ஐதரேய உபநிஷதம் – 1

 

பூமாதேவியை வாழ்நாள் முழுதும் வணங்கி ஞானநிலையடைந்த ஐதரேய மகரிஷியினால் அருளப்பட்டது இந்த உபநிஷதம். ரிக்வேதத்தில் வருகிறது.  33 மந்திரங்களை மூன்று அத்தியாயங்களில் தருகிறது. அனைத்தையும் மிஞ்சும் அதிசயமான சிருஷ்டியின் (படைப்பின்) ரகசியம் பேசுகிறது.

முதல் அத்தியாயம் இப்படி ஆரம்பிக்கிறது: ஆதியில் ப்ரும்மம் என அழைக்கப்படும் இறை ஒன்றே இருந்தது’ ’நான் உலகங்களைப் படைப்பேன்!’ என அது ஒருகணம் நினைக்க பல உலகங்கள் தோன்றின. அவற்றில் குறிப்பாக ஐந்து உலகங்கள்பற்றிக் குறிப்பிடுகிறது இந்த உபநிஷதம். அம்பலோகம், சொர்க்கலோகம், மரீசீலோகம், மரலோகம், ஆபலோகம் ஆகியவை இவை. சொர்க்கலோகத்திற்கு மேலிருப்பதாக சொல்லப்படும் ’அம்பலோகம்’ தண்ணீர் உலகம் என அழைக்கப்படுகிறது. மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.  சொர்க்கலோகம் என்பது அடுத்தாற்போல் வருவது. தேவர்கள் வாழும் உலகம் இது. பூமிக்கு மேலிருப்பது ’மரீசீ’ என அழைக்கப்படும் ஒரு உலகம். ஒளியை ’மரீசீ’ என வடமொழியில் அழைப்பார்கள். சூரியன், சந்திரன், நட்சத்திரங்களென கிரகங்களின் ஒளியால் நிரம்பிய உலகம். அனைத்தும் ஒளிமயமாக இருக்கவேண்டும் இந்த உலகில் எனத் தெரிகிறது. மரீசீ லோகத்திற்கு அடுத்து வருவதுதான் ’மரலோகம்’. சமஸ்க்ருதத்தில் ’மர’ என்பதற்கு மரித்தல் என அர்த்தம் உண்டு. மரலோகம் என்பது இறப்பவர்கள், இறப்பவைகள் காணப்படும் உலகம். இதுவே  நாம் வாழும் பூமி. இதற்கடுத்து, ஐந்தாவதாக வருவது ’ஆபலோகம்’ எனச் சொல்லப்படுகிறது. இதுதான் பூமிக்குக் கீழிருப்பதாக கருதப்படும் ‘பாதாளலோகம்’.

உலகங்கள் படைக்கப்பட்ட பின் அவற்றிற்கான காவலர்களை உருவாக்க நினைத்தது பிரும்மம் (பரம்பொருள்). பிரும்மா என அழைக்கப்படும் படைக்கும் தேவனான பிரும்மதேவன் தண்ணீரிலிருந்து திரட்டப்பட்டு படைக்கப்பட்டதாக இது கூறுகிறது. ..

’தம் அப்யதபத்..’ என ஆரம்பிக்கும் முதல் அத்தியாயம்  பிரம்மதேவனைப்பற்றி, பிரும்மம் (அல்லது இறை) சிந்திக்க ஆரம்பித்ததைச் சொல்கிறது. பிரும்மம் சிந்தனை வயப்பட, பிரம்மதேவனின் வாய் பிளந்தது.. முதலில் பேச்சும், பேச்சிலிருந்து நெருப்பும் தோன்றின. பின்னர் மூக்கு, மூக்கிலிருந்து மூச்சு, அதிலிருந்து காற்று எனவும். இவ்வாறே கண்கள், காதுகள், இதயம் ஆகியவைகளும் தோன்ற ஆரம்பித்தன. இதயம் பிளந்தபோது அதிலிருந்து மனமும், மனதிலிருந்து சந்திரனும் உருவாகின என்கிறது. தொப்புளும், தொப்புளிலிருந்து அபானன், அபானத்திலிருந்து மரணம் என உருவாகியது. பின்னர் குறி தோன்றியது.. அதிலிருந்து விந்தும், விந்திலிருந்து நீரும் உண்டாகலாயிற்று. பிரும்மதேவனிடமிருந்து இவ்வாறு, உலகங்களும், இயற்கையும், உயிரினங்களும் உருப்பெற்றன என்றெல்லாம் சொல்லிச் செல்கிறது.

