வா.. கலாப மயிலே !


சின்னவயதில் அடிக்கடி கேட்ட டி எம் எஸ் பாடிய ஸெமி-க்ளாசிகல் பாடல். ஆரம்பத்தில் ரேடியோவில் சரியாகக் கேட்காமல் ’ஓடி வா.. சல்லாப மயிலே!’ என நினைத்து, சிலிர்த்து, மனதுக்குள் பாடிப் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னே சத்தமாகப் பாடி, பெரிசுகள் கேட்டால் பிரச்னையாகிவிடுமே! (இந்த வயசுல இந்த மாதிரிப் பாட்டா கேக்குது ஒனக்கு? போடா, போ! ஒழுங்காப் படி.. உருப்புடற வழியப்பாரு).

பிறகு வார்த்தை சரியாகக் காதில் விழுந்ததும், தலையைச் சொறிய ஆரம்பித்தது கை. கலாப மயிலே..! இது என்ன வார்த்தை? வேறெங்கும் புழக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லையே. அழகு மயில் தெரியும், ஆனந்த மயில் தெரியும், நீல மயில் தெரியும், நீல மயில்மீது ஞாலம் வலம் வந்த கோலாகலனைப்பற்றியும் கொஞ்சம் தெரியும். இதென்ன கலாப மயில்? யார் எழுதியது இந்தப் பாட்டை? ஓ, தஞ்சை ராமையாதாஸா? புரியாத வார்த்தையாப்போட்டுத் திணறடிக்கிறதுதான் இவர் வேல போலருக்கு. குழப்பம் தொடர்ந்தது கொஞ்சகாலம். அதற்குப்பின் மறந்துவிட்டேன்.

சமீபத்தில் ஆன்மிகத்தில் கொஞ்சம் துழாவிக்கொண்டிருந்தபோது, சமஸ்கிருத ஸ்லோகங்கள் சில தென்பட்டன. மேலும் படிக்க நேர்ந்தபோது தலைகாட்டியது ‘கலாபம்’! சமஸ்கிருதத்திலயா வருது ? இந்த வார்த்தையைத் தான் தஞ்சாவூர்க் கவிஞர் எடுத்துவிட்டிருக்காரு.. கலாபம் என்றால் மயில் -சமஸ்கிருதத்தில். அதுவும் வெறும் கானகமயிலல்ல. கார்த்திகேயனின் மயில்! கார்த்திகேயன் ? முருகனா? அவன் தமிழ்க்கடவுள் அல்லவா? வடநாட்டுப்பக்கம் எங்கே போனான்? அப்பனோடு சண்டைபோட்டதாக, ஆண்டியாக நின்றதாக, ஔவையாரோடுகூடப் பேசியதாகவும்தானே நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது? வந்த கோபத்தில் வடக்கே போ, தெற்குத் திசையே வேண்டாம் என்று திருப்பிவிட்டுட்டானா மயிலை? கோபம் கடவுளர்களையும் விடுவதில்லை போலிருக்கிறதே.. பாலமுருகனும் பாவந்தானே!

ஒரேயடியாகக் கற்பனைச் சவாரி வேண்டாம். கதை வேறானது. மத்திய, வடக்குப் பிரதேசங்களை ஆண்டுகொண்டிருந்த சாலிவாகன ராஜாவுக்கு சமஸ்கிருதம் தெரியாது. அழகிய இளம் மனைவியோ சமஸ்கிருதத்தில் சரளமாகப் பேசுபவள், புழங்குபவள். முனிவர் ஒருவரிடம் சிறுவயதில் கற்றுக்கொண்டது எல்லாம். அவள் பேசுகிற அழகைக்கண்டு அவனும் சமஸ்கிருத மொழியழகில் மயங்கினான். சமஸ்க்ருதம்தான் அரசுமொழி என அறிவித்தும்விட்டான். இந்த மொழியை நாம் கற்றுக்கொண்டுவிடவேண்டும் என்கிற ஆசை அவனுக்குள் வந்துவிட்டது. அரசனின் தர்பாரில் இரண்டு சமஸ்கிருத மேதைகள். இருவரையும் அழைத்தான். ’எனக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டாகவேண்டும். உங்களில் யார் இதைச் செய்யமுடியும்?’ என்று வினவினான். ஆரம்பமே தெரியாத இவனுக்கு சமஸ்கிருதமா? அதுவும் விரைவிலா? முதலாமவர் சொன்னார்: ’இது ஒரு தேவபாஷை. கற்றுக்கொள்ள எளிதானதல்ல. முறையாகக் கற்றுக்கொள்ள குறைந்தது பன்னிரண்டு வருடங்கள் ஆகும்.’ ஆச்சரியமுற்ற மன்னன் மற்றவரைப் பார்த்தான். அடுத்தவன் சர்வவர்மன். அவன் சாதாரணமாகச் சொன்னான்: ’என்னால் ஆறு மாதத்திலேயே உங்களுக்கு சமஸ்கிருதம் பேச, புழங்கக் கற்றுத்தரமுடியும்!’ மன்னன் சந்தோஷமாகிவிட்டான். ’பலே! அதற்குவேண்டிய ஏற்பாடுகளை ஆரம்பியும்’ என்று உத்தரவிட்டுப் போனான்.

