கேன உபநிஷதம்

தனால் இந்தப் பயணம்? – எனக் கேள்வி கேட்டுக்கொண்டே சாமவேதத்தில் வரும் இந்த உபநிஷதம் உள்ளார்ந்த ஆராய்ச்சியில் இறங்குகிறது. அதாவது ’தேடுகிறவனை’ ’உள்ளே’ இறக்கிவிட்டுப் பயணிக்கவிடுகிறது.

’ஓம். . கேனேஷிதம் பததி ப்ரேஷிதம் மன:’ என்கிறது ஆரம்பத்திலேயே.’(கேன’ என்பதற்கு ’எதனால்’ (எந்த சக்தியினால்) என்று அர்த்தம். எந்த சக்தியினால் விரும்பப்பட்டு, ஏவப்பட்டு, மனம் இப்படியெல்லாம் செல்கிறது, பயணிக்கிறது? என்கிற ஒரு அடிப்படைக் கேள்வியைக் கேட்கிறது. ’இறுதிஉண்மைக்கான தேடுதலில்’ இருப்பவன், தன் மனத்தின் தன்மைகண்டு கூர்மையாகி, தன்னைத் தானே கேட்டுக்கொள்கிறான் இப்படி. மேலும் கேள்விகள் வருகின்றன: முக்கியமாக, பிராணன் என்று ஒன்றிருக்கிறதே நமக்குள்.. அதனை இயக்குவது, யாரோ? வாக்கு எனப்படும் சொல், பேச்சு என்பதெல்லாம் நம்மிலிருந்து எப்படிப் புறப்படுகின்றன? புலன்களை செயல்படுத்தும் சக்தி எது? என்கிற ரீதியில் மேலும் மேலும் கேள்விகள் துளைக்கின்றன..

பிராணன் எனப்படும் உயிர்சக்தி சூட்சுமமாக எங்கும் நிறைந்திருக்கிறது. உலகை இயக்குகிற ஆற்றல்படைத்தது. அதன் ஒரு துகள் – துகளினும் துகள் நமக்குள்ளும் இருக்கிறது. அதனாலேயே இயங்குகிறோம். எனச் சிந்திக்கையில், ஜீவனின் (மனிதனின்) ஸ்தூல உடம்பு, மனம் எனும் சூட்சும வடிவம், இவற்றோடு பிராணனும் யாரால் இயங்குகின்றன என்கிற கேள்வியில் வந்து நிற்கிறது. இன்னுமொரு ஸ்லோகம் ’ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரய் மனஸோ மனோ யத்’ என ஆரம்பித்து விஷயத்துக்கு வருகிறது. அதாவது காதின் காதாக.. மனதின் மனமாக.. என்று செல்லும் அது, தெளிவான ஒரு புள்ளியில் வந்து நிற்கிறது. காதின் காதாக, கண்ணின் கண்ணாக, வாக்கின் வாக்காக, மனதின் மனதாக, பிராணனின் பிராணனாகவும் இருப்பது ஒன்றே. அதுவே அது (பிரும்மம்) என நிற்கிறது இறுதியாக. தன் கடுமையான தவத்தினால், ஆழ்ந்த அக ஆய்தலில் உச்சம்பெற்று, உணர்வுநிலை திறக்கப்பட்டவன் இதனை உணர்கிறான். அவ்வாறு கண்டடைந்தவன் எவனோ அவன், இந்த புலன்களின் உலகிலிருந்து விடுபட்டுவிடுகிறான். பிறப்பு-இறப்பற்ற மேன் நிலையை எய்துகிறான் – என்கிறது.

மனதின் இயக்கத்தை, செயல்பாடுகளை துரத்திச்சென்று ஒரு பயனும் இல்லை என விழிப்புணர்வுபெற்றவன் புரிந்துகொள்கிறான். ஆதலால் அவன் மனதின்பின்னே இருக்கும் ஆன்மாவை அறிய முற்படுகிறான். மேலும் தொடர்கிறது. உடம்பு-மனம் என்கிற அமைப்பின் ஊடே, அழியாத உண்மைப்பொருளாக இருப்பது ஆன்மா. தானாகவே நிற்கும் அது உண்மையில் எத்தகையது என்கிற கேள்விக்கு குரு பதில் சொல்வதாக வருகிறது இந்த ஸ்லோகம்:

ந தத்ர சக்ஷூர்கச்சதி ந வாக்கச்சதி நோ மன:
ந வித்மோ ந விஜானீமோ யதைத தனுசிஷ்யாத்

அது கண்ணால் நோக்கப்பட முடியாதது; வாக்கும் (பேச்சு, சொற்களும்) மனமும் (சிந்தனைகளும்) அதனை நெருங்கமுடியாது. எனவே, எத்தகைய குணம்கொண்டது அது எனத் தெரியாது.. சொற்களில் சிக்காத ஒன்றை எப்படிப் புரியவைப்பது என எங்களுக்கும் தெரியாது (ஆனால் அவசியம் புரிந்துகொள்ளவேண்டியது) என்று ஆன்ம அனுபூதிபெற்ற குரு (ரிஷி) தன் சீடனுக்கு சொல்லும் வகையில் இது அமைந்துள்ளது. நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஐம்புலன்கள் வெளிஉலகை அறிவதற்காக, தொடர்புகொள்வதற்காக மட்டுமே. அவற்றால் அகத்தினுள் உறைகின்ற ஒன்றை அறியமுடியாது. புலன்களால் அறியமுடியாததை, புலனைக்கொண்டு எப்படி சொல்வது? அதனால்தான் அதைப்பற்றி வார்த்தைகளில் தன்னால் சொல்லமுடியவில்லை என சீடர்களுக்குப் புரியுமாறு விளக்குகிறார் வேதகால ரிஷி. மேலும் சொல்கையில், அது மனிதனுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் விட வித்தியாசமானது. எதையெல்லாம் அவன் இன்னும் அறியவில்லையோ அவற்றைவிடவும் மேலானது. ஞானநிலை அடைந்து அதனை ‘அறிந்த’ எங்களது பூர்வாச்சாரியர்களால் (ரிஷிகள்) இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்.

’யத் வாசானத்யுதிதம் யேன வாகப்யுத்யதே..’ எனத் தொடங்கும் ஸ்லோகம் இப்படி விளக்க முற்படுகிறது: ’எது சொல்லால் (வாக்கினால்) விளக்கப்படமுடியாதோ, ஆனால் எதனால் சொல்லப்படுகின்ற சொல் விளக்கம், ஒளி பெறுகின்றதோ அதுவே பிரும்மம். எதனைக் கண்கள் பார்ப்பதில்லையோ, ஆனால் எதனால் கண்கள் பார்க்கின்றனவோ அதுவே அது. எதனைக் காதுகள் கேட்கமுடியாதோ, ஆனால் எதனால் காதுகள் கேட்கின்றனவோ அதுதான் அது.. மேலும், எதனை மூச்சு தீண்டமுடியாதோ, நுகரமுடியாதோ, ஆனால் எதனால் மூச்சுவிடுதல் (மனிதனுக்கு/உயிர்களுக்கு) சாத்தியமாகிறதோ, அதுவே பிரும்மம்’ என அறிவாயாக என்று சீடனுக்கு உபதேசிக்கிறார் குரு. கூடவே ’..அதுதான் பிரும்மம்’ என விளக்கும் ஒவ்வொரு ஸ்லோகதுக்கு அடியிலும் ஒரு வாக்கியம் வருகிறது. அது: இங்கே வணங்கப்படுவது அது அல்ல!’
இங்கே கொஞ்சம் விளக்கம் தேவைப்படுகிறது. ஆன்மா என சூட்சுமமாக அறியப்படுவது பிரும்மம், பரம்பொருள், பரப்பிரும்மம். ஆனால் சாமான்யன் எதை வணங்குகிறான்? ஒரு உருவத்தை, பிம்பத்தை – அது விக்ரஹ (சிலை) வடிவிலோ, ஓவிய (பட) வடிவிலோ இருக்கிறது. ஏனெனில், சாதாரண மனிதனால் சூட்சும வடிவில் , அதாவது வடிவில்லா வடிவில் இருக்கும் இறையை வணங்க, தியானிக்க முடியவதில்லை. ஆனால் அவனும் இறைவழி செல்லவேண்டுமே – உய்வதற்கு, கடைத்தேறுவதற்கு. அதற்கான ஒரு எளிய முதற்படியாக, வழிபட ஏதுவாக கோவில்களில் இந்த விக்ரஹங்கள், வீடுகளில், ஆசிரமங்களில், மடங்களில் கடவுள்களின் சித்திரங்கள், படங்கள் ஆகியவை. ஆரம்பப் படிநிலைதான் இது. ஸ்தூல வடிவத்தில் அகப்படாத, ஆனால் எங்கும் நிறைந்திருக்கும் இறையை, பிரும்மத்தை மனிதன் தன் புற அங்கங்களைக் கொண்டு காண இயலாது. ஆனால் அதற்காக அவன் தன்னை இயக்கும் தெய்வசக்தியை, பரம்பொருளை விட்டுவிடமுடியுமா? புறத்தே சுற்றித் திரிந்தவன், தன் அகத்துக்குள் பார்க்கிறான். பயணிக்க ஆரம்பிக்கிறான். அதற்கான சாதனாக்களை (தீவிர, தொடர்ந்த இறைசிந்தனை, மனம் ஒருநிலைப்படல், தியானம் போன்றவை) அவன் செய்யவேண்டியிருக்கிறது. கடும் சோதனைகள் நிறைந்த அந்தப் பாதையிலோ செல்லவேண்டிய தூரம் மிக அதிகம். தேடுபவன் அதற்காக அந்தப்பாதையை விட்டு விலகுவானா? சைவசமய முதன்மை நாயன்மார்களில் ஒருவரான அப்பர், இறுதியில் தான் அடைந்த அனுபூதி நிலையைப்பற்றி ‘தேடொணா தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன்’ எனக் குறிப்பிடுகிறார்.

