மதுரைக் காட்சியில் புத்தகங்கள்


பிறந்த ஊர் மதுரை என்று பாஸ்ப்போர்ட்டில் எழுதியிருக்கிறதே தவிர நான் அந்த ஊரைப் பார்த்ததுகூட இல்லை என்று அவ்வப்போது சமூகப் பரிவர்த்தனைகளின்போது என் மனைவி சொல்லிவந்திருப்பது ஞாபகத்தில் இருந்ததால், ‘சரி, இந்தமுறை தெற்கு நோக்கிய பயணத்தில் மதுரையை குறிவைக்கலாம்’ என்று போய்ச்சேர்ந்தேன் குடும்பத்துடன். கள்ளழகர், மீனாக்ஷி, ஆண்டாள் எனத் தரிசனக் கற்பனைகளையும் கூடவே எடுத்துப்போயிருந்தேன். ஆனால்,அங்கு ஒரு புத்தகத் திருவிழா நடந்துகொண்டிருக்கும் என்றோ, அதற்கும் ஒருபொழுதில் போகநேரிடும் என்றோ கனவிலும் நினைக்கவில்லை.

கடந்த புதனன்று நான் அங்கிருந்தபோது சரியான வெயில். அதாவது பெங்களூரிலிருந்து வந்து சேர்ந்த எனக்கு சுள்ளென்று அடித்தது. வெளியே நடமாட உகந்ததாகத் தெரியவில்லை. டிசம்பர் ஜனவரிவாக்கில் இங்கு வந்திருக்கவேண்டுமோ என அந்த மதியத்தில் அடிக்கடித் தோன்றியது. ’ஏதாவது மால் கீல் இருக்கிறதா இங்கே’ எனக் கேட்டேன் ஓலாக்காரரிடம். ’விஷால் மால் இருக்கு சார்!’ என்றார் (மால் விஷயத்திலும் சினிமாதானா) போய்ச்சேர்ந்தோம் விஷால் தி மாலுக்கு. உள்ளே சென்று ஒரு ரவுண்டு வந்தவுடன்.. ம்ஹூம். சுவாரஸ்யம் இல்லை. பெங்களூரில் ஃபீனிக்ஸ், ஒரையான் போன்ற கவர்ச்சி மால்களில் சுற்றிவிட்டு மதுரையில் மால் தேடியது தவறு. இருந்தும் ஏசி வேலை செய்ததால் அதுவே இப்போதைக்குப் போதுமென இருந்தது. டாப் ஃப்ளோரின் ஃபுட்கோர்ட்டில் போய் கொஞ்சம் பிரியானி, சப்பாத்தி/பனீர் ஸப்ஜி, வெஜ்ரோல், என வாங்கிக்கொண்டோம்.
குடிப்பதற்கு எதையாவது வாங்குவோம் என நினைத்து சுற்றியதில், பொவொண்ட்டோவை(Bovonto) ஒரு ஸ்டாலில் பார்த்ததும் வாலிப நினைவுகள் வேகமாகத் திரும்பின. ’பொவொண்ட்டோ சின்னது ஒன்னு கொடுப்பா!’ என்றேன் விற்பவரிடம். ‘500 ml-தான் இருக்கு சார்’ என்றார் அந்த ஆள். ’சரி, நல்ல ச்சில்டா ஒரு பாட்டில எடுங்க!’ என்று வாங்கிக்கொண்டு டேபிளுக்கு வந்தேன். அதைப் பார்த்ததும் என் பெண் ’என்ன இது?’ என்றாள் வியப்பு மேலிட. ’எப்போப் பாத்தாலும் கோக்கும் பெப்ஸியும் குடித்துக்கொண்டிருக்க முடியாது. பொவொண்ட்டோ!’ என்றேன். ’வாட்?’ என முகம் சுளித்தாள். ’நாட்டின் இந்தப்பக்கத்தில் கிடைக்கும் பழம்பெரும் கோலா. தமிழ்நாட்டில் காளி மார்க் பானங்கள் ரொம்ப ஃபேமஸ் ஒரு காலத்தில். வெள்ளைக்காரன் காலத்திலிருந்தே இருக்கிறது. அந்தக் கம்பெனியோட ப்ராடக்ட்டாக்கும்’ என்று பாட்டிலில் சின்னதாக எழுதியிருந்ததைக் காண்பித்தேன், என்னமோ நாந்தான் அந்தக் கம்பெனியின் ஓனர்போல ஒரு பெருமையுடன். ’யூ ட்ரிங்க்!’ என்றாள் அலட்சியமாக. எனக்கென்ன, அந்த வெயிலில் கிடைத்த தற்காலிக நிழலில், ஆனந்தமாக பொவொண்ட்டோவை உறிஞ்ச ஆரம்பித்தேன். அடடா, என்ன ஒரு காளிமார்க் சுவை.. இந்தத் தலைமுறைக்கு இதெல்லாம் எங்கே புரியப்போகிறது என நினைத்துக்கொண்டேன். மெதுவாகத் தட்டிலிருப்பவைகளையும் மேய்ந்துவிட்டு, அங்குமிங்குமாக மாலுக்குள் சுற்றி, இரண்டு மணிநேரத்தைக் கடத்தியபின், புத்தகங்களின் நினைவில் பக்கத்திலிருந்த தமுக்கம் மைதானத்துக்கு வந்துசேர்ந்தோம்.

