உபநிஷதங்கள் – பிரும்மத்தை நோக்கி . .

பிரத்யட்சமாக அல்லது கண்ணெதிரே காட்சியாகத் தெரியும் வடிவங்கள்தான் ஆதிமனிதனுக்கு, பொதுவாக, உண்மையெனத் தோன்றியிருக்கும். அதில் இந்த உலகம் என அழைக்கப்படும் பூமியும், பூமிவாழ் உயிர்களும், பூமியில் காணப்படும் ஆறுகள், நதிகள், மலைகள், கடல்கள் போன்றவைகளும், பகலும், இரவும், மாறும் காலமும், கூடவே அண்ணாந்து பார்த்தால் தெரியும் ஆகாயமும், ஆகாயஒளிர் சூரிய, சந்திர, நட்சத்திரங்களும், இன்ன பிறவும் அடக்கம். இவை யாவற்றையும் ஆச்சரியமாக அவதானிக்க ஆரம்பித்த மனிதனை, உண்மையில் எப்படி இவை தோன்றியிருக்கின்றன, மறைகின்றன அல்லது தங்கள் இயங்குதளத்தில் தொடர்ந்து எவ்வாறு இயங்குகின்றன, இவற்றிற்கு முன்பும், பின்னாலும், இவற்றையெல்லாம் தாண்டியும்கூட ஏதேனும் இருக்குமோ என்கிற கேள்விகள், ஒன்றன்பின் ஒன்றாக குறுகுறுத்து சீண்ட ஆரம்பித்தன. வெறும் கேள்விகள் காலப்போக்கில் அழுத்தம்பெற்று, ஆழமாக மனதினில் வேரூன்றி வேதாந்தக் கேள்விகளாகின. ஜீவன், உலகம், பிரபஞ்சம், மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட அந்த அதீத சக்தி என மனிதத் தேடல் உயர்ந்து மேலெழுந்தது. முடிவில்லாததுபோல் தோன்றிய இப்பெரும் தேடலுக்கான சாதனாக்களில் அவன் தன்னை வருத்திக்கொண்டு மேலும்மேலும் ஆராய, நல்விளைவாக வேதங்களும், உபநிஷதங்களும் இந்த மண்ணில் வந்துதித்தன.

வேதகாலம் என ஆராய்ச்சியாளர்களாலும், ஆன்மீகத்தினராலும் அறியப்படும் மனித நாகரிகத்தின் ஆரம்பகாலகட்டத்தில் இந்தியாவில் வாழ்ந்த யோகிகள், மகரிஷிகள் எனப்படும் பெருந்தவமுனிவர்கள், வாழ்நாள் முழுதும் தங்களை வருத்திக்கொண்டு, எரித்துக்கொண்டு இயற்றியக் கடுந்தவத்தினால் பெறநேர்ந்த இறைஅனுபூதியானவற்றைத் தங்கள் சீடர்களுக்கு, அவரவர் ஆன்மிக நிலைகளில் புரியுமாறு சொல்லி அருளினர். இப்படி வாழையடி வாழையாக, நம்மை வந்தடைந்தன வேதங்களும் அவற்றின் உள்ளுறையும், சம்ஹிதைகள், ப்ராமணங்கள் (Brahmanas), ஆரண்யகங்கள், உபநிஷதங்கள் ஆகியவைகளும். இவை யாவும் பொதுவாக ஷ்ருதிகள் (Shrutis) (ஷ்ருதி அல்லது ஸ்ருதி – கேட்கப்பட்டு, அனுபூதியாக அறியப்பட்டுத் தரப்பட்ட இறுதிஉண்மைபற்றியவை) என்றழைக்கப்படும் சாஸ்திர வகைமையின் கீழ் வருபவை. இந்து மத சாஸ்திரப்படி உபநிஷதங்கள், பிரும்மசூத்திரம், பகவத்கீதை ஆகிய நூல்கள் ‘ப்ரஸ்தான த்ரயம்’ (அறுதிப்பிரமாணமான மூன்று புனிதநூல்கள்) என்று சான்றோர்களால் புகழப்படுகின்றன.

