உனக்கும் எனக்கும் இடையே..

சனிக்கிழமை அதிகாலை. பெங்களூரு ப்ரூக்ஃபீல்ட். ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத வேங்கடரமணர் கோவில். இரண்டு வரிசையாக சன்னிதிக்கு முன் ஆண்கள், பெண்கள் என சுமார் இருபது பேர். சனிக்கிழமை காலைநேரங்களில் ஆண்களில் எப்போதும் பிரதானமாக நின்று சகஸ்ரநாமம், வேங்கடேச ஸ்தோத்ரமெல்லாம் உறக்கச்சொல்லும் பெரியவர் அன்று வரவில்லை.  முன்னின்ற பெண்களில் சிலர் கணீரென ஆரம்பிக்க, மற்றவர்கள் சேர்ந்து சொல்லிமுடித்தார்கள். என்னைப்போல்  நின்றிருந்த ஏதுமறியா ஆண்கள் சிலர், சேர்ந்துபாடுகிறோம் பேர்வழி என்று கெடுத்துவைக்காமல்,  வாயைத் திறக்காமல், பெண்களின் தலைமையை ஏற்றுக்கொண்டு, இறைவனின் புகழைக் காதால் கேட்டுமகிழ்ந்தோம். இன்னும் திரை விலகவில்லை. சில நிமிடங்கள்தான், ஆறரை மணிக்கு, பெருமாளுக்குத் திருமஞ்சனம் ஆரம்பிக்கும்.

எனக்கு முன்னே நின்றிருந்த பெண்மணி என் பக்கமாகத் திரும்பி, நாம் உட்கார்ந்துகொள்ளலாமே.. என்பதாகச் சொல்லிவிட்டு மெல்ல உட்கார, நான் இடம்விட்டு,  இன்னும் பின்னால் நகர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும்  உட்கார ஆரம்பித்ததை கவனித்து,  அமர்ந்துகொண்டேன். எனக்கு முன்னே ஆறேழு பேர்கள்தான் அமர்ந்திருந்தார்கள். பரபரப்பேதுமின்றி, நிதானமாக திருமஞ்சனத்தை தரிசிக்கலாம். தொண்ணையில் வாழைப்பழம், தேன் கலந்த பிரசாதமும் கிடைக்கும். பிறகு வீடு நோக்கிய நடை..

இரண்டு  மூன்று நிமிடங்கள் கடந்திருக்கும். எல்லோரும் திரை விலகக் காத்திருந்தார்கள்.  என் முன்னே அமர்ந்திருந்த அந்தப் பெண்மணி திடீரெனத் திரும்பி ‘நான் உங்களுக்கு மறைக்கிறேனா?’ என்றார். கொஞ்சமும் இதை எதிர்பாராததால், சற்றே திடுக்கிட்டவனாய், ‘இல்லையே.. நீங்கள் எதையும் மறைக்கவில்லை‘ என்றேன் அவசரமாக. அவர் திருப்தியுற்றவராய் சன்னிதிக் கதவை நோக்கியிருந்தார். எல்லோரும் தனக்கு சாமி சரியாகத் தெரிகிறதா அல்லது தெரியவேண்டுமே என்றுதான் முன்னோக்கி எம்புவார்கள்.. கூர்ந்து பார்க்க முனைவார்களே தவிர,  பின்னாலிருக்கிறவனுக்கு நாம் மறைக்கிறோமா என்கிற சிந்தனை வருமா என்ன? எத்தனை பேருக்கு வரும்?

எங்கோ இதுவரையில் அலைந்துகொண்டிருந்த மனம், இப்போது இதற்குத் திரும்பியது. கொஞ்சம் சிந்தித்துப் பார்த்ததில்.. மற்றவர்களா நமக்கு மறைக்கிறார்கள்? நமது மனமேதானே இந்தத் திருப்பணியைச் செய்துவருகிறது எப்போதும். பெருமாளுக்கும் நமக்கும் இடையில் திரையாய் தொங்கிக்கிடப்பது இந்தப் பாழாய்ப்போன மனம்தானே. கண் என்னவோ, கோவிலில் கடவுளின் விக்ரஹ உருவைப் பார்க்கத்தான் செய்கிறது. மனம் பெரும்பாலும் வேறெதையோ அல்லவா பார்த்துக்கொண்டிருக்கிறது? மனம் பார்க்காத காட்சியை, கண்மட்டும் பார்த்து என்ன பயன்? அதுவா ஆண்டவன் தரிசனம் ? ஏதேதோ சிந்தனை ஓட, முன்பு படிக்க நேர்ந்த தியாகராஜ ஸ்வாமிகளின் வாழ்வின் நிகழ்வொன்று, நினைவடுக்குகளின் மேலேறிப் படபடத்தது..

         பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு நாள். திருவையாறில் தியாகராஜ ஸ்வாமிகள் ராமா.. ராமா.. என லயித்திருக்கிறார் வழக்கம்போல. ராமனைத் தவிர வேறொன்றுமில்லை இவ்வுலகில்..அவர் மனதில். அப்போதுதான் அந்த இளைஞன் அங்கு வந்து சொல்லிச் சென்றிருந்தான். ஒவ்வொரு கோவிலுக்காகப் போய் வருகிறான் போலும். திருவேங்கடத்துக்குப் போனானாம். அங்கே அவன் கண்டது கண்கொள்ளாக் காட்சியாம். ராமனைப்போலவேதான் அந்தக் கடவுளும் இருந்தாராம். ஏகப்பட்ட பொருத்தங்கள் என்றெல்லாம் சொல்லி அவரது சிந்தனையைத் திருப்பிவிட்டுவிட்டுப் போய்விட்டான் வந்தவன். என்ன, நம் ராமனைப்போல் இன்னொரு தெய்வமா? அப்படியா இருக்கிறது உண்மையில் எனச் சிந்தித்த மனம், போய் பார்த்துவிடவேண்டும் என்கிற நிலைக்கு வந்துசேர்ந்தது. கிளம்பிவிட்டார் மூன்று சிஷ்யர்களையும் கூட்டிக்கொண்டு.

இந்தக் கால பஸ் சர்வீஸா, காரா என்ன, அப்போதெல்லாம்.  பாதையைக் கேட்டுக்கொண்டே கால் கடுக்க பொழுதெல்லாம் நடப்பது, களைத்தால் எங்காவது வழியில் தங்குவது, இளைப்பாறிக்கொள்வது, மீண்டும் நடப்பது.. இதுதான் பயணம்..திவ்யதேசப் பிரயாணம். பாதையெல்லாம் சரியாக இருக்கிறதோ என்னவோ, அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம்.. போய்விடவேண்டியதுதான் என அந்த வயதான காலத்திலும் மனதில் எழுந்தது ஒரு பொறி. உருவானது ஒரு உத்வேகம்.

ஒருவழியாக திருவையாறிலிருந்து திருவேங்கடத்துக்குண்டான நீண்ட தொலைவு, ஏதேதோ வழிச் சிரமங்களையெல்லாம் கடந்து, மலையேறி, திருமலைக்கு வந்தாகிவிட்டது. குளுகுளுவென்றிருக்கிறதே இங்கே..!  இதோ.. இதுதானா அவனிருக்கும் இடம். தூரத்திலிருந்து பார்க்கையிலேயே களைப்பெல்லாம் மாயமாய் மறைந்துவிட்டதே. கோவிலுள் நுழைந்து கருடப் பெருமானையும் வணங்கித் தாண்டியாகிவிட்டது. இனி அவனுடைய தரிசனம்தான். நாம் கேள்விப்பட்ட அந்த வேங்கடரமணன். ராமனை ஒத்திருப்பவனா? அப்படி ஒரு அழகா இவனும் ?  ஆசையோடு பார்க்கையில்.. அவசரமாக விழுந்துவிட்டது திரை. அதிர்ச்சி. அவருடைய சிஷ்யர்களுக்கு  சுள்ளென்று வந்தது கோபம். அதற்குள் என்னய்யா திரை? ஏனிந்த அவசரம்? அர்ச்சகர்களை நோக்கிக் கேள்விகள் பறக்க, நொடியில் பெரும் வாக்குவாதமாக மாறியது.

