எனக்காகப் பரிந்துகொண்டுவந்த அம்மா ..

 

ஒன்பது வயதுதானிருக்கும் எனக்கு அப்போது. அன்று அந்த பெரிய லைப்ரரியில் முன்பு எடுத்த புத்தகத்தைத் திருப்பிக்கொடுத்தபின், வரிசை வரிசையாக நின்றிருந்திருந்த விதவிதமான புத்தகங்களை, ஆசை ஆசையாய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். அம்மா திரும்பி வந்து என்னை பிக்-அப் செய்யுமுன், ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு கிளம்பவேண்டும்.

அப்போதுதான் என் கண்ணில் பட்டது அந்தப் புத்தகம் . பார்த்தவுடனேயே பிடித்துவிட்டது. குறிப்பாக  அட்டையில் வரையப்பட்டிருந்த அந்தப் படங்கள்..ஆஹா! என்ன அழகு.. உள்ளே கடலுக்கடியில் ஏதோ இருப்பதாக…ஒரு புது உலகத்தை அல்லவா அது காண்பித்தது. கடலுக்கடியில் வாழ்வது என்கிற ஐடியாவே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது ஒரு பெரிய புத்தகம் என்பதோ, அதன் எழுத்துக்கள் சிறியதாக, நெருக்கமாக அச்சடிக்கப்பட்டிருந்ததோ எனக்கு ஒரு பொருட்டாக இல்லை. நான் அதையெல்லாம் பார்க்கவேயில்லை. அதைத் தூக்கிக் கொண்டு லைப்ரரியன்  முன் வந்து நின்றேன்.

லைப்ரரியன் அந்தப் புத்தகத்தைப் பார்த்தார். ‘Twenty Thousand Leagues Under the Sea’  by Jules Verne. பிறகு குனிந்து என்னை ஆழமாகப் பார்த்தார். என்ன பார்க்கிறார்? நானும் குனிந்து என்னை ஒருமுறை பார்த்துக்கொண்டேன். சட்டையை நான் சரியாகப் போட்டுக்கொண்டிருக்கவில்லை.. என் ஒரு காலின் ஷூ லேஸ் அவிழ்ந்துவிட்டிருந்தது. அவர் என்னைப் பார்த்துச் சொன்னார். ’இந்தப் புத்தகம் உனக்குக் கடினமானது!’ அதைத் தூக்கித் தன் பின்னாலிருந்த ஒரு ஷெல்ஃபின் வரிசையில் போட்டார். அதற்கு ஒரு லாக்கரிலேயே அதை வைத்துப் பூட்டியிருக்கலாம் எனத் தோன்றியது எனக்கு. ஏமாற்றத்துடன், தலை குனிந்தவாறு திரும்பினேன். மேற்கொண்டு குழந்தைகளுக்கான புத்தகப் பகுதிக்கு வந்தேன். குரங்குப் படம் போட்ட ஒரு படக்கதைப் புத்தகம். எடுத்துக்கொண்டு லைப்ரரியனிடம் வந்தேன். அவர் அதை உடனே ஸ்டாம்ப் அடித்துக் கொடுத்துவிட்டார்.

சிறிது நேரத்தில் என் அம்மா. லைப்ரரி முன் எங்கள் கார் மெல்ல வந்து நின்றது. நான் லைப்ரரி வாசல் கதவைத் திறந்துகொண்டு இறங்கினேன். காரில் ஏறி அம்மாவுடன், முன் சீட்டில் உட்கார்ந்துகொண்டேன். மடியில் அந்த குரங்குப் புத்தகம்.  அம்மா இக்னிஷனை ஸ்டார்ட் செய்தாள். கார் நகர்ந்தது. மெல்ல என் புத்தகத்தை நோட்டம் விட்டாள்.

‘நீ இந்தப் புத்தகத்தை முன்பே படித்திருக்கவில்லை?’  கேட்டாள் அம்மா.

’ம்..!’ என்றேன் எங்கோ பார்த்துக்கொண்டு.

’பின் ஏன் வேறொரு புத்தகம் எடுக்கவில்லை?’ மீண்டும் விடாது அம்மா.

”அது எனக்குக் கடினமானதாம். அவர் சொன்னார்..’ என்றேன்.

’யார் அந்த அவர்? என்ன கடினமானது உனக்கு?’

’அந்த லைப்ரரியன் லேடிதான் அப்படிச் சொன்னது!’.

