குதிரைக்காரனும், மேலும் சில சங்கதிகளும் ..

குதிரைக்காரன்

அந்தக் கடற்கரையின் அழகைப்பற்றி அவன் நிறையக் கேள்விப்பட்டிருந்தான். பார்க்கவேண்டுமென்கிற ஆசை அவனுள் ஊற்றெடுத்துப் பெருக, அன்று கிளம்பிவிட்டான் குதிரையின் மேலேறி. விரைந்து பயணித்தும், கடற்கரை ஊரை நெருங்குவதற்குள் மாலை மறைந்து மிக இருட்டிவிட்டிருந்தது. அருகில் தெரிந்த தங்கும்விடுதி மனசுக்கு ஆசுவாசம் தந்தது. அதன் முன் சென்று குதிரையை நிறுத்தி இறங்கினான். ஒரு ஓரமாக நின்றிருந்த பெருமரத்தில் குதிரையைக் கட்டினான். விடுதிக்குள் சென்று உணவருந்தியவன் இரவு அங்கேயே தங்கிவிட்டான்.

காலையில் எழுந்து வெளிவந்தவனை அதிர்ச்சி மிரட்டலாக வரவேற்றது. மரம் அப்படியே நின்றிருந்தது. குதிரையைக் காணவில்லை. எவனோ இரவோடிரவாகக் கிளப்பிக்கொண்டு போய்விட்டான். மிரண்டுபோய் அங்குமிங்கும் பார்த்தான் குதிரைக்காரன். என் செய்வது இனி? திருடனா மனம் மாறி, குதிரையைத் திருப்பித் தர வருவான் ? எப்படி மேற்கொண்டு பயணிப்பது? கேள்விகள் துளைக்க சோர்ந்து நின்றவனை, மெல்ல நெருங்கிவந்த நாலுபேர் சூழ்ந்துகொண்டார்கள். என்ன நடந்ததென ஆர்வமாய் விஜாரித்தார்கள். சொன்னான்.

நால்வரில் ஒருவன், ‘குதிரையைப் போயும்  போயும் மரத்திலா இரவு நேரத்தில் கட்டிவைப்பது?  உன்னை..’ என்று கிண்டலாக ஆரம்பித்தவன்,  சிரிக்கத் தொடங்கியிருந்தான்.

இன்னொருவனோ ’கடற்கரையின் அழகைப் பார்க்கவென இவ்வளவு தொலைவிலிருந்து மெனக்கெட்டு, குதிரையில் ஏறி வந்தாயாக்கும். உன்னைவிட ஒரு முட்டாளை நான் இதுவரைப் பார்த்ததில்லை!’ என்று அங்கலாய்த்தான்.

மூன்றாமவன் தீர்மானமாகச் சொன்னான்:  ’உன்னைப்போல பணக்காரர்கள்தான் இப்படியெல்லாம் செய்வார்கள். உங்களுக்கெல்லாம் திமிர் கொஞ்சம் அதிகந்தான்!’

நான்காம் ஆள், சிந்தனையிலிருந்ததாகத் தோன்றியவன், விடுபட்டான்: ’பொதுவாக எங்கும் நடந்துசெல்லத் துணிவில்லாதவர்கள், கால்களில் வலுவில்லாதவர்கள், முழுச்சோம்பேறிகள் போன்றவர்கள்தான் இப்படியெல்லாம் குதிரை மேலேறிப் பயணிப்பார்கள் ..’ என இழுக்க, மற்றவர்கள் ஹோ.. ஹோ.. என மேலும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

குதிரையை இழந்தவன் திடுக்கிட்டான். ஒரு விஷயம் மனதில் பட, ஆச்சரியத்தோடு நினைத்தான் : இவர்களில் எல்லோருக்கும் நான் செய்ததுதான் குற்றமாகத் தெரிகிறது. ஆனால், குதிரையைத் திருடிக்கொண்டுபோனவனின் இழிசெயலைக் கண்டிக்கக்கூட வேண்டாம் – விமரிசித்தும்கூட  ஒருத்தனும் ஒரு வார்த்தை சொல்லவில்லையே?

*

கதை முடிந்தது மேலே.

