பாலகோட் தாக்குதலின் அதிர்வுகள்

அண்டை நாடு இதனை எதிர்பார்த்திருக்கவில்லை. புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையில், மிஞ்சி மிஞ்சிப்போனால் பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீருக்குள் புகுந்து இந்தியத் தரைப்படை தாக்குதல் ஒன்றை நிகழ்த்தக்கூடும் என்பதுதான் அதன் உச்சபட்ச எதிர்பார்ப்பு; தயார்நிலை. மிகவும் பாதுகாப்பாக, ஜனநடமாட்டம் அதிகம் இல்லாத மலைச்சரிவில், பாலக்கோட்டின் விளிம்பில் அமைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளுக்கான பயிற்சிக்கூடம், ஏவுதளம் பற்றி ’ஒருவேளை இந்திய உளவுத்துறை அறிந்திருந்தாலும், நமது நாட்டுக்குள் புகுந்து ஹிந்துஸ்தான் ஒருபோதும் தாக்காது.. ஏனென்றால்,  நம்மிடம் அணு ஆயுதம் இருக்கிறதே. ஹிந்துஸ்தான் பயப்படுமே!’ என்பது அவர்களது ராணுவத்தலைமையின் சிறுபிள்ளைத்தனமான சிந்தனை. இப்படித்தான் பாகிஸ்தான் இந்தியாவுக்கெதிரான கதை-வசனத்தை எழுதிவைத்து நமுட்டுச் சிரிப்புடன் படித்துப் பார்த்துக்கொண்டிருந்தது..
ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதலுக்குப்பின்னும் இந்தியா பதிலடி கொடுக்கத் தயாராகும்போதெல்லாம், இந்தியாவை பயமுறுத்துவதாக (கூடவே உலகை எச்சரிப்பதாகவும்) நினைத்து அடிக்கடி உச்சரிக்கும் இந்த ’அணுஆயுதப்போர் அபாயம்’ பற்றிய பாகிஸ்தானின் ‘nuclear bluff’ -ஐ நேரிடையாக இந்தமுறை இந்தியா எதிர்கொண்டது. இந்தியப் பிரதமரின் தலைமைப் பண்பு, ஆலோசித்து சரியான முடிவெடுக்கும் இயல்பு ஆகியவை இங்கே காணக்கிடைத்தன. தீவிரவாதம் விளைவித்த நெருக்கடி நிலையில் இந்தியா நிகழ்த்திய தாக்குதல், மூன்று விஷயங்களை உறுதிசெய்ததாக ராணுவ நிபுணரும் முன்னாள் பிரிகேடியருமான ராஜீவ் வில்லியம்ஸ் டிஎன்ஏ-யில் எழுதியிருக்கிறார். அவை இவை: 1)சரியான இலக்கைத் தெரிவுசெய்தது 2) தனது சிறப்புப்படைகளில் ஒன்றைத் திறம்படப் பயன்படுத்தியது 3) மிகக்குறைந்த காலகட்டத்திலும் திருப்பியடிக்கும் திறன்கொண்ட தேசம் இந்தியா என நிரூபித்தது (இதுகாறும் இந்தியாவின் உலகலாவிய பிம்பம் ’இந்தியா ஒரு soft power. யோசிக்குமே தவிர, திருப்பித் தாக்காது. பேசியே பொழுதுபோக்கலாம்’ என்பது).
புல்வாமா தாக்குதலில் இந்திய துணைராணுவ வீரர்களின் அநியாய உயிரிழப்பும், கூடவே பாகிஸ்தானுக்குள் ஜெய்ஷ் இயக்கத்தின் குதூகலமும், கொண்டாட்டமும் இந்தியாவைக் கொந்தளிக்கவைத்திருந்தன. ’இந்தியாவே..விடாதே! பழிக்குப்பழி! திருப்பித் தாக்கு!’ என ஆவேசக்குரல்கள் இந்திய மக்களிடமிருந்தும் வெளிநாடுவாழ் இந்தியரிடமிருந்தும் உயர எழுந்து அதிர்ந்தன. ’உங்கள் நெஞ்சில் எரியும் நெருப்புதான் என் நெஞ்சிலும் கனல்கிறது..’ என்றார் இந்தியப் பிரதமர் மோதி. வெறும் வார்த்தையல்ல அது.  