அம்மா வண்டியை உடனே திருப்பினாள். மீண்டும் லைப்ரரி முன்வந்து நின்றாள். என்னை அழைத்துக்கொண்டு வேகமாக நடந்தாள். கதவைத் திறந்துகொண்டு லைப்ரரிக்குள் சென்றோம். லைப்ரரியன் முன் நாங்கள் இருவரும் இப்போது.  என்ன? – என்பதுபோல் எங்கள் இருவரையும் பார்த்தார் அந்த லைப்ரரியன்.

’ஏதோ கடினமானது இவனுக்கு என்று சொன்னீர்களாமே!’ – அம்மா ஆரம்பித்தாள். குரலில் சற்றுக் கோபம்.

லைப்ரரியனின் முகம் இறுகியதைப் பார்த்தேன். பின் பக்கம் திரும்பி ஷெல்ஃபிலிருந்து அந்தப் புத்தகத்தை எடுத்தார். மேஜையின் மேல் வைத்தார்:

‘ஜூல்ஸ் வர்ன்’-இன்,  ’ட்வெண்ட்டி தௌஸண்ட் லீக்ஸ் அண்டர் த ஸீ ! ’ என்றார் புத்தகத்தைக் காண்பித்து. இப்போ புரியுதா இது இவனுக்கு சரியா வராதுன்னு என்பதுபோலிருந்தது லைப்ரரியனின் பார்வை.

என் அம்மா புத்தகத்தை சரியாகப் பார்க்கக்கூட இல்லை. ’இதை இஷ்யூ பண்ணுங்கள் முதலில்!’ என்றார் குரலை உயர்த்தி, அழுத்தமாக. வயது முதிர்ந்தவர்களிடம் இப்படியெல்லாம் பேசுபவளில்லை,  என் அம்மா . நான் பயந்துபோனேன்.

லைப்ரரியன் வேறு வழியின்றி அதனை ஸ்டாம்ப் செய்ததுதான் தாமதம்.

’இனிமேல் இவனுக்கு எதுவும் கடினமானது என்று சொல்லாதீர்கள்!’ அம்மா அதனை உடனே எடுத்து என் கையில் திணித்தாள்.

‘வா!’ என்று என்னிடம் சொல்லிவிட்டு வேகமாகக் கதவை நோக்கி நடந்தாள். அம்மாவின் பின்னே புத்தகத்துடன் ஓடினேன். கதவைத் திறந்து காரில் ஏறினாள். நான் அம்மாவுக்கருகில் உடனே தவ்வி உட்கார்ந்துகொள்ள, காரை ஸ்டார்ட் செய்து வேகமெடுத்தாள். நாங்கள் இருவரும் ஏதோ ஒரு வங்கியைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பி ஓடுவதுபோன்ற குற்ற உணர்ச்சி பரவியிருந்தது என் மனதில். கூடவே, போலீஸ் நம்மைத் துரத்திக்கொண்டுவருவார்கள்.. நாம் மாட்டிக்கொள்ளப்போகிறோம் என்பதுபோன்ற கடும் அச்சம். பதற்றத்துடன் அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். சலனமில்லை. நிதானமாகக் காரை ஓட்டிக்கொண்டிருந்தாள்..

*

நாம் மிகவும்  நேசிக்கும் ஒரு நபருடன் கழிக்க, மீண்டும் ஒரு நாள் கிடைத்தால், அந்தப் பொழுதை எப்படி செலவழிப்போம்  என்கிற ஏக்கமான சிந்தனை எழுப்பும் நெருக்கமான உணர்வினைப்பற்றிச் சொல்கிறது, அமெரிக்க எழுத்தாளரான மிட்ச் ஆல்பம் எழுதிய ’இன்னுமொரு நாளுக்காக’ (‘For one more day’ by Mitch Albom) என்கிற தத்துவார்த்தமான நாவல்.

மேலே நான் எழுதியிருப்பது, ‘For One More Day’-ல், தன் அம்மா சம்பந்தப்பட்ட சிறுவயது நிகழ்வொன்றை, பிற்காலத்தில் ஹீரோ அசைபோடும் அத்தியாயம் ஒன்றிலிருந்து.

