துள்ளும் எதிரிக்குத் துல்லியத் தாக்குதல் 

அடுத்த வீட்டு அம்பியால் சும்மா இருக்க முடியாது. அது ஜாதகத்தில் இல்லை. நேரடியாக வந்து தாக்கக் குலை நடுக்கம். (எங்களிடமும் இருக்கு குண்டு என்று அவ்வப்போது உளறினாலும்.) இந்த நிலையில், அதற்கு தோதாகப்பட்டது: விஷப்பாம்புகளை ஒவ்வொன்றாக அடுத்த வீட்டுக்குள் அனுப்பிவிடுவது. போய்ப் போட்டுத் தள்ளட்டும். நேரடியாக நம்மை யார் குறை சொல்லப்போகிறார்கள். (பாம்பு கடித்தால் நாங்கள் என்ன செய்வது? எங்கள் வீட்டுக்குள்ளும் புகுந்திருக்கிறது, கடித்திருக்கிறது..)சர்வதேச அரங்கில் தூதர்கள் மூலமாக இந்தியாவின் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டால், அவை வரும்போது எதிர்த்து வாயடிப்போம். கூடவே, சீனா அண்ணாச்சி இருக்காருல்ல.. கவலை எதற்கு என்கிற மனோபாவம் பாகிஸ்தானின் தலைமைக்கு . இந்தியாவுக்கு கிடைத்திருப்பது வேறுவிதமான தலைமை  என்பது, 2016 செப்டம்பர் வரை அதற்கு உறைக்கவில்லை.
இங்கே  ஒரு முக்கியமான நிகழ்வைக் கவனிக்க,  பலர் தவறியிருப்பார்கள். இந்திய ராணுவத்தின் எல்லை தாண்டிய  செப்டம்பர் 2016 துல்லியத் தாக்குதல் – ’சர்ஜிகல் ஸ்ட்ரைக் -1’ என இப்போது அழைக்கப்பட்டாலும், இதற்கு முன்பே நரேந்திர மோதியின் இந்தியா, துல்லியத் தாக்குதலை வேறொரு தளத்தில் நடத்திப் பார்த்திருக்கிறது. வெற்றியும் கண்டது. எப்போது? ஜூன் 2015-ல். என்னப்பா சொல்றே! – என்கிறீர்கள். உண்மைதான். நமக்குத்தான் நாலாபுறமும் எதிரிகளாயிற்றே – மத்தியகிழக்கில் இஸ்ரேலுக்கு அமைந்த மாதிரி. (இந்த நெருக்கடியான சூழல்தான் இரு நாடுகளையும் நெருங்கிவர வைத்திருக்கிறது. காலத்தின் கட்டாயம். இது முன்னரே நடந்திருக்கவேண்டும். ஆனால்.. சரி, அதைப் பிறிதொரு சமயத்தில் பார்க்கலாம்). இந்தியாவின் வடகிழக்கில் குறிப்பாக மணிப்பூர்-நாகாலாந்து எல்லைகளில், தீவிரவாதம் அதுபாட்டுக்கு வளர்ந்துவந்திருக்கிறது பல வருடங்களாக. (1947-லிருந்து 1998-வரை மாறி மாறி அமைந்திருந்த இந்திய அரசுகள், இந்த   முக்கியப் பகுதியின் பாதுகாப்பைக் கவனிக்க  நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. கீழ்த்தரமான அரசியல் சிந்தனைகளே காரணம்) .
நாகா தீவிரவாதக்குழுக்கள் கொரில்லாப் போர்முறைகளைக் கையாண்டு,  இந்தியப் படைகளை மறைந்திருந்து (மலை, காடுகள் சேர்ந்த பகுதிகள்) திடீரெனத் தாக்குவதும், துரத்தினால் எல்லை கடந்து அயல்நாடான மயன்மாருக்குள் ஓடிவிடுவதுமாய் போக்குக்காட்டிக்கொண்டிருந்தன. இந்தப் பிரச்னை பிரதமரின் கவனத்துக்கொண்டுவரப்பட, அதனை முந்தைய அரசுகளைப்போல் ஒத்திப்போடாமல், இந்திய