தியாகராஜ ஸ்வாமிகள் குறுக்கிடுகிறார். தன் சிஷ்யர்களைத் தடுக்கிறார். பெருமாளை தரிசிக்க வந்திருக்கிறோம். சாந்தமாக இருப்பதல்லவா முக்கியம்?  கோபத்தில் வார்த்தைகளை விட்டுக்கொண்டு நிற்கலாமா? கடிந்துகொள்கிறார். சிஷ்யர்கள் ஒருவழியாக அமைதியாக, எனக்கு ஏன் இப்படி.. சிந்தனை வசப்படுகிறார் தியாகராஜர்.

திரையா எம்பெருமானை மறைத்திருக்கிறது? அது என்ன திரை? அந்த ராமனா இங்கிருப்பதும்? அவன் தானா இவன்.. என சந்தேகப்பட்டுக்கொண்டே வந்தது  மனம். குழப்ப எண்ணமதைக்கொண்ட மனமல்லவா  திரையாகத் தொங்குகிறது? சஞ்சலமுள்ள மனசை வைத்துக்கொண்டு தரிசனத்தை யாசித்தால் எப்படிக் கிடைக்கும்? யோக்யதை வேண்டாமா? மனம் கலங்குகிறார். கண்களும் சேர்ந்துகொள்கிறது. சிஷ்யர்கள் கவனித்துப் பதறுகிறார்கள். நம் குருவிற்கு என்னவாயிற்று? தொலைதூரத்திலிருந்து மெனக்கெட்டு வந்தும் தரிசனம் கிடைக்கவில்லையே என்று அழுகிறாரோ..

தியாகராஜ ஸ்வாமிகளின் மன நெகிழ்வு, இறைவனை இறைஞ்சும் வார்த்தைகளாக உருக்கொள்கிறது. நாதம்  நாடி வருகிறது.. பாடுகிறார் பரம்பொருளை நினைத்தேங்கி, மனமுருக வேண்டி..

தெர தீயக ராதா – நா லோனி

திருப்பதி வேங்கடரமணா – மத்சரமுனு

தெர தீயக ராதா ..

 பரம புருஷ தர்மாதி மோக்ஷமுல
பார தோலு சுன்னதிநா லோனி

தெர தீயக ராதா ..

 (திரை விலக்கமாட்டாயா-எந்தன்

திருப்பதி வேங்கடரமணா.. தீயமனத்

திரை விலக்கமாட்டாயா..

பரமபுருஷ தர்மமான மோக்ஷம்தனை

அடையவிடாது தடுக்கும் எந்தன்

திரைவிலக்க மாட்டாயா..)

உருகும் பக்தனைப் பார்த்து உளமகிழ்கிறார் திருமால். எரிந்து சரியுமாறு செய்கிறார் இடைநின்ற திரையை. அர்ச்சகர்கள் அதிர்ந்து பார்க்க, அதிவிசேஷமான தரிசனம் திருவையாறு ஸ்வாமிக்கு. ’ஆஹா..வேங்கடரமணா..! நீயே என் ராமன். நீயே பரந்தாமன். என்னே என் பாக்யம்.. என்னே என் பாக்யம்’’  கரைகிறார் தியாகராஜர், திருமலை சன்னிதியில்.

**

23 thoughts on “உனக்கும் எனக்கும் இடையே..

  1. ஏகாந்தன் அண்ணா பதிவு அருமை!

    அதுவும் ஜஸ்ட் நீங்க கோயிலுக்குப் போன இடத்தில் அப்பெண்மணி ஒரு கேள்வி கேட்க அதிலிருந்து அழகான சிந்தனை பயணித்து தியாகராஜரின் வாழ்வில் நடந்த நிகழ்வைச் சொல்லி போட்ட முடிச்சு பலமா இருக்கு!!

