ASIA CUP : ஆஃப்கானிஸ்தான் அட்டகாசம் !

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆசியக் கிரிக்கெட் கோப்பையில் எனக்குப் பிடித்த அணி என்று ஆஃப்கானிஸ்தானையே சொல்வேன். வெற்றி, தோல்வியைத் தாண்டி ஜாலியாக விளையாடும் ஒரே சர்வதேச அணி. பழைய வெஸ்ட் இண்டீஸ் நினைவுக்கு வருகிறது. அந்த அளவு திறன் இவர்களிடம் இல்லை. அத்தகைய ஒப்பிடுதலே சரியில்லை. எனினும், கிரிக்கெட் உலகின் இளம் அணிகளில் ஒன்றான ஆஃப்கானிஸ்தான் தங்கள் கிரிக்கெட்டை விளையாடும் லாவகம், மனப்போக்கு மகிழ்ச்சிகரமானது. ரசிக்கத்தக்கது.

நேற்று சூப்பர்-4 போட்டியில் இந்தியாவை ஆஃப்கானிஸ்தான் முதன்முதலாகச் சந்தித்தது. அவர்களின் கடைசி மேட்ச். அதற்கப்புறம் தொடரைவிட்டே வெளியேறவிருக்கும் அணி. அந்தக் கவலையோ, சோகமோ ஏதுமில்லை அவர்களிடம். முதலில் பேட் செய்தவர்கள் நிதானமாக மைதானத்தை கவனித்தார்கள். ஆர்வமாக ஆடினார்கள். குறிப்பாக ஆரம்ப ஆட்டக்காரரான 30-வயதான முகமது ஷாஸாத் (Mohamed Shahzad). ஆள் அப்படி ஒரு குண்டு. ஃபிட்னெஸுக்காக மற்ற ஆஃப்கன் வீரர்கள் வேகவைத்த காய்கறி, சூப் என மாறியிருக்க, பிரியாணியை விடாததால் விமரிசனத்துக்குள்ளான பேட்ஸ்மன்! வேறொரு கிரிக்கெட் அணியாயின், இவர் தேர்வாக வாய்ப்பே இல்லை! ஆனால் அதிரடி ஆட்டத்துக்கு பேர்போன மனுஷன். எப்படி அவரை விடமுடியும்? அவருக்குள் ஒளிந்திருப்பது ஒரு உற்சாகச் சிறுவன்! இஷ்டத்துக்கும் பேட் சுத்த விரும்புபவன். எதிரியைத் துச்சமென மதித்து ஏறி அடிக்கத் துடிப்பவன். அவன் நேற்று ஆடிவிட்டான் ஒரு ஆட்டம் – அதுவும் தோனியின் இந்தியாவுக்கெதிராக.

இந்தியா ஏற்கனவே இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுவிட்டபடியால் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவண், புவனேஷ்வர் குமார், பும்ரா, சஹல் ஆகியோர் ஓய்வுகொடுக்கப்பட்டார்கள். பதிலாக, கே.எல்.ராஹுல், மனிஷ் பாண்டே, கலீல் அஹமது, தீபக் சாஹர் மற்றும் சித்தார்த் கௌல் (இந்த மூன்றும் வேகப்பந்துவீச்சாளர்கள்) அணியில் நுழைந்தார்கள். கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் தோனி பொறுப்பேற்றதில் ரசிகர்களுக்கு ஒரே குதூகலம். ஆஃப்கானிஸ்தானை 42, 43 ஓவரில் ஊதிவிடும் இந்தியா என்பது பெரும்பான்மையான ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்திருக்கும்.

