ஆசியக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா பாகிஸ்தான் க்ளாஸிக்?


மத்தியக்கிழக்கில், சீட்டு நுனிக் குதூகலத்திற்காகத் துடித்துக் காத்துக்கொண்டிருக்கிறது கிரிக்கெட் உலகின் பெரும் ரசிகர் கூட்டம். அபூர்வமாகவே இப்போதெல்லாம் கிரிக்கெட் மைதானத்தில் மோதிக்கொள்கின்றன இந்தியாவும் பாகிஸ்தானும். அப்படி ஒரு நிகழ்வு இன்று துபாயில்(Dubai). இந்த ஆசியக்கோப்பையில் இதுவரை இருநாடுகளுமே ஐசிசி அஸோஷியேட் உறுப்பினரான ஹாங்காங்கைத் தோற்கடித்து ஆளுக்கொரு வெற்றியோடு ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன.

எளிதாக முந்தைய போட்டியில், பாகிஸ்தானால் தோற்கடிக்கப்பட்ட ஹாங்காங், இந்தியாவை நேற்று ஒருகை பார்த்துத்தான்விட்டது! ஷிகர் தவண், மற்றும் 4 வருஷத்துக்குப் பின் இந்திய அணிக்குத் திரும்பியிருக்கும் அம்பத்தி ராயுடு ஆகியோரின் தரமான பங்களிப்பைத் தவிர, நேற்று ஹாங்காங்குக்கெதிராக இந்தியத் தரப்பிலிருந்து பெரிதாகச் சொல்ல ஏதுமில்லை. முதலில் பேட் செய்த இந்தியா, ஏதோ 285 ரன் எடுத்துவிட்டார்கள். பந்து வெகுவாக எம்பிவராத துபாயின் ஸ்லோ பிட்ச்சில் இந்த ஸ்கோர் பரவாயில்லை எனினும், இந்தியாவுக்கெதிராக ஹாங்காங் இப்படி சிறப்பாக எதிராட்டம் போடும் என யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். நமது பௌலர்களும் ’ஹ்ம்..ஹாங்காங்தானே..’ என்று வீசியிருப்பார்கள் என்றுதான் தோன்றியது. ஹாங்காங்கின் துவக்க ஆட்டக்காரர்களே விக்கெட் இழப்பின்றி 173 ரன் சேர்த்து இந்திய பௌலிங்கை மழுங்கச் செய்துவிட்டது அதிர்ச்சி அளித்தது. ஒருகட்டத்தில், இந்திய பௌலர்களுக்கு விழிபிதுங்கிவிட்ட நிலை. இந்தியா தடுமாறிய நேற்றைய இந்த மேட்ச்சை பாகிஸ்தான் ஆனந்தமாகப் பார்த்து ரசித்திருக்கும். இறுதியில் திக்கித் திணறி 26 ரன் வித்தியாசத்தில்தான் இந்தியா வென்றது. இதே ஹாங்காங்கை பாகிஸ்தான் 115 ரன்னில் முந்தைய போட்டியில் ஆல்-அவுட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி இந்திய அணியில் இல்லை என்பதோடு, கூடவே ரஹானே, ரிஷப் பந்த் போன்றோரும் இல்லை. பதிலாக தோனி, அம்பத்தி ராயுடு மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் உள்ளனர். காயத்திலிருந்து திரும்பியிருக்கும் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரும், ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ்வும் (Kedar Jhadav) சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அறிமுக இடதுகை வேகப்பந்துவீச்சாளராக இடம் பெற்றிருப்பவர் ராஜஸ்தானின் கலீல் அஹ்மத் (Khaleel Ahmed). இப்படி சில மாற்றங்கள் கொண்ட இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா தலைமை தாங்குகிறார்.