    திரை போட்டால் என்ன போடாட்டால் என்ன? மனக்கண்ணுக்குத் திரை இருந்தால் சன்னதியில் திரை போடாட்டாலும் தெரியாதுதான்…

    பல விஷயங்களிலும் மனம் தான் திரை. இந்தப் பாட்டில் முதல் வரி மட்டும் தான் தெரியும். வேங்கடரமணா வரை…நான் இந்தப்பாடல்தானே பாடினார் என்று கேட்க நினைத்து வாசித்துக் கொண்டே வந்தால் நீங்களே அதைச் சொல்லிட்டீங்க.
    இந்த மனத்திரையை விலக்கி என்னைப் பாருனுதானே அவன் சொல்லறான்….ராஜாஜியின் இந்த வரியும் நினைவுக்கு வந்தது. திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பர்!!

    நாம் மனிதர்கள் அந்த நிலையை இன்னும் எட்டவில்லை என்றே தோன்றுகிறது! லாங்க் வே டு கோ!!!!

    கீதா

    Like

    1. @ கீதா:

      Long way to go…அப்படித்தான் தோன்றுகிறது. அதுவரை பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கவேண்டியதுதான். (அதுக்காக ரவுடி பேபி.. என்று ஆரம்பித்துவிடப்போகிறார்கள்.. நீங்கள்தானே சொன்னது என்றும் சொல்வார்கள்..)
      குறையொன்றும் இல்லை..யை கேட்டுக்கொண்டிருந்த அந்த நாட்களில் ராஜாஜிதான் இதனை எழுதியது எனத் தெரியாமல் இருந்தது. இவரது பாட்டு சுப்புலட்சுமியின் குரலில் வந்ததோடு, நியூயார்க்கில் ஐ.நா. சபையில் ஒலித்த முதல் தமிழ்வார்த்தைகளாகவும் ஆனது! எல்லாம் அந்த கண்ணன் செய்த வேலை..!

      ஃபாண்ட் ப்ரச்னை தீர்ந்ததோ இல்லையோ, முகப்புப்படம் மாறிவிட்டது!

      Like

  2. ஆகா…

    எதிர்ப்பார்த்த பதிவு வேறு… கிடைத்ததோ வேறு…

    இது போல் நாட்டிற்கு ஏதேனும் நல்லது நடக்குமா ஐயா…

    நாட்டிற்கு பீடித்த நாதாரி விலகுமா ஐயா…

    Liked by 1 person

    1. வாருங்கள், தனபாலன்.
      தேசம்பற்றிய உங்களது உண்மையான ஏக்கம், தவிப்பு புரிகிறது. நமது தேசம் நன்றாகவே இருக்கும். பதற்றம்கொள்ளவேண்டாம். ஏனெனில் சாதாரண பூமியல்ல இது. இமயத்திலிருந்து குமரிவரை, ஒவ்வொரு காலகட்டத்திலும் உன்னதமான ஆத்மாக்கள் வாழ்ந்து மறைந்த நிலம். நமக்குத் தெரிந்தவர் குறைவு. தெரியாத, மகான்களும் ஞானிகளும் நிறையவே இருந்திருப்பார்கள். இப்போதும் இருப்பார்களாக இருக்கும். அவர்கள் எல்லோரின் கடுந்தவம், அடைந்த வரங்களின் தாக்கம் காலகாலத்துக்கும் இந்த தேசவாழ் மனிதர்களை, உயிர்களை, ரட்சிக்காமல் போகாது. நலமே விளையும் நாளும் எனவே தோன்றுகிறது.

      Like

    2. வாருங்கள், தனபாலன்.
      தேசம்பற்றிய உங்களது உண்மையான ஏக்கம், தவிப்பு புரிகிறது. நமது தேசம் நன்றாகவே இருக்கும். பதற்றம்கொள்ளவேண்டாம். ஏனெனில் சாதாரண பூமியல்ல இது. இமயத்திலிருந்து குமரிவரை, ஒவ்வொரு காலகட்டத்திலும் உன்னதமான ஆத்மாக்கள் வாழ்ந்து மறைந்த நிலம். நமக்குத் தெரிந்தவர் குறைவு. தெரியாத, மகான்களும் ஞானிகளும் நிறையவே இருந்திருப்பார்கள். இப்போதும் இருப்பார்களாக இருக்கும். அவர்கள் எல்லோரின் கடுந்தவம், அடைந்த வரங்களின் தாக்கம் காலகாலத்துக்கும் இந்த தேசவாழ் மனிதர்களை, உயிர்களை, ரட்சிக்காமல் போகாது. நலமே விளையும் நாளும் எனவே தோன்றுகிறது.

