ஒன்று கேட்டால் .. நான்கா ?

 

புத்திரனால், விடாது விரட்டியது வேதனை, தசரத சக்ரவர்த்தியை. அப்படியா.. எப்படி? அழகான, குணவதிகளான மனைவிகள் இருந்தும், புத்திரன் ஒருவனும் இல்லையே என்று ஆரம்பத்தில் ஏங்கியிருந்தான். பெரும் துன்பத்துக்குள்ளானான். மகன் என்று ஒருவன் வருவதற்கு முன்பே மனக்கஷ்டம். இன்னும் வராத பிள்ளைக்காக அனுபவித்த வேதனை. ஒரு பிள்ளைக்காக உருகி, தவமிருந்து யாசித்தான், அந்த பகவானிடம். இந்தா பிடியென அவன் கொடுத்தது ஒன்றுக்கு நான்காக பிள்ளைகள். நான்கு பேரும் எப்படி? ரத்தினங்கள். அவனுக்கு மனதிற்கு மிகவும் இதமான சத்புத்திரர்கள். ஆஹா, என்னே அவன் கருணை என லயித்திருந்தான் தசரதன்.  ஆனால், அந்த சந்தோஷமும் வெகுநாள் நீடிக்கவில்லை. வினைப்பயனால் தன் கண்ணின் மணியான மூத்தவனை, பேரழகனான ராமனை, அவனது இளம்பிராயத்திலேயே கொடிய விலங்குகள் உலாவும் வனத்துக்கு அனுப்பும்படியாயிற்று. ஒன்றல்ல, இரண்டல்ல, பதினான்கு வருடங்கள். ’அண்ணன் தனியாகவா போவான் வனத்துக்கு, தன் மனைவியோடு, நானும் போவேன் அவர்களுக்குப் பாதுகாப்பாக..’ என்று இளையவனும் தந்தையைப் பிரிந்து, தமையனோடு சென்றான். இப்படி, இருந்தும் அருகில் இல்லாத பிள்ளைகளினால், வயசான காலத்திலும் தசரதனை விடாது விரட்டியது துக்கம்.

அது ஒரு பக்கம். ஒன்றுதானே கேட்டான் தசரதன்.  இறைவன் ஏன் நான்கு கொடுத்தான்? பக்தன் கேட்டது ஒரு புறமிருக்க, அவனுக்கு எப்பொழுது, என்ன கொடுக்கவேண்டும் என்று அந்த பகவான் நினைக்கிறான்; முடிவெடுக்கிறான். நான்கு உத்தம மனிதர்கள் மூலம் முக்கியமாக சில விஷயங்களை உலகிற்குச் சொல்ல என, தசரதனுக்குப் பிள்ளைகளாக அவர்களை அனுப்பிவைத்தான். அப்படியென்ன சீரிய விஷயங்கள் அவை?

அன்பாகப் பெற்று, ஆசை ஆசையாய் வளர்த்த பெற்றோரிடம், பிள்ளைகள் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? ஞானவழிகாட்டும் குருவுக்கு, சிஷ்யர்கள் ஆற்றவேண்டிய கடமைகள், காண்பிக்கவேண்டிய மரியாதைகள் என்னென்ன? தன்மீது ஆழ்ந்த அன்புகாட்டி, தன்னைக் கண்போல் பாதுகாக்கும் கணவனிடம், மனைவியானவள் எப்படியிருக்கவேண்டும்? சாமான்யர்களுக்கான இப்படிப்பட்ட வாழ்வியல் நெறிமுறைகள் ‘சாமான்ய தர்மம்’ எனப்பட்டது. இந்த அறநெறிகளை, எத்தனையோ இன்னல்கள், சோதனைகளின் ஊடேயும்  வாழ்வு நெடுக நிலைநாட்டி, மனிதகுலத்திற்கே வழிகாட்டியாக நின்றான் தசரதனின் பிள்ளைகளில் மூத்தவனான ராமன்.