உபநிஷதங்கள், மனித அறிவினால், முயற்சிகளினால் தேடி அடையமுடியாத, ஆனால் மிகவும் தேடுதற்குரிய ப்ரும்மத்தைப்பற்றி (பரம்பொருள்பற்றி) ஆராய்கின்றன அல்லது, வார்த்தைகளால் வடிக்கமுடியாத ஒரு விஷயத்தைக் கூற முயல்கின்றன. உபநிஷதங்களை, ப்ருஹதாரண்யக உபநிஷதம் ’ஸத்யஸ ஸத்யம்’ (உண்மையின் உண்மை ‘the truth of Truth) எனும் ஒற்றை வாக்கியத்தினால் வர்ணிக்கிறது. இங்கே ’உண்மை’ என்பது, மனிதன் தன் வாழ்நாளில் கண்டறியவேண்டிய ’இறுதி உண்மை’ (the Absolute Truth) எனக்கொள்ளவேண்டும்.

உபநிஷதங்கள் பலவாக இருந்திருக்கவேண்டும். காலவெள்ளத்தில் அவற்றில் சில நம்மை வந்து சேரவில்லையோ என்னவோ? ரிக், யஜூர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களில் 108 உபநிஷதங்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் பதினான்கு அதிமுக்கியமெனக் கருதப்படுபவை. இவை ஈச உபநிஷதம், கேன உபநிஷதம், கட உபநிஷதம், ப்ரஸ்ன உபநிஷதம், முண்டக உபநிஷதம், மாண்டூக்ய உபநிஷதம், ஐதரேய உபநிஷதம், தைத்ரீய உபநிஷதம், சாந்தோக்ய உபநிஷதம் , ப்ருஹதாரண்யக (Brihadaranyaka) உபநிஷதம் மற்றும், ஸ்வேதாஸ்வதர, கௌசீதகி, மஹாநாராயண, மைத்ராயணி உபநிஷதங்களுமாகும். இந்து மதத்தின் பழம்பெரும் ஆச்சார்யர்களில் ஒருவரும், அத்வைத ஞானியுமான ஆதிசங்கரர், முதல் பத்து உபநிஷதங்களுக்கு விளக்கவுரை எழுதி அருளியுள்ளார்.

சமஸ்க்ருதம் எனும் வடமொழியில் மகரிஷிகளால் ஆக்கப்பட்டுள்ள உபநிஷதங்கள், மொழிவல்லுனர்களாலும் எளிதில் புரிந்துகொள்ளமுடியாதவை. உபநிஷதங்களை அளித்த மகரிஷிகள், தங்களை முன்னிறுத்திக்கொண்டு எதையும் கூற முயற்சிக்கவில்லை. மாறாக, எங்களுக்கு இவற்றை தெரியப்படுத்திய மகான்கள் இவ்வாறு புரிந்துகொள்ளுமாறு தெளிவுபடுத்தினார்கள் எனக் கூறிச்சென்றனர் என ஈஸாவாஸ்ய உபநிஷதம் கூறுகிறது. ஒருவரின் சமஸ்க்ருத பாண்டித்யம், மொழிவல்லமை மட்டும் போதாது, அவற்றில் வரும் ஸ்லோகங்களின் உட்கருத்தை, பேசுபொருளை உள்வாங்கி அறிவதற்கு. அறியவேண்டும் என்கிற உள்ளார்ந்த ஆர்வம், அதற்கான இடையறா முனைப்பு ஆகியவற்றோடு, உளத்தூய்மை, சிரத்தை, நம்பிக்கை, இறையுணர்வு போன்றவற்றையும் தேடுபவரிடம் கடுமையாகக் கோருபவை இவை. இவ்வாறு அணுகுகையில்தான், இவை தங்களில் பொதிந்துகிடக்கும் ஆதிஞானத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டத் தொடங்குகின்றன. ஒரு மேம்போக்கான வாசிப்பில், பயிலுதலில் ஒன்றும் நிகழாதாகையால், ஆச்சாரியர்கள் மூலம் சரியான பொருள் தெரிந்துகொண்டு மீண்டும் மீண்டும் வாசித்து, மனதின் ஆழத்தில் லயித்து சிந்திக்க சிந்திக்க, உண்மையின் பல்வேறு பரிமாணங்கள் ஒளிக்கதிர்களை வீசி, நமது அஞ்ஞான இருளைப் போக்க ஆரம்பிக்கும். இத்தகைய சாதனாக்களில் ஒருவன் ஆழ்ந்து திளைக்க, அவன் மேலும் மேலும் அறிபவனாய், இறைஞானத்தில், ஆன்ம அறிவினில் முன்னேறுபவனாய் ஆகிறான் என்கின்றனர் ஆன்மீகச் சான்றோர்.