பிரும்மத்தை (இறுதி உண்மை) நோக்கிய கரடுமுரடான பாதையில் மேலும் முன்னேறுகிறது கேன உபநிஷதம். ஆன்மீகத் தேடலின் ஆரம்பநிலைகளில் சீடனுக்குத் தனக்கு அது தெரிந்துவிட்டது என்பதான மயக்கம் உண்டாகிறது. அதனைத் தன் குருவுக்கு சொல்கிறான். அவர் சொல்கிறார்.: ’அதற்குள் பிரும்மத்தைக் கண்டுவிட்டதாக உனக்குத் தோன்றினால், நீ அறிந்தது மிகக்குறைவுதான். மீண்டும் தொடர்ந்து தியானத்தில், உண்மை வழியில், சாதனாவில் இரு. தேடுதல் தீவிரமாகட்டும்’ என்று ஊக்குவிக்கிறார். மேலும் மேலும் சீடன் சிரத்தைகாட்டி, தியானித்து நாட்கள் கடந்தபின் அவனின் சலசலப்புக்கு குரு (வேதரிஷி) தெளிவுபடுத்துகிறார். ‘ என்னை எனக்குத் தெரியும்.. ஆனால் எனக்குள்ளிருக்கும் பிரும்மத்தை (ஆன்மா) தெரியாது . அதே சமயத்தில், தெரியவில்லை என்றும் உறுதியாகச் சொல்லமுடியாதுபோலிருக்கிறதே’ என்கிற நிலைக்கு நீ வந்திருந்தால், இறை அறிதலில் நெருங்குகிறாய் என அர்த்தம். மேலும் ‘யார் நன்றாகத் தெரிவதாகச் சொல்கிறானோ அவன் அறியாதவன். யார் தனக்குச் சரியாகத் தெரியவில்லை எனும் நிலையிலிருக்கிறானோ, அவனே அறிபவன். மேலும் மேலும் சாதனாக்கள் மூலம் தன்னை ஈடுபடுத்தி உணர்வின் படிப்படியான நிலைகளில் எவனொருவன் முன்னேறுகிறானோ, அவன் அந்த ஆன்மாவிலிருந்தே(பிரும்மத்திலிருந்தே) மேன்மேலும் ஆற்றல் பெற்று, மரணமில்லாப் பெருவாழ்வடைகிறான் என்கிறது இந்த உபநிஷதம். மேலும் எச்சரிக்கவும் செய்கிறது: ’இங்கேயே, இந்த பிறவியிலே ஒருவன் பிரும்மத்தை இவ்வாறு அறிந்துகொண்டானேயானால், அவன் எல்லா உயிர்களிலும் பிரும்மத்தின் இருத்தலை உணர்கிறான். ஒருவேளை, இந்த பிறப்பில் அப்படி அறியமுடியாதுபோனால், அது அந்த ஜீவனுக்கு மாபெரும் இழப்பு’ என்கிறது.

