கிரிக்கெட் தயார்நிலை: காயம் செய்யும் மாயம் !

ஆஸ்திரேலியாவுக்கெதிரான இருதரப்பு கிரிக்கெட் தொடர் இன்று (24-2-19) விசாகப்பட்டினத்தில்  துவங்குகிறது. முதலில் இரண்டு டி-20 போட்டிகளும், பிறகு ஐந்து  ஒரு-நாள் போட்டிகளும். இவைகளின் மூலம், நாட்டின் வெவ்வேறு அணிகளிலிருந்து முக்கிய வீரர்களை சுழற்சிமுறையில் விளையாடவிட்டு  அவர்களது பேட்டிங் அல்லது பௌலிங் ஃபார்மை (form) அறிய முயற்சி செய்கிறது இந்திய கிரிக்கெட் போர்டு.
இடுப்பு, முதுகுப் பிடிப்பு என ட்ரீட்மெண்ட்டில் இருந்து சமீபத்தில் வெளிவந்த இந்தியாவின் பிரதான ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் முதுகில் வலி என்றதால், அணியிலிருந்து ட்ரீட்மெண்ட்/ஓய்வுக்கென விடுவிக்கப்பட்டுள்ளார். போதிய ஓய்வு, சரியான ட்ரீட்மெண்ட் பெற்று உலகக்கோப்பை அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்ப்போம். ஏற்கனவே தோள்பட்டை காயத்திற்கான ட்ரீட்மெண்ட் என்கிற பெயரில் போர்டின் டாக்டர்கள்  சொதப்பியதால், டெஸ்ட் விக்கெட் கீப்பர் வ்ருத்திமான் சாஹாவின் ஒரு கிரிக்கெட்-வருடம் காலியாகிவிட்டது என்பதும் இந்த சமயத்தில் நினைவுக்கு வந்து சோர்வு தருகிறது. அஷ்வின், ப்ரித்வி ஷா ஆகியோர் காயத்துக்குப் பின் தங்கள் உடல் தயார்நிலை எப்படி இருக்கிறது என்பதை மார்ச் இறுதியில் ஆரம்பிக்கவிருக்கும் ஐபிஎல்-இல்தான் காண்பிக்கமுடியும். ஐபிஎல் -ன் காட்டடி ஃபார்மேட்டை உலகக்கோப்பையின் ஐம்பது ஓவர் கிரிக்கெட்டோடு ஒப்பிட முடியாவிட்டாலும், அவர்களின் உடல்திறன் கிரிக்கெட்டுக்கு எப்படி ஒத்துழைக்கிறது என்பது மார்ச்-ஏப்ரலில் தெரிந்துவிடும்.
ஆஸ்திரேலிய தொடரின் ஒரு-நாள் போட்டிகளுக்கென, பாண்ட்யாவின் இடத்தில், இதுவரை தேர்வுக்குழுவின் நினைவில் வராத டெஸ்ட் வீரரான ரவீந்திர ஜடேஜா (ஸ்பின் பௌலிங் ஆல்ரவுண்டர்) தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆச்சரியம். அவரே தன்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டிருப்பார்! இந்தியாவின் அருமையான ஃபீல்டர்களில் ஒருவர் மற்றும் அதிரடி காட்டக்கூடிய கீழ்வரிசை பேட்ஸ்மன். இவர் தனக்குக் கிடைத்திருக்கும் அபூர்வ வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இந்தத் தொடரில் சாதித்துக் காட்டலாம். தேர்வுக்குழுவை இம்ப்ரெஸ் செய்துவிடலாம். ரவி சாஸ்திரி-கோஹ்லி (திரைக்குப் பின்னால் தோனி)- க்ரூப்பைக் கவரவேண்டுமே!
உலகக்கோப்பையில் இடம்பெறும் வாய்ப்புள்ள  வீரர்கள், வரவிருக்கும் ஆஸ்திரேலிய, ஐபிஎல் தொடர்களில் வீரதீரம் காண்பிக்க முற்படுவது இயற்கை. அடுத்த இரண்டு மாதங்களில் காயம்பட்டுக்கொள்ளாமல்  ஃபிட்னெஸைக் கவனித்துக்கொள்வது அவர்களுக்கு நல்லது. குறிப்பாக ரிஷப் பந்த், க்ருனால் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், சஹல், விஜய் ஷங்கர் போன்றோர். கூடவே, இதுவரை இந்திய தேர்வுக்குழுவின் உலகக்கோப்பை கணக்கில் வராத அஷ்வின், ப்ரித்வி ஷா, ஷ்ரேயஸ் ஐயர், மயங்க் அகர்வால் போன்றோரும் உடல், மன ரீதியாகத் தயார் நிலையில் இருக்கவேண்டியவர்களே. இன்னும் மூன்று மாதமிருக்கிறது லண்டனில் மெகா ஷோ ஆரம்பிக்க. எந்த சமயத்தில், எந்த காரணத்தினால், யார் உள்ளே வரவேண்டியிருக்கும், யார் வெளியே போகவேண்டியிருக்கும் என்பதை யார்தான் அறிவார் ?
*

3 thoughts on “கிரிக்கெட் தயார்நிலை: காயம் செய்யும் மாயம் !

  1. நல்ல கவரேஜ். எதையும், யாரையும் குடிப்பிட விடவில்லை நீங்கள்.

    அதுசரி, நேற்று ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து மேட்ச் பார்த்தீர்களா? குறிப்பாக ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸ்?

    Liked by 1 person

  2. //ரவி சாஸ்திரி-கோஹ்லி (திரைக்குப் பின்னால் தோனி)- // – சார்… ஜடேஜா, தோனியின் ஆள். அவர் பெர்ஃபார்ம் பண்ணினால்தான் அணியில் கோஹ்லி சேர்த்துக்கொள்வார். ஆனாலும் அவர் மற்றவர்களைவிட ரிலையபிள்.

    Liked by 1 person

    1. @ ஸ்ரீராம்:
      Hazratullah Zazai -ன் மெகா இன்னிங்ஸைப் பார்க்கமுடியாமல் போய்விட்டது. ஆஃப்கானிஸ்தான் இந்த உலகக்கோப்பையில் பெருசுகளுக்குத் தலைவேதனையாய் ஆகப்போகிறது!

      @ நெல்லைத் தமிழன்:
      ஜடேஜா தோனியின் ஆளா..புதுசா இருக்கே இது! இன்று கோஹ்லியின் ஆள் கே.எல்.ராஹுல் அரைசதம் அடித்து அசத்திவிட்டார். மூன்றாவது ஓப்பனராகத் தேர்வாகிவிட்டார் எனலாம்

      Like

Leave a comment