வேதகாலத்தில், கல்வி என்பது யோகம், யாகம், பல்வேறு வித்யைகள் (கலைகள்) ஆகியவற்றைத் தந்திருப்பினும், அதில் உயர்கல்வி என்பது, பிரும்மம் அல்லது இறுதிஉண்மை பற்றிய இறைஞானத்திற்கு வழிவகுக்கும் கல்வியாகவே அமைந்திருந்தது. ஆச்சார்யன்–சிஷ்யன் என்கிற கட்டமைப்பில் நிலவிய குருகுலக் கல்வியாக, அதற்கான வழிமுறைகளுடன் நியமப்படி இயங்கியது. ஆச்சாரியன் அல்லது ஆன்மீககுருவின் உதவியோடு பாலபருவத்தில் பயில ஆரம்பிப்பது வழக்கமாயிருந்தது. குருவிடமிருந்து உபதேசம் பெற, உன்னதமானவற்றைக் கற்க, அதற்கான உண்மையான ஆர்வத்தையும், தூய மனநிலையையும் சிஷ்யன் என்று அழைக்கப்பட்ட மாணவன் கொண்டிருப்பது அவசியம். இந்த அடிப்படையில்தான், அதற்கான வாசிப்பும், தேடலும் துவங்கும். இத்தகைய தயார்நிலையை கற்பவனுக்கு, ’தேடுபவனுக்கு’ வழங்கவேண்டி, எல்லா உபநிஷதங்களும் தங்களின் ஆரம்பத்தில் ‘சாந்தி மந்திரங்க’ளைக் கொண்டிருக்கின்றன. ’அறிய’ முனைபவனின் பாதுகாப்பு கருதி, உணர்வுபூர்வமான இறைவேண்டுதலோடு, குருவின் துணையோடு சிஷ்யனை உள்ளே வருமாறு அழைக்கின்றன இவை.

உதாரணமாக ‘கேன உபநிஷத’த்தைப் பார்க்க நேர்கையில், இரண்டு சாந்திமந்திரங்களைத் துவக்கத்தில் அது கொண்டிருக்கிறது. முதலாம் மந்திரம் இப்படிச் சொல்கிறது:

ஓம் . . . குரு, சிஷ்யன் ஆகிய நம் இருவரையும் கடவுள் காப்பாராக.. உயர்ஞானத்தின் சக்தியை நாமிருவரும் முழுதுமாய் அனுபவிக்குமாறு ஊக்குவித்து அருள்வாராக. தளரா ஈடுபாடு, முனைப்புமிக்க ஆற்றலுடன் நாமிருவரும், அதனை அறிய உழைப்போமாக. கற்பவை நமக்குப் பூரண பலன் தரட்டும். எக்காரணம்கொண்டும், நாம் ஒருவரை ஒருவர் வெறுக்காதிருப்போமாக..

அடுத்ததாக, இரண்டாவது சாந்தி மந்திரம் இப்படி வருகிறது:

ஓம் . . . பிராணன், வாக்கு, கண், காது முதலான எனது அங்கங்கள் மிகுந்த சக்தியுடன் விளங்கட்டும். உபநிஷதங்கள் கூறுகின்ற பிரும்மமே (பரம்பொருளே) எல்லாம். அந்த பிரும்மத்தை நான் மறுக்காதிருப்பேனாக. அந்த பிரும்மம் என்னை மறுக்காதிருக்குமாக. உபநிஷதங்களில் சொல்லப்படும் தர்மங்கள், ஆன்மாவை நாடுகின்ற என்னில் குடியேறட்டும்.

