ஞானத்தின் ஒரு பொட்டு விதை

19-20 -ஆம் நூற்றாண்டு காலகட்டத்தின் மெய்யியல் ஞானி, கவிஞர், ஓவியர், சிற்பி என்றெல்லாம் எண்ணற்ற அபிமானிகள்,வாசகர்கள், ரசிகர்களின் வர்ணனைகள். மத்திய கிழக்கில், லெபனானில்  ஒரு மலைக் கிராமத்தில் (அந்தக்காலத்திய சிரியப் பகுதி) பிறந்து வளர்ந்து, அந்தப் பிரதேசத்தின் ஒரு மோசமான அன்னிய ஆதிக்கப் பின்புலத்தில், குடும்பத்துடனும் மற்றவர்களுடனும் லெபனானிலிருந்து புறப்பட்ட கப்பலொன்றில் ஏறி, அதுகொண்டுபோய்விட்ட தேசமான அமெரிக்காவில், புலம்பெயர்ந்து வாழ நேர்ந்தது அவருக்கு. நியூயார்க்கில் இளமைக் காலத்தைக் கழித்தவர். இளமைக்காலமா? உண்மையில், முதுமையின் பக்கமே அவர் வரவில்லை. 47-ஆவது வயதிலேயே ’போதும், வா!’ என்றுசொல்லிவிட்டதுபோலும், அந்த உலகம். அரேபிய மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதியவர். ‘தி ப்ராஃபிட் (The Prophet) அவருடைய உலகப்புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பு. வசன கவிதையாகப் பொழிந்திருக்கிறார் மனுஷன். ’முறிந்த சிறகுகள்’ (The Broken Wings) – அரேபிய மொழியில் அவரது முதல் நாவல் – பெரிதும் சிலாகிக்கப்பட்டது. பெரும்பாலான அவரது படைப்புகள் நண்பர்களுக்கு என எழுதப்பட்ட அரேபிய மற்றும் ஆங்கில மொழி கடிதங்களை ஆதாரமாகக்கொண்டவை.  சிறந்த ஓவியங்கள் பல வரைந்திருக்கிறார் எனினும் அவை லெபனானுக்கு அனுப்பப்பட்டதால், மேலைநாட்டு ரசிகர்கள், விமரிசகர்களின் பார்வையில் வரவில்லை. ஆகவே அதிகம் பேசப்படுவதில்லை.

ஒரு தேவதை போல,  காலமெனும் வெளியைக் கடந்த ஞானியாக, அவரை  மதித்த மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். அதில் சிலர், அவரது வார்த்தைகள் யேசுவையும், பழைய ஏற்பாட்டின் கருத்துக்களையும் எதிரொலிப்பதாகக் கூறுகின்றனர். உலகின் மற்றுமொரு பகுதியில், அவரை ஆபத்தானவராக, இளைஞர்களுக்கு விஷம் ஊட்டும் பாவியாகப் பார்த்து வெறுத்தவர்களும்  இருந்திருக்கிறார்கள். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அவரது அரேபியப் படைப்பான ‘Spirits Rebellious’ (புரட்சி ஆன்மாக்கள்) கட்டுக்கட்டாக  வீதியில் போட்டுக் கொளுத்தப்பட்டது. அவருக்கெதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். கலீல் ஜிப்ரான் (Khalil Gibran).

’ஆன்மாவின் கண்ணாடிகள்’ எனும் அவரது புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. கொஞ்சம் சிந்திக்கவைத்தது; கொஞ்சம் ஆழத்தில் அழுத்தி வேடிக்கை பார்த்தது.  லேசாக, பகிர்கிறேன்.

**

இந்த பூமி மூச்சுவிடுகிறது. நாம் வாழ்கிறோம். அது கொஞ்சம் நிறுத்திப்பார்க்கையில், நாம் இறந்துவிடுகிறோம்.