சிருஷ்டிபற்றி உருவகங்களாக, கவித்துவமாக  விவரிக்க முயல்கிறது இந்த உபநிஷதம். பல விஷயங்கள் சூட்சுமமாக மறைக்கப்பட்டிருப்பதால்,  பூடகமாக சொல்லப்பட்டிருப்பதால், புரிந்துகொள்வது கடினமாக அமைந்திருக்கிறது. ஏகப்பட்ட உயிரினங்களைப் படைத்த பிரும்மா ஒரு பசுவைப் படைத்தார். ஏற்கனவே படைக்கப்பட்ட மற்ற உயிரினங்கள் ’எங்களோடு சேர்ந்து வாழ இது போதாது. மேலும் பெரிதாக ஏதாவது தாரும்!’ என்றன. குதிரையைத் தோற்றுவித்தார் அவர். அவைகள் திருப்திப்படவில்லை. இந்நிலையில் மனிதனை லாவகமாகப் படைத்து அவைகளின் முன் நிறுத்தினார் பிரும்மதேவன். உயிரினங்கள் மகிழ்ந்தன. ’ஆஹா! அபாரம்! இவன் ஒரு உன்னதம்! ‘ என்று குதூகலித்தன.  இவ்வாறு படைக்கப்பட்ட மனிதன் உட்பட்ட உயிரினங்கள் யாவும் பிரும்மாவால் பெருங்கடலில் வீழ்த்தப்பட்டன. எந்தக் கடல் இது? – என்கிற  பிரமிப்பு உடனே  ஏற்படுகிறது.

ஆதிசங்கரர் இங்கே புகுந்து  விளக்குகிறார்: வாழ்க்கை எனும் நீண்ட, நெடுங்கடல்.  நித்யக்கடல். ஆசை, அறியாமை, செயல் என்பவை விளைவிக்கும் தீராதுக்கமே அந்தக்கடலின் அடங்கா நீர். இனந்தெரியாத் துன்பங்கள், நோய்கள், முதுமை, சாவு எனும் கொடிய ஜந்துக்கள் வாழும் கடலிது. அலைக்கழிக்கும் கவலைகள், உளைச்சல்கள், தீமைகள் என எகிறும் ஆயிரமாயிரம் அலைகள். புற உலகத்தோடு புலன்கள் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்புகளால் விளையும், நீடிக்கா அற்ப இன்பங்கள்தாம் அவ்வப்போது கிடைக்கும் கொஞ்ச இளைப்பாறல்கள்.  வதைக்கும் முடிவிலா மாயக்கடலில் விழுந்தன உயிர்கள். விழுந்தவைகளை பிரும்மதேவன் உற்றுப் பார்த்தார். எடுத்துக்கொள்ளுங்கள் என பசி, தாகமென அவைகளுக்கு மேலும் வழங்கினார். பிரும்மம் அல்லது இறையிலிருந்து பிரும்மதேவன் (மற்றும் ஏனைய தேவர்கள்), பிரும்மதேவன் மூலமாக உலகங்கள், வெளி, இயற்கை, உயிரினங்கள் எனத் தோற்றம்பெற்றன. கூடவே, மனித ஜீவன், இவ்வாறு படைக்கப்பட்ட உயிர்களிலெல்லாம் மேலானது, உயர்ந்தது எனக் கோடிட்டு நகர்கிறது இந்த உபநிஷதம்.