முதலில் பேட்செய்த ஆஃப்கானிஸ்தானின் துவக்க ஆட்டக்காரர் முகமது ஷாஸாத் இந்தியாவின் வித்தியாச வேகப்பந்துவீச்சை வெகுவாக ரசித்ததாகத் தோன்றியது! குண்டாக இருப்பதால், மற்ற பேட்ஸ்மன்களைப்போல், இஷ்டத்துக்கும் அவர் முன்னடி எடுத்துவைத்து க்ரீஸிற்கு வெளியே பாய்வதோ, ஆஃப் சைடு, லெக்-சைடு என அடிக்கடி கால்மாற்றி முன்னும் பின்னுமாக அசைந்து ஆடுவதோ எளிதில்லை. ஸ்வீப்பிற்காகக் காலை மடக்குவதும், ஐயோ.. முடியாது. ஆசாமியின் தொப்பை அப்படி! ஆனால் அதைப்பற்றிய கவலை மனதில் கிஞ்சித்தும் இல்லை. அவர் ஆடுகையில் ஆட்டம் தோனி & கோ. Vs முகமது ஷாஸாத் என்றே இருந்தது. ஆரம்பத்திலேயே வேகப்பந்துவீச்சைக் குறிவைத்தவர், தீபக் (ச்)சாஹரின் ஒரு ஓவரில் இரண்டு சிக்ஸர், இரண்டு பௌண்டரி எனத் தூள்கிளப்பினார். தோனி உடனே தீபக்கை வெளியே எடுத்து ஃபீல்டு செய்ய அனுப்பிவிட்டு, சித்தார்த் கௌலைக் கொண்டுவந்தார். அதே ட்ரீட்மெண்ட்தான் அவருக்கும். கலீலுக்கும் அடி. விறுவிறுவென ரன் ஏறியதில் விக்கெட் இழப்பின்றி 65 என்றது ஆப்கானிஸ்தான் ஸ்கோர். மறுமுனையில் 5 ரன்தான் எடுத்திருந்தார் இன்னொரு துவக்க ஆட்டக்காரர்.

தோனி ஸ்பின்னர்களைக் கொண்டுவந்தபோது ஷாஹ்ஸாத் வீழ்த்தப்படுவார் என்றே ரசிகர்கள் நம்பினர். காமெண்ட்டேட்டர்களும் அதையே விதவிதமாக சலசலத்து சந்தோஷப்பட்டுக்கொண்டனர். ஆனால் நடந்ததென்ன? நேற்று ஷாஸாதின் நாள். அவரை, குல்தீப், ஜடேஜா பின்னர் கேதார் – யாரும் அசைக்கமுடியவில்லை. குல்தீப்பைத் தவிர, மற்ற ஐந்து பௌலர்களையும் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் ஷாஸாத். அனாயாசமாக மிட்விக்கெட் திசையில் ஒரு புல் (pull), லாங்-ஆன் பக்கம் ஒரு லாஃப்ட் (lofted shot). பந்து உயர்ந்தது, பறந்தது. தொப்பென்று கூட்டத்திற்கு நடுவே விழுந்து சிரிப்பொலியைக் கிளப்பியது. தோனியும், அவரது பௌலர்களும் அவ்வப்போது ஆகாசத்தைப் பார்ப்பதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியவில்லை.

93-ல் அவர் இருக்கையில் கேட்ச் பிடித்த தோனியும் பௌலர் கலீல் அஹமதும் கூச்சலிட, அம்பயர் ஷாஹ்ஸாதை அவுட் கொடுத்தார். ஷாஸாத் அசரவில்லை. தோளைத் தொட்டுக்காண்பித்தார். அங்கேதான் பட்டது. பேட்டில் அல்ல. ஆஃப்கானிஸ்தான் ரெவ்யூ செய்ய, அதிரடி நாட்-அவுட்! அதன் பிறகு, சிங்கிள், சிங்கிளாக ஊர்ந்தார் ஷாஹ்சாத். 99-லிருந்து தோனிக்குப் பின்னே ஒரு பௌண்டரி தட்டி, உலகின் 2-ஆவது நம்பர் அணிக்கெதிராக ஆக்ரோஷ சதம் எடுத்து அசத்திவிட்டார் ஷாஸாத். இறுதிக்கட்டங்களில் பரபரப்பைக் குறைத்துக்கொண்டு, ஓடமுடியாத நிலையிலும் (விளாவில் அடி, அபுதாபியின் ஹீட், வெகுநேரம் ஆடும் களைப்பு) சிங்கிளுக்காக அடிக்கடி ஓடினார். பொறுப்பாகத் தொடர்ந்த அவர், கேதாரின் வெளியே போகும் பந்தை லாங்-ஆஃபில் (long-off) சிக்ஸர் அடிக்க முயன்று, 124 ரன்களில் கேட்ச்சில் அவுட்டானார். இந்திய பௌலர்கள் மூச்சை ஒருமுறை இழுத்து, மெல்ல வெளியேவிட்டிருப்பார்கள். ஹரே, பாப்ரே! பிறகு வந்தவர்களில் முகமது நபி (முன்னாள் கேப்டன்) 64 அடிக்க, 8 விக்கெட் இழந்து 258 எடுத்தது ஆஃப்கானிஸ்தான்.