மூன்றாவது அத்தியாயத்தில் பிரும்மமே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகிறது என்பதைக் கதையாக விளக்குகிறது இந்த உபநிஷதம்.

அரக்கர்களுடனான ஒரு யுத்தத்தில் வென்றபின் களித்திருந்தனர் தேவர்கள். தங்களைத் தாங்களே மெச்சி மகிழ்ந்திருந்தனர். கர்வம் தலைக்கேறிவிட்டதை பிரும்மம் அறிந்தது. அவர்களுக்குப் பாடம் புகட்ட நினைத்து, ஒரு யக்ஷனாக உருவெடுத்து அவர்கள் இருக்கும் பகுதியில் உலவியது. தேவர்கள் தங்கள் உள்ளுணர்வினால், ஏதோ ஒரு அதீத சக்தி இங்கு வந்திருக்கிறது என அறிந்தனர். ஆனால் என்ன அது என்று தெரியாது திகைத்தார்கள். அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கையில் தேவேந்திரனான இந்திரன் அக்னிதேவனை அழைத்து ’நீர் போய் அது யார், என்ன எனத் தெரிந்துகொண்டுவாரும்..’ என அனுப்பினான்.

அக்னிதேவன் யக்ஷனின் முன் வந்து நின்றான். யக்ஷ உருவிலிருந்த பிரும்மம் அக்னியைப் பார்த்து ’யார் நீ’ என்றது. ’அக்னியே நான்!’ என்றான் அவன். ’உன்னால் என்ன செய்ய முடியும்?’ என்றது பிரும்மம். ’எதனையும் நொடியில் எரித்து சாம்பலாக்கிட என்னால் முடியும்!’ என்றான் அக்னிதேவன். ’ஓ.. அப்படியா!’ என்றது பிரும்மம். ஒரு உலர்ந்த புல்லை அக்னியின் முன்னால் போட்டது. ’எரி இதனை!’ என்றது. அக்னி புல்லைப் பார்த்தான். ப்பூ! என்று நினைத்தான். கடும் தனலாக உலர்ந்தபுல்லின் மீது பாய்ந்தான். புல்லுக்கு ஒன்றும் ஆகவில்லை. நிறம்கூட மாறவில்லை. அக்னியால் புல்லை எரிக்க முடியவில்லை.மீண்டும் முயன்றான். தோற்றான். சோர்ந்தான். என்னால் புல்லைக்கூடவா எரிக்கமுடியவில்லை என்று முணுமுணுத்துக்கொண்டே தேவர்களிடம் வந்து நடந்ததைச் சொன்னான். ’அந்த யக்ஷன் யாரென அறியமுடியவில்லை’ என்றான்.

இந்திரன் வாயுவை நோக்கினான். ’நீர் போய் அறிந்து வாரும்!’ என்றான். வாயுதேவன் விரைந்து வந்து யக்ஷன் முன் நின்றான். அதே கேள்வி. ‘நான் வாயு!’ என்றான் இவன். ’என்ன செய்ய முடியும் உன்னால்?’ என்று யக்ஷன் கேட்டதற்கு, ’இங்குள்ள எதனையும் காற்றாக வீசித் தூக்கி எறியும் சக்தி எனக்குண்டு!’ என்றான் சிரித்துக்கொண்டே. ’ஓ! அப்படியா.. எங்கே இந்தப் புல்லைத் தூக்கி வீசு!’ என்றது யக்ஷனாய் நின்ற பிரும்மம். வாயுதேவன் அற்பப் புல்லைப் பார்த்து மனதில் சிரித்துக்கொண்டான். அலட்சியமாக அதன்மீது வீசினான். அசைந்துகொடுக்கவில்லை அது. ஆச்சரியமுற்று, உக்கிரமாக வீசி, அதனைத் தூக்கிவீசப் பார்த்தான். ம்ஹூம்! ஒன்றும் நடக்கவில்லை. புல் அசைவற்று போட்டது போட்டபடிக் கிடந்தது. யக்ஷனைக் குழப்பத்துடன் பார்த்தவன் திரும்பிச் சென்று தேவர்களிடம் நடந்ததைச் சொன்னவன். ’என்னாலும் அந்த சக்தியைப் புரிந்துகொள்ளமுடியவில்லை’ என்றான்.