சர்வவர்மன் உணர்ச்சிவசப்பட்டு சொல்லிவிட்டானே ஒழிய, விரைவிலேயே பயம் கொஞ்சம் கொஞ்சமாக அவனைக் கவ்விக்கொண்டது. சமஸ்கிருத இலக்கணங்கள் கடுமையானவை. கற்றுக்கொள்ள, சுருக்குவழி, குறுக்குவழி ஏதுமில்லை. மன்னனுக்கு முறையாக, சரியாகக் கற்றுத்தரவேண்டுமே. அதையும் அவன் புரிந்துகொண்டு, பேச ஆரம்பித்து, புழங்க ஆரம்பித்து.. அதுவும் ஆறே மாதத்தில். ’இந்த இலக்கணத்தையெல்லாம் படித்துப் பார்க்கவே காலம் போறாதே.. ஐயோ! வசமாக மாட்டிக்கொண்டேனே!’ பதறினான் சர்வவர்மன். தான் வணங்கும் தெய்வமான சிவபெருமானிடமே தஞ்சம் புகுந்தான். சன்னிதியில், நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான். அழுதான், அரற்றினான். ’அப்பா! ஏதாவது செய். அரசன் மகா கோபக்காரன். அவனே பாய்ந்து என் தலையைக் கொய்துவிடாமல், சிவனே நீ என்னைக் காப்பாற்று..’ பக்தன் துடிதுடித்தால் தாங்கமாட்டாரே சிவபெருமான். இவனைக் காப்பாற்ற வேண்டும். எங்கே நம்ப பையன் முருகன்? பக்கத்தில் எங்கும் தென்படமாட்டானே? மயிலேறி, ஆகாயத்தில் அங்குமிங்குமாக சுற்றிக்கொண்டிருந்த சின்னவனைக் கூப்பிட்டார் சிவபெருமான். வந்தவன் வணங்கினான். கேட்டான் மிருதுவாக:

என்னப்பா!

ஒரு காரியம். உடனே செய். பூமியில் நம் பக்தன் சர்வவர்மன். அழுதுகொண்டிருக்கிறான். பிரச்னையைத் தீர்த்துவை.

என்னவாம் அவனுக்கு?

அட்சரம்கூடத் தெரியாத அரசனுக்கு ஆறுமாதத்தில் சமஸ்கிருதம் கற்றுத் தருகிறேன் என்று உளறிவிட்டு வந்துவிட்டான். உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறான் என்ன செய்வதெனத் தெரியாமல். ராஜாவுக்கு புரியும்படி எளிதாக சமஸ்க்ருதம், அதுவும் ஆறே மாதத்தில் சர்வவர்மன் கற்றுத்தரும்படி, நீ அவனுக்கு அருள்வாய்!

இவ்வளவுதானே அப்பா! இதோ!

மாலின் மருகன் பறந்தான் கலாபத்தின் மீதேறி, பூமியை நோக்கி.

அங்கே அழுதுகளைத்து வீழ்ந்துகிடந்த சர்வவர்மன் முன்- சிவலிங்கத்திலிருந்து ஒளியாகப் புறப்பட்டுப் பிரசன்னமானான் முருகன். சர்வவர்மன் திகைத்தான். அப்பனைக் கூப்பிட்டால் அருகில் வந்து நிற்கிறானே மகன். எல்லாம் அவன் செயல்! நடுங்கும் தேகத்தோடு, எழுந்தான். சாஷ்டாங்கமாக முருகனின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். நடந்ததைச் சொல்லி, கலங்கிய கண்களோடு தலைதாழ்த்தி நின்றான் சர்வவர்மன்.