சாதாரணமாக செய்யவேண்டிய இத்தகு தர்மங்களை சீராக, சிறப்பாக செய்துவரும் நிலையில், ஒருவனது வாழ்வில் ஒரு கட்டத்தில், எல்லோருக்கும் விதவிதமாய்க் கடமை பல செய்துவிட்டேன்;  இனி பகவானின் திருவடிகளில் விழுந்து கிடப்பதைத் தவிர வேறு ஒன்றும் வேண்டாம் எனத் தோன்ற ஆரம்பிக்கும். இவ்வாறு தெய்வமே எல்லாம் என்று ஒருவன் இறுதியாக வந்துவிட, அவன் அந்நிலையில் மனமொன்றி வாழ்வது ’சேஷ தர்மம்’. இந்த தர்மத்திற்கு சிறந்த வாழ்வியல் உதாரணமாக விளங்கியவன் ராமனின் இளவலான லக்ஷ்மணன். ’எத்தனையோ கடமைகளை சிறுவயதிலிருந்தே ஆற்றியாகிவிட்டது. இனி  அண்ணன் ராமனே எனக்கு எல்லாம்’ என்று அவன் பின்னேயே போய்விட்டவன் லக்ஷ்மணன்.

எல்லாவற்றையும் சிருஷ்டித்து ரட்சித்து, நிர்வகித்து, வரும் அந்த பகவான், கண்ணிலேயே தட்டுப்படுவதில்லை; கண் எட்டா, மனம்கூட நெருங்கா தூரத்தில் இருந்தபோதும், அதனால் மனம் சோர்ந்துவிடாது,  எப்போதும் அவன் நினைவாகவே  வாழ்க்கையை வாழ்வது ’விசேஷ தர்மம்’ எனப்படும். லௌகீக வாழ்விலிருந்து விலகி, எங்கோ தூரத்து வனத்தில் வசிக்கும்  அண்ணனையே நினைந்துருகி, அரண்மணையில் வாழ்ந்தும் அவனைத் தவிர வாழ்வில் வேறொரு சிந்தனையில்லை என தவம்போல் வாழ்ந்து, கண்டோரை, கேட்டோரை பிரமிக்கவைத்தவன் பரதன். விசேஷ தர்மத்திற்கு உன்னத உதாரணம் இவனே.

நான்காவது தர்மம் இருக்கிறதே அது  மற்ற மூன்றிலிருந்து வித்தியாசமானது. பகவானின் புகழ் சொல்வது, வணங்கிவருவது ஒருபுறமிருக்கட்டும். அவனிலேயே ஆழ்ந்து, பித்தர்களாய் அலைந்து திரியும் அடியவர்களுக்கு மனமார்ந்த சேவை செய்து வாழ்வதே உயர்ந்தது என ஒருவன் நினைத்து,  தன் வாழ்வை அதற்கேற்றவாறு பரிபூரணமாக அமைத்துக்கொண்டால், அவன் கடைப்பிடிக்கும் தர்மம் ’விசேஷத தர்மம்’ ஆகும். ராமனில்லா அரண்மனையில் சோகம் கண்டு, அவன் நினைவாகவே நல்லாட்சி செய்துவரும் பரதனைப் பார்த்து உருகுகிறான் அவன் தம்பி ஷத்ருக்னன். இத்தகைய மென்மையும், மேன்மையும் உடைய பரதனுக்கு நான் என்ன செய்வது என சிந்தித்தான். அவனுக்கு இடையறாது பணிசெய்து கிடப்பதே எனக்கு உகந்தது; உத்தமமானது எனப் புரிந்தவனாய்,  அப்படியே தன் வாழ்வை அமைத்துக்கொண்டான்  ஷத்ருக்னன். விசேஷத தர்மத்தை இவனைத் தவிர வேறு எவனும் விளக்கிவிடமுடியாது.

இத்தகைய நான்குவகையான வாழ்வியல் அறங்களை, சாதாரண மனிதரும் சரிவரப் புரிந்துகொள்ளுமாறு செய்யவேண்டும் ; அதவும் சக்ரவர்த்தி தசரதனின் பிள்ளைகள் மூலமாகவே தெரிவிக்கவேண்டும் என மனங்கொண்டான்  பரந்தாமன்.  ’எனக்கும் ஒன்று கொடேன்!’ என்று ஒரு குழந்தைக்காக மன்றாடிய மன்னனுக்கு, ஒன்றுக்கு பதில் நான்கு புத்திரர்களை இப்படித்தான் அருளினான் அந்தக் கருணாமூர்த்தி.

**

10 thoughts on “ஒன்று கேட்டால் .. நான்கா ?