**

அழவைக்காத ஞானம், சிரிக்கவைக்காத தத்துவம், குழந்தைகளின் முன் பணியவைக்காத உயர்வு, புகழ் இவற்றிலிருந்து என்னைத் தள்ளி வை, இறைவா..

**

நம்மிடையே கொலைகாரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எந்தக் கொலையையும் செய்ததில்லை. திருடர்கள் இருக்கிறார்கள். எதையும் அவர்கள் திருடியதில்லை. பொய்யர்கள் இருக்கிறார்கள். உண்மையைத் தவிர வேறெதையும் அவர்கள் பேசியதில்லை.

**

அடுத்தவீட்டுக்காரனிடம் உன்னைப் பாதிக்கும் பிரச்னைபற்றி நீ பிரஸ்தாபிக்கையில், உன் இதயத்தின் ஒரு பகுதியை  அவனுக்குக் காண்பிக்கிறாய். அவன் அருமையான ஆத்மாவானால், உனக்கு நன்றி சொல்கிறான். சிறுமனதுக்காரன் எனில், உன்னைக் குறைசொல்லி ஏளனம் செய்கிறான்.

**

எதையும் மறுப்பதென்பதும், எதிலும் வேறுபடுவது என்பதும், மனித அறிவின் (intelligence) கீழ்நிலையே.

**

எவ்வளவு உச்ச ஆனந்தம் அல்லது துக்கத்தில் நீ இருக்கிறாயோ, அதற்கு எதிர்விகிதமாக, உன் கண்களுக்கு இந்த உலகம்  சிறியதாகத் தோன்றும்.

**

வீரம் என்பது ஒரு எரிமலை. குழப்பத்தின் விதை அதற்குள்ளே முளைக்காது.

**

பிரபஞ்சத்தில் ஒளிந்துகொண்டிருக்கும், பிரபஞ்சத்திலேயே, பிரபஞ்சத்திற்காகவே  இருக்கும் ஓ! உயர் ஞான வடிவே! நான் சொல்வதைக் கேட்க உன்னால் முடியும் – ஏனெனில், எனக்குள்ளேயேதானே இருக்கிறாய் நீ. என்னை உன்னால் பார்க்கமுடியும் ; நீதான் அனைத்தையும் பார்ப்பவனாயிற்றே. உனது ஞானத்தின் ஒரு பொட்டு விதையை என் ஆன்மாவுக்குள் விதைத்துவிடு. உன் காட்டில் அது முளைத்து வளர்ந்து, உன் பழமொன்றைத்  தரட்டும்.

**

குறிப்பு: கொஞ்சம் இடைவெளிவிட்டு, ஜிப்ரான் பற்றி மேலும் எழுதுவேன் எனத் தோன்றுகிறது ..

10 thoughts on “ஞானத்தின் ஒரு பொட்டு விதை

  1. //எதையும் மறுப்பதென்பதும், எதிலும் வேறுபடுவது என்பதும், மனித அறிவின் (intelligence) கீழ்நிலையே.//

    முக்கியமான இதனை, இப்போதுதான் அறிகிறேன். நன்றி.

    Liked by 1 person

  2. எதையும் மறுப்பதென்பதும், எதிலும் வேறுபடுவது என்பதும், மனித அறிவின் (intelligence) கீழ்நிலையே/ அதற்காக எல்லாவற்றையும் ஏற்க முடியுமா .

    Like

    1. @ GM Balasubramaniam:

      எல்லாவற்றையும் ஏற்று வாழுங்கள் என்று யார் சொன்னது?

      Like

  3. எதையும் மறுப்பதென்பதும், எதிலும் வேறுபடுவது என்பதும், மனித அறிவின் (intelligence) கீழ்நிலையே.//

    செம! செம! அது போல பொட்டு விதைக்கக் கேட்டக் கவிதையும் அருமை!

    மிகவும் ரசித்தோம்…

    Like

Leave a comment