இந்தியாவின் Cabinet Committee on Security-ஐ (பிரதம மந்திரியோடு அவரது சீனியர் அமைச்சர்களான பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர், உள்துறை மற்றும் நிதி அமைச்சர்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் கொண்ட பாதுகாப்பு அமைப்பு) உடன்கூட்டி ஆலோசித்தார். முப்படைத் தளபதிகளுடன், எடுக்கப்படவேண்டிய ராணுவ நடவடிக்கை, அதன் பின்விளைவுகள் எனத் தீர ஆலோசித்தார் பிரதமர். எதிர்நடவடிக்கை இல்லையெனில், பாகிஸ்தானுக்குத் துளிர்விட்டுப்போகும். எல்லைதாண்டிய எதிர்த்தாக்குதல் அவசியமே  என முடிவெடுக்கப்பட்டது.
பாலக்கோட் தாக்குதல்பற்றி இப்போது மேலும் சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பிப்ரவரி 19-ஆம் தேதி பிரதமர் இந்திய வான்படைத் தளபதிக்கு, தகுந்த எதிர்த் தாக்குதலுக்கான உத்தரவிட்டிருக்கிறார். அதில் ஒரு caveat -எச்சரிக்கையும் : நமது பதிலடி தீவிரவாதத்திற்கு எதிரானது மட்டுமே என்பதை உலகிற்குத் தெளிவுபடுத்தும் வகையில் இந்திய வான்தாக்குதல் அமையவேண்டும். அதாவது பாகிஸ்தானின் சாதாரண மக்கள் வசிக்கும் பகுதி அல்லது ராணுவ தளங்கள் தாக்கப்படக்கூடாது. Civilian losses கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும் என்பதே அது. தாக்குதல் எப்படி, எந்த நாளில் நடத்தப்படவேண்டும் என்பதை விமானப்படை தீர்மானம் செய்துகொள்ளட்டும்.
வேவுத்துறையின் தகவல்களின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட மூன்று இடங்களில் ஒன்றுதான் பாலகோட்.  பாகிஸ்தானின் கிழக்கே கைபர் பக்தூன்க்வா (Khyber Pakhtunkhwa) மாநிலத்தில் இருக்கிறது. பாலகோட் டவுனின்  வெளிப்புறத்தில் வனப்பகுதியில், மலைமுகட்டில் இருக்கும் இடம். மக்கள் நடமாட்டம் அரிது என்பது இது தேர்வு செய்யப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று.  2004-2005 வாக்கில் துவக்கப்பட்ட முக்கியமான டெர்ரர் ட்ரெய்னிங் இன்ஸ்டிடியூட் (மதராஸா என்கிற போர்டைப் பக்கத்தில் தொங்கவிட்டுக்கொண்டு). வேறு பள்ளிகளில் தீவிரவாத அடிப்படைப்படிப்பு படித்துவிட்டு, மேற்படிப்பு (!)க்காக வருபவர்கள் இங்கே பயிற்சி தரப்படுவார்கள். சீனியர் ட்ரெய்னர்களிடம், ஆர்மி-ஓய்வு பெற்றவர்களிடம் அழிவுப்பாடங்களைத் தீவிரமாகக் கற்றுக்கொள்ளும் பாகிஸ்தானின் புண்ணிய ஸ்தலம். இதனைப்பற்றிய குறிப்பு ’தீவிரவாதிகளுக்கான அதிபாதுகாப்பு சிறையான குவந்தானமோ சிறை’ (guantanamo)யின் (க்யூபாவில் உள்ளது) அமெரிக்க கமாண்டோ தலைவரால் எழுதப்பட்ட பாகிஸ்தானில் டெர்ரர் நெட்-வர்க்குகள்பற்றிய ரிப்போர்ட்டில்  காணப்படுகிறது.