இந்திரன் ஆச்சரியம் மிகக்கொண்டான். இதில் ஏதோ பெரும் சூட்சுமம் இருக்கிறது. நமக்குப் புரியவில்லை. புரிந்துகொள்ளும் சக்தி நமக்கில்லையோ எனக் கலங்கியவாறு அவனே சென்றான். யக்ஷன் மறைந்துவிட்டிருந்தான். அங்கே வானில், பொன்னொளி எங்கும் ஜொலித்து வீச, பேரழகுடன் ஒரு பெண்சக்தி உருவந்தாங்கி காட்சிதந்தது. உமாதேவி! இந்திரனின் கண்கள் பனித்தன. பணிந்து வணங்கினான். மனதில் அவளை முழுதுமாக நிறுத்திப் பிரார்த்தித்தான். ‘எனக்கு ஒன்றும் புரியவில்லையே.. யார், எது இந்த மர்மசக்தி? அன்னையே, அருள்வாய்’ என மனதாரத் தாழ்ந்து இறைஞ்சினான். உமாதேவி முகமலர்ந்தாள். ’தேவேந்திரா! தேவர்களான உங்கள் சக்தியினால் உணரமுடியாது அதை எனக் கண்டுகொண்டாய். பிரும்மாண்டம், சூட்சுமத்தின் சூட்சுமம் அது. பிரும்மம். பிரபஞ்சத்தின் எல்லா செயல்களுக்கும், ஏன், உங்கள் வெற்றிகளுக்கும்கூட அதுவே ஆதாரம். அது தன் சக்தியை பின்னிழுத்துக்கொண்டால், நீங்கள் தளர்ந்து வீழ்வீர்கள். நீங்கள் யாரும் எதுவும் இல்லை என்றாகிவிடும் என அறிவாயாக!’ என்றாள் தேவி. தேவேந்திரன் அவளை நோக்கித் தலைதாழ்த்தினான். புத்தி தெளிவாகி, தேவியை வணங்கி நன்றி சமர்ப்பித்து, அங்கிருந்து அகன்றான்.

மேலும், பிரும்மத்தின், பரம்பொருளின் அதீத சக்தியை, எல்லையில்லா இருப்பை உணரவேண்டும். ’மின்னல் மின்னுவதும், இமை இமைப்பதெல்லாமும் அதனால்தான்’ என்கிற இந்த உபநிஷதம், தொடர்கிறது: மனமானது கற்பனை செய்வதும், வெளிஉலகில் பொருள்களை, உணர்வுகளை நாடிச்செல்வதும், ஆன்மா என அறியப்படும் பிரும்மத்தின் காரணமாகவே. ’அத்தகைய பிரும்மமானது எல்லா உயிர்களிலும் நிறைந்திருப்பதாக உணர்ந்து, எவனொருவன் அதை உண்மையாக தியானிக்கிறானோ, அவனை எல்லா உயிர்களும் நேசிக்கின்றன’ என்கிறது.

ஆழ்ந்த தேடலில் இப்போது முன்னேறியிருக்கும் சீடன், ’குருவே! அத்தகைய ஞானநிலைக்கான ரகசிய அறிவை அருள்வீராக’ எனப் பிரார்த்திக்கிறான். ’இதுவரை நான் உனக்கு சொன்னதெல்லாம் அதுபற்றியதே’ என்கிறார் குரு. இறை உணர்வோடு புலன்களின் கட்டுப்பாடு, உண்மைவழி செல்லுதல், சிரத்தையுடன் கூடிய கடும் தியானம் (தவம்) ஆகியவைதான் அந்த ரகசிய அறிவிற்கான சாதானாக்கள் எனச் சொல்கிறார். வேதங்கள் அந்த ரகசிய அறிவின் அங்கங்களாய் உள்ளன என சீடனுக்கு அவர் தெளிவுபடுத்துவதாய் இந்த உபநிஷதம் நிறைவு பெறுகிறது.

இந்த இடத்தில் நினைவு கூரவேண்டிய ஒன்று: ’உண்மைவழி நிற்றல் என்பதில், பேச்சு என்பது, விளைவு எதுவாயினும் பிடிவாதமாக உண்மை சொல்லல் என்றாகாது. பிறர் மனதை கலங்கடிக்காத, புண்ணாக்காத உண்மைகளையே ஒருவன் எப்போதும் பேசவேண்டும். அத்தகைய பேச்சு என்பது, வாக்கினால் செய்யப்படுகிற தவம்’ என்கிறது பகவத் கீதை.

