்டவன் ஆசீர்வதிப்பாராக!

நாஷின் ஒரிஜினல், அப்படியே கீழே: ( மொழியை மாற்றுகிறேன் எனக் கையை வைத்தால் கழண்டுகொண்டுவிடும் எல்லாம் !)

Octopus

Tell me, O Octopus, I begs
Is those things arms, or is they legs ?
 
I marvel at thee, Octopus
 
If I were thou, I’d call me Us
 

(ரசித்த சுஜாதா, தன் வாசகர்களோடு பகிர்ந்துகொண்ட நாஷ் கவிதைகளில் இதுவும் ஒன்று!)

**

என் கனவு

 

இது என் கனவு

என் சொந்தக் கனவு

நான்தான் அதைக் கண்டேன்

என் தலைமயிர் ஒழுங்காக

வாரப்பட்டிருப்பதாக கனவு கண்டேன்

அப்புறம் இன்னொரு கனவும் கண்டேன்

என் உயிர்க்காதலி வந்து

அதைக் கலைத்துவிட்டதாக!

**

இன்று நான் சர்ச்சிற்குப் போகவில்லை

 

இன்று நான் சர்ச்சிற்குப் போகவில்லை

இறைவன் புரிந்துகொள்வார் நம்புகிறேன்

நீலமும் வெள்ளையுமாய் பொங்கும் கடல்

மணலில் சுற்றிச்சுற்றி மழலைகள் குழந்தைகள்

கோடைநாட்கள்* எவ்வளவு குறுகியவை

எனது காலமும்தான் எவ்வளவு குறைவானது

அவருக்குத் தெரியும் எல்லாம்

களித்து முடித்து அங்கு நான் வரும்போது

கடவுளுக்கும் எனக்கும் நேரத்துக்கென்ன பஞ்சம்

**

* இது அமெரிக்கக் கோடை எனப் புரிந்துகொள்க !

 

 

 

 

16 thoughts on “சுஜாதா காட்டிய ஆக்டன் நாஷ்

 1. வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ரசித்தேன். சுஜாதா கற்றதும் பெற்றதும் பகுதியில் சிலாகித்திருக்கிறாரோ…

  Liked by 1 person

 2. தலைவர் எதைத்தான் விட்டுவைத்தார்? தான் பெற்றதை இவ்வுலகமும் பெற வேண்டும் என்று தலைவர் தான் கற்றதை பெற்றதை கற்றதும் பெற்றதும் என்று பகிர்ந்திருக்கிறாரே.

  நான் க பெ ஏதோ ஓரிரண்டு அத்தியாயங்கள் வாசித்திருக்கிறேன். எங்காவது கண்ணில் தென்பட்டு வாசிக்கவும் கிடைத்த போது.

  இப்பகுதி வாசிக்கவில்லை.

  கவிதைகள் பல ரசிக்க வைக்கின்றன. விளம்பரம் பற்றிய கவிதைகள் அவன், காதலியால் தலைமுடி கலைந்தது எல்லாம் வாவ்!

  கடைசிக் கவிதை சுப்பர் //களித்து முடித்து அங்கு நான் வரும்போது

  கடவுளுக்கும் எனக்கும் நேரத்துக்கென்ன பஞ்சம்// அதானே என்ன பஞ்சம். இங்கிருக்கும் வரைதான் நேரமே கிடைப்பதில்லை!!!!!!!

  எமிலி பற்றி கொஞ்சம் தெரியும்.

  பதிவை ரசித்தேன் அண்ணா.

  கீதா

  Liked by 1 person

  1. @ கீதா:
   அவர் ஆக்டன் நாஷைக் குறிப்பிட்டதை, எப்போதோ படித்த நினைவு (க.பெ.-வில்தான், வால்யூம் 1 ?)

   எமிலி டிக்கின்சன், சில்வியா ப்ளாத் ஆகியோரைக் கொஞ்சம் படித்திருக்கிறேன் சில்வியாவைப்பற்றியும் ஸ்ரீரங்கத்துக்காரர் குறிப்பிட்டிருக்கிறார் என நினைவு.