வேறு சில:

ஆதியில் மனிதன் நெடுக கால்போனபோக்கில் அலைந்து திரிந்தான். தன்னைப்பற்றியோ, சுற்றுப்புறத்தைப்பற்றியோ ஒன்றும் புரியாமல் குழம்பலானான். தயங்கினான். நின்றான். அங்குமிங்கும் உற்று நோக்கியவாறு மேலும் மேலும் நடந்தான் பொழுது சாயும்வரை. ஒரு கட்டத்தில், அதிசயமாய்த் தான் பார்க்க நேர்ந்த கடலின் தீரா அலைகளிடமிருந்தும், வனத்தின் குறுக்கே அவ்வபோது சீறிய பெருங்காற்றிலிருந்தும் விசித்திரமான ஓசைகளை அறிந்துகொண்டான்.

இப்படியிருக்கையில், நேற்றைய பொழுதின் வார்த்தைகளில், ஆதிகாலத்தின் ஒலிக் கோர்வைகளை வெளிக்கொணரச் சொன்னால், அவனால் எப்படி முடியும்?

*

என் உளறல்களை அவர்கள் ஆமோதித்தார்கள். மேலும் உற்சாகப்படுத்தினார்கள். என் மௌனத்தைக் கவனிக்கும்போதெல்லாம் கோபப்பட்டார்கள். கடுப்பானார்கள். நான் மெல்ல, மெல்ல, தனிமையை உணரலானேன்.

*

உண்மை என்று ஒன்றிருக்கிறதே அதை நேரடியாக சந்திப்பதற்கு இருவர் தேவைப்படுகின்றனர். அதைப்பற்றி சொல்ல என ஒருவன், புரிந்துகொள்ள என இன்னொருவன்.

*

அவனை நீ புரிந்துகொள்வதென்பது, தன்னைப்பற்றி  அவன் என்னென்ன சொல்லியிருக்கிறான் என்பதிலிருந்து அல்ல. எதைச் சொல்லாமல் மறைக்கிறான் என்பதிலிருந்துதான்.

*

சில பெண்கள், ஒரு ஆணின் மனதைக் கடன் வாங்கியிருக்கக்கூடும். ஆனால் ஒரே ஒருத்திதான் அதனை சொந்தமாக்கிக்கொண்டிருப்பாள்.

*

ஓநாய் ஒன்று வனத்தில் அலைந்து திரிகையில், அப்பாவி ஆடைச் சந்தித்தது. ’என் வீட்டுக்கு ஒருமுறையாவது வந்து என்னை கௌரவிக்கலாகாதா?’ என ஆட்டிடம் வினயமாகக் கேட்டுவைத்தது. ஆடும் தள்ளி நின்று கொஞ்சம் யோசித்தது. பதில் சொல்லியது:  ’ அவசியம் கௌரவித்திருப்பேன் – உன் வீடு என்பது உன் வயிற்றுக்குள்  இருக்கிறது எனத் தெரியாதுபோயிருந்தால்..!

*

புத்தாண்டு தினத்தன்று, ஒரேயடியாகக் கிச்சனை எப்போதும்போல் பரபரக்கவைக்கவேண்டாம் என நினைத்து, லஞ்ச்சுக்கு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தேன். பெங்களூரின் மகாதேவ்புராவில் இருக்கும்  ஃபீனிக்ஸ் மாலில் ஒரு ரவுண்டு வந்து, ஏற்கனவே பழக்கமாயிருந்த ஷோரூம்களில் நண்பர்களை வாழ்த்தி அரட்டை அடித்துக் கொஞ்ச நேரத்தில் வெளியேறினோம்.  சாப்பிடுவதற்கு அருகிலேயே புதிதாக எழும்பியிருக்கும், மேலும் trendy and upmarket-ஆன VR Mall-க்கு வந்தோம்.  ஆதெண்ட்டிக்  இட்டலியன் பாஸ்த்தா, பெரிய ஸ்லைஸ்களாக  பனீர் ஸப்ஜி ஒரு ப்ளேட் (பெண் சாப்பிடுவது அதுமட்டும்தான்), ஒரு நார்த்-இண்டியன் தாலி என லஞ்ச் முடித்து, புதிதாகத் திறந்திருக்கும் ஷோரூம்களைப் பார்வையிட்டோம்.மெல்ல  நகர்ந்துகொண்டிருக்கையில் , வலதுபக்கம் எதிர்ப்பட்ட ’க்ராஸ்வர்ட்’,  கண்களால் சமிக்ஞை  செய்து, உத்தரவின்றி உள்ளே வா .. என்றது .  புக் ஷாப்.  நுழைந்து பார்வையிட்டேன். பெரும்பாலும் யுவ, யுவதியர் உரசலாக  புத்தக ஷெல்ஃபுகளின் வரிசையில் ஊர்ந்துகொண்டிருந்தனர். புத்தகமா நோக்கம்? ம்ஹூம்.. சான்ஸே இல்லை.