அரசு 2015-ல் நேரடியாக எதிர்கொண்டது. பிரதமர் மோதி, பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பர்ரிக்கருடன் ஆலோசித்தபின்,  ராணுவத்திற்குப் பச்சைக்கொடி காட்டினார். காத்திருந்த இந்திய ராணுவம் வித்தியாசமான தாக்குதலை முதன்முதலாக செயல்படுத்தியது. மயன்மாரின் ராணுவ கமாண்டர்களுக்கு முன்பே அவர்களின் எல்லைக்குள் கொஞ்சம் நுழைவோம், ஜோலி இருக்கிறது எனச் சொல்லப்பட்டுவிட்டது. இரு ராணுவத்தினருக்கும் இடையே ஒரு நல்லிணக்கத்தொடர்பு உண்டு. அவர்களும் ’எதையாவது பண்ணுங்கப்பா..எங்கள இழுக்காம இருந்தா சரி!’ என்றுவிட்டார்கள் போலும். ரகசியத் திட்டத்தின்படி நாகா-மணிப்பூர்-மயன்மார் மலைக்காட்டுப்பகுதியில்  ராணுவத்தின் ‘துருவ் (Dhruv)‘ ஹெலிகாப்டர்கள் ஒரு இரவில் சீறின. கயிற்றின்மூலம் விறுவிறுவென, இந்தியத் துருப்புகள்  இறக்கப்பட்டார்கள். மலையும் காடுமாக நடந்து சென்று எல்லையை நெருங்கி, அங்கே மயன்மாரின் உட்பகுதியில் காட்டில் கூடாரம் அமைத்து தீவிரவாதிகள் குளிர்காய்ந்துகொண்டிருப்பதை உறுதி செய்துகொண்டார்கள். உடனே ஒரு குழு நேரடித் தாக்குதலுக்காக கூடாரங்கள் நோக்கியும், மற்ற மூன்று குழுக்கள், எதிரிகள் தப்பித்து ஓடினால் போட்டுச் சாத்தவென, மயன்மாரில் உள்ளே மூன்று திசைகளில் சுற்றிவளைத்து நிற்க திடீர்த் துல்லியத்தாக்குதல் நிகழ்ந்தது. அதிர்ந்த நாகா தீவிரவாதிகள் வெவ்வேறு திசைகளில் ஓட முயன்றும், தடுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 93-நாகா கலகக்காரர்கள் (insurgents) பலி. தாக்குதல் கால அளவு 40 நிமிடங்கள். இந்தியப் படைவீரர்கள் உயிர்ச்சேதமின்றி (சிலர் காயமுற்று) தங்கள் தளத்திற்கு வந்து சேர்ந்தார்கள். இதுதான் சுதந்திர இந்தியாவின் முதல் துல்லியத்தாக்குதல் (Surgical ground strikes)- அதாவது வெளிநாட்டு எல்லைக்குள் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்/கலகக்காரர்களை அழிக்கும்பொருட்டு, மற்றொரு நாட்டுடனான சர்வதேச எல்லை கடந்து செய்த  ராணுவத் தாக்குதல்.
இதன் அபார வெற்றி நமது மீடியாக்களில் அவ்வளவாகப் பேசப்படவில்லை. ராணுவமும், அரசும் விட்ட அறிக்கைகளை நமது டிவி சேனல்கள்/ பத்திரிக்கைகள் ஹைலைட் செய்யாது, ஏனோதானோ என்று பத்தோடு பதினொன்றாக வெளியிட்டு கழன்றுகொண்டன. இப்போது விமானப்படையிடமிருந்தே சர்ஜிகல் ஸ்ட்ரைக்கிற்கு ப்ரூஃப் கேட்கிறார்களே,  தேசபக்தர்களான இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள்? அப்போது கேட்டார்களா? பர்மா எல்லைக்குள் தீவிரவாதி முகாமா? அட்ரஸ் எங்கே? ஃபோட்டோ எங்கே? வீடியோ இருக்கா? 