Asia Cup Cricket : மீண்டும் மோதும் இந்தியா, பாகிஸ்தான்

ஆசியக்கோப்பைக் கிரிக்கெட்டின் ’சூப்பர்-4’ போட்டியில் இன்று (23-9-18) துபாயில் மோதவிருக்கின்றன, இந்தியாவும் பாகிஸ்தானும்.

19-9-18-ல் நடந்த இருநாடுகளுக்கிடையேயான போட்டியில், பாகிஸ்தான் வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் எனக் கணிக்கப்பட்ட நிலையில், இந்தியா அலட்சியமாகப் பாகிஸ்தானைத் தூக்கி எறிந்தது இந்திய ரசிகர்களுக்கேகூட ஆச்சரியத்தைத் தந்திருக்கும். முதலில் பாகிஸ்தான் பேட் செய்கையில் எதிர்பார்ப்பு 280-300 ரன்கள் என்கிற வகையில் இருந்தது. ஸ்லோ பிட்ச் என்பது தெரிந்திருந்த நிலையிலும். இந்தியாவின் சராசரி வேகப்பந்துவீச்சை பாகிஸ்தான் துவம்சம் செய்யும் எனவே எதிர்பாக்கப்பட்டது. ஆனால் கத்துக்குட்டிகளான ஹாங்காங்குக்கு எதிராக அசடு வழிந்த இந்திய வேகப்பந்துவீச்சு, தன் திறனை சரியான சமயத்தில் பாகிஸ்தானுக்கெதிராக வெளிக்கொணர்ந்து அசத்தியது. குறிப்பாக ஸ்விங் ஸ்பெஷலிஸ்ட் புவனேஷ்வர் குமார். பாகிஸ்தானி பேட்ஸ்மன்களுக்கு புகுந்து விளையாட இடமே கொடுக்காது நெருக்கித்தள்ளினார் ஆரம்பத்திலிருந்தே. சரியான லென்த் மற்றும் துல்லியப்பந்துவீச்சில் அவர்களை அடக்கி ஒடுக்கி வைத்தது இந்தியத் தாக்குதலின் சிறப்பம்சம். வேறுவழியின்றி க்ரீஸிற்கு வெளியே வந்து புவனேஷ்வரைத் தாக்க முயன்ற பாகிஸ்தானி பேட்ஸ்மன்கள் தங்கள் விக்கெட்டுகளை எளிதான கேட்ச்சுகளுக்குப் பறிகொடுக்கவேண்டியதாயிற்று. அடுத்த முனையில் ஜஸ்ப்ரித் பும்ராவும் பெண்டெடுக்க, முதல் இருபது ஓவருக்குள்ளேயே மூச்சுத் திணறியது பாகிஸ்தானுக்கு. ஆனால், ஷோயப் மாலிக்கும் (Shoaib Malik (ஸானியா மிர்ஸாவின் வீட்டுக்காரர்!), பாபர் ஆஸமும் சிறப்பாக ஆடி நிலைமையைச் சரிக்கட்ட முயன்றார்கள். யஜ்வேந்திர சஹல் மற்றும் குல்தீப் யாதவின் பந்துவீச்சை ஆரம்பத்தில் அடிக்க ஆரம்பித்த பாகிஸ்தானைக் கவனித்த இந்தியக் கேப்டன் ரோஹித் ஷர்மா, பார்ட்-டைம் ஸ்பின்னர் கேதார் ஜாதவைப் பந்துபோட அழைத்தார். ஜாதவின் பந்துவீச்சு ஏதோ பள்ளிக்கூடப் பையன் போடுவதுபோல் அவர்களுக்குத் தோன்றியிருக்கவேண்டும். சுழலோடு, அது ஒரு உளவியல் ரீதியான இந்தியக் களவியூகம் என்பதை அறிந்திராத பாகிஸ்தான், ஜாதவை அலட்சியம் செய்து தாக்கியது. ஆனால், ஆர்ப்பாட்டமில்லாத ஜாதவின் அப்பாவி சுழல், பாகிஸ்தானி மிடில் ஆர்டரை நிலைகுலையவைத்தது. கேதார் ஜாதவும், புவனேஷ்வர் குமாரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த, முண்டமுடியாத பாகிஸ்தான், முணகிக்கொண்டே 162 ரன்னில் மைதானம் விட்டு ஓடியது.