மேலும் –

Mitch Albom, American Writer

எழுத்தாளர்களின் பாடு பெரும்பாடுதான்போலிருக்கிறது எங்கும். இந்திய, குறிப்பாக தமிழ்நாட்டு படைப்பு/பதிப்புச் சூழல் மிகவும் அபத்தமானது. வெளிநாடுகளில் இவ்வளவு மோசமில்லை. பிரசுரித்து வெளியிட்டுவிடலாம், ஓரளவு முயற்சியும், வசதியும், சரியான தொடர்பும் இருந்தால். ஆனாலும்  எழுத்தாளன் என்றாலே, ஒரு எகத்தாளம்தான், கிண்டல்தான், கேலிதான் அங்கும்.  ஒரு பிரபல அமெரிக்க பிரசுரிப்பாளர், எழுத்தாளர் மிட்ச் ஆல்பமிடம் சொன்னது: ‘உங்களால், கடந்தகால நினைவுகளின் தொகுதி (Memoirs) ஒன்றை எழுதவேமுடியாது !’ பப்ளிஷிங் ஹவுஸ் நடத்துபவர்கள், பணம்படைத்தவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் உலகெங்கும். இதையெல்லாம் தாண்டித்தான், எழுத்தாளர்கள் முளைவிட்டு வளரவேண்டியிருக்கிறது..

**

17 thoughts on “எனக்காகப் பரிந்துகொண்டுவந்த அம்மா ..

  1. twenty thousand leagues under the sea நானும் வாசித்த நினைவு அதே திரைப்ப்சடமாகவு வந்திருக்கிற்து சிலவிஷயங்க்சள் நினைவில் இருப்படுபோல் பலடும் நினைவில் இல்லை பாழும்வயதா காரணம்

    Liked by 1 person

    1. @ GM Balasubramaniam:

      மறந்திருக்கலாம். அதற்காகப் பாழும் வயதையா குறை சொல்வது!

      Like

    1. @ ஸ்ரீராம்: இரண்டு கமெண்ட் போட்டதாய்த் தெரிகிறது.

      முதல் கமெண்ட் அனில் கபூர், ஸ்ரீதேவியின் ‘மிஸ்டர் இந்தியா’ போல் கண்ணுக்குத் தெரியமாட்டேன் என்கிறதே!

      இரண்டாவது: !

      Like

  2. நல்ல அம்மா, நல்ல குழந்தை! அந்தப் புத்தகம் அப்புறம் படிக்கப்பட்டதா என்றும் சொல்லி இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும். ஏழு வயசுக்குப் பொன்னியின் செல்வன் படிக்கையில் என்னையும் இப்படித் தான் சொன்னார்கள். ஆனால் என் அம்மா கிட்டே உட்கார்ந்து என்னை வாய்விட்டுப் படிக்கச் சொல்லி சோதனை செய்து பின்னர் மனசுக்குள் படிக்குமாறு சொன்னார். சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க. அதன் பின்னர் தமிழ் படிக்கவே மிக எளிதாகவும் சுவையாகவும் இருந்தது. துண்டு பேப்பர் கிடைச்சால் கூட விடறதில்லை. அதோடு சரித்திரத்தில் ருசியும் அதிகம் ஆனது.

    Like

    1. @ கீதா சாம்பசிவம்:
      நீங்களும் ஏழு வயதிலேயே அந்தக் குண்டுப் புத்தகத்தைத் தூக்கிவிட்டீர்களா! தமிழ்நாடே பொன்னியின் செல்வன் மட்டும் படித்துக்கொண்டிருந்த காலகட்டம்போலும்! அனேகமாக அதைப் படிக்காத ஒருத்தன் நான்மட்டும்தான் என நினைக்கிறேன்..

      Like

  3. ஏகாந்தன் அண்ணா அந்த அம்மா, பிள்ளையை மிகவும் ரசித்தேன்! இருவருமே சூப்பர்! அந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. உன்னால் முடியும் தம்பி எனும் அம்மா!! என்னால் முடியும் எனும் பிள்ளிய!! சூப்பர்.

    அருமையா . எனக்கு நான் சின்ன வயதில் என் மகன் படிக்கக் கொஞ்சம் கஷ்டப்பட்ட போது அவனை உன்னால் முடியும் தம்பி என்ற போக்கில்தான் அவனுக்கு நிறைய புத்தகங்கள் அறிமுகப்படுத்தினேன். அவன் இப்போது எனக்குச் சொல்லுகிறான்! ஹா ஹா ஹா

    ரசித்தோம் அண்ணா

    கீதா

    Liked by 1 person

  4. @ கீதா:
    அந்த அம்மாவைப்போலவும், உங்களைப்போலவும் நிறைய அம்மாக்கள், எங்கெங்கோ ஒளிந்துகொண்டுதானிருக்கிறார்கள். அவர்கள் எப்போது தலைகாட்டுவார்கள் எனக் காத்திருக்கவேண்டியதுதான்! இப்படி வளர்க்கப்படும் பிள்ளைகளும் மேலெழும்பி ஜோராக வருவார்கள்.

    Like

Leave a comment