93 பேர் செத்தது உண்மைதானா? பர்மா ஏன் ஒன்றும் சொல்லவில்லை? ஒருவேளை எல்லாம் பொய்யோ – என்றெல்லாம் மோதியின் இந்திய அரசையோ, ராணுவத்தையோ ‘கேள்வி’ கேட்கவில்லை! ஏன்? அவர்களுக்குப் ’பிடித்தமான’ பாகிஸ்தான் அதில் சம்பந்தப்படவில்லை! பாகிஸ்தான் டிவி சேனல்களில் அவர்களின் அசட்டு முகங்கள் வெளியாக வாய்ப்பில்லை! மற்றபடி வேறு ஏதாவது பயங்கரவாதக் குழுவிடமிருந்து இந்தியாவுக்கு ஆபத்து வந்தால் என்ன, இந்திய ராணுவம் திருப்பி அடித்தால் என்ன? அடிவாங்கினால்தான் என்ன – அதில் நமது ’எதிரி’ கட்சிகளுக்கு ஆர்வம் இல்லை. அவர்கள் தேசபக்தி அப்படி!
இந்த துல்லியத் தாக்குதல் வியூகம், கமாண்டோக்களின் சிறப்புப் பயிற்சி, செயல்பாடு போன்றவற்றிற்கு கடந்த நான்கு வருடங்களாக இந்திய-இஸ்ரேல் ராணுவ ஒத்துழைப்புக்கு பிரதான பங்குண்டு. மயன்மார் எல்லைப் பகுதியில் நமது தரைப்படையின் துல்லியத்தாக்குதல் யுக்தியும், வெற்றியும் 2015 இறுதிவாக்கில்,  ராணுவ, பாதுகாப்பு வட்டாரத்தில், வெகுவாகப் பேசப்பட்டது, விவாதிக்கப்பட்டது. இதன் பின்புலத்தில் மோதியின் மத்திய கேபினெட் மந்திரி (முன்னாள் ராணுவ கர்னல், ஒலிம்பிக் ஷூட்டிங் மெடலிஸ்ட்) ராஜ்யவர்த்தன் சிங் ராதோட் (Rajyavardhan Singh Rathore) அப்போது சொன்னார்:  ’இந்தியாவின் எதிரிகளே! தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமெனில், சர்வதேச எல்லை தாண்டி அந்நிய நிலத்தில் இறங்கியும், தீவிரவாதிகளைத் தாக்கி அழிக்க இந்தியா ஒருபோதும் தயங்காது!’  அப்போது, பாகிஸ்தானின் காதில் இது சரியாக விழவில்லை. அவர்கள் சீனர்களின் வீட்டில் விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்..
பாகிஸ்தானுக்கெதிரான ’துல்லியத் தாக்குதல்கள் சர்ஜிகல் ஸ்ட்ரைக்ஸ்: 2016 செப்டம்பரில், காஷ்மீரின் யூரி பகுதியில் இந்திய ராணுவத்தின் மீது பாக்-ஆசீர்வாத ஜெய்ஷ் தீவிரவாதிகள் கொரில்லாத் தாக்குதல் நடத்தினார்கள்.  அதில் ராணுவத்தினர் 19 பேரும், தீய சக்திகள் நால்வரும் கொல்லப்பட்டனர். இதற்குமுன் ஜெய்ஷ் தீவிரவாதிகளை உள்ளே ஊடுருவ வைத்து, பாகிஸ்தான் இந்தியாவின் பட்டான்கோட் (பஞ்சாப்) விமானப்படைத் தளத்தைத் தாக்கியிருந்தது.(Jan.1, 2016). விமானப்படையைச் சேர்ந்த ஏழுபேர் உயிரிழந்தனர்.
நேரடியாகத் தாக்கத் துணிவில்லாமல், பாகிஸ்தான் கோழைத்தனமாக, பயங்கரவாதிகளை ஒரு proxy-யாக (பதிலியாக)ப் பயன்படுத்தி இந்தியப்படைகளின் தளங்களில் தாக்குதல் நடத்துவதை இந்திய அரசு உணர்ந்து அதற்கு ஒரு வழிபண்ண முடிவெடுத்தது. இனிப் பேசிப் பயனில்லை. தாமதித்துப் பிரயோஜனமில்லை. இஸ்ரேல்-ஸ்டைல் பதிலடியில் இறங்கியது.
