காலையில் .. அதிகாலையில் ..

 

அதிகாலையில் தூக்கம் கலைந்தது. பறவைகள் முன்னமேயே எழுந்திருந்து வினோத சத்தங்களை எழுப்பிக்கொண்டிருந்தன. நாம் போடும் சத்தங்களைப்பற்றி அவைகள் என்ன நினைக்கின்றனவோ தெரியாது. பறவைகளின் பாஷை புரியாததும் நல்லதிற்குத்தானோ!

தூக்கம் கலைந்ததே தவிர, உடனே எழுந்து உட்காராமல் படுத்திருந்தேன். பக்கத்தில் படுத்திருந்த மொபைலை எழுப்பிப் பார்த்தேன். வாட்ஸப்பில் (மொபைலே இப்போதெல்லாம் வாட்ஸப்பிற்காகத்தானே. ’இல்லை செல்ஃபீக்காகத்தான்!’ என பலர் கத்துவதும் கேட்கிறது). ஒரு பெண் தன் ஸ்ரீரங்க அனுபவம் பற்றி விவரித்திருந்தார். பெருமாளை தரிசித்துவிட்டு திரும்புகையில் முனியப்பன் கோட்டை வழியாக வர நேர்ந்ததாம். அங்கே முனியப்பன் சன்னிதியில் பலிபீடத்தில் சுருட்டு புகைந்துகொண்டிருந்ததாம். அருகில்வேறு முரட்டு ஆசாமி ஒருவர் நின்றிருந்தாராம். அதைப்பற்றிக் கேட்கலாம் என்றால் தைரியம் வரவில்லையாம். பக்கத்தில் மாரியம்மன் சன்னிதியிலும் பூஜை.  ஸ்ரீரங்கனின் வளாகத்திலேயே முனியப்பனும், அம்பாளுமா  என ஆச்சரியப்பட்டு, அந்தக் காலைநேரத்தில் நம்மையும் ஸ்ரீரங்கம்பற்றி சிந்திக்கவைத்திருந்தார் அம்மணி. புண்ணியம் அவருக்கு. நமது தெய்வீக சிந்தனையைப்பற்றிய பிரக்ஞையோ,  தாக்கமோ ஏதுமில்லாப் பறவைகளின் அதிகாலைப் பிரசங்கம் சூடுபிடிக்க ஆரம்பித்திருந்தது. அவைகளின் அனுபவங்கள், தத்துவவிசாரங்கள் என்னென்னவோ?

ஒருவாறாக எழுந்திருந்து பால்கனிக்கு வந்தால்,  மெல்ல வருடியது குளிர்க்காற்று. அடடா, இந்த எதிர்பாரா சுகம்.. கருமேகங்கள் படர்ந்திருக்கும் ஆகாசத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒன்பதாம் வகுப்புப் படித்திருக்கையில் பள்ளி அணியுடன் கொடைக்கானல் சென்றிருந்ததும் அங்கு முதலில் அனுபவித்த அந்த மலைப்பிரதேச குளிர்ச்சியும் மனதில் வந்தன. புதுக்கோட்டையிலிருந்து கொடைக்கானலுக்கான பஸ் பிரயாணம், மாணவ, மாணவியரைக் கண்மாற்றாமல் பார்த்துப் பார்த்துக் கூட்டிச்சென்ற ஆசிரியைகள்,  கொடைக்கானலின் நட்சத்திர ஏரியில் படகோட்டம், ஸில்வர் காஸ்கேட்  (Silver Cascade) எனும், அந்த வயதில் பெரும் பிரமிப்பை ஊட்டிய கண்ணுக்கிதமான அருவி, பில்லர் ராக்ஸ் (Pillar Rocks) என அழைக்கப்படும் தூண்களாய் எழுந்து நிற்கும் மலைக்குன்றுகள்.. உடம்பை மெல்ல வருடிக் கிளுகிளுப்பூட்டிய அந்த, அதுவரை அனுபவித்திராக் குளிர்ச்சி..  புதுக்கோட்டையில் ராஜ வம்சத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ பிரஹதாம்பாள் அரசு உயர்நிலைப்பள்ளியிலிருந்து சுற்றுலாவில் வந்திருந்ததால், கொடைக்கானலில் இருந்த புதுக்கோட்டை  அரண்மனையை சுற்றிப் பார்க்கக் கிடைத்த அந்த அரிய வாய்ப்பு என அந்த பெஙகளூர் அதிகாலை கொடைக்கானல் காட்சிகளை வேகவேகமாகக் காட்டிச்சென்றது. இந்த மனம் – நமது சூட்சும உடம்பு – இருக்கிறதே,  அது நினைத்தால்,  எங்கிருந்தாவது நம்மை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு, எங்கேயாவது கொண்டுபோய் நொடியில் சேர்த்துவிடும். அங்கே கொஞ்சம் நாம் திளைத்திருக்கையில், திடீரென புறப்பட்ட இடத்திற்கே கொண்டுவந்து விட்டுவிடும். அதன் இஷ்டமா, நம் இஷ்டமா !