ஒருவகையில் பார்த்தால், நேற்றைய தடவலில் இந்தியாவுக்கு மணி அடித்திருக்கும். புவனேஷ்வர் குமார் நேற்று போட்டதுபோல் இன்று பந்துவீசினால், பாகிஸ்தானுக்கு அல்வா சாப்பிடுவதுபோலாகிவிடும். கேதார் ஜாதவ் அல்லது ஹர்தீக் பாண்ட்யா – இருவரில் ஒருவர்தான் விளையாட வாய்ப்பிருக்கும் எனத் தோன்றுகிறது. ஒருவேளை, இருவருமே சேர்க்கப்பட்டால், தினேஷ் கார்த்திக்தான் பலிகடா! ஒரு-நாள் மற்றும் டி-20 போட்டிகளில் அதிரடிக்குப் பேர்போன பாண்ட்யா பாகிஸ்தானுக்கெதிராகக் களம் இறங்குவதே நல்லது. இந்திய முன்னணி வீரர்கள் எளிதாக நொறுக்கப்பட்டுவிடும் பட்சத்தில், பின்வரிசையில் புகுந்து தாக்க பாண்ட்யாவும், தோனியும் பயன்படுவார்கள் என்றே ரோஹித் நினைப்பார். ரவி சாஸ்திரிவேறு, ஏதாவது சொல்லிக் குழப்பாமல் இருக்கவேண்டும். கே.எல். ராஹுல் இன்று சேர்க்கப்படலாம். ஆனால் யாருக்குப் பதிலாக என்பதே கேள்வி.அறிமுக வீரரான இடதுகை பந்துவீச்சாளர் கலீல் அஹ்மத் நேற்று மோசமாக
ஆரம்பித்தாலும், தன்னுடைய இரண்டாவது ஸ்பெல்லில் தீவிரமாக வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதால், இன்றைய மேட்ச்சில் ஜஸ்ப்ரித் பும்ராவுடன் அவர் விளையாடக்கூடும். ஸ்பின் பௌலிங்கில் யஜ்வேந்திர சஹலும் (Yuzvendra Chahal), குல்தீப் யாதவும் பொருத்தமானவர்களே. சரியான அணிஅமைப்பும், களவியூகமும் கொண்டு ரோஹித் இன்று துபாயில் இறங்குவது மிக மிக முக்கியம்.

பாகிஸ்தான் தரப்பில் பேட்டிங்கில் ஃபகர் ஜமன் (Fakhar Zaman), பாபர் ஆஸம் (Babar Azam), இனாம்-உல்-ஹக் (Inam-ul-Haq) போன்றவர்களும், பந்துவீச்சில் முகமது ஆமீர், உஸ்மான் கான், ஹாஸன் அலி போன்றவர்களும் கவனிக்கப்படவேண்டியவர்கள். இருநாடுகளுக்கிடையேயான தீக்கக்கும் போட்டிகளில் அதிக அனுபவம் உடையவர்களாக பாகிஸ்தான் தரப்பில் ஷோயப் மாலிக்கும், இந்திய அணியில் மகேந்திர சிங் தோனியும் காணப்படுகின்றனர்.

இந்திய அணியைவிடவும் பாகிஸ்தான் அணியின் வெற்றிவாய்ப்பு சற்றே பிரகாசமாக இருப்பதாகத் தோன்றுகிறது – அவர்களது ஃபார்மை வைத்துப்பார்க்கையில். எப்படியிருப்பினும் இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்சை ஒரு க்ளாஸிக் என பாவித்து பார்த்து மகிழ்வோர் உலகெங்கும் ஏராளம். இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா! – என்கிற நிலைதான் இன்று, மத்திய கிழக்கு ரசிகர்களுக்கு.

**

8 thoughts on “ஆசியக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா பாகிஸ்தான் க்ளாஸிக்?

  1. தோனி அவுட் ஆனதும் அந்தச் சின்னப்ப பையன் உணர்ச்சி வெளிப்பாட்டைக் கவனித்திருப்பீர்களே….​

    ஷிகர் இந்த மேட்சில் சாதம் அடித்ததன் மூலம் அடுத்த பதினைந்து மேட்சுகளுக்கு நிலைப்படுத்திக் கொண்டிருப்பார். அவர் ஆடாவிட்டாலும் அணியில் இருப்பார்.

    Liked by 1 person

    1. @ஸ்ரீராம் :
      பவர் கட்டில் ஒரு கமெண்ட் உடு கயா!

