பயங்கரவாதத்திற்கெதிராக இந்தியா

Mirage 2000 (courtesy: Internet)
ஃபிப்ரவரி பதினான்காம் தேதி அண்டைநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட ஜெய்ஷ் தீவிரவாதிகள் காஷ்மீரின் புல்வாமா  (Pulwama) பகுதியில் நாற்பது இந்திய துணைராணுவத்தினரைக் கொன்றது, இந்தியாவுக்குப் பெரும் சினமூட்டியது. ’விடமாட்டோம். பழிக்குப்பழி வாங்குவோம்’ என எச்சரித்தது இந்தியா. ‘எங்களைக் குற்றம் சொல்லாதீர்கள். எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை’ என்றதே பாகிஸ்தானின் முதல் எதிர்வினை. ஆனால் எல்லைக்கு அப்பாலிலிருந்து செயல்பட்டுவருவதாகக் கருதப்படும் ஜெய்ஷ் இயக்கம் ’தாங்கள்தான் தாக்குதலுக்குக் காரணம்’ என உடனே பெருமையாக அறிவித்து பாகிஸ்தானின் முகத்தில் கரியை அழுந்தப் பூசிவிட்டது.  பாகிஸ்தான் மிரண்டதன் காரணம், ஜெய்ஷ் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணே பாகிஸ்தான்தான் என்றும், அதற்கு பாக் ராணுவம் உதவியும், தீவிர பயிற்சியும் தருவதாக ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் முதலான நாடுகளுக்கு ஆதாரங்களுடன் இந்தியா ராஜீயத் தொடர்புகள்வழி (through diplomatic channels) தெரியப்படுத்தியிருந்ததுதான்.
புல்வாமா தாக்குதலுக்கு அடுத்த வாரம் இந்தியா முன்னெடுத்த ராஜீய நடவடிக்கைகளால் – அதாவது வல்லரசு நாடுகள் உட்பட முக்கிய நாடுகளில் இந்திய தூதர்கள் மூலம் பேசி, காரணம் யார் என்பதோடு நிலைமையின் தீவிரத்தையும், இந்தியா கடும் எதிர்வினை ஆற்றும் எனவும் தெரியப்படுத்தியதால்- தீவிரவாதத்தினால் ஏற்கனவே முகம் சிவந்துபோயிருக்கும் நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஃப்ரான்ஸ் போன்ற முக்கிய நாடுகள் பாகிஸ்தானைக் கடுப்பாகப் பார்த்தன கோழைத்தனமான வெறிச்செயலைக் கண்டித்ததோடு, ’தன்னைத் தற்காத்துக்கொள்ளும்பொருட்டு திருப்பி பதிலடிக்கொடுக்க இந்தியாவுக்குத் உரிமை இருக்கிறது’ என்றும் ஒருபடி மேலேறிச் சொன்னது ட்ரம்ப்பின் அமெரிக்கா.  அவ்வாறு அதிகாரபூர்வமாக அமெரிக்கா சொன்னதும் மற்ற மேலைநாடுகளும் அதே.  அதே.. என்றன. சூட்டோடு சூட்டாக, ஐ.நா.வில் ஜெய்ஷ் மற்றும் தீவிரவாத  இயக்கங்களுக்கெதிராக ஒரு தீர்மானத்தை இந்தியா கொண்டுவந்தது. வல்லரசு நாடுகள் சேர்ந்து ஓட்டுப்போட, உலகெங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கும் பயங்கரவாதத்தைக் கண்டிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது ஐ.நா. தனது சம்ச்சாவான பாகிஸ்தானைக் குறைகூறத் தயங்கும் சீனாவுக்கும் இந்திய தீர்மானத்தை ஆதரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது!