      Like

  3. மிக அருமையான பதிவு. ஒரு நிகழ்ச்சியிலிருந்து இன்னொன்றுக்குச் செல்வது. ஆனால் ஆரம்பத்திலேயே எனக்கு இந்தப் பாடல் நினைவுக்கு வந்துவிட்டது.

    பொதுவா சன்னிதில, பெருமாளை அப்படியே தூக்கிக்கொண்டு சென்றுவிடுவதுபோல் தலையை நீட்டி நீட்டி சுயநலமாகப் பார்ப்பவர்களைத்தான் கண்டிருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு திருப்பதியில் அதிகாலை சாற்றுமுறை தரிசனம். சன்னிதியின் நெடிய வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது, கொஞ்சம் முன்னால் நின்றுகொண்டிருந்த பெரியவர் (கர்நாடகாவிலிருந்து வந்த வைணவர்), மற்றவர்களுக்கு மறைத்ததோடல்லாமல், அடிக்கடி திரும்பிப் பார்த்து அவரது உறவினர்களுக்கு பெருமாள் தெரிகிறாரா என்று சுயநலமாகக் கேட்டுக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. சிலர், தரிசன அனுபவத்தைக் குலைப்பதில் வல்லவர்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள பெண்மணி, எக்ஸெப்ஷன் போலிருக்கிறது.

    Like

    1. @ நெல்லைத் தமிழன்:

      நீங்கள் சொன்னதுபோன்றோரே நிறையக் காணக் கிடைப்பர், கூட்டமாக வழிபடும் ஸ்தலங்களில். என்ன செய்வது? அவர்களும் பக்தர்களே என நினைத்துக்கொண்டு நம்மை நாமே நிதானப்படுத்திக்கொள்வதே சரி! நமது மனம் கலவரமானால், உள்ள தரிசனமும் பாதிக்கப்படும்.

      Like

  4. பல ஆண்டுகளுக்கும் முன் ஒரு சுவாமி சின்மயாநந்தாவின் சொற்பொழிவு கேட்டேன் திருப்பதிக்கு பல இன்னல்களை கடந்து தரிசனத்துக்காக செல்கிறோ ம் தரிசனம் கிடைப்பதோ ஏதோ சில விநாடிகள் அருகில் வரும் நாம் என்ன செய்கிறோம் கண்களை மூடி கோவிந்தா கோவிந்தாஎன்கிறோம்

    Liked by 1 person

    1. @ ஜி.எம்.பாலசுப்ரமணியம்:

      இந்த நிலை பலருக்கும் வருகிறது. வேண்டிக்கொள்ளுதல் என்கிற வழக்கத்தில், எதையாவது வேகவேகமாக முணு முணுத்துக்கொண்டு, அந்த அபூர்வமான சில நொடிகளிலும், தெய்வத்தை சரியாப் ‘பார்க்க’ மறந்துவிடுகிறோமோ என்றே தோன்றுகிறது.

      Like

  5. அருமையான தரிசனம் கிடைக்கப் பெற்றேன். தியாகராஜரின் இந்தப் பாடல் பற்றிய இந்தக் குறிப்பிட்ட நிகழ்வை ஏற்கெனவே படித்திருந்தாலும் உணர்ச்சி பூர்வமாக நீங்கள் எழுதி இருப்பது மனதைத் தொட்டது! உண்மையில் நம் மனத்திரை தானே விலகணும். அப்போத் தானே உள்ளே உள்ளவனைக் காண முடியும்! அதற்குத் தான் நாம் முயற்சி செய்யணும்!

    Like

    1. @கீதா சாம்பசிவம்:

      வாருங்கள்.

      முயற்சி செய்யலாம்தான். ஆனால் அது நிகழவேண்டுமே.

      ஜேகே சில இடங்களில் மனமே காணாமற்போய்விடும் நிலைபற்றிச் சொல்கிறார். சில கணங்களுக்காவது நம்மிலும் அது நிகழ்ந்திருக்கும்..நிகழக்கூடும். நாம் அதையெல்லாம் கவனிப்பதில்லை.