(Picture courtesy: Internet)

**

19 thoughts on “கேன உபநிஷதம்

 1. நான் எந்த உபநிஷத்தும் படித்ததில்லை இருந்தாலும் சில நாட்களுக்குமுன் எழுதி இருந்தபதிவின் வரிகள் இந்த இடத்தில்பதிவு செய்ய விரும்பினேன்

  எப்பொருளையும் ஆக்கவோ அழிக்கவோ இயலாது.
  ஆக்கலும் அழித்தலும் வெறும் தோற்றமே.,
  உண்மையோ முன்பிருந்த நிலையின் மாற்றமே.
  இது விஞ்ஞானம் கூறும் தேற்றமே.

  இருளும் ஞாயிறும் விடியலும்
  மாற்றமிலா நிகழ்ச்சி போல் தோன்றினும்,
  நேற்று போல் இன்றில்லை, இன்று போல்
  நாளையில்லை,இது நாமறியும் உண்மையே.

  விஞ்ஞானக் கூற்று உண்மையாயின்,
  நேற்றிருந்த என் அப்பன் என்னானான்.?
  யாதாக மாறினான்.?உடலம் வெந்து
  சாம்பலாயிருக்கலாம், இல்லை மண்ணில்
  மக்கிக் காணாதிருக்கலாம்.ஆனால்,
  அப்பனாக எனக்குத் தெரிந்த அவன்

  எங்கே என்னவாக மாறினான்,?

  இன்று நானாக அறியப்படும் நான் நாளை
  என்னாவேன், சாம்பலோ மண்ணோ அல்லாமல்.
  உயிரென்ற ஒன்று இருந்ததால்தானே
  என் அப்பன் அப்பனாகவும், நான்
  நானாகவும் அறியப்படுகிறோம்.?

  அந்த உயிரென்று அறியப்படுவது எங்கே உள்ளது.?
  ஆன்மா என்றழைப்பின் அதுவும் எங்கே உள்ளது. ?
  யுகயுகமாய் உலவி வந்த உயிர்களின் ஆன்மாக்கள்
  எண்ணிக்கையில் மாற்றம் இருக்கக் கூடாதே,
  விஞ்ஞானக் கூற்றுப்படி, விஞ்ஞானம் விளங்க வில்லை

  ஊனென்றும் உயிரென்றும் ஆன்மா என்றும்,
  ஆயிரம்தான் கூறினாலும், அதெல்லாம் ஒன்றின்
  வியாபிப்பே என்று மெய்ஞானம் கூறுகிறது.

  அறிந்தவர்கள் என்று அறிந்தவர்கள் கூறும்
  மெய்ஞான சூக்குமம் வசப்படும் முன் நானும்
  மண்ணோடு மண்ணாய் மக்கிப் போவேன்.
  அறிய முற்படுவோர் நிலையும் அதுதான்.அதுவரை ஹேஷ்யங்கள்தான்

  என்றோ எவனோ வரைந்து முடித்த வட்டத்தின்
  தொடக்கப்புள்ளி தேடி ஏன் சோர்வுற வேண்டும்.?
  அறியாமை இருளில் இருப்பதே சுகம்.

  Like

  1. @ GM Balasubramaniam:
   வருக!
   சில நாட்கள் முன் இதை பதிவில் எழுதினீர்களா? பார்த்தமாதிரியே தெரியவில்லை.. ஒருவேளை, இங்கே கவிதை வடிவம் கொடுத்து, அங்கே வேறு மாதிரி எழுதியிருந்தீர்களோ?

   அறியாமையே சுகமென்றிருப்பது அவரவர் விருப்பம். யாரும் தேடு, கண்டுபிடி என்று நிர்பந்திக்கிறார்களா என்ன! அப்படியே சொன்னாலும் நாம்தான் கேட்டுவிடுவோமா!

   Like

 2. கனமான பதிவு. காலை வணக்கம். மன்னிக்கவும், இப்போதைக்கு படிக்காமலேயே கருத்திடுகிறேன். புதன் கிழமை வரை தலையைத் தின்னும் வேலை!