பாலகோட் பரிகார ஹோமத்திற்கு பிப்ரவரி 26 அதிகாலை ஏன் தெரிவு செய்யப்பட்டது? அந்த நாட்டின் பல்வேறு பயிற்சிக்கூடங்களிலிருந்து சுமார் இருநூறு தீவிரவாதிகள் அதற்கு முந்தைய தினம்தான் பாலக்கோட் பயிற்சிக்கூடத்தில் சேர்வதாக ரகசியத்தகவல் கிடைத்திருந்தது. கிட்டத்தட்ட 300-க்கும் குறையாமல் பயங்கரவாதிகள் இருப்பார்கள் என்பது விமானப்படையின் அனுமானம். போட்டுத்தள்ள இருபத்தாறாம் தேதி அதிகாலைக் குறிக்கப்பட்டது. இந்திய அரசு/ராணுவ அதிகாரத்தின் உச்சியில் மொத்தம் ஏழுபேரே இதனை அறிந்திருந்தார்கள். ராணுவ ரகசியம். காரியம் வெற்றிகரமாக முடியும்வரைக் காக்கப்பட்டது.
அந்த அதிகாலையில், இந்தியாவின் ரஷ்யத் தயாரிப்பு SU-30 (ஸுகோய் 30) போர்விமானங்கள் பஞ்சாபில் தங்கள் தளத்திலிருந்து எழும்பி, பாகிஸ்தானின் வசமிருக்கும் காஷ்மீர் நோக்கிப் பறப்பதாக போக்குக்காட்டின. இந்திய விமானங்களைக் குறிவைக்கும் பாகிஸ்தானி ரடார்களை திசை திருப்புவதில் கெட்டிக்காரத்தனம்! ஆக்ரா விமான தளத்திலிருந்து இஸ்ரேலின் Heron  Drone விமானங்கள் எல்லையோர எதிரித் தரைவழி பீரங்கித் தாக்குதல்களை கண்காணித்துப் பறந்துவர, பனிரெண்டு மிராஜ் 2000 போர்விமானங்கள் க்வாலியர் விமானதளத்திலிருந்து சீறி எழுந்தன. நிமிஷத்தில் பாகிஸ்தானின் எல்லை தாண்டி, பாலகோட்டின் மலைமுகடுகளின் மேல் கடந்து அடிவாரம் நோக்கிக் டைவ் அடித்து, தங்கள் இலக்குகளை மோப்பமிட்டு, ஸ்பைஸ்-2000 லேஸர் குண்டுகளால் துளையிட்டுத் தாக்கின. இத்தகைய precision bombs, வானிலிருந்து ஸாட்டலைட் மற்றும் ஜிபிஎஸ் கம்யூனிகேஷனால்  இலக்கு நோக்கித் துல்லியமாகச் செலுத்தப்பட்டு தாக்கும் திறன் கொண்டவை. இவை அறுபது கி.மீ. தொலைவிலிருந்தும் ஏவப்படக்கூடியவை.   பெருங்கட்டிட அமைப்புகளின் கூரையில் மூன்று மீட்டர் விட்டத் துளையிட்டு உள்ளிறங்கி வெடித்து பதுங்கியிருக்கும்  மனிதவெடிகுண்டுகளை அழித்திருக்கின்றன. (2015-ல் இந்தியா, இஸ்ரேலிடமிருந்து ஸ்பைஸ்-2000 அதிநவீன குண்டுகளை இறக்குமதி செய்திருந்தது).
இந்தியாவின் ப்ரிமியர் ஆங்கில இதழான ‘இந்தியா டுடே’ நடப்பு இதழில் (மார்ச் 25, 2019), பாலகோட்டில் இருள் விலகா அந்தக் காலையில் நடந்தவற்றை கட்டுரை, க்ராஃபிக் படங்கள் மற்றும் புள்ளிவிபரங்களுடன் எழுதியிருக்கிறது. பாலக்கோட் பயங்கரவாதிகள் பயிற்சிக்கூடம்/ஏவுதளம் எதிர்பார்த்தபடி  ஒரு நவீன காம்ப்ளெக்ஸ் என்கிறது. பத்து பகுதிகளாக விரிந்திருந்த மூன்று ஹால்கள், பயிற்சிக்கூடங்கள், கமாண்டர்கள்/பயிற்சியாளர்களுக்கான தனி அறைகள், கற்றுக்கொள்பவர்களுக்கான தங்கும் விடுதிகள், கேண்டீன், டிஸ்பென்சரி, நீச்சல் குளம் போன்ற ஏற்பாடுகள் அங்கிருந்தன. தீவிரவாதிகளுக்கான தங்கும்விடுதி-ஹால் இணைந்த கட்டிடப்பகுதியில் மூன்று, உயர்தரப் பயிற்சியாளர்களுக்கான விடுதியின் மீது ஒன்று, காம்ப்ளெக்ஸின் வேறொரு பக்கத்தில் காணப்பட்ட மற்றொரு ஹால்-தங்கும்விடுதியில் ஒன்று எனத் துல்லியமாகக் கூரையைக் கிழித்துத் தாக்கியிருக்கின்றன ஐந்து சக்திவாய்ந்த