உருவாகிவரும் அபாயகரமான சூழலில், அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான், ரஷ்யா, ஃப்ரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளின் ஆதரவை இந்தியா உறுதி செய்துகொண்டது, (2017-ல்தான் முதன்முறையாக ஒரு இந்தியப் பிரதமர் இஸ்ரேலுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டது. அதற்கு மறுமொழியாக இஸ்ரேலின் பிரதமர் அடுத்தவருடமே இந்தியா வந்தார். இந்தியா-இஸ்ரேல் இடையே ராணுவ ஒத்துழைப்பு நரேந்திர மோதி-பெஞ்சமின் நெதன்யாஹூ சந்திப்புக்களுக்குப் பிறகு பெருமளவில் அதிகரித்து வளர்ந்துவருவதை சீனாவும், பாகிஸ்தானும் கவனிக்கத் தவறவில்லை). குறிப்பாக பயங்கரவாதம் தொடர்பாக வல்லரசுகளுடனான இந்திய நெருக்கம்/மேம்படுத்தப்பட்ட உறவுகள், உலக அரங்கில் பாகிஸ்தானை மிகவும் தனிமைப்படுத்தியது. பாகிஸ்தான் புல்வாமாவில் தங்களுக்கு சம்பந்தமில்லை என மறுக்க முயற்சிக்கும் வேளையில், ’எங்கப்பன் குருதுக்குள் இல்ல’ என்பதுபோல ஜெய்ஷ் வேறு உளறிவிட்டதே! ஒவ்வொரு நாளும் பெரும்பொழுதாக பாகிஸ்தானுக்கு நகர, இந்தக் குறுகிய காலகட்டத்தில் பாகிஸ்தானும் சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட தன் வெளிநாட்டு நண்பர்களுடன் குலவி வந்தது.  ஒருகட்டத்தில் பாகிஸ்தான், ’இந்தியப் பொதுத் தேர்தல் நெருங்கும் இந்த நெருக்கடிவேளையில் நம்மை இந்தியா எங்கே தாக்கப்போகிறது.. சான்ஸே இல்லை’ என அலட்சியம் செய்ய ஆரம்பித்திருந்த வேளையில்.. அது நடந்தேவிட்டது.
எல்லை தாண்டியத் தாக்குதல் என்பதைவிட, அதனை இந்தியா நிகழ்த்தியவிதம் பாகிஸ்தானைப் பதறவைத்தது. செப்டம்பர் 2016 சர்ஜிகல் ஸ்ட்ரைக் போல, ஒரு வேளை இந்தியத் தரைப்படை பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீருக்குள் புகுந்து அடிக்கலாம் என்பதே மிஞ்சி மிஞ்சிப்போனால் அவர்களின் யூகமாக இருந்திருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுடன்தான் அது தயார்நிலையில் வேலிக்கு மறுபுறம் ஓணானாக அமர்ந்திருந்தது! ஆனால் இந்திய அரசு செய்த காரியம் என்ன? இந்திய வேவுத்துறையின் ரகசியத் தகவல்கள் மூலம் ஜெய்ஷின் பயிற்சி முகாம்கள்/ஏவுதளங்களை ஏற்கனவே குறித்துவைத்திருந்த இந்தியா, விமானப்படை மூலமாக அதிகாலையில் புகுந்து விளையாட, வேறுவித ஸ்க்ரிப்ட்டைத் தயார்செய்து வைத்திருந்தது. புல்வாமா தாக்குதலின் ’13-ஆம் நாள் சுபம்’ என்பதாக, ஃபிப்ரவரி 26 தாக்குதலுக்கு பச்சை காட்டியது இந்திய அரசு. மூன்று இடங்கள். இரண்டு பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரின் எல்லைக்கு அப்பாலுள்ளவை. மூன்றாவது பாலகோட் (Balakot). பாகிஸ்தான் நாட்டுக்குள்ளே