  Liked by 1 person

 3. உபநிஷத்தை எளிமை படுத்தி அழகாக கொடுத்துள்ளீர்கள்.நன்றி! தொடர காத்திருக்கிறேன்.

  Like

 4. தீபாவளி அன்று எங்கள் ப்ளாகில் வெளியான உங்கள் கதையை அடுத்த நாள்தான் படித்தேன். அதனால் பின்னூட்டம் போடவில்லை. கதை நன்றாக இருந்தது. சின்ன விஷயம் என்று நாம் நினைக்கும் சில விஷயங்கள் சிலருக்கு எத்தனை பெரிய விஷயங்களாக இருக்கின்றன? பாராட்டுகள்.

  Like

  1. @Bhanumathy Venkateswaran :
   வருகைக்கு நன்றி. தொடருங்கள்.
   நானும் இதைச் சாக்கிட்டு மேலும் படித்துக்கொண்டிருக்கிறேன்..

   எபி சிறுகதை – பாராட்டுக்கு நன்றி

   Like

 5. //அத்தகைய பேச்சு என்பது, வாக்கினால் செய்யப்படுகிற தவம்’ என்கிறது பகவத் கீதை.//நேத்திக்கும் படிச்சேன். இன்னிக்கும் படிச்சேன். புரிஞ்சுக்க முயல்கிறேன். ஆனால் எனக்குள்ளும் இந்த “வாக்கினால் செய்யப்படும் தவம்” கொஞ்சமே கொஞ்சமானும் பெறுவதற்கு ஆன முயற்சிகளை மேற்கொள்ளணும். மறுபடியும் படிக்க வருவேன்!

  Like

  1. @Geetha Sambasivam :

   நீங்கள் சொன்னதைப் படித்தேன். வாக்கு என்பது எல்லோருக்கும் தரப்பட்டிருக்கிறதெனினும் இதனை செவ்வனே பயன்படுத்துவோரே சிறந்தவர் எனப் புரிகிறது. அந்த லிஸ்ட்டில் என் பெயர் வர, சரியாக முயலாது காலம் கழித்திருக்கிறேனே எனவும் மனது சொல்கிறது..

   Like

 6. உண்மை வழி செல்லுதல் என்பது உண்மை பேசுவதை மட்டும் குறிக்காது. உண்மை வழி செல்லுதலில் உண்மை பேசுவதும் ஒன்று, அது மட்டுமல்ல.

  Like

  1. @Bhanumathy Venkateswaran:

   வாழ்வில், உண்மை தவறாதிருத்தல் அல்லது உண்மை வழி செல்லுதல் (to be righteous or to be on the righteous path) என்பது,’ உண்மை பேசுதல்’ சம்பந்தப்பட்டது மட்டுமல்ல என்பது பொதுவாக எல்லோரும் அறிந்ததுதான்.

   இங்கு quote செய்யப்பட்டிருப்பது பகவத்கீதை ‘வாக்கு’ பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்பது மட்டுமே. சராசரி மனிதன் வாழ்வில், எதையாவது சொல்லிக்கொண்டே செல்கிறான்-என்ன பேசுகிறோம், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்கிற பிரக்ஞை இல்லாமலேயே. வாயிலிருந்து சரளமாக, கிட்டத்தட்ட reckless-ஆக பேச்சு வருவது இயல்பாகிவிடுகிறது. அப்போது அந்த பேச்சு அல்லது வாக்கு என்பது எப்படி இருந்தால் உத்தமம் – குறிப்பாக உண்மைவழி வாழ விரும்புபவனுக்கு- என்பதை ‘highlight’ செய்யத்தான் ’வாக்கைப்பற்றி’ கீதை அவ்வாறு அழுத்தி, emphasize செய்து சொல்லியிருக்கவேண்டும். அதை அந்த நிலையில், அதற்காகமட்டுமேதான் குறிப்பிட்டிருக்கிறேன் கடைசி பாராவில்.
   இருப்பினும், படிப்பவர்களுக்கு ஒரு குழப்பம் இதில் வந்துவிடக்கூடாதே என்பதற்காக ‘உண்மைவழி நிற்றலில், ’பேச்சு என்பது’ என்று இப்போது சேர்த்திருக்கிறேன்.

   நன்றி.

   Like

 7. படித்தேன்.

  உண்மையைச் சொல்லட்டுமா?