கொதிக்கும் அபுதாபி பிட்ச்சில், ஆஃப்கானிஸ்தான் ஸ்பின்னர்களுக்கெதிராக 259 என்கிற இலக்கு மிகவும் சவாலானது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்பதாகத் துவக்கினார்கள் அம்பத்தி ராயுடுவும், கே.எல்.ராஹுலும். நல்ல பார்ட்னர்ஷிப். ராயுடு 57, ராஹுல் 60 என விழுந்தவுடன் கார்த்திக் வந்து பொறுப்பேற்றார். சிறப்பாக ஆடி, 44 எடுத்தார். தோனியும், பாண்டேயும் தலா 8 ரன் என எடுத்து வீழ, கேதார் ஜாதவும் ஓடிவிட, வெற்றி பெற்றுத்தரும் பொறுப்பு ஜடேஜாவின் தலையில்! அவர் நன்றாகவே விளையாடினார் எனினும் (ச்)சாஹர், கௌல் போன்றோர் கைகொடுத்தால்தானே? கடைசியில், 50-ஆவது ஓவரை ஆஃப்கானிஸ்தானின் சூப்பர்ஸ்டாரான ரஷீத்கான் வீசினார். 9 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்தியாவுக்கு 7 ரன் தேவைப்பட்டது வெற்றிக்கு. ஜடேஜா இரண்டாவது பந்தில் பௌண்டரி அடிக்க, ஜெயித்துவிட்டதுபோல் தவண் வழக்கம்போல் பெவிலியனில் நின்று சிரித்துக்கொண்டிருந்தார். என்னா சிரிப்பு! வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட, ஐந்தாவது பந்தைத் தூக்கி அடித்தார் ஜடேஜா. ஆகாசத்தில் பந்து, ஃபீல்டர் என ஒரு பக்கமும், இன்னொருபக்கம் தவனின் முகம் எனவும் கேமரா விளையாட்டுக் காண்பித்தது. தவணின் சிரிப்புக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. உறைந்தது. ஆகாசத்தைப் பார்த்துக்கொண்டே தொலைவிலிருந்து படுவேகமாக ஓடிவந்த ஃபீல்டர் நஜிபுல்லா ஜத்ரன் (Najimbulla Zadran), பந்தின்மீது கண்ணும், ஏந்திய கையுமாக ஓடிக்கொண்டே கேட்ச்சை லபக்கிவிட்டார். எதிர்பாராத முடிவினால் ஆஃப்கானிஸ்தான் ரசிகர்கள் பெரிதாகக் கொடியசைத்து ஆர்ப்பரிக்க, இந்தியா 49.5 ஓவரில் சரியாக 258-ல் ஆல்-அவுட். ஆசியக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக முதல் டை (Tie) கொடுத்துக் கலக்கிவிட்டது ஆஃப்கானிஸ்தான். ஆஃப்கன் கொண்டாட்டங்களுக்கிடையில், அதிர்ந்துபோயிருந்த இந்திய ரசிகர்களில் ஒரு சர்தார்ஜி, அழ ஆரம்பித்துவிட்ட தன் சுமார் 4 வயது பொடியனைத் தேற்றிக்கொண்டிருந்ததும் கேமராவில் சிக்கியது ஒரு கவிதைக்கணம்.