இருக்கும் இடம்- நம்நாட்டுக்குள் யார் வரப்போகிறார்கள் என்று, முக்கிய பயங்கரவாதிகள் முகாமை அங்கே அமர்த்தி ஆற அமர பயிற்சிகொடுத்துவந்தது பாகிஸ்தான் ராணுவம். மலைச்சரிவில் ஒரு சிறு கிராமம். அதன் ஓரமாக வனப்பகுதியில், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அங்கே மதராஸா இருப்பதாக போர்டு -அதை நடத்துவது ஜெய்ஷ் முகமது இயக்கம் என்றே அதில் எழுதப்பட்டும் இருந்தது! (ரிபப்ளிக் சேனல் வீடியோ).
அதிகாலை 3.35-க்கு, இந்திய விமானப்படை, (1971 இந்தியா பாக் போருக்குப்பின் முதன்முறையாக)  எல்லை கடந்து பாகிஸ்தானுக்குள் சீறித் தாக்கியது. மணிக்கு 2300 கி.மீ. வேகத்தில் பாயும் இந்தியாவின் ஃபைட்டர் ஜெட்டான மிராஜ்-2000 (Mirage 2000), மின்னல்வேகத்தில் உயரமெடுத்தும், நொடியில் குட்டிக்கரணமிட்டுக் கீழ்நோக்கிப் பாய்ந்தும், மீண்டு உயரமெடுத்து வளைந்து திரும்பவும் கூடிய பல்திறனுள்ள, ஃப்ரென்ச் போர்விமானமாகும்.  குறிப்பாக பாலகோட்டில்  மலையடிவாரத்தில் கட்டப்பட்டிருக்கும் பயங்கரவாத முகாம்/தளங்களின்மீது கீழ்நிலையில் பறந்து தாக்கிவிட்டு நொடியில் இந்திய எல்லைக்குள் வந்துவிடவேண்டுமென,  இந்திய விமானப்படை இந்த விமானத்தை, அந்த முகூர்த்த காலையில் தேர்ந்தெடுத்திருந்தது.
பயங்கரவாதிகளின் முகாம்/தளம் இந்திய விமானப்படையால் இஸ்ரேலின் ’ஸ்பைஸ்-2000’ லேஸர் குண்டுகளால் துல்லியத் தாக்குதலுக்கு இலக்காகி அழிக்கப்பட்ட அதிர்ச்சியில், பாகிஸ்தான் காலைச் சாயாகூட குடிக்காமல் விக்கித்துப்போய் உட்கார்ந்திருந்தது.  அந்த பித்து நிலையிலிருந்து விடுபட நேரம்பிடித்தது போலும். வழக்கம்போல், முதலில் இந்தியத் தாக்குதல் ஒன்று நடந்ததாகவே அது ஒத்துக்கொள்ளவில்லை. மறுத்தது. ஏன்? பாகிஸ்தானுக்குள் எல்லை தாண்டிவந்து இந்தியா போட்டுத்தள்ளியதை, அங்கே-அவர்கள் நாட்டுக்குள்- ஒப்புக்கொள்ளுதல் என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை அவர்களின் அரசு/ராணுவ அமைப்புகளுக்கு. அவர்களது மக்களிடம்போய் இந்தியாவிடம் அடிவாங்கியதை எப்படிச் சொல்வது? எனவே ஆரம்பத்தில், அதிகாரபூர்வமாக மறுத்துப் பார்த்தது. பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீர் பகுதியில்தான் இந்தியா தாக்கியது என்று பிற்பாடு முணக முயன்றது. இந்நிலையில்,  இந்தியா ஒரு ப்ரெஸ் மீட்டில் இந்திய வெளியுறவுத்துறை செயலர் மூலம் தாக்குதல்பற்றி அறிவித்துவிட்டது.  அண்டை நாட்டுக்கு வேறுவழியில்லை இப்போது. ’ஆமாம் மூன்று இடங்களில்  குண்டு விழுந்திருக்கிறது ஆனால் அங்கு ஒருத்தரும் இல்லை. காட்டுப்பகுதி!’ என அசடுவழிந்து  பார்த்தது. இதற்குள் சர்வதேச,  இந்திய மீடியா தளங்களில் செய்திகள் பறக்க ஆரம்பித்துவிட்டன.