கருணையோடு அவனைப் பார்த்தான் கார்த்திகேயன். ’சாரம் நழுவிடாமல், ஆனால் எளிதில் பயிற்றுவிக்க சுருக்கமாக, புது சமஸ்கிருத இலக்கணம் ஒன்று தருகிறேன். கேள், கவனமாய்..’ என சர்வவர்மனுக்கு ஓதி அருளிவிட்டு, மறைந்தான் முருகன். சர்வவர்மனும் முருகனிடமிருந்து பெற்ற புது இலக்கணத்தினால், ஆறே மாதத்தில் மன்னனுக்கு சமஸ்கிருதத்தை நன்கு கற்பித்துவிட்டான். பிறகு ஒரு நாள், அரசவையில், சமஸ்க்ருதம் கடினமான மொழியெனச் சொன்ன அந்த முதலாவது மேதை மன்னனின் பாண்டித்யத்தை சோதிக்க எண்ணினார். மன்னனின் அனுமதிபெற்று, கடினமான சுலோக ரூபத்தில் சமஸ்கிருதத்தில் ஒரு கேள்வியை அரசனிடம் கேட்டார். சற்றும் சளைக்காமல், சுலோகமாகவே பதிலைத் திருப்பியடித்து அசத்திவிட்டான் சாலிவாகன ராஜா. முருகனை நினைத்து முகமலர்ந்தான் சர்வவர்மன். அந்த முதலாவது மேதையும் அவையோரும் வாயடைத்துப்போயினர். இப்படி பூமிக்கு வந்து சேர்ந்ததுதான் சமஸ்கிருத வியாகரண (இலக்கண) நூலான ’கலாபம்’ அல்லது ’கௌமாரம்’. காதந்திர வியாகரணம் என்னும் பெயரும் இதற்குண்டு.

சமஸ்கிருத மொழியின் ஒன்பது வியாகரண நூல்களான – இந்திர வியாகரணம், சந்திர வியாகரணம், ஸாகடாயனம், ஸாரஸ்வதம், காஸாக்ருத்ஸ்னம், கலாபம், ஸாகலம், ஆபிஸலம், பாணினீயம் ஆகியவற்றில், தமிழ்க்கடவுள் எனக் கொண்டாடப்படும் முருகப்பெருமான் அருளிய வியாகரண நூலும் சேர்ந்து வீற்றிருக்கிறது.

படம்: இணையம். நன்றி.
*

29 thoughts on “வா.. கலாப மயிலே !

  1. புதிய விஷயங்கள். அவசரப்பட்டு வாக்கு கொடுத்தால் அந்தக் காலத்தில் காப்பாற்ற கடவுளர்கள் முன்வந்தார்கள். இப்போது வருவதில்லை!

    Liked by 1 person

    1. மகன் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அப்பாவே இந்தக் காலத்துல முன்வர மாட்டார். இதுல கடவுளா?

      Liked by 1 person

      1. @நெல்லை தமிழன்: யார் கொடுத்த வாக்கையும் யாரும் காப்பாற்றுவதில்லை. மொத்தத்தில் வாக்கு என்பதே இல்லை. வெறும் சாக்குதான்!

        Like

    2. @ஸ்ரீராம்: அப்போது அவசரப்பட்டு வாக்கு கொடுத்தவர்கள் அரிதாக இருந்தார்கள். இப்போதே இதே பொழப்பாப்போச்சே !

      Like

  2. வா கலாப மயிலே! ஓடி நீ வா கலாப மயிலே!
    காத்தவராயன் படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் பற்றிய கட்டுரை அருமை.
    கலாபம் பற்றிய பொருள் தேடல் சிறப்பு.

    கலாபம் என்றால் ஆண் மயிலின் தோகை. (Wiktionary)

    Liked by 1 person

    1. @ முத்துசாமி இரா: இந்த விக்‌ஷணரி ஒரு மாதிரியான தளம். ஏதாவது சிக்கலான வார்த்தையைத் தேடினால் ’எங்களிடம் இல்லை; நீங்கள் இந்தப் பக்கத்தை உருவாக்குங்கள்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடும்! இருப்பினும் நல்லமுயற்சிதான்.