      நானும் கவனித்தேன் அந்தப் பையனின் ரகளையை. இன்னொருவர் அதிர்ச்சியில் உறைந்துபோனதை முகம் காட்டியது. அப்போதுதான் தோனியின் வருகையைக் கைதட்டி வரவேற்றுக்கொண்டிருந்தார்கள். அதிர்ச்சி மறைய நேரமானது.

      ஷிகர் தவணைப்பற்றி எங்கள் வீட்டிலும்நீங்கள் குறிப்பிட்டதுபோல்தான் பேசிக்கொண்டிருந்தோம்..!

      Like

    1. @ திண்டுக்கல் தனபாலன் :
      முடிவு எதுவாகினும் இன்றைய மேட்ச்சை தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும், விட்டுவிட்டாவது பாருங்கள். சுவாரஸ்யமாக இருக்கும்.

      Like

  2. சார்… நேற்றைய இந்திய இன்னிங்ஸ் (46 ஓவர் வரை) பார்த்து கொஞ்சம் நொந்துபோனேன். 320க்குக் கொண்டுபோயிருக்கவேண்டிய ஸ்கோர், 250லேயே தடவ ஆரம்பித்துவிட்டது. (எந்த ராஜா எங்க போனாலும் 8.30க்கு நான் தூங்கச் சென்றுவிடுவேன்). காலையில் அவங்க ஸ்கோரைப் பார்த்து ரொம்ப ஆச்சர்யப்பட்டுப் போனேன். டாஸ் இந்த பிச்சில் அவ்வளவு முக்கியமா?

    எனக்கு ஒரு சந்தேகம். ஒருவேளை, இதில் பாலிடிக்ஸ் இருக்கோ? அதாவது கோஹ்லி இல்லாத அணி வீக்காகக் கொடுப்பது என்று.

    ஐபிஎல் வந்தபிறகு நம் வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது, தரம் குறைந்துவிட்டது. அதனால் யார் நன்றாக விளையாடுவார்கள் என்று கணிக்க முடியவில்லை. எனக்கென்னவோ இன்று நாம் மிகவும் சொதப்பி, கீழ் வரிசை ஆட்டக்காரர்கள் தோனி உள்பட கைகொடுப்பார்கள் என்று தோன்றுகிறது. தோல்வி அடையவே அதிக வாய்ப்போ?

    Like

  3. @நெல்லைத்தமிழன் :
    டாஸ் ஜெயிப்பது இந்த மைதானங்களில் மிகவும் முக்கியம். டாஸைத் தோற்பது நம் வழக்கம். கோஹ்லி இதில் ரெகார்ட்-ஹோல்டர்.

    நானும் ஹாங்காங் 150-ல் காலி எனச் சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால் அவர்களது ஓபனர்கள் பிரமாதமாக ஆடியது சுவாரஸ்யமாக இருந்தது. கேப்டன் அன்ஷுமன் ரத் (20 வயது இந்திய வம்சாவளி) அருமையான ஆட்டக்காரர். 92 அடித்த நிஸாகத் கானும்தான்.

    அடுத்தடுத்த நாள் இந்தியாவுக்கு ஆட்டங்களாதலால் (பாகிஸ்தானுக்கு 2 நாள் ரெஸ்ட்) நேற்று வித்தியாசமாக அணி அமைத்திருந்தார் ரோஹித். இன்று நிச்சயம் ராஹுலும் பாண்ட்யாவும் ஆடுவர். நேற்று புவனேஷ்வரும் ஷர்துல் டாக்குரும் அசட்டுத் தனமாக பந்துவீசி ரன்களை
    வாரிவழங்கியது பெரும் எரிச்சலூட்டியது. இன்றைக்கு என்னென்ன குளறுபடி பாக்கியிருக்கோ?

    Like

    1. @Balasubramaniam G.M : தேகத்தை எரிக்கும் வெயிலில் துபாய், அபு தாபியில் கிரிக்கெட். மாலை 7 மணிக்கும் 40 டிகிரி. அதுவும் பௌலர்கள் பாடு பெரும்பாடு. ஓடி ரன் எடுப்பவர்கள்பாடும்தான்.

      Like

Leave a comment