ராணுவத்தின் டெல்லி மற்றும் வடக்கே உதம்பூர் கமாண்ட் நிலையங்களிலிருந்து கண்காணிக்கப்பட்ட இந்த தாக்குதலில் சிறப்புப்படைகள் (special paratroopers) பெரும் பங்கு வகித்தன. நள்ளிரவுக்குப்பின் கிளம்பிய படைகள் ரகசிய வழிகளினூடே நாலுமணிநேரத்துக்குப்பின் தாக்குதல் இலக்குக்கு முன் வந்து நின்றன.   LOC-த்தாண்டி, பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீர் பகுதியில் மூன்று கி.மீ. உள்ளே பாய்ந்து, பாகிஸ்தானின் ராணுவ நிலைகளுக்கு சற்றேறக்குறைய அருகில் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளின் பயிற்சி/ஏவு முகாம்களின்மீது  பாய்ந்து தாக்கின. முக்கியமாகக் கண்காணிக்கப்பட்டவை மூன்று அம்சங்கள். 1)ரகசியம், சஸ்பென்ஸ் கடைசி நொடிவரையில். அப்போதுதான் அதிகபட்ச அழிவை எதிரிக்குக் கொடுக்கமுடியும். 2) டைமிங், கடிகாரத் துல்லியம். 3) தாக்கியவுடன், இந்திய வீரர்களுக்கு இழப்பு/சேதமின்றி உடனே நமது நாட்டிற்குள் திரும்பிவிடுவது.
துல்லியத்தாக்குதலில், முப்பத்தி எட்டு பயங்கரவாதிகள் (பயிற்சியாளர், பயிற்சி கொடுப்பவர் உட்பட), இரண்டு பாகிஸ்தானி வீரர்கள், பயங்கரவாதிகளின் ஏழு ஏவுப்பட்டைகள்/கருவிகள் (launch pads), ஆயுதங்கள் இந்திய ராணுவத்தினால் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்தலைமைக்கு தகவல் போகுமுன்னேயே, இந்திய கமாண்டோ துருப்புகள் வந்த காரியத்தை முடித்து,  தங்கள் தளங்களுக்கு இழப்பின்றி திரும்பிவிட்டனர்.
இருந்தும், பாகிஸ்தான் என்கிற நாட்டுக்கு,  அதன் ராணுவத்துக்கு எதிரான தாக்குதல் இல்லை இது என அதிகாரபூர்வமாக அந்நாட்டுக்கு இந்தியா தெரியப்படுத்தியது: ‘பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த குறுகிய அளவிலான துல்லியத் தாக்குதல் முடிவடைந்தது. மேற்கொண்டு தொடர இந்தியா விரும்பவில்லை. அதே சமயம் பாகிஸ்தான் எதிர்வினை செய்தால், அது நேரடியாக எதிர்கொள்ளப்படும்’ என்றார் இந்திய லெஃப்டினெண்ட் ஜெனரல் ரன்பீர் சிங்.
மயன்மார் எல்லை தாண்டி பதுங்கியிருந்த, நாகா கலகக்காரர்களை தாக்கி அழித்த முன்அனுபவத்தோடு, இந்திய ராணுவம் எதிர்காலத் துல்லியத் தாக்குதலுக்கென 2015-16-லேயே,  இரண்டு பட்டாலியன் சிறப்பு கமாண்டோ யுனிட்களை உருவாக்கிவிட்டிருந்தது. எந்த நேரத்திலும் இதற்கான உபயோகமிருக்கும் எனத் தீவிர பயிற்சிகொடுத்து, மத்திய அரசின் உத்தரவை எதிர்ப்பார்த்துத் தயார்நிலையில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னேறிப் பார்க்கலாம்..