மதியம் வாக்கில்  இன்னொரு பாக் ரகசியமும் நியூஸ் சேனல்களில் வெளிவந்தது: அவர்களது ராணுவம் அப்போது பாலகோட்டில்  சிலகாரியங்களில் பிஸியாக இருந்தது. ஊரை வளைத்து ராணுவத்தை நிறுத்தி, வேடிக்கை பார்க்கவந்த அக்கம்பக்கத்துக் காரர்களை விரட்டியடித்து எச்சரித்தது. செத்துக் கரியாகிவிட்டிருந்த, அரையும் குறையுமாய் எரிந்து கிடந்த பயங்கரவாதிகளின் உடல்களை, துணையிருந்த ராணுவத்தினர் சிலரின் சடலங்களை, காயம்பட்டவர்களை வேகமாக அப்புறப்படுத்தியது. உடைந்துகிடந்த கட்டிடச் சிதிலங்களை  சில மணிநேரத்தில் ட்ரக்குகளில் ஏற்றி நகர்த்தியது.. தடயம் ஏதும் இனி தெரியாதவாறு, தண்ணீர் தெளித்து துப்புரவாக்கி (கோலம் போடுவது அவர்கள் வழக்கமில்லையே!), மாலையில் தங்களது அரசு சார்பு பத்திரிக்கையாளர்கள் சிலரை மட்டும் கூட்டி வந்து காண்பித்தது. ’இங்கே பாருங்கள், எல்லாம் வனப்பகுதி. இங்கே எதுவும் முன்னால் இல்லை. பக்கத்தில் சில மரங்கள் எரிந்திருக்கின்றன பாருங்கள். இந்த இடத்தில்தான் குண்டுபோட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள் இந்தியர்கள்!’ என்றது. எத்தனையோ விண்ணப்பித்தும் வெளிநாட்டு மீடியாஹவுஸ்களை அங்கே அனுமதிக்கவில்லை. முதலில் இந்தியா தாக்கவேயில்லை என்றும், பிறகு காட்டுக்குள்தான் குண்டு போட்டதென்றும் மணிக்கு மணி மாறி ஒலித்த பாக் குரல், சர்வதேச அரங்கிலும் சிரிப்பை வரவழைத்தது.
இனி தப்பிக்க  வழியில்லை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும் என்கிற நிலை உருவாக, அன்று மாலையே பாக். அறிவித்தது. ’எல்லைதாண்டி இந்தியா தாக்கியிருக்கிறது. இதற்கு பதிலடி விரைவில் தரப்படும்..’ என்றது. அவர்களது மக்களை இம்ப்ரெஸ் செய்ய வீராவேசம் காட்டவில்லையென்றால், இம்ரான் பதவியில் நீடிக்கமுடியாதே.. நவாஸ் ஷெரீஃபும், முஷாரஃபும் ஊழல் கேஸ்களில் மாட்டிக்கொண்டு ஜெயிலில், பெயிலில் இருப்பதால் ஆட்சி அமைக்கமுடியாத நிலையில்தானே, இம்ரானை பொம்மை ஆட்சியில் அமரவைத்திருக்கிறது பாக் ராணுவம்? கையிலுள்ள கிலுகிலுப்பையும் போய்விட்டால் என்ன செய்வது என்கிற பயம்வேறு கானுக்கு.. பாவம்!
எல்லையோரத்தில் இருதரப்பு படைகளும் அலர்ட்டில் இருக்க, அடுத்தநாளே இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் போர்விமானங்கள் ஊடுருவின. ஏற்கனவே வான்ரோந்தில் இருந்த இந்தியப் போர்விமானங்கள், பாகிஸ்தானைத் துரத்த, மொத்த ஆப்ரேஷனே 90 வினாடிகள்தான் நீடித்திருக்கிறது. ஏன் இப்படி? ’இந்திய எல்லைக்குள் நுழைவதற்கு எங்களுக்கும் தைரியம் இருக்கிறது’ என்று தனது மக்களுக்கு சீன் போட்டுக் காண்பிக்க, ஒரு