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

சாந்தி என்கிற வார்த்தை மூன்றுமுறை சொல்லப்படுகின்றது இங்கே. காரணம், மூன்றுவிதமான ஆபத்துக்கள்/ தடைகளிலிலிருந்து நாம் காக்கப்படவேண்டும் என்பதற்காக.
மூன்றுவித ஆபத்துகள்/தடைகள் என்பன எவையெவை எனவும் விளக்குகிறது:

1.ஆத்யாத்மிகம்: நம்மாலேயே நமக்கு ஏற்பட்டுவிடக்கூடிய ஆபத்துகள், தடைகள் (நமக்குள்ளிருந்தே தோன்றும் நோய், மனப் பிராந்தி, சஞ்சலம் போன்றவை)

2. ஆதி பௌதிகம்: பிற உயிர்களால் (எதிரிகள், கொடும் விலங்குகள், விஷ ஜந்துக்கள் போன்றவைகளால்) வரக்கூடிய ஆபத்துகள், தடைகள்

3. ஆதி தைவிகம் : இயற்கை சக்திகளால் (புயல், பெருவெள்ளம், இடி, நெருப்பு போன்ற இயற்கை சீற்றங்கள்) நிகழக்கூடிய ஆபத்துகள், தடைகள்

(Picture courtesy: Internet)

– தொடரும்.
*

10 thoughts on “உபநிஷதங்கள் – பிரும்மத்தை நோக்கி . .

    1. @திண்டுக்கல் தனபாலன் :

      காத்திருக்கிறேன் என்றாலே போதுமானது. ‘ஐயா’ என்றதும் அதிர்கிறது உடம்பு!

      இது ஒரு தனி உலகமாயிற்றே.. இதற்குள் புகுவதா, வேண்டாமா.. நமது தலை தாங்குமா, தப்புமா எனத் தயங்கியே வெகுநாளிருந்தேன். தெரிந்ததை அல்லது தெரிந்ததுபோல் தோன்றுவதைக் கொஞ்சம் பகிர்ந்து வைப்போம் என ஒரு அசட்டுத் துணிச்சலில் இறங்கிவிட்டேன். அவன் செயலே அனைத்தும்..

      Like

  1. முன்காலத்தில் சொல்லப்பட்டவை எல்லாமே ஒருவரிடமிருந்து வாய் வழியே வந்தவைதான் இதில் இருக்கும் ஒரு குறைஇவை ஆரம்பகாலத்திலிருந்தது போலிருக்கும்வாய்ப்பு குறைவு நிறையவே மாற்றங்கள் வந்திருக்கலாம்

    Liked by 1 person

    1. @Balasubramaniam G.M :
      அப்படிப் பார்த்தால், இங்கு ஒன்று சொல்கிறேன். மேற்கத்திய தத்துவமரபின் (Western Philosphical thought) ஆரம்பப்புள்ளிகளில் ஒன்றாக, ஆரம்ப நிறுவனர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் கிரேக்க தத்துவஞானியான சாக்ரட்டீஸ். கி.மு.4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நன்றாகக் கவனியுங்கள் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு சுமார் 350 வருடங்களுக்கு முன். அவருடைய மாணாக்கரான ப்ளாட்டோவும் (Plato), அவருடைய சீடரான அரிஸ்ட்டாட்டிலும் (Aristotle) அடுத்தடுத்த 60-70 ஆண்டுகளில் தோன்றி வாழ்ந்தவர்கள். சாக்ரட்டீஸ் தொடங்கிவைத்த மேற்கத்திய நன்னெறிவகை தத்துவம் (Western Moral Philosophy) அவரது வாய்வழிதான் வெளிவந்தது. அவரது நேரடி சீடர்களால் முதலில் கேட்டறியப்பட்டு, தொடர்ந்து வந்த சீடர்களின் வாய்வழியேதான் முதலில் கிரீஸிலும் பின் வேறு மேற்கத்திய நாடுகளுக்கும் பரவியது-அடுத்த சுமார் 1400 ஆண்டுகள் மேற்கத்திய தத்துவம் வாய்-காது-வாய் என்றுதான் பயணித்தது! பாவம், அதற்கு வேறுவழி தெரிந்திருக்கவில்லை.

      ஏனெனில், காகிதம் என்கிற சங்கதி சீனாவில் கி.பி.2-ஆம் நூற்றாண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சீனர்களால் ரகசியமாக கையாளப்பட்டு, பின்னர்தான் மெல்ல ஊர்ந்த காகிதம், முதலில் மத்தியகிழக்கிற்கும், வெகுவருடங்கள் கழித்தே ஐரோப்பாவிற்கும் போய்ச்சேர்ந்தது. அது ஐரோப்பா வந்தடைகையில் கிறிஸ்துவிற்குப் பின் 11-ஆம் நூற்றாண்டு நடந்துகொண்டிருந்தது!