‘281 and beyond’ என்கிற தலைப்பில் கிரிக்கெட்வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மணின் புதிய புத்தகம் ஒன்று நீலமாக, குண்டாக மேலடுக்கில் நின்றது. பக்கத்தில் டெண்டுல்கர், தோனி, விராட் கோலி என மேலும் பிரபலங்களின் புகழ்க்கதைகள். மேலும் முன்னேற,  motivational, self-help மற்றும்  tech  புத்தகங்களின் இடித்துத் தள்ளல்.  அரசியல், சினிமா பிரபலங்களின் புலம்பல்களையெல்லாம் தாண்டி, கொஞ்சம் சீரியஸான மெட்டீரியல் இருக்கும் ஷெல்ஃப் பக்கம் வந்து நின்று கண்ணோட்டினேன். கலீல் ஜிப்ரான் (Khalil Gibran). முப்பது வருடங்களுக்கு முன்பு அவருடைய புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பான The Prophet-ஐ டெல்லியின் கனாட்ப்ளேஸின் அப்போதைய  pavement shop ஒன்றில் பார்த்து வாங்கியது ஞாபகம் வந்தது.  படித்து ஆச்சரியப்பட்டிருந்தேன். லெபனானிலிருந்து இப்படி ஒரு கவிஞரா, எழுத்தாளரா, அட! இப்போது மேலும் அவருடைய புத்தகங்கள். பளப்பள அட்டைகளுடன் ஒய்யாரமாய் மினுக்கின. சுமாரான சைஸில் ஒன்றை எடுத்து உள்ளே புரட்ட ஆரம்பித்தேன். கண்கள் ஜிப்ரானின் வார்த்தைகளில் வேகமாக ஓட, மனது சிலவற்றை லபக்கி உள்ளடுக்குகளில்  ஒளித்துவைத்தது. வீட்டுக்கு வந்தபின், அதிலிருந்து  கிண்டி எடுத்துக் கொடுத்திருப்பதுதான் மேலே நீங்கள் வாசித்தது.

**

பட உதவி: இணையம்/ கூகிள்

 

33 thoughts on “குதிரைக்காரனும், மேலும் சில சங்கதிகளும் ..

 1. குதிரையில் வருவது அவ்வளவு பெரிய குத்தமா? கலீல் இதிலேதோ ஒரு குறியீட்டை வைத்திருக்கவேண்டும்!

  நேற்று தமிழகம் முழுவதும் புத்ஹாண்டு இரவை புத்தகம் கொடுத்து வாழ்த்துகள் என்று நிறைய புத்தகங்கள் விற்றிருக்கிறார்கள். சில பதிப்பகங்கள் 50% கூட தள்ளுபடி கொடுத்தனவாம்.

  Liked by 1 person

  1. @ ஸ்ரீராம்:

   பலவிஷயங்களைப் பூடகமாகச் சொல்லிச் செல்கிறார் கலீல் ஜிப்ரான்.

   தமிழ்நாட்டுவாசிகளுக்கு எப்போதுமே குதூகலந்தான். அரசாங்கம் ஆளுக்கு /குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் தருகிறதாமே பொங்கலுக்கென.. புத்தாண்டு இரவில் புத்தகங்களில் 50% தள்ளுபடி என நீங்கள் ஆச்சரியச் செய்தி சொல்கிறீர்கள். வேறெந்த மாநிலம் புத்தாண்டில் புத்தகங்களைப் பேசும் ? அதிலும் திருவாரூர் வாசிகளுக்கு இன்னும் என்னென்னவெல்லாம் கிடைக்குமோ இந்த மாதத்தில்?

   Like

   1. குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாயா? முன்னால் ஒருதரம் 100 ரூபாய் தந்தார்கள். அது கூட இப்போது கிடையாது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். வதந் தீ!!

    Liked by 1 person

   2. ​​நீங்கள் சொல்லி இருப்பது சரிதான். கவர்னர் உரை பற்றி இப்போதுதான் படிக்கிறேன். 1000 ரூபாய் தருகிறார்களாமே!