**

10 thoughts on “துள்ளும் எதிரிக்குத் துல்லியத் தாக்குதல் 

  1. : விஷப்பாம்புகளை ஒவ்வொன்றாக அடுத்த வீட்டுக்குள் அனுப்பிவிடுவது. போய்ப் போட்டுத் தள்ளட்டும். நேரடியாக நம்மை யார் குறை சொல்லப்போகிறார்கள். (பாம்பு கடித்தால் நாங்கள் என்ன செய்வது? //

    இப்பத்தான் மண்டைக்கு உரைக்குது…முதல்ல என்னடா பக்கத்துவீட்டு சோட்டா டெரரிஸம்னு பேசாம, போர் போர்னு பேசறானேனு நினைச்சேன்…இதுவும் அவன் டெக்னிக்குனு லேட்டாத்தான் உரைச்சுது….

    உங்க தலைப்பு அருமை…

    கீதா

    Liked by 1 person

  2. இதன் அபார வெற்றி நமது மீடியாக்களில் அவ்வளவாகப் பேசப்படவில்லை. //

    இதைப் பற்றி ஏதோ செய்தி படித்த நினைவு ஆனால் நீங்கள் சொன்னப்புறம் தான் இத்தனை விவரமாக அறிய முடிகிறது.

    ஆனால் என்னைக் கேட்டால் தெரியாமல் இருப்பதும் ஓகே என்றே தோன்றுகிறது ஏனென்றால் நம் மீடியாக்கள் அப்படி இருக்கின்ற்ன..

    நடந்து முடிந்தப்புறம் ஃப்ரூஃப் கேட்பது…சிரிப்புதான் வருது….

    .ஏன் தெரியுமா…இந்த மீடியாக்களுக்கு பொறுப்பும், தர்மமும் இலலமல் போனதோ என்றும் தோன்றும். அபினந்தன் அங்கு மிக தைரியமாக தன் விவரம் எதுவும் சொல்லாத போது நம் மீடியாக்கள் அவர் வீட்டில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது வரை வெளியிட்டது…அப்புறம் முன்பு மும்பைத் தாக்குதலின் போது மீடியா, எங்கெல்லாம் கேமரா வைக்கப்பட்டிருக்கு, போலீஸின் அடுத்த ஆக்ஷ்ன் என்ன< அரசின் அடுத்த ஆக்ஷன் என்ன என்று விலாவாரியாக இன்வெஸ்டிகேஷன் ஜெர்னலிஸம் செய்யும் நினைப்பில் மக்களுக்குச் செய்தி தரோம் என்ற எண்ணத்தில் தீவிரவாதிகளுக்குப் பளிச்சுனு தெரியும் வகையில் வெளியிட்டன.

    அப்ப நான் நினைச்சேன் சில விஷயங்கள் குறிப்பா பாதுகாப்பு விஷயங்கள், தாக்குமுறைகள், ரகசியங்கள் வெளியில் தெரியாமல் செய்ப்படவேண்டும் என்று. .

    கீதா

    Liked by 1 person

  3. அப்போது, பாகிஸ்தானின் காதில் இது சரியாக விழவில்லை. அவர்கள் சீனர்களின் வீட்டில் விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்..// நேரடியாகத் தாக்கத் துணிவில்லாமல், பாகிஸ்தான் கோழைத்தனமாக, பயங்கரவாதிகளை ஒரு PROXY-யாக //

    ஹா ஹா ஹா ஹா இதை வாசித்ததும் மீண்டும் சுஜாதாவின் வார்த்தை “எலிமென்ட்ரி மூளை” அதுதான் நினைவுக்கு வந்தது…

    //மூன்று கி.மீ. உள்ளே பாய்ந்து பாகிஸ்தானின் ராணுவ நிலைகளுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளின் பயிற்சி/ஏவு முகாம்களின்மீது தாக்குதல் நடத்தின. //

    ஆஆஆஆஅ அவங்க ராணவத் தளத்துக்கு பக்கத்தில்யேவா தீவிரவாதிகளின் முகாம்……அதான் விஷப் பாம்பு!!!