இந்தியா இலக்கை நோக்கி பேட் செய்கையில் ரோஹித்தும் தவணும் நல்ல துவக்கம் தந்தார்கள். பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர்களைக் குறிவைத்துத் தாக்கிய ரோஹித் ஷர்மா, உஸ்மான் கானின் ஆவேச ஓவரில், மேல் எகிறிய பந்துகளை ஹூக், புல் என அதிரடியாக 18 ரன்கள் விளாசினார். அரைசதம் அடித்தார். அவரும் அடுத்தபடியாக தவணும் விழுந்தபின், அம்பத்தி ராயுடுவும் தினேஷ் கார்த்திக்கும் மேற்கொண்டு விக்கெட் சரிவதைத் தவிர்க்க சிங்கிள் சிங்கிளாகத் தட்டி ஆடி இலக்கை எட்டினார்கள். இந்தியாவுக்குக் கடுமையாக சவால் கொடுக்கமுடியாமல், பாகிஸ்தான் சரணடைந்தது துபாயில் ஏராளமாக வந்து அமர்ந்திருந்த பச்சைக்கொடி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.

இடையிலே காயம் காரணமாக ஹர்தீக் பாண்ட்யா, ஷர்துல் டாக்குர், அக்ஸர் பட்டேல் ஆகியோர் இந்தியா திரும்பிவிட்டனர். பதிலாக அணியில் வந்திருப்பவர்கள் தீபக் (ச்)சாஹர் (Deepak Chahar – சென்னை சூப்பர் கிங்ஸ்), சித்தார்த் கௌல் (Siddharth Kaul), ரவீந்திர ஜடேஜா ஆகியோர். இதற்கிடையில் சூப்பர்-4 மேட்ச் ஒன்றில், பங்களாதேஷை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்திருக்கிறது. 4 விக்கெட் வீழ்த்தி பங்களாதேஷைக் கதிகலங்கவைத்த இடதுகை சுழல்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, பாகிஸ்தானை ஒருகை பார்ப்பதற்காக இன்று துபாயில் களமிறக்கப்படலாம். அப்படியாயின், இந்தியாவின் சுழல்-இரட்டையர்களான சஹல், குல்தீப் – இருவரில் ஒருவருக்கு ஓய்வளிக்கப்படுமோ? வேகப்பந்துவீச்சில் தீபக் (ச்)சாஹர் மூன்றாவது பௌலராக இறங்கும் வாய்ப்பும் உண்டு. பேட்டிங் வரிசை அப்படியேதான் இருக்குமா என்பதைப் பார்க்கவேண்டும். கே.எல்.ராஹுல் அல்லது மனிஷ் பாண்டேயை இறக்கலாம் என்றால் யாரைத்தான் விலக்குவது?

ஏற்கனவே அடிபட்டிருக்கும் பாகிஸ்தான், சீற்றத்துடன் இன்று இந்தியாவை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. அருமையான கிரிக்கெட் யுத்தத்தை எதிர்நோக்கி இருநாட்டு ரசிகர்களும் இன்று தயாராக இருப்பார்கள். ஆட்டபாட்டம் எல்லாமே ரசிகக் கடவுளர்களுக்குப் படைக்கப்படும் விருந்துதானே!

*

8 thoughts on “Asia Cup Cricket : மீண்டும் மோதும் இந்தியா, பாகிஸ்தான்

  1. ஒருவேளை அன்று பாகிஸ்தான் தோற்றது இந்தியாவை மிஸ் லீட் செய்வதற்காக என்றால் (இங்கிலாந்தில் நடந்ததைப்போல)….. இன்று என்ன நடக்கும்? என்னைக் கேட்டால் இந்தியா இப்போது தோற்று ஃபைனனில் நல்லா விளையாடினால் பெட்டரோ?