    Liked by 1 person

 2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஏ அண்ணன். மொபைலில் வேர்ட்பிரெஸ் பாஸ்வேர்ட் சேஃப் பண்ணாமையால், கொம்பியூட்டர் வந்தால் மட்டுமே உங்களுக்கும் காமாட்சி அம்மாவுக்கும் கொமெண்ட்ஸ் போட முடிகிறது.. மொபைலில் பார்த்து விட்டு கொம் போய் கொமெண்ட்ஸ் போடுவொம் என நினைத்து பின்பு அது ஆறிப்போய் விடுகிறது… இப்படி விட்டால் நீட்டிக் கொண்டே போவேன்ன் அதனால நிதானத்துக்கு வருகிறேன்…

  Liked by 1 person

  1. @ அதிரா:
   நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

   Like

 3. குதிரைக் கதை, என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.. இக்காலத்தில் மனிதர் அப்படி இல்லை… கலைத்துப் பிடித்து தம் உயிரைப் பணயம் வைத்துக்கூட பறிபோன பொருளை மீட்டுக் கொடுப்போரும் இருக்கின்றனர்.. சரி அது போகட்ட்டும்.. அது யாரோ ஒருவரின் கற்பனைக் கதைதானே…

  Like

  1. அதிரா குதிரைக் கதையில் கண்டு பிடிப்பது மீட்டுக் கொடுப்பது என்பதை விட அதில் கலீல் சொல்லியிருப்பது இந்த சமூகம் எப்படி எல்லாம் சொல்லும் என்பதை அந்த நால்வரின் மூலம்…இதுதான் என் புரிதல்…

   கீதா

   Like

   1. இப்படியிருக்கையில், நேற்றைய பொழுதின் வார்த்தைகளில், ஆதிகாலத்தின் ஒலிக் கோர்வைகளை வெளிக்கொணரச் சொன்னால், அவனால் எப்படி முடியும்?//

    இதுவும் அவ்வாறேதான்…சமூகம் என்னவெல்லாம் ஒருவரிடமிருந்து எதிர்பார்க்கிறது….என்பது…

    கீதா

    Like

 4. sஇல இப்படியான தத்துவங்கள், வசனங்கள், பொன்மொழிகள் பார்த்தால் என்னல் அங்கிருந்து நகரவே முடிவதில்லை.. ரொம்பப் பிடிக்கும் வாசிக்க.. அத்தோடு அதுபற்றி விவாதம் செய்யவும் பிடிக்கும்:)..

  // ’என் வீட்டுக்கு ஒருமுறையாவது வந்து என்னை கௌரவிக்கலாகாதா?’ //

  இங்கு ஓநாய் செய்த தவறு என்ன தெரியுமோ?:) மரியாதையாகக் கேள்வி கேட்டது:), கேள்வி கேட்காமல் ஒரே ஜம்பாக ஜம்ப் பண்ணியிருந்தால் என்ன ஆகியிருக்கும்:)).. ஹா ஹா ஹா..

  Like

  1. ஹா ஹா அஹ ஆனா அதிரா ஆடும் சமயோசிதமாக யோசித்தது ஒரு புறம் என்றால்…அப்படி அது பதில் சொல்லும் நேரத்தில் ஓநாய் ஆட்டினை அடித்திருக்கலாம்……இவை எல்லாமே மறைமுகமாகச் செய்தி சொல்லுது…

   கீதா

   Like

  2. @ அதிரா / கீதா :

   நீங்கள் இருவரும் நன்றாக உள்ளே புகுந்து ரசித்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. சின்னச் சின்னக் கதைகளுக்குள், கவிதைகளுக்குள், கருத்துத் துளிகளுக்குள் நிறைய பொதித்துவைப்பவர் கலீல் ஜிப்ரான். லெபனானிலிருந்து 1895-ல் அமெரிக்கா சென்று குடியேறியவர், முதலில் ஓவியராகத்தான் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். பின்னர்தான் அவரது சிந்தனை, எழுத்து என வெளி உலகிற்குத் தெரியவந்து பிரபலமானது…

   Like

   1. மிக்க நன்றி அண்ணா கூடுதல் தகவல்கள்…நெட்டில் தேடிப் பார்த்து வாசிக்க வேண்டும்…

    கீதா

    Like

 5. //சில பெண்கள், ஒரு ஆணின் மனதைக் கடன் வாங்கியிருக்கக்கூடும். ஆனால் ஒரே ஒருத்திதான் அதனை சொந்தமாக்கிக்கொண்டிருப்பாள்.//

  ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்ர்.. இது பெண்களுக்கும் பொருந்தும்:).