மணி நாலாகப்போகிறது. வெயில் இன்னும் விட்டபாடில்லை. அதுபாட்டுக்குக் கொளுத்திக்கொண்டிருந்தது. திருவிழாப்பந்தலுக்குமுன்னே திருவள்ளுவர் கம்பீரமாக வீற்றிருந்தார். வாரநாளானதால், புத்தகத்திருவிழா(!)வில் கூட்டம் எனச் சொல்லும்படி இல்லை. கொத்துக்கொத்தாக சில ஆண்களும் பெண்களும் ஒவ்வொரு வரிசையிலும் ஊர்ந்துகொண்டிருந்தார்கள். ஆனால் வந்திருந்தவர்கள் என்னவோ உண்மையில் புத்தகவாசகர்கள், ஆர்வலர்கள்தான் என்று தெளிவாகத் தெரிந்தது. தேடித்தேடி, ஸ்டால் ஸ்டாலாகச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். நானும் சேர்ந்துகொண்டேன். பள்ளி மாணவ, மாணவியரும் ஆங்காங்கே சீரியஸாகப் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தது உற்சாகம் தந்தது.

பெரிய பந்தலின் கீழ் ஏகப்பட்ட ஸ்டால்கள். கிழக்கு, விசா, விகடன், குமுதம், நற்றிணை, உயிர்மை, திருமகள், மீனாட்சி புத்தகாலயம், சாகித்ய அகாடமி, நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என ஏற்கனவே பிரபலமான பதிப்பகங்கள். கூடவே, கீழைக்காற்று, நிமிர் (திமிர் என்றும் ஏதும் ஸ்டால் இருந்ததோ?), கருப்புப்பிரதிகள், ரஹ்மத், டயல் ஃபார் புக்ஸ் மற்றும், இன்னும் கேட்டிராத பல பெயர்களும் ஸ்டால்களின் முன் ப்ரகாசம் காட்டின. இரண்டு வரிசை முடிப்பதற்குள், தலைநிமிர்த்தி மேலே அடிக்கடிப் பார்த்துக்கொண்டேன். மின்விசிறிகள் நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருந்தன. இருந்தும், இந்த வெக்கைக்கு முன்னால் ஓரியண்ட்டும், உஷாவும் என்ன பெரிசாக செய்துவிடமுடியும்? பில் புஸ்தகத்தோடு உட்கார்ந்து எங்கோ பார்த்துக்கொண்டிருந்தவரை இந்தப்பக்கம் திருப்பினேன். ‘இங்கே காப்பி, டீ ஏதாவது கெடைக்குமா?’ கேட்டேன். ’ஸ்டீல் ஜாடில தூக்கிக்கிட்டு இப்பத்தான் அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி போனாங்க. தேடிப்பாருங்க!’ என்றார். சரி, இவனுங்கள இப்ப எங்கபோய்த் தேடறது.. வரும்போது பாத்துக்குவோம் என்று கைக்குட்டையால முகத்தை ஒத்திக்கொண்டு புத்தகங்களைத் தேட ஆரம்பித்தேன். ஆங்கிலப் புத்தகங்களைப் பார்க்க என் பெண், அம்மாவுடன் வேறேதோ ஸ்டாலுக்குப் போய்