    Liked by 1 person

    1. @நெல்லைத்தமிழன் :
      இங்கிலாந்தில் அப்படி நடந்ததாக நான் நினைக்கவில்லை. அப்படியெல்லாம் வேண்டுமென்றே மேட்ச்சைத் தோற்று இறுதியில் ஒரு அணி ஜெயிக்க, எந்த உத்திரவாதமும் கிரிக்கெட்டில் இல்லை.
      அதுவும் போச்சு அரஹரா, இதுவும் போச்சு சிவசிவா என்று ஆகிவிடவும் கூடும் !

      Like

      1. இல்லை ஏகாந்தன் சார்.. ஒரு தடவை ஸ்ரீலங்கா, ஏசியா கோப்பை (?) பைனலில் மாத்திரம் புதிய மெண்டிஸை இறக்கி நம்மைத் தோற்கடித்ததுபோல, வலுவான ஆட்கள் யாரையேனும் பாகிஸ்தான் இன்னும் இறக்கவில்லையா? நாளைக்காலையில் எனக்குத் தெரிந்துவிடும், மேட்ச் என்ன ஆச்சு என்று.

        Liked by 1 person

  2. @நெ.த.:
    பாகிஸ்தான் இந்தியாவுக்கெதிராக வலிமையான டீமைத்தான் இறக்கும். இறக்கியது அன்றும். பேட்டிங்கில் அவர்களது பேட்டிங் ஸ்டார்களான Fakhr Zaman, inam-ul-Haq மற்றும் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹ்மத் இந்தியாவுக்கெதிராக அந்த மேட்ச்சில் க்ளிக் ஆகவில்லை. இன்று சாத்தக்கூடும்.
    அவர்கள் வேகப்பந்துவீச்சில்தான் அதிகம் கவனம் செலுத்துவார்கள். ஸ்பின்னர் ஷதாப் கான் அன்று இடுப்பைப் பிடித்துக்கொண்டு வெளியேறிவிட்டார் ரோஹித்தை அவுட் செய்தபின். இன்று ஒருவேளை ஆல்ரவுண்டர் ஹாரிஸ் சோஹைல் விளையாடலாம் .

    Like

  3. இந்தியாவால் 238 ரன்கள் எடுக்க முடியவேண்டும் என்கிற ப்ரார்தனையோடு படுக்கச் செல்கிறேன்! முடிவு நாளைக்காலை பார்த்துக்கொள்வேன்!

    Liked by 1 person

    1. @ Sriram:
      எட்டரைக்கேத் தூங்கப்போகிறவர்கள் இப்போது அதிகமாகிவருவதாய்த் தெரிகிறதே- எங்கள் ப்ளாகில்!

      Like

  4. இந்தியா பாகிஸ்தான் மேட்ச் சிறப்பான வர்ணனை. 60 களில் ரேடியோவில் கமெண்டரி கேட்டதை நினைவுபடுத்தியது. வி.எம்.சக்ரபாணி ஆஸ்ட்ரேலியன் ப்ராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் நினைவுகூர்கிறேன்.

    Liked by 1 person

    1. @முத்துசாமி இரா :
      ABC -யின் சக்ரபாணி ! அடேங்கப்பா அந்தநாள் ஞாபகம்! அந்த நாட்களில் ஆல் இந்தியா ரேடியோவிலும் அருமையான காமெண்ட்டேடர்கள் இருந்தார்கள். அவர்களது ஆங்கில அழகுக்காகவே கிரிக்கெட் வர்ணனை கேட்டு மகிழ்ந்ததுண்டு. ரேடியோ காமெண்ட்ரிபோல வருமா இப்போது டிவியில் வரிசையாக அமர்ந்துகொண்டு புலம்புவதெல்லாம்..

      Liked by 1 person

Leave a comment