ஸ்பைஸ் குண்டுகள். மொத்தம் 300 (பயங்கரவாதிகள்/பயிற்சியாளர்கள்/பாக் ஆர்மி அதிகாரிகள் சிலர் உட்பட)   அந்த தாக்குதலில் அழிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அதில் 93 பேர் அடிப்படை வகுப்புகளில் இருப்பவர்கள், 81 பேர் ராணுவ பயிற்சிபெறுபவர்கள் மற்றும் 25 பேர் நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தும் முறைகளைக் கற்பவர்கள் மற்றும் பனிரெண்டு சீனியர் பயிற்சியாளர்கள்/ராணுவ வீரர்கள் – என, விபரங்கள் தந்திருக்கிறது இந்தியா டுடே. இந்த ஐந்து குண்டுகளை மிஞ்சி, ஆறாவது குண்டு திட்டமிட்டபிடி வீசப்படாமல் ஒரு  மிராஜ்-2000 இந்திய தளத்திற்குத் திரும்பிவிட்டது. காரணம் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட ஆறு நிமிடத்தில் சரியாக இலக்கைக் குறிவைத்து இறக்கத் தவறியதுதான் என்று சொல்லப்படுகிறது.
காலை மூன்று மணிக்கு தாக்குதல் ஏற்பாடு பற்றி பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது. அரைமணி நேரம் கழித்து ‘இலக்கு அடையப்பட்டுவிட்டது’ (mission accomplished) மற்றும் எந்தவித இழப்புமின்றி, திட்டமிட்டபடி இந்திய விமானங்கள் தங்கள் தளங்களுக்குத் திரும்பிவிட்டன எனப் பிரதமருக்கு நற்செய்தி சொல்லப்பட்டது. கேட்டபின், அவர் வழக்கம்போல் காலை நான்குமணிக்கு யோகா செய்யச் சென்றுவிட்டார்!
இந்தியா இதுபற்றித் தம்பட்டம் அடித்துக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் காலை ஆறுமணி வாக்கில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து ட்விட்டர் அலற ஆரம்பித்தது. முதலில் வந்த செய்திகள் இந்தியா தாக்கிவிட்டது என்றுகூடச்  சொல்லவில்லை. ’மோதி நே மார் தியா! (Modi ne maar diya ! (மோதி அடிச்சுப்புட்டான்) ’ என்றுதான் ஓலமிட்டன! சர்வதேச அளவில் செய்தி பரவ ஆரம்பித்த பிறகுதான், இந்தியா காலை பதினோரு மணியளவில் அதிகாரபூர்வமாக வெளியுறவுச் செயலர்மூலம் பத்திரிக்கையாளர்களுக்கு அறிவித்தது. ‘இது தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பதிலடி. பாகிஸ்தான் மக்கள், ராணுவத்துக்கெதிரானது அல்ல’ என்றது இந்திய அறிக்கை.
சில மணி நேரங்களில் ’இந்தியாவின் தாக்குதல் ஒரு தீவிரவாத எதிர்ப்புச் செயல், அதற்குத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உரிமை உண்டு’ என்றார் அமெரிக்காவின் ட்ரம்ப். மற்ற மேலைநாடுகளும் ’ஆமாம்!’ என வழிமொழிந்தன. உலகெங்கும் தீவிரவாதத்திற்கு எதிரான மனநிலை மேலும் தூண்டப்பட்டது. ஐ.நா.வின் ஜெனரல் அஸெம்பிளியும் கிடுகிடுக்க, பயங்கரவாதத்திற்கெதிராக இந்தியா கொண்டுவந்த தீர்மானம் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. சர்வதேச வெளியில் இந்தியா தன் ராஜீய வெற்றியை (diplomatic victory) மீண்டும் பதிவுசெய்தது.
**