’இந்தியாவுக்கெதிராக ’டை’ என்பது வெற்றிக்குச் சமம். 2018-ல் எங்களின் மிக அபாரமான ஆட்டம் இது’ என்றார் ஆஃப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆஃப்கன் (Asgar Afghan). யார்தான் மறுக்கமுடியும்?

படங்கள் இணையம். நன்றி.
*

9 thoughts on “ASIA CUP : ஆஃப்கானிஸ்தான் அட்டகாசம் !

  1. இதற்கும் ஒரு சின்னப்பையன் கண்கலங்கினானான் என்றான் என் மகன். இப்போதெல்லாம் எப்படி கேமிரா கவனத்தைக் கவர்வது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்!

    Liked by 1 person

    1. @ஸ்ரீராம் :
      Rare innings. உலகக்கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் எப்படி ஆடும் என்கிற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. அது இங்கிலீஷ் கண்டிஷன்ஸ் என்கிறபோதிலும்.

      Like

  2. முதல் பாதி மட்டும்தான் நான் பார்த்தேன். மிகுதியை இன்று தெரிந்துகொண்டேன்.

    நியாயம் என்றால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும் (மனதுக்கு அது கஷ்டத்தைக் கொடுக்கும் என்றாலும்). சகலுக்கும் கெளலுக்கும் துரதிருஷ்டம்தான். இனி அவங்களுக்கு எப்போ மேட்சுக்கு வாய்ப்பு கொடுப்பாங்களோ இல்லை அவ்வளவுதானோ. இருவரும் கடுப்பேற்றிய பவுலர்கள்.

    தோனி, டை செய்ததே பெரிய சாதனை என்றுதான் சொன்னார். அது நியாயமும் கூட. நல்லவேளை, அவங்க, 300 பக்கம் அடித்துவிடவில்லை என்று ஆறுதல் பட்டுக்கலாம்.

    ஏசியா கப்பில், ஃபைனலில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆடினால்தான் சரியாக இருந்திருக்கும். (சொல்லமுடியாது… பாகிஸ்தான் கோப்பையை வென்றுவிடலாம் ஹாஹா)

    Liked by 1 person

    1. @ நெ.த.
      மூன்று புதிய வேகப்பந்துவீச்சாளர்களில் கலீல் அஹ்மத் பிழைத்துக்கொள்வார் எனத் தோன்றுகிறது. அவரும் கௌலும் டெத்-ஓவர்களை நன்றாகப் போட்டார்கள்.
      சூப்பர்-4 ல் பங்களா மற்றும் பாக்கிற்கெதிராகக் கடைசி ஓவரில் தோற்க நேர்ந்தது ஆஃப்கானிஸ்தானின் துரதிர்ஷ்டம். நேற்று ஒரு த்ரில்லிங் ‘டை’. ஆனால் இத்தகைய நெருக்கலான போட்டிகள் அதன் வீரர்களை மேலும் கூர்மையாக்கியிருக்கும். உலகக்கோப்பையின்போது உதவும்.
      இன்று இரண்டு பச்சை சட்டைகளும் எப்படி விளையாடப்போகின்றன என்று பார்ப்போம்.

      Like

  3. நேற்று ஆஃப்கானிஸ்தானின் ஷாஹ் ஜாதின் நாள் இதுதான் கிரிக்கட் ஆட்டத்தின் பரவசம்

    Liked by 1 person

    1. @Balasubramaniam G.M : ஆஃப்கானிஸ்தானுக்கு தன்னை நிரூபிக்க மேலும் வாய்ப்புகள் கிடைக்கவேண்டும். ஆஃப்கானிஸ்தான் போய் எந்த சர்வதேச டீமும் தொடர் ஆடாது. அபுதாபி அல்லது இங்கிலாந்துபோன்ற வேறு நாடுகளில் நிகழலாம். ஐசிசி என்ன செய்யப்போகிறதோ?

      Like

    1. @திண்டுக்கல் தனபாலன் : ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், ஸ்ரீலங்காவுக்கு மங்கு சனி.. இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான், அயர்லாந்து போன்ற அணிகள் பிரகாசிக்கும் எனத் தோன்றுகிறது. என்ன, கொஞ்சம் காலம் பிடிக்கும்.

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s