 1. ​//’அண்ணன் தனியாகவா போவான் வனத்துக்கு, தன் மனைவியோடு, நானும் போவேன் அவர்களுக்குப் பாதுகாப்பாக..’ //


  ​’தன் மனைவியோடு​அண்ணன் தனியாகவா போவான் வனத்துக்கு, நானும் போவேன் அவர்களுக்குப் பாதுகாப்பாக..’

  அந்த வாக்கியம் இப்படி அமைந்தால் பொருள் மாறாமல் இருக்கும். இல்லா விட்டால் ஊர்மிளையும் வானம் புக வேண்டியிருக்கும்!

  Like

  1. @ ஸ்ரீராம்: //..இல்லா விட்டால் ஊர்மிளையும் வானம் புக வேண்டியிருக்கும்..//
   ஊர்மிளை எங்கேயும் புக வேண்டியிருக்காது!
   ’என்’ மனைவியோடு நானும் போவேன் அவர்களுக்குப் பாதுகாப்பாக..’
   என்று வந்திருந்தால்தான் ஊர்மிளை இங்கே புகுவாள்!

   கவனியுங்கள்: தன்னுடைய மனைவியை ஒருத்தன் குறிப்பிட வேண்டுமெனில் ‘என் மனைவியோடு நானும் போவேன்’ என்றுதான் அவன் சொல்வான். ‘தன்’ மனைவியோடு நானும் போவேன்’ என்று சொல்லமாட்டான். வராது அப்படி!

   மேலும் ’’அண்ணன் தனியாகவா போவான் வனத்துக்கு, தன் மனைவியோடு, ‘’ – இங்கு ‘தன் மனைவியோடு’ க்குப் பின் கமா வைத்திருக்கிறேன் – வாக்கியத்தின் அடுத்த பகுதி ஆரம்பிக்குமுன்!

   Like

 2. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். சத்ருக்னன், ஊர்மிளை தியாகங்கள் பேசப்படாமலேயே போகிறது. ஆமாம் சத்ருக்னன் மனைவி பெயர் என்ன, மறந்து விட்டது!

  Like

 3. @ ஸ்ரீராம், பரதன் மனைவி மாண்டவி, சத்ருக்னன் மனைவி ஸ்ருதகீர்த்தி. இதில் ஊர்மிளை மட்டும் ஜனகரின் சொந்தப் புத்திரி. மற்ற இருவரும் ஜனகரின் தம்பி பெண்கள். சீதை பற்றித் தான் நமக்கெல்லாம் தெரிந்ததே!

  Like

 4. இந்தப் பதிவு வாட்சப்பிலும் சில நாட்களாக உலவி வருகிறது ஏகாந்தன் அவர்களே! நான் மூன்றாம் முறையாகப் படிக்கிறேன். அது தானா எனப் பார்க்கவே வந்தேன். :)))))

  Like

 5. @ கீதா சாம்பசிவம்:
  அப்படியா!
  ‘வாட்ஸப்பா? அதுலாம் எனக்குத் தெரியாது!’ என்று சொல்கிற சில அசடுகள் படித்துவிட்டுப் போகட்டும்..!

  Like

 6. உங்களின் வழக்கமான நடையிலிருந்து மாறுபட்டு வித்தியாசமாக அமைந்திருக்கிறது.

  Liked by 1 person

 7. எனக்கு வாட்ஸாப்பில வரவில்லை.
  அருமையான கருத்து.
  நான்கு புதல்வர்கள் பிறந்தும் ,புத்திரர்களைப் பிரிந்தான் தசரதன்.

  பாவம்.
  ஆமாம் ஊர்மிளையாவது சில கதைகளில் வருவாள். சத்ருக்னன்
  பற்றி கதைகள் படித்ததில்லை.

  Like

  1. @ Revathi Narasimhan:

   ஊர்மிளையை மையப் பாத்திரமாகக்கொண்டு நவீன ஹிந்தி இலக்கியத்தின் புகழ்பெற்ற கவிகளில் ஒருவரான மைதிலி ஷரன் குப்தா ‘ஸாகேத்’ என்கிற காவியத்தை எழுதியுள்ளார்.

   ஆமாம், ஷத்ருக்னன் பற்றி அதிகம் படிக்கக் கிடைப்பதில்லை.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s