17 thoughts on “பாலகோட் தாக்குதலின் அதிர்வுகள்

  1. ஐயா…

    // புல்வாமா தாக்குதலில் இந்திய துணைராணுவ வீரர்களின் அநியாய உயிரிழப்பும், கூடவே பாகிஸ்தானுக்குள் ஜெய்ஷ் இயக்கத்தின் குதூகலமும், கொண்டாட்டமும் இந்தியாவைக் கொந்தளிக்கவைத்திருந்தன. ’இந்தியாவே..விடாதே! பழிக்குப்பழி! திருப்பித் தாக்கு!’ என ஆவேசக்குரல்கள் இந்திய மக்களிடமிருந்தும் வெளிநாடுவாழ் இந்தியரிடமிருந்தும் உயர எழுந்து அதிர்ந்தன. ’உங்கள் நெஞ்சில் எரியும் நெருப்புதான் என் நெஞ்சிலும்
    கனல்கிறது..’ என்றார் இந்தியப் பிரதமர் மோதி. வெறும் வார்த்தையல்ல அது. //

    அப்போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை உலகமே அறியும்… (நாட்டை ஏமாற்றும் புகைப்பட தேடலில்…!)

    “டெலிபோன் வயர் பிஞ்சி மூணு நாள் ஆச்சி” – கவுண்டமணி வசனம் google-ல் தேடி பார்க்கவும்… நன்றி ஐயா…

    Liked by 1 person

    1. @ திண்டுக்கல் தனபாலன்:

      பயணத்தில் இருந்தேன். இன்று காலையில் டெல்லி வந்தேன்.

      //..ஏன் மீண்டு முயற்சிக்கக் கூடாது…?//

      உங்களுக்காக மீண்டும் மீண்டும் எழுதுவேன்! விடாது ஊக்குவிப்பதற்கு மனமார்ந்த நன்றிகள்.

      Like

  2. ஒரு விமானம் குண்டு வீசாமலேயே திரும்பியது என்பது புதிய செய்தி. பொதுமக்கள் வாழும் இடங்களை பாதிக்காமல் தீவிர வாதிகளைக் குறிவைத்தது சிறப்பு. நான் படித்த மேலும் ஒரு தகவல் என்னவென்றால் முதல்நாள் அங்கு சுமார் முந்நூறோ, முந்நூற்றைம்பதோ அலைபேசிகள் இயக்கத்திலிருந்தன என்று சாட்டிலைட் தகவல் சொன்னதாக.

    Liked by 1 person

    1. @ஸ்ரீராம்:

      நீங்கள் சொல்லியிருப்பதை நானும் படித்தேன். இதுவும் வேறு சில தகவல்களும் எழுத விட்டுப்போய்விட்டன. (டைம்ஸ் நவ் பாலகோட் உயிரிழப்பு எண்ணிக்கை 263 என்று சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தது. பலத்த காயங்களுடன் சிலர் உடனடியாக ராணுவத்தினால் அகற்றப்பட்டு, பலுசிஸ்தான் பகுதிக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் அறிய நேர்ந்தது -இத்தாலிய மீடியா மூலம் ..)
      டெல்லி பயண ஷெட்யூலுக்கிடையே வேகமாக எழுதி போஸ்ட் செய்துவிட்டு (திண்டுக்கலிடம் திட்டுவாங்கவேண்டாமா!) – ராஜதானியில் ஏறினேன் சனிக்கிழமை..

      Like

  3. உங்கள் பதிவுகளில் வரும் ஆங்கில வார்த்தைகளின் எழுத்துரு (FONT) படிக்க முடியாமல் இருக்கிறது. எண்கள் மிகச்சிறிதாக அதுவும் படிக்கச் சிரமமாக இருக்கிறது.

    Like

    1. @ ஸ்ரீராம்:

      சிரமத்திற்கு வருந்துகிறேன்.

      ஏதோ ஃபாண்ட் பிரச்னை. ஆங்கில எழுத்துக்கள் small-ல் எழுதினால், capitals-ஆக வந்து நிற்கின்றன. எண்கள் என் கண்ணுக்கும் தெரிய மாட்டேன் என்கிறது! அதற்காகவே எழுத்துக்களில் எண்களை எழுதிவிடுகிறேன் அல்லது தவிர்க்கிறேன். சரியாக்க முடியாவிட்டால், வேறொரு wordpress theme-க்கு மாற்றவேண்டும்.

      Like

  4. ஒரு விமானம் மட்டும் சரியான நேரத்தில் டார்கெட்டை முடிக்க முடியாமல் ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் தளம் வந்துவிட வேண்டும் என்பதால் திரும்பியதாக ஏதோ ஒரு செய்தித் தளத்தில் வாசித்த நினைவு. சில புதிய தகவல்கள்.

    துளசிதரன், கீதா

    (துளசிதரன் : பழைய பதிவுகளையும் வாசித்துவிட்டேன்.)