ஷோ-ஆஃப் செய்யவே அசட்டுத் தைரியத்தில் இந்த ஊடுருவல். எல்லைதாண்டி வந்து நிகழ்த்திய நாடகம் மேலும் ஒரிரு நிமிடங்கள் கூடுதலாக நீடித்தாலும் இந்தியா திருப்பித் தாக்கிவிடும், பெரும் அளவு நஷ்டமும் அவமானமும் உண்டாகும் என்கிற பயம் பாகிஸ்தானுக்கு. அதனால்தான் உள்ளே ஓடிவந்து இந்திய ராணுவக் கிடங்கில் ரெண்டு குண்டைப் பேருக்குப் போட்டுவிட்டு ஓடிவிடவேண்டும் எனக் குள்ளநரித்திட்டம் போட்டது. அதையும் செயல்படுத்த துப்பில்லை என்பது அன்று காலையில் புரிந்தது. இதற்குள்  ஒரு பாக் எஃப்-16 ஐ, தன் மிக்-21 பைஸன் (Bison) சூப்பர்சானிக் ஜெட்டில் விரட்டிய நமது சூப்பர் ஹீரோ அபினந்தன், தனது R-73 ஏவுகணையினால் அதனைத் துல்லியமாக சுட்டுவீழ்த்தினார். (R-73 விண்ணிலிருந்து விண்ணிற்கு ஏவப்படும் ரஷ்ய ஏவுகணை. அதனை போர்விமான பைலட்தான் இயக்கவேண்டும்). இந்திய எல்லைக்குள் திரும்பும் முயற்சியில் தனது விமானமும் சுடப்பட, பாரசூட்டில்  இறங்கித் தப்பினார் அபிநந்தன். தப்பினாரா? துரதிர்ஷ்டம் துரத்தியது அவரை. அவர் இறங்கிய இடம் பாக். வசமிருந்த காஷ்மீருக்குள்.  இறங்கியபின்,  பாக். கிராமவாசிகளால் கல்வீசித் தாக்கப்பட்டார். பிறகு பாக். ராணுவத்தினரிடம் அவர் பிடிபட நேர்ந்தது.
அன்று மதியமே இந்திய விமானப்படை அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார்கள். 90 நொடிகளே நடந்த பாக். விமான அத்துமீறல் முறியடிக்கப்பட்டதாகவும், அந்தக் குறுகிய நேரத் தீவிர எதிரடியில், பாகிஸ்தானின் அதிநவீன எஃப்-16-Falcon, இந்திய மிக்-21 பைஸனால் வீழ்த்தப்பட்டதாகவும், எஃப்-16 விழுந்த இடம் அவர்களின் எல்லைக்குள்ளே என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், நமது மிக்-21 ஒன்றை இந்தத் தாக்குதலில் இழந்துவிட்டோம் எனவும், பைலட் திரும்பாததால் அவரை ‘missing in action’ எனக் கணித்து, எதிரிகளிடமிருந்து விபரங்கள் கேட்டிருக்கிறோம் என்றும் சொன்னார்கள் இந்திய விமானப்படை அதிகாரிகள்.
போரின்போது ஒரு நாட்டு வீரர் இன்னொரு நாட்டில் பிடிபட்டால், அவரை எதிரி நாடு பாதுகாப்பாகக் கையாளவேண்டும், அதுபற்றி சம்பந்தப்பட்ட நாட்டிற்கு உடன் தெரியப்படுத்தவேண்டும், விரைவிலேயே பிடிபட்ட வீரர் அவருடைய நாட்டுக்கு முறையாகத் திருப்பி அனுப்பப்படவேண்டும் என்பதெல்லாம் இரண்டாம் உலகப்போருக்குப் பின் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையில் பிரதிநிதித்துவம் பெற்ற நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ‘ஜெனீவா கன்வென்ஷன்’ எனப்படும் சர்வதேச ப்ரோட்டகால் (international protocol) / சட்டதிட்டத்தில் காணப்படுகின்றன.
மேலும் பார்ப்போம்..
**