   Like

 3. சுஜாதாவின் கற்றதும்,பெற்றதும் நூலில் சில வெளிநாட்டு கவிஞர்களின் கவிதைகளை குறிப்பிட்டிருப்பதை படித்திருக்கிறேன். ஆனால் அது ஆக்டன் நாஷ் தானா என்பது தெரியவில்லை.
  எனது காலமும்தான் எவ்வளவு குறைவானது

  //அவருக்குத் தெரியும் எல்லாம்
  களித்து முடித்து அங்கு நான் வரும்போது
  கடவுளுக்கும் எனக்கும் நேரத்துக்கென்ன பஞ்சம்//
  அருமை! அடடா போடவைத்த இன்னொரு கவிதை
  God, in his wisdom, made the fly
  And then, forgot to tell us why
  பகிர்வுக்கு நன்றி!

  Liked by 1 person

 4. அவர் எதை விட்டு வைத்தார். வாழ்வின் ஒவ்வொரு
  நொடியையும் வீணாக்காமல் ரசித்தே கழித்திருக்கிறார்.

  கற்றதும் பெற்றதும் படித்தே பிஹெச்டி செய்து விடலாம்.
  எந்த சப்ஜெக்ட் என்றுதான் தேர்ந்தெடுக்க முடியாது.
  ஆக்டென் நாஷ் கவிதைகளை நீங்கள் கொடுத்திருக்கும்
  விதம் மிக அருமை.

  ஆம் கோடை நாட்களை ரசித்துக் கொண்டிருக்கும் போதே மழை
  குறுக்கிடுகிறது.
  மூன்று மாதங்களில் குளிர் வந்து விடும்.
  சரியாகத் தான் சொல்லி இருக்கிறார்.
  மிக மிக நன்றி ஜி.

  Like

 5. கற்றதும் பெற்றதும் மொத்தத் தொகுப்பாய் கிழக்குப் பதிப்பகத்திலிருந்து வாங்கி வைத்திருந்தேன். யார் வாங்கிச் சென்றார்கள் என்று தெரியவில்லை, மிஸ்ஸிங். வாங்கிச் சென்றார்களா, தூக்கிச் சென்றார்களா தெரியவில்லை… கஷ்டமாய் இருக்கிறது.

  Like

  1. @ ஸ்ரீராம்:
   புத்தகம் தூக்கிச் செல்லப்பட்டிருந்தால் அது தப்பு. ஓசியிலேயே வண்டி ஓட்டுபவர்கள் உண்டு. யாரென்று நீங்கள் கண்டுபிடித்தால்தான், மேற்கொண்டு இழக்காதிருக்கமுடியும்.

   Like

 6. என் தந்தையா ர் கூறியது ந்னைவுக்கு வந்தது அவருக்கு என் எஸ் கிருஷ்ணனை மிகவும்பிடிக்கும் அவர் சொல்வார் நாமெந்த ஜோக் சொன்னாலும் அது ஜோக் ஆகாது எனெஸ் கிருஷ்ணன் சொன்னால்தான் ஜோக் அதேபோல் சுஜாதா எழுதி இருந்தால் அதுவே எழுத்தாகும்

  Like

  1. @ ஜி.எம்.பாலசுப்ரமணியம் :
   தந்தையார் நினைவைக் கிளப்பிவிட்டுவிட்டதா இது !

   Like

  1. @ முத்துசாமி இரா: //..எளிமையான தமிழ் மொழிபெயர்ப்பு..//

   ஆக்டன் நாஷின் கவிதைகளே அப்படிப்பட்டவைதான். அவர் அங்கு ஜனரஞ்சகமானதற்குக் காரணம் அவரது ஹாஸ்யமும், எளிமையும்தான்.

   Liked by 1 person

 7. விளம்பரப் பலகைகள் யதார்த்தத்தை, இன்றைய நிகழ்வைச் சுட்டுகின்றன. கவிஞர் எப்போ எழுதி இருந்தாலும் எக்காலத்துக்கும் பொருந்தும் போல் உள்ளது. அருமையான பகிர்வு. சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பைன்டிங்கில் வைச்சிருந்தேன். எங்கே போச்சோ! 😦

  Like

  1. @ கீதா சாம்பசிவம்:
   ஸ்ரீராமும் காணவில்லை என்கிறார் க.பெ.-வை. நீங்களும் எங்கே போச்சோ என்கிறீர்கள்! லவட்டிப்போய்ப் படிக்கும்படி அப்படி சுவாரஸ்யமாகத்தான் எழுதியிருக்கிறார் சுஜாதா!

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s