மாறும் காட்சிகள்

 

காலையில் ஒரு  உலர் சூழல்
எப்போதும் தலை உயர்த்திக் காட்சிதரும்
ஆதவனுக்கு என்ன வந்ததோ இன்று
மேகமூட்டம் கவிந்திருக்கையில்
மேலோட்டமாக பொதுவாக உலவிச் செல்லும்
தென்றலையும் காணோம் இந்தப்பக்கம்
சிறு சிறு சிவப்புப் பூக்களின் மீது
அமர்ந்து அழுந்தித் தேன் குடிக்க
வண்ணத்துப் பூச்சிகளாவது
வரவேண்டாம்?
மரங்களின் அடர்த்திகளில் என்ன அசைவு
வேண்டப்படாத பழுப்புகள், மஞ்சள்கள்
வேகமாகக் கழட்டிவிடப்படுகின்றன
நிலத்தில் மோதி சரசரக்கின்றன
காலைநடை  நடப்பவர்களின்
காலடிபட்டு நொறுங்கித் தூளாகுமாறு
கடுமையாக எழுதப்பட்ட ரகசிய விதி..
நடப்பதாக எண்ணிக்கொண்டு எதிரே
மெல்ல மெல்ல அசைந்து செல்பவர்கள்
காலப்போக்கில் கசங்கிப்போன கனவான்கள்
எந்த திருப்பத்திலும் சாயக்கூடும்
எப்படியும் சரிந்துவிடலாம் ..
பூங்காவினுள் சாவகாசமாக நுழையும்
பூத்ததலைத் தாத்தாவின் கைபிடித்து
மென்நடைபோட்டுவரும்  குழந்தை
எதைப் பார்த்து இப்படிச்
சிலிர்த்துச் சிரிக்கிறது
என்ன புரிந்தது அதற்கு ?
**

7 thoughts on “மாறும் காட்சிகள்

    1. @ Sriram:
      கவிதையைத் தாண்டியும், தலைக்குள் நிறைய ஓடிக்கொண்டுதானிருக்கிறது. அதில் கிரிக்கெட்டோடு எகிப்து, வெனிஜுலா போன்ற சங்கதிகளும் உண்டு. நிறைய தயார் செய்ய வேண்டியிருக்கிறது, களத்தில் இறங்குமுன்!

      Like

  1. நல்லதொரு கவிதை. குழந்தைக்கு சந்தோஷத்துக்கும் சிரிப்புக்கும் காரணமே வேண்டாமே! அதைப் பார்க்கும்நம்மையும் அது தொற்றிக்கொள்ளும். இங்கேயும் இப்படித் தான் சூரியனார் லீவு எடுத்துவிட்டு இப்போ ஒரு வாரமாக வாட்டிக் கொண்டிருக்கார். ஏசி போட்டுக்கலாம்னு ஒரு ஆசை! ஆனால் நம்மவருக்குக் குளிருதாமே! :)))) ஏற்கெனவே தண்ணீரில் குளியல் ஆரம்பிச்சாச்சு! இனி வரும் நாட்கள் வெயிலின் தாக்கம்! 😦

    Like

  2. குழந்தைகளின் சிரிப்புக்கு காரணம் தேடக்கூடாது மனசில் கல்மிஷம் ஏதும் இருக்காது

    Liked by 1 person

Leave a reply to ஸ்ரீராம் Cancel reply