இருள் விலக எத்தனித்த நேரத்தில், ஆகாசத்தில் நீலம், வெள்ளை, சாம்பல் என்று விதவிதமான வண்ணங்கள். இன்னும் சூரியன் எழுந்திருக்கவில்லை. ஞாயிறுதான் இன்று.. போனால் போகிறது. கொஞ்சநேரம் படுத்திருக்கட்டும். ஆதவன் ஆனந்தமாக இழுத்துப் போர்த்திக்கொண்டான்போலும். இன்னும் கீழ்வானம் சிவக்க ஆரம்பிக்கவில்லை. பாவம், சித்தநேரம் தூங்கட்டும். முழித்தபிறகு தலைக்குமேலே ஆயிரம் வேலைகள் இருக்கின்றன அவனுக்கு. தயவு, தாட்சண்யமின்றி ஆற்றவேண்டிய, அவனுக்கு விதிக்கப்பட்ட தினக் கடமைகள்..

**

8 thoughts on “காலையில் .. அதிகாலையில் ..

 1. காலைப்பொழுதின் வர்ணனைகள் அருமை. ஆனால் பதிவு பாதியில் தொங்குவது போலத் தோன்றுகிறதே….!!!

  Liked by 1 person

  1. @ ஸ்ரீராம்: //.. பாதியில் தொங்குவது போல..//

   தொங்கிக்கொண்டிருக்கும் வௌவால்தானோ இந்தப் பதிவு!

   Like

 2. //இன்னும் சூரியன் எழுந்திருக்கவில்லை. ஞாயிறுதான் இன்று.. // நீங்களும் என்னைப் போல் கிழமைகள் மறந்து விடுகிறீர்களோ? எனக்கு என்றாவது ஏற்படும்! :)))) இன்று புதன்கிழமை அல்லவோ? ஆனால் ஒரு நாலு நாட்களாகவே இங்கே சூரியன் போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறான். இன்னிக்குப் பனிரண்டு மணி (மதியம்) ஆன பின்னால் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளான். என்ன கோபமோ!

  Liked by 1 person

 3. @ கீதா சாம்பசிவம்:
  இன்று புதன்கிழமையேதான் என்று எபி பார்த்துத் தெரிந்துகொண்டேன்! ஆனால் இது ஞாயிறு காலையில் சுடச்சுட எழுதியது. வெளியிட்டது இன்று – ஞாயிறு அப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டேன்!

  Like

 4. எங்களுக்கு இப்போதுதான் புதன் ஆரம்பிக்கிறது.
  ஜன்னலைத் திறந்து தூங்கியதால், பறவைகளின் கீக்கி கீச்
  அதிகம். அந்த 4 மணிக்கே ஒரே கும்மாளம்.
  வெளியே 40 டிகிரி F. ஓவர் சில்ல்///

  நினைவுகள் எப்பொழுதுமே இனிமை.
  இனிய சங்கீதத்தைப் போல். இதம் தரும் நட்பைப்போல்.

  என்றும் இனிமை நிறைய வாழ்த்துகள்.

  Liked by 1 person

  1. @ Revathi Narasimhan: அங்கேயும் அதிகாலை நாலுமணிக்கே பறவைகளின் லூட்டியா! அனுபவித்து மகிழுங்கள்..

   Like

 5. குளிர்ச்சியான இனிய காலைப் பொழுதில் பின்னோக்கிச் செல்லும் நினைவுகள் நீர்க்குழிகள் போல கலைந்துபோவது வழக்கம்தான். இனிமேல் முகிழ்க்கும் நினைவுகளையும் பதிவு செய்யலாமே.. …

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s