    //ரகசியம், சஸ்பென்ஸ் கடைசி நொடிவரையில். அப்போதுதான் அதிகபட்ச அழிவை எதிரிக்குக் கொடுக்கமுடியும். 2) டைமிங், கடிகாரத் துல்லியம். 3) தாக்கியவுடன், இந்திய வீரர்களுக்கு இழப்பு/சேதமின்றி உடனே நமது நாட்டிற்குள் திரும்பிவிடுவது.//

    சூப்பர்.!!!! ரகசியம் சஸ்பென்ஸ் கடைசி நொடி வரையில்…ஹப்பா இது இதுதான் …நம்ம மீடியாக்கு மட்டும் புள்ளி தெரிஞ்சுச்சு….அம்புட்டுதேன் கோலம் படம் எல்லாம் போட்டுக் காட்டிருவாங்க..

    கடைசிப் பாராதான் என் மனதில் ஓடியது சோட்டா ப்ஃபைட்டர் ப்ளேன் விட்டப்ப…இது தீவிரவாதத்துக்கு எதிரானது மட்டுமே…நு

    சூப்பர் த்ரில்லர் படிச்சது, பாத்தது போல இருக்கு…கூடவே சுஜாதாவின் கதையும் மனதுள் ஓடியது….செம…இன்னும் முன்னேறிப் பார்த்து சொல்லுங்க செம ஸ்வாரஸ்யமா இருக்கு…

    கீதா

    Liked by 1 person

  4. @ கீதா:
    ராணுவ ரகசியங்கள் வெளி ஆட்களின் வாயாடலுக்கானதல்ல. மீடியா, நிபுணர்கள், எதிர்க்கட்சிகளின் பிழைப்பு சம்பந்தப்பட்டவையல்ல! எந்த நாட்டிலுமே. இதே கேஸ்தான் வேவுத்துறை விஷயமும்- நாட்டின் பாதுகாப்போடு சம்பந்தப்பட்டிருப்பதால். சில விஷயங்கள் தற்செயலாக வெளிவந்துவிடுகின்றன, அவையும் ஓரளவுக்குத்தான்.

    @ திண்டுக்கல் தனபாலன்:
    காயமே.. இது பொய்யடா! – என்றானபின், இந்த உலகில் எதுதான் மெய்!

    Like

  5. //இந்த உலகில் எதுதான் மெய்!/

    எனில் இப்போது நீங்கள் எழுதுவது கற்பனையானதா? நிஜமாக நடந்தது இல்லையா?

    Like

    1. பதிவைப் படித்தபின் இப்படியா கேட்கத் தோணுகிறது! ஒருவேளை, திண்டுக்கல் தனபாலன் பின்னூட்டத்திலிருந்து நேரடியாக இங்கு குதித்துவிட்டீர்களோ?!

      Like

  6. தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள். மீடியா அதிலும் தமிழ் ஊடகங்கள்! 😦 இதில் ஏற்கெனவே கருத்துச் சொல்லி இருந்தேன். காணாமல் போச்சு போல! :))))

    Like

    1. @கீதா சாம்பசிவம்:
      ஏற்கனவே கருத்து சொல்லியிருந்தீர்களா? வரவேயில்லையே.
      நான் அவ்வப்போது ‘pending’, ‘spam’ போன்ற லிஸ்ட்களை சரிபார்ப்பது வழக்கம். அங்கே யாருடைய கருத்தாவது போய்ச் சிக்கியிருக்கிறதா என்று!

      Like

Leave a reply to Aekaanthan Cancel reply