7 thoughts on “பயங்கரவாதத்திற்கெதிராக இந்தியா

  1. இதற்கு முந்தைய இரு பதிவுகளையும் சேர்த்து இப்போதுதான் படித்தேன். வெகு சுவாரஸ்யம்!

    Liked by 1 person

  2. இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடனான நமது அரசாங்கத்தின் உறவு பாராட்டத்தக்கது. சம்பவங்களை அதே ஜெட் வேகத்தில் இந்தப் பதிவில் கொண்டு சென்றுள்ளீர்கள்.

    Like

  3. ரொம்பவே சுவாரசியம். ஏற்கெனவே ரிபப்ளிக் போன்ற தொலைக்காட்சிகள் சொன்ன செய்திகள் தான் எனினும். படிக்கையில் இன்னமும் ருசி கூடுகிறது. சம்பவங்கள் நடந்த வேகத்தில் பதிவுகளில் அதை வெளிக்காட்டி இருக்கிறீர்கள். இஸ்ரேலிடம் இருந்து ராணுவ உதவி மட்டுமல்லாமல் இந்தப் பாசன உதவியும் பெற்றுக் கொண்டால் தமிழ்நாட்டில் காவிரிக்குக் கையேந்த வேண்டாமோ!

    Liked by 1 person

  4. @ திண்டுக்கல் தனபாலன், @ பானுமதி வெங்கடேஸ்வரன், @ ஸ்ரீராம், @ கீதா சாம்பசிவம்:

    கொஞ்சம் நீண்டுவிட்டது பதிவு. ரொம்பச் சுருக்கினால், பல அடுக்குகளாக நிகழ்ந்த சம்பவங்கள் ஏதாவது விட்டுப்போய் முழுப்படம் கிடைக்காதுபோய்விடுமே என்ற சிந்தனை.

    இந்திய இஸ்ரேல் ஒத்துழைப்பு, ராணுவத்துறை தாண்டி பன்முகம் கொண்டது. இங்கே தொடர்பானதால் அதைப்பற்றி மட்டும் குறிப்பிட்டேன். இருதேசங்களும் 1) பெட்ரோலியம், இயற்கை வாயு 2) விண்வெளி ஆய்வு 3)ஸைபர் செக்யூரிட்டி, 4) விமானவழி போக்குவரத்து 5) ஹோமியோபதி மற்றும் இயற்கைவழி மருந்துகள் ஆய்வு 6) சினிமா/டிவி நிகழ்ச்சி தயாரிப்புகள் போன்ற துறைகளில் ஒத்துழைக்க ஒப்பந்தங்கள் 2017-2018-ல் கையெழுத்தாகியிருக்கின்றன.

    Like

  5. ஏகாந்தன் அண்ணா ஹையோ செம ஸ்வாரஸியம்…இன்றைய உங்கள் பதிவைப் பார்த்து வந்தப்பதான் இந்தப் பதிவை மிஸ் பண்ணியது தெரியவந்தது…

    ஹையோ செமையா நானே ஏதோ அங்க ராணுவத்தில் இருப்பது போலவும் எல்லையில் சென்று அவர்களுடன் கூடவே பயணித்தது போலவும் சண்டை போட்டது போலவும் அப்படியே நெட்டில் செய்திகளில் பார்த்த படங்களை வைத்து மனதில் காட்சிகள் விரிந்தது உங்கள் ஒவ்வொரு வரி வாசிக்கும் போதும்.

    உடல் சிலிர்த்தது. இஸ்ரேலுடன் ஆன உறவும் இந்த போர் டெக்னாலஜி, ராணுவ உதவி என்று செம இது நல்ல முறையில் தொடர வேண்டும் என்றும் மனது நினைத்தது.

    செம பதிவு…உண்மைச் சம்பவங்கள் நாவல் போன்று…

    இதோ புதியதுக்கும் போறேன் நம்ம ஹீரோ பத்தி வாசிக்க…
    சூப்பர் !!!

    கீதா

    Liked by 1 person

    1. @ கீதா:
      உங்களது உற்சாகக் கமெண்ட் அடுத்த போஸ்ட்டை விரைவில் எழுத என்னை இழுப்பதுபோலிருக்கிறது!

      Like

Leave a reply to ஸ்ரீராம் Cancel reply