      Like

  3. கலாப மயில் பற்றி அறிஞ்சேன்….

    அப்படிப் பார்த்தால் தமிழில் “மயில்மயில்” என்றெல்லோ வரும்..

    தமிழ்ல எவ்ளோ புரியாத பாசைகள் புழக்கத்தில வந்து போகுது.. நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ் என இருந்திடுவேன் ஹா ஹா ஹா..

    Liked by 1 person

    1. @ அதிரா:
      கலாபம் முருகனின் மயிலைக் குறித்தாலும், ஆண்மயிலின் தோகை என்ற பொருளிலும் வருமாம். மேலே திரு. முத்துசாமி குறிப்பிட்டிருக்கிறார் ‘விக்‌ஷனரி’யை ஆதாரம் காட்டி. அப்படியெனில் ‘தோகை மயிலே’ என்ற அர்த்தத்தில்தான் எழுதியிருப்பார் தஞ்சை ராமையாதாஸ்.

      நீங்கள் சொல்லுகிறபடி, குழப்புகிற வேற்றுமொழி வார்த்தைப்பிரயோகங்கள் தமிழில் இப்போது அதிகம். தமிழ்ப்பத்திரிக்கைகள்/மீடியாக்கள் அரசியல்/மக்கள் போராட்டங்களை ‘தர்னா போராட்டம்’ என வர்ணிக்கிறார்கள். இந்த ‘தர்னா’ எங்கிருந்து வந்தது? ஹிந்தியிலிருந்து. ‘தர்னா’ (dharna) என்றாலே போராட்டம் என்றுதான் அர்த்தம். இந்த மூதேவிகள் விளக்கிச்சொல்வதாக எண்ணி போராட்டங்களையெல்லாம் ‘தர்னா போராட்டம்’ எனக் குறிப்பிடத் தொடங்கிவிட்டார்கள்! ’போராட்டம் போராட்டம்’ என்று அர்த்தம் வருகிறது!
      தமிழ்நாடே ஒரே ‘தர்னாநாடு’ -ஆகிவிட்டது!

      Like

      1. ஏ அண்ணன்.. ஆரியா நடிச்ச “கலாபக்காதலன்” என ஒரு படம் வெளி வந்துதே.. அப்போ அதுக்கு என்ன அர்த்தம் எடுப்பது!…

        Liked by 1 person

      2. @ அதிரா:

        என்னது? கலாபக் காதலனா! கந்தா, காருண்யா.., இதற்கெல்லாம் அர்த்தம் எடுக்க ஆரம்பித்தால் எங்கேபோய் முடியுமோ?

        Like

      3. நான் விடக்கூடாது எனத் தொடர்ந்து விசாரிச்ச இடத்தில அறிஞ்சேன். கபால என்றால்.. கள்ளமான, ரகசியமான எனவும் பொருள் உண்டாம்.

        Liked by 1 person

      4. மேலே மாறி அடிச்சிட்டேன் அது கபால அல்ல கலாப ..

        Liked by 1 person

  4. மிக அருமையான பாடல். அதுவும் டிஎமெஸ் குரலில் சிவாஜியின் முக பாவத்தில் ஆர்யமாலாவை விளிக்கும் அழகே தனி.

    கலாபம் என்கிற வார்த்தை கதைகளைக் கொண்டு வந்து விட்டதே ஏகாந்தன் சார்.

    என்ன அழகான வார்த்தை. மயில் போலவே அதன் பெயரும் அழகு.
    உங்கள் ஆராய்ச்சியால் எங்களுக்குப் புது வார்த்தையும் முருகன் மயிலின்
    பொருளும் புரிந்தன.
    என்றும் வாழ்க வளமுடன்.

    Liked by 1 person

    1. @Revathi Narasimhan: எதையோ படிக்கப்போய், மனம் கலாபப் பாடலை நினைவுக்கொண்டுவந்து, கதையையும் இழுத்துக்கொண்டுவந்துவிட்டது!