  வரிகளின் அர்த்தத்தை மனதில் வாங்கி கொள்ள அழுத்தந்திருத்தமாய்ப் படிக்க வேண்டி இருக்கிறது. நான் இன்னும் பக்குவப்படவில்லை!

  Liked by 1 person

  1. @ஸ்ரீராம்:

   ‘உண்மையைச் சொல்லட்டுமா’ என்றுகேட்டு உண்மைவழி நிற்கிறீர்களா இல்லை, ‘இன்னும் பக்குவப்படவில்லை’ எனச் சொல்லி ஓட்டமெடுக்கப் பார்க்கிறீர்களா!

   Like

 8. ஆட்டுவித்தால் யாரொருவர் …

  கண்ணதாசனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன புரிந்த இந்திரனின் வெட்கத்தைப் படிக்கும்போது!

  கடைசி பாரா இன்சொல் பற்றியும் சொல்வது சிறப்பு. இது வெல்லும் வார்த்தை!

  Like

  1. @ ஸ்ரீராம்: நிறைய இருக்கிறது. விளக்குகிறேன் என்று ஆரம்பித்தால் நீண்டுவிடும். எனவே, கிட்டத்தட்ட சுருக்கி, அதே சமயத்தில் விஷயத்தின் சாரத்திற்கு பங்கம் வராமல், சொல்லவே முயன்றுள்ளேன்.

   Like

 9. கீதா சாம்பசிவம் (மின்னஞ்சல் வழி):

  //பிறர் மனதை கலங்கடிக்காத, புண்ணாக்காத உண்மைகளையே ஒருவன் எப்போதும் பேசவேண்டும்.//பிறர் மனதைப் புண்ணாக்குகிறேனோ என எண்ணவைக்கும்படி சில சமயங்கள் வாய்த்து விடுகின்றன. நாம் நல்லாப்
  புரிஞ்சுட்டு இருக்கிறாங்க என நினைப்பவங்களே தப்பாய்ப் புரிஞ்சுக்கறதைத் தெரிஞ்சுக்கும்போது இன்னமும் கவனம் தேவை பேச்சில் என்று தெரிகிறது! ஆனால் அதான் நடப்பதே இல்லை! அது என்னமோ நான் சாதாரணமாச் சொன்னாலும் மற்றவங்களுக்குத் தப்பாய்ப் படுகிறது. அதை நினைக்கையில் என் சொற்களைக் குறைப்பதைக் காட்டிலும் பேசாமல் இருக்கலாமோ என்றும் தோன்றும். மறுபடி மறுபடி படிக்க வைக்கிறது இந்தப் பதிவு. பிறர் மனம் புண்படாதவாறு பேசுவது ஒரு கலை அல்ல! பிறந்ததில் இருந்தே இயல்பாக வருவதுனு நினைக்கிறேன். அத்தகைய இயல்பு எனக்கு வாய்க்கவில்லை! எப்போ என்றும் தெரியவில்லை.

  Like

  1. @ கீதா சாம்பசிவம்:
   நீங்கள் சொல்வது புரிகிறது. இந்தக் கஷ்டம் எனக்கும் உள்ளது. வாலிபத்தில் வாயைக்கட்டி வைத்திருந்தேன். மிகக் கொஞ்சமாகப் பேசிவந்தேன் – loconic replies on most of the occasions…பல சமயங்களில் அவதானிப்பு மட்டுமே. அவசர வார்த்தைப்பிரயோகம் இல்லாதிருந்தது. பிரச்னை இல்லை. இப்போது ஏனோ, வாய் பெரிதாக திறந்திருக்கிறது! பொதுவாக கவனமாகப் பேசுவதாகத் தான் நினைக்கிறேன். இருந்தும் சில படபடப்புகள் வரக்கூடாத வார்த்தைகளை வரவழைத்துவிடுகின்றன. யாருக்காவது கோபம் வருகிறது, அல்லது மனம் வாடிவிடுகிறது. கஷ்டம்.

   நாவடக்கம் வருவதெப்போது என மலைப்பாகத்தான் இருக்கிறது.

   Like

 10. உபநிஷதம் பற்றித் தெரிந்து கொள்ள எண்ணியிருந்தேன். இது முதல்படி என்பேன். இது பற்றி மேலும் எழுதுவீர்களா? நன்றி

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s