  Liked by 1 person

   1. @ அதிரா/கீதா:

    இந்த ஹைஃபைவ் இண்ட்ரஸ்டிங்கா இருக்கு ..!

    Like

 6. //தன்னைப்பற்றி அவன் என்னென்ன சொல்லியிருக்கிறான் என்பதிலிருந்து அல்ல. எதைச் சொல்ல மறைக்கிறான் என்பதிலிருந்துதான்.///

  இதிலிருந்து மக்களுக்கு சொல்ல வருவதென்ன..?:).. சொன்னதை எல்லாம் பெரிது படுத்தாதே. மறைப்பதையே தேடிக் கண்டு பிடிச்சு சண்டை போடு என்பதா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஒருவர் நம்மிடம் மனம் திறந்து இவ்ளோ விசயம் சொல்லியிருக்கிறாரே.. என நினைச்சு அவர் பற்றிய நல்ல எண்ணங்களை வளர்க்காமல். எதை மறைச்சார் எனப் பார்ப்பது சரியாக என் குட்டிக் கிட்னிக்குப் படவில்லையாக்கும்:).

  Like

 7. //என் உளறல்களை அவர்கள் ஆமோதித்தார்கள். மேலும் உற்சாகப்படுத்தினார்கள். என் மௌனத்தைக் கவனிக்கும்போதெல்லாம் கோபப்பட்டார்கள். கடுப்பானார்கள். நான் மெல்ல, மெல்ல, தனிமையை உணரலானேன்.//

  இதை நானும் 100 வீதம் ஆமோதிக்கிறேன்ன்… நம் மனித மனமே இப்படித்தான், ஒருவரிடம் இருந்து நல்லதையே மட்டும்தான் எதிர்பார்க்கிறது, நம் பொசிடிவ்வை தேடி எடுத்து மகிழ்வடையும் சமூகம், நம்மிடம் இருக்கும் நெகடிவ்வை ஏற்க மறுக்கிறது, இதுபற்றி ஒரு கதையில் ஸ்ரீராமுக்கும் சொன்னேன் எங்கள்புளொக்கில்… அப்போ ஸ்ரீராம் கூடக் கேட்டார்ர்.. எதுக்கு அவர்களின் நெகடிவ்வை எடுக்கோணும் என்பதுபோல…

  எனக்கு சரியாக தெளிவு படுத்த தெரியவில்லை இந்த விசயத்தில், ஆனா நான் அவதானிச்சது.. நாம் நகைச்சுவையாகச் சிரித்தால்.. ஓடிவந்து நம்மோடு சேர்ந்து சிரிக்கும் சமூகம்.. நாம் அழுதால் மெல்ல மெல்ல ஒதுங்கிவிடும்.. அப்போ ஒருவர் எப்பவும் பொஸிடிவ்வாகவும் மகிழ்வாகவும்தான் இருக்கோணுமோ.. எல்லோரும் மனிதர்கள்தானே, எல்லா மனிதருக்குள்ளும் எல்லாம் இருக்கும்தானே…. அப்போ ஒருவரை நாம் வாழ்க்கைத்துணையாகவோ.. நட்பாகவோ ஏற்றுக் கொள்ளும்போது.. அவரின் பொஸிடிவ் நெகடிவ் இரண்டையும்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.. இல்லை எனில் அவர்கள் சந்தர்ப்ப வாதிகளே…

  Like

 8. குதிரை காணாமல் போனது பற்றி யோசிக்காமல் அவரவர் போக்குக்கு கருத்து சொல்வது பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள் போல் தோன்றியது

  Liked by 1 person

  1. @ ஜி.எம்.பாலசுப்ரமணியம் :

   நீங்கள் எங்கள் ப்ளாகில் நேற்று எழுதியது நினைவுக்கு வருகிறது..!

   Like

 9. கலீல் ஜிப்ரான் குதிரைக்காரன் கதையில் மறைமுகமாகச் சொல்லியிருப்பது இந்த சமூகத்தைப் பற்றி அந்த நால்வரின் வடிவில்…நாலும் சொல்லும்…அவன் குதிரையில் வராமல் நடந்து வந்திருந்தால் அதையும் முட்டாள் என்று சொல்லும் இந்த சமூகம்…

  கீதா

  Like

  1. @ கீதா:
   உண்மை. சமூகத்தை விமர்சனக் கண்கொண்டு பார்க்கிறார் ஜிப்ரான். கருத்தாக, கதையாக பூடகமாக ஆங்காங்கே வெளிப்படுத்திச் செல்கிறார்.

   Like

 10. கடையில் புரட்டி பார்த்த விஷயங்களை அழகாக பதிவாக்கி விட்டீர்களே! உங்கள் கிரகிக்கும் ஆற்றல் பிரமிக்க வைக்கிறது.
  கலீல் ஜிப்ரான் கூறியுள்ள பல விஷயங்கள் குறியீடுகள்தான். ஆழ்ந்து யோசிக்க வைக்கின்றன.

  Liked by 1 person

  1. @ Bhanumathy Venkateswaran:

   .. உங்கள் கிரகிக்கும் ஆற்றல் ..//
   என்னை உயரத் தூக்காதீர்கள்.. ஏற்கனவே பெங்களூரில் இப்போது குளிர் அதிகமாக இருக்கிறது..!

   Like

 11. //குதிரையை இழந்தவன் திடுக்கிட்டான். ஒரு விஷயம் மனதில் பட, ஆச்சரியத்தோடு நினைத்தான் : இவர்களில் எல்லோருக்கும் நான் செய்ததுதான் குற்றமாகத் தெரிகிறது. ஆனால், குதிரையைத் திருடிக்கொண்டுபோனவனின் இழிசெயலைக் கண்டிக்கக்கூட வேண்டாம் – விமரிசித்தும்கூட ஒருத்தனும் ஒரு வார்த்தை சொல்லவில்லையே?//

  எனக்கு ஏனோ மோடி நினைவில் வந்தார்.

  //என் உளறல்களை அவர்கள் ஆமோதித்தார்கள். மேலும் உற்சாகப்படுத்தினார்கள். என் மௌனத்தைக் கவனிக்கும்போதெல்லாம் கோபப்பட்டார்கள். கடுப்பானார்கள். நான் மெல்ல, மெல்ல, தனிமையை உணரலானேன்.//

  இது கலைஞர்களின் சோகமோ?

  நல்ல பதிவிற்கு நன்றி!

  Liked by 1 person

  1. @ Bhanumathy Venkateswaran:

   ..எனக்கு ஏனோ மோடி நினைவில் ..//

   அவரும் பாவம், உள்ளூரத் தனிமையில்தான் விடப்பட்டிருக்கிறார் போலும். சுருட்டுபவர்களின் மத்தியில், தேசத்தைப்பற்றி சதா நினைப்பவன், அதற்காக உண்மையில் உழைப்பவன், தனித்துத்தான் விடப்படுவான்..அத்தகையோரின் விதி அது..

   Like

  2. @ பானுமதி வெங்கடேஸ்வரன்: //..இது கலைஞர்களின் சோகமோ? //

   சரி. கலைஞன், படைப்பாளியின் சோகமே இது.

   Like

  1. @ திண்டுக்கல் தனபாலன்:

   இன்னாட்டு மக்கள் மீது இப்படியும் ஒரு நக்கல் !

   Like

 12. அருமை. கலீல் ஜிப்ரானின் எழுத்தின் மூலம் நம் நாட்டின் நிலைமையைச் சொல்லி விட்டீர்கள். எங்கேயும் இப்படித் தானே தவறைச் செய்தவர்களைச் சொல்லாமல் அதைச் சுட்டிக்காட்டுபவர்களையோ ஏமாந்தவர்களையோ குற்றம் சொல்கின்றனர். புத்தகங்களைப் பார்த்ததுக்கே இப்படி எழுதினீர்கள் எனில் படித்து விட்டு எழுதினால்!!!!!!!!!!!!!!!!!

  Liked by 1 person

  1. @ கீதா சாம்பசிவம்:

   தேடிப் பிடித்துப் படித்ததற்கும், கருத்திட்டதிற்கும் நன்றி.
   கலீல் கிப்ரானைப்பற்றி மேலும் எழுதும் உத்தேசமுண்டு!

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s