      Like

      1. கேஆர்எஸ் (கே.ரவிசங்கர்) இதனைப்பற்றி எழுதியிருந்ததை முன்பு நான் காங்கோவிலிருந்தபோது படித்தது நினைவுக்கு வந்தது.

        Like

  6. அருமை.

    உண்மைகளை யாராவது வந்து நமக்கு மறைக்க வேண்டுமா என்ன? நம் மனமேதான் புரிந்து கொள்ளமறுக்கிறது.​

    தத்துவ விசாரத்துடன் பதிவு அருமை.

    Like

    1. உண்மைதான். மனதின் அட்டகாசம்தான் நம் வாழ்க்கை – in general. அதனை உள்ளது உள்ளபடி புரிந்துகொண்டு, அதனைக் கடக்க முயன்று, ஒருவேளை அதுவும் நிகழ்ந்தால்..கதையே வேறு..

      Like

  7. அன்பு ஏகாந்தன்,
    ஒரு திரைய இரண்டு திரையா நம்மை அவனிடமிருந்து பிரிப்பது. நினைத்தது நடக்காவிட்டால் அவனிடம் கோபம். நடந்துவிட்டால் கண்ணில் நீர்த்திரை.
    திருவையாறு சுவாமிகள் ராமனையே நேரில் கண்டவர்.
    அவர்க்காக கோவிந்தன் திரையை விழச் செய்தல் அதிசயமே இல்லை. ஆனாலும் ஸ்வாமிகள் மனம் உருகியதால் நம்க்கு ஒரு அற்புத கீர்த்தனம் கிடைத்ததே.

    ஒரு சம்பவத்திலிருந்து ,திருப்பதிக்கே எங்களைக் கூட்டிச் சென்று விட்டீர்கள்.மிக மிக நன்றி மா.

    Liked by 1 person

  8. @ Revathi Narasimhan: :

    சரிதான். அந்தக்காலத்தில் மெய்ஞானிகள் பக்திஞானத்தோடு, பாடகர்களாகவோ, கவிஞர்களாகவோ இருந்தது இறைவன் பின்வருபவர்களுக்கு அருளிய பாக்யம். பாலோடு தேன்போல, பக்தியோடு பாடல்களும் நமக்குக் கிடைத்தன.

    Like

  9. முகப்புப் படம் அட்டகாசம். அருமை. கே ஆர் எஸ்ஸை நீங்கள் அறிவீர்களா? அந்தக் கால கட்டங்களில் உங்கள் கருத்தை அவர் வலைப்பக்கங்களில் பார்த்த நினைவு இல்லையே! :)))) இப்போதெல்லாம் தொடர்பிலேயே இல்லை!

    Liked by 1 person

    1. அந்தநாட்களில் என்னிடம் வலைப்பக்கமெல்லாம் இல்லை. சும்மா வலையில் மேய்ந்துகொண்டிருக்கையில் தட்டுப்பட்டது! கருத்தெல்லாம் போடும் பழக்கம் எனக்கு முன்பு இருந்ததில்லை.

      Like

    2. கே ஆர் எஸ் அருமையா எழுதுவார். மாதவிப்பந்தல். சமீபத்தில் கூட அவரது செய்தியுடன் அவர் படம் போட்டு பெட்டிச் செய்தி ஒன்று ஆந்தவிகடனில் பார்த்த நினைவு. அப்போதுதான் தெரிந்து கொண்டேன் அவர் அமெரிக்காவில் ஒரு பல்கலைகழகத்தில் தமிழில் முனைவர் பட்டம் பெற்று அங்கேயே பேராசிரியராக இருக்கிறார் என்று. (சென்னைக்குப் போயிருந்தப்ப)

      கீதா

      Like

      1. @கீதா: கே ஆர் எஸ் பற்றி இவ்வளவு தெரியாது எனக்கு. சில சமயங்கள் அவர் பக்கத்திற்கு 2012, 13 வாக்கில் வந்திருந்தேன்.

        Like

Leave a reply to Aekaanthan Cancel reply