    Liked by 1 person

    1. @ துளசிதரன், கீதா:

      வருகை, கருத்துக்கு நன்றி.
      மேலும் சில தகவல்களை சேர்க்க அவகாசமில்லை – அன்று டெல்லி புறப்பட்டதனால். டெல்லியின் குளிரான காலையில் வந்து சேர்ந்தேன்.( ராஜதானி எக்ஸ்ப்ரெஸ் ஒன்னரை மணி லேட்டாக சென்றுகொண்டிருப்பதாக மனைவியின் இரவுப் புலம்பல். காலையில் பார்த்தா, ஐந்து நாற்பத்தியேழுக்கே டெல்லியைத் தொட்டுவிட்டது . ஆறுமணிக்குவரவேண்டிய எக்ஸ்பிரெஸ் பதின்மூன்று நிமிடம் முன்னாடியே வந்துசேர்ந்துவிட்டது! மோதி செய்த சதியாகத்தான் இருக்கும். சந்தேகமில்லை!)

      நெட் தொடர்பு ஏற்படுத்தி, டீயை உறிஞ்சிக்கொண்டே பதில் தந்துகொண்டிருக்கிறேன்!

      Like

  5. மிக அழகாக விவரித்திருக்கிறீர்கள். மோடி ஒரு செயல் வீரர் என்று மற்றொரு முறை நிரூபித்த நிகழ்ச்சி.

    Like

  6. ஒரு இரண்டு கேள்விகள் மட்டும் இந்த பதிவில்… திராணி இருந்தால் வாசகர்கள் கூட பதில் சொல்ல வேண்டுகிறேன்..

    1) ஐயா, புல்வாமாவில் நம்ம 44 CRPF வீரர்கள் பிற்பகல் 3.10 மணிக்கு செத்துப்போனப்ப, நீங்க ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் ஷூட்டிங் நடத்திக்கிட்டு இருந்தீங்கலாம், 3.40 மணிக்கு உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் ஒரு சலனமும் இல்லாம தொடர்ந்து ஷூட்டிங்ல கண்ணும் கருத்துமா இருந்தீங்கன்னு ஒரு பாழாப் போன இந்திய தேச விரோதி உங்க மேலே அபாண்டமான பழி சொல்றாங்கய்யா? மாலை 5 மணி வரைக்கும் ஷூட்டிங்ல இருந்துட்டு அப்புறமா வீட்டுக்குப் போறப்பக் கூட தேர்தல் பிரச்சாரம் பண்ணிக்கிட்டே போனீங்கன்னு கட்டைல போறவன் சொல்றப்ப வயிறு பத்திகிட்டு எரியுதுங்கய்யா? எடுத்துப் போடுங்கய்யா ஆதாரங்களை ! அந்தப் பாழாய் போன தேச விரோதிகள்கிட்ட சொல்லணும், என் பிரதமரு சொக்கத் தங்கம்டா-ன்னு.

    2) ஐயா, பால்கோட் தீவிரவாதிகள் முகாம் மீது நம்ம படைகள் தாக்குதல் நடத்தி அழிச்சிருச்சுன்னு சொன்னீங்க, இந்திய ஊடகங்களில் கூட ஒரு தீவிரவாதி செத்த படமோ, முகாம்கள் அழிஞ்சு போன தடயமோ இல்ல. பல உலக ஊடகங்கள் நீங்க பொட்டல் காட்டுலயும், மரத்துலயும் குண்டு போட்டுட்டு வழக்கமான 56 இன்ச் வீர வசனங்களை பேச ஆரம்பிச்சுட்டீங்கன்னு சொல்லும்போது ரொம்பக் கேவலமா இருக்குங்க ஐயா, கொஞ்சம் ஆதாரங்களை வெளிய எடுத்து விட்டு என்னைய அவமானத்துல இருந்து காப்பாத்துங்க ஐயா…..(நம்ம தேச பக்த ஊடகங்கள், இல்ல போர் முழக்க சங்கி நண்பர்கள் கிட்ட இருந்து ஆதாரங்களை வாங்கலாம்னு பாத்தா, தேசியத் தொலைக்காட்சிலேயே (குடியரசு தொலைக்காட்சி – Republic TV) 2017 ஆவது வருஷ வீடியோக்களை வச்சுக் குப்பை கொட்றாங்க ஐயா)

    Like

Leave a comment