      வாய்வழி ஆரம்பித்ததுதான் என்பதனாலேயே, முன்னோர்களின் தத்துவ, ஆன்மீகக் கருத்துகளை மனிதகுலம் அலட்சியப்படுத்திவிடமுடியாது. இதில் (இந்திய/கிரேக்க ஞான/தத்துவ மரபுகள்) கவனிக்கவேண்டிய முக்கிய அம்சம் ஒன்றுண்டு. இத்தகைய ஆன்மீகஞானியரிடம்/ தத்துவஞானியரிடம் பாடம் கேட்டு அவற்றைப் பரப்பிய சீடர்களும், பின்னர் வந்த முனிவர்களின்/ஞானிகளின் சீடராகி/ மாணாக்கராகி கேட்டறிந்து மேலும் எடுத்துச் சென்றவர்களும் – ஒன்று அவர்களும் ஞானியர்/தத்துவவாதிகள் என அக்காலத்திலேயே மதிக்கப்பட்டவர்கள் அல்லது கற்றறிந்த மேதைகளாகவே இருந்திருக்கிறார்கள் என்பது உண்மை. ஆதலால் பின்வந்தவர்களின் சொல்லாடல்களில் மாற்றம் நிகழ்ந்திருக்கலாமே தவிர, கருத்தாடலில், தத்துவத்தின் ஆன்மாவை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதில் தவறு நேர்ந்திருக்க வாய்ப்பு இல்லை எனலாம்.

      Like

    1. @ஸ்ரீராம் : வாருங்கள். தொடருங்கள்..நானும் தொடர்ந்து பயணிக்க முயற்சிக்கிறேன்.

      Like

    1. @Geetha Sambasivam :

      நானும் ஓரளவாவது புரிந்துகொண்டு, மேற்கொண்டு எழுத முயற்சிக்கிறேன்..

      Like

  2. பெரிய விஷயத்தில் காலை வைத்திருக்கிறீர்கள். ஆரம்ப ஆர்வம் தொடர்ந்து இருக்கணும்.

    முதலாம் மந்திரம் என்று சொல்லும்போது, மந்திரத்தின் முதல் வாக்கியத்தையும் குறிப்பிட்டிருக்கலாம். அப்போதான் சரியாக ரிலேட் பண்ணி வாசிக்க சரியாக இருக்கும்.

    இந்த மாதிரி எல்லாம் சிந்திக்கணும்னா (ஆத்மா, சரீரம்……) எப்படிப்பட்ட thought process உள்ளவங்க நம் முன்னோர். இந்த மாதிரி சிந்தனையே பிற தேசங்கள்ல அந்த சமயத்தில (during that time) இல்லையே….

    Like

    1. @நெல்லைத்தமிழன் : //..பெரிய விஷயத்தில் காலை வைத்திருக்கிறீர்கள்..//

      இப்படி நானே ஸ்வயம் சிக்கிக்கொள்வது எனது வழக்கங்களில் ஒன்று.. மேலும் இது எப்படிச் செல்லப்போகிறது எனப் பார்க்க நானும் ஆவலாகிறேன், ஆர்வம் குன்றாதிருக்கும் என்கிற நம்பிக்கையுடன்.

      வேதகாலம் என நாம் குறிப்பிடுவதை, ஆய்வாளர்கள் கிறிஸ்துவிற்கு சுமார் 3000-3500 வருடங்களுக்கு முன்னர் இருந்த காலமாக இருக்கலாம் என மதிப்பிடுகிறார்கள். தோராய மதிப்பீடுதான் இது. மேற்கத்திய தத்துவ விசாரணையின் ஆரம்பம் என்பது கிறிஸ்துவுக்கு 400 வருடங்களுக்கு முன்னர்தான். மேலே, ஜிஎம் பி-சாருக்கு கொடுத்திருக்கும் பதிலையும் காண்க.

      Like

Leave a reply to ஸ்ரீராம் Cancel reply