      Like

  5. “கலாபம்” வந்த கதை இன்றே அறிந்தேன். அருமை. சாலிவாகனனே சம்ஸ்கிருதம் தெரியாமல் இருந்தானா? ஆச்சரியம் தான்! சம்ஸ்கிருதத்திலும் உங்களுக்குப் பாண்டித்தியம் உண்டு போல! இத்தனை நாட்கள் கலாபம் எனில் ஆண் மயில் தோகை என்றே நினைத்திருந்தேன்.

    Liked by 1 person

    1. @Geetha Sambasivam :
      சமஸ்க்ருதத்தில் பாண்டித்யமா! பெரிய்ய வார்த்தை. சமஸ்க்ருதத்தில் நாட்டம் உண்டு என வேண்டுமானால் சொல்லலாம். சமஸ்க்ருதத்தை ஒரு மொழியாகப் படிக்காது போய்விட்டோமே என வருந்துகிறேன். ஏகப்பட்ட விஷயங்கள் கொட்டிக்கிடக்கும் மொழியாயிற்றே. மொழி வல்லமை இருந்தால் சாஸ்திரங்கள், காவியங்கள் (ஆதிசங்கரர், ராமானுஜர், மகாதேசிகன்(குறிப்பாக அவரது அழகு கொஞ்சும் ஸ்லோகங்கள்), சூர்தாஸ், காளிதாஸ், பில்கணன், என நீள்கிறது லிஸ்ட்..) எல்லாம் ஒரிஜினலில் படித்து இன்புறலாமே எனும் பேராசைதான்.

      Like

  6. @ அதிரா: //..கலாப என்றால்.. கள்ளமான, ரகசியமான எனவும் பொருள் உண்டாம்.//

    காதல் கள்ளமாக , ரகசியமாக இருப்பது இயற்கைதான். பின்னே பத்திரிக்கையில் போட்டுவிட்டா காதலிக்கமுடியும்! ஆனால், இப்போதிருக்கும் அசடுகள் அப்படி ஒருவேளை செய்தாலும் செய்யும்!

    Like

  7. கலாபம் என்றால் மயில் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ‘காக்க காக்க’ படத்தில் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய “ஒன்றா இரண்டா ஆசைகள்…” என்னும் பாடலில் ‘கலாபக் காதலா’ என்று ஒரு வரி வரும். அதைக் கேட்ட பொழுது கலாபம் என்றால் அழகு என்று நினைத்துக் கொண்டேன். உங்கள் விளக்கத்தைப் படித்த பிறகுதான் கலாபம் என்பது மயிலையும், வியாகரண நூலையும் குறிக்கிறது என்று தெரிகிறது.
    கலாபக் காதலன் என்றால் ரகசியக் காதலன் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

    Like

    1. @Bhanumathy Venkateswaran: சில வார்த்தைகளில், அவை உச்சரிக்கப்படும் விதத்தில், இயல்பாகவே ஒரு கவர்ச்சி. பாம்பே ஜெயஸ்ரீயின் ‘காக்க.காக்க..’ பாடலில் கலாபம் வருகிறதா! கேட்டுப்பார்த்த்துட வேண்டியதுதான்..

      Like

      1. ஏகாந்தன் அண்ணா நான் கேட்க நினைச்ச ரெண்டையும் அதிராவும், பானுக்காவும் கேட்டுட்டாங்க. கலாபக் காதலன் அப்படினு ஒரு படம்…அப்புறம் ஒன்றா ரெண்டா ஆசைகள் பாட்டுல கலாபக் காதலா என்று வரும். அப்ப இந்தக் கலாபத்துக்கு என்ன அர்த்தம்னு…நான் வேறு நினைத்துக் கொண்டிருந்தேன்…அதாவது ரகசியக்காதல், ரகசியக் காதலன் என்ற அர்த்தத்தில்…அதுவும் உண்டு என்று தெரியுது நீங்க அதிராவுக்குக் கொடுத்த பதிலில்.

        கலாபம் என்பதன் விளக்கமான அர்த்தம் அதற்கான கதை எல்லாம் புதிது. மீ க்கு சின்ன வயசுலருந்தே தமிழ் ஆங்கிலம் எல்லாம் ததிங்கிண்தோம் இதுல சமஸ்கிருதம் கிட்டவே போனதில்லை.

        ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள விழையும் போது நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது இல்லையா…உங்கள் வழி எங்களுக்கும்…

        கலாப மயில் என்றதும் கலாபம் என்றால் மயில் என்றால் மயில் மயில் என்று வருமோனு யோசித்தேன். அப்புறம் பதில்களில் இருந்து தோகை மயில் என்றும் கொள்ளலாம் என்று தெரிந்ததும் உடனே மனசு சும்மா கெடக்குதா…தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ..என்று பாடத் தொடங்கியது!!

        கீதா

        Liked by 1 person

  8. கலாபம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடப்போய் மிக சுவாரஸ்யமான பதிவைக்கொடுத்து விட்டீர்கள்! அதோடு ‘ வா கலாப மயிலே ‘ பாடலைப் பார்க்க வேண்டுமென்று யூ டியூப் போனால் ‘ வா கலாப மயிலே’ என்ற வரி பாடும்போது come, feathered beautiful peacock என்று மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்! கீழேயே போட்டிருக்கிறார்கள்!!

    Like

  9. @Mrs.Mano Saminathan : வருகை , கருத்துக்கு நன்றி.

    யூ-ட்யூபில் பாடலைக் கேட்கலாம். அவர்களின் சப்-டைட்டில்ஸைப் படிக்க ஆரம்பித்தால், தமிழோடு, ஆங்கிலமும் மறந்துபோகும். அத்தகைய தெள்ளுமணிகளின் மொழிபெயர்ப்புகள் அதிகம் அங்கே.

    இருந்தாலும், அர்த்தம் தெரியாமல் தமிழ்ப்பாட்டை ரசிக்கும் பிறமொழிக்காரர்கள் , யூ-ட்யூப் மூலம் அந்த பாடல் என்ன சொல்கிறது என ஓரளவுக்குத் தெரிந்துகொள்கிறார்கள் எனலாம்!

    Like

    1. @ கீதா: //..தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ..// அழகாக மனதிலாடும் பழைய பாடல். கேட்டு நாளாகிறது. பாடிப்பார்க்கலாம் என்றால் வார்த்தைகள் வசப்பட மாட்டேன்கிறது!

      அத்தி பூத்தாற்போல் எப்போதாவதுதான் இப்போதெல்லாம் நீங்கள் எபி-க்குள் நுழைவதைப் பார்க்கிறேன்! உங்கள் பதிவையும் படித்தேன் . பதில் போடுவேன். ஸ்லோகங்கள், உபநிஷதம் என்று படித்துக்கொண்டிருக்கிறேன் – கிரிக்கெட்டிற்கிடையே..

      ஆவின் அலுத்ததால், நந்தினியோடு அரட்டை அடிக்க இந்தப் பக்கம் வந்திருக்கிறீர்கள் என்பதைக் கண்டுகொண்டேன். வெல்கம் டு ‘பெண்களூர்’(வார்த்தை உபயம் கீதா சீனியர் !). கரண்ட்டு கட்டு, வாட்டர் கட்டு என்று உபத்ரவங்கள் இருக்கும்தான். இருந்தாலும் அவ்வப்போது குளுகுளு வென இருப்பதால் கோபம் குறைய வாய்ப்பிருக்கிறது!

      Like

  10. இந்த முருகர் இலக்கணம் சொன்ன கதை எங்கே உள்ளது.

    Like

    1. @ srini rama : தமிழில் இல்லை. சமஸ்க்ருத வியாகரண நூலான கௌமாரம் அல்லது கலாபத்தில் இது காணப்படுகிறது.

      Like

  11. கலாபம் என்னும் சொல் கல+ ஆபம் என்னும் கூட்டுச்சொல்.

    கல என்னும் சொல் வண்ணக் கலவைகளைக் குறிக்கும் (அதாவது, தூய வெண்மைக்கு எதிரானது ). தூய தமிழ் சொல். சமஸ்க்ரிதம் அல்ல .

    ஆபம் என்ற சொல் ஒளியைக் குறிக்கும்,

    கலாபம் என்பது வர்ணஜாலத்தைக் குறிக்கும்; கலங்கிய நிலையையும் குறிக்கும். ஒழுங்கற்ற ஒளிச்சிதறலையம் குறிக்கும்.

    அது வர்ண ஜாலத்தைக் குறிப்பதனாலேயே மயிலின் தோகைக்குக் கலாபம் என்று பெயர்!

    Like

Leave a comment