மேலும் கவிதைவடிவில் இந்த உபநிஷதம். படைப்புக்காட்சிகளை விரிக்கிறது. பிரும்மதேவன் மூலமாக எல்லாவற்றையும் படைத்த பிரும்மம் எனும் இறை மேலும் சிந்தித்தது. இவர்களுக்கான உணவு? என நினைத்தது. அதன்முன் தென்பட்ட தண்ணீரை அது பார்க்க, அதிலிருந்து உணவு உருவாகியது .  இந்த இடத்தில் இந்த உபநிஷதத்தை எழுதிய ஐதரேய முனிவரின் கவிநயம் நம்மை ஆட்கொள்கிறது:

அவ்வாறு படைக்கப்பட்ட உணவு ஓடலானது!  எட்டாதது, எளிதில் கிட்டாததாயிற்றே? மனிதன் திகைத்தான். அதனை ‘வாக்கினால்’ துரத்திப்பிடிக்க முயற்சித்தான். நடக்கவில்லை. வாக்கினால் பிடிக்க முடிந்திருந்தால், ‘உணவு’ எனச் சொல்வதாலேயே திருப்தி கிட்டியிருக்குமே அவனுக்கு!

அதனை நுகர்வதால் பிடிக்கமுடியுமா? முயற்சித்தான். முடியவில்லை. நுகர்ந்தே பிடித்துவிட்டால்,  நுகர்வதாலேயே திருப்தி அடைந்திருப்பானே அவன்?

ஓடுகின்ற உணவைத் தன் பார்வையால் பிடிக்க எத்தனித்தான். சிக்கவில்லை. சிக்கியிருந்தால் அதனைப் பார்ப்பதாலேயே மனிதன் பசி தீர்ந்து திருப்தியடைந்திருப்பானே?

ஓடும் உணவைக் கேட்பதன்மூலம் பிடிக்க முயன்றான். நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால், உணவைப்பற்றிக் காதால் கேட்பதிலேயே அவனுக்குத் திருப்தி ஏற்பட்டிருக்குமே?

அந்த உணவைத் துரத்தித் தொட்டால் திருப்தி கிட்டுமா? முயன்றான். அதுவும் நடக்கவில்லை. தொட்டதனால் பசிதீருமென்றால், உணவைத் தொட்டாலே போதுமே..

இப்படி நிற்காது ஓடும் உணவை மனிதன் சிந்தனையால் கைப்பற்ற நினைத்தான். நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால், உணவைப்பற்றி நினைப்பதினாலேயே பசி தீர்ந்திருக்குமே..

உணவைத் துரத்தித் தன் குறியால் அடைய நினைத்தான்  மனிதன்.  முடியவில்லை. குறியின்மூலம் அடைந்திருந்தால், அதனை வெளிப்படுத்துவதிலேயே திருப்தியடைந்திருப்பான் அல்லவா?

இறுதியாக, ஓடும் உணவை அபானன் என்பதால் பிடிக்க முயன்றான் மனிதன். பிடித்துவிட்டான். அபானனே உணவைப் பிடிக்கிறது. பிராண சக்தியின் ஒரு அங்கமான அபானனே, வாய்வழி உள்ளே செல்கின்ற உணவை ஏற்று, ஜீரணித்து, அவயவங்களுக்கு வேண்டிய சக்தியாக உருமாற்றிப் பகிர்ந்து தருவது. எனவே அதுவே உணவின்மூலம் உயிரைத் தாங்க உதவுகிறது.

படம்: இண்டர்நெட்/கூகிள்

(தொடரும்)

 

 

4 thoughts on “ஐதரேய உபநிஷதம் – 1

  1. உபநிஷத்துகள் பற்றி அறிய கணினியில் மேய்ந்து கொண்டிருந்தேன் 108 உபநிஷத்துகள் இருக்கின்றனவாமேஇந்த ஐத்ரேய உபநிஷத்தின்காலம் 14ம்நூற்றாண்டு என்று வாசித்தநினைவு பெரும்பாலும்புரியவில்லை

    Liked by 1 person

Leave a reply to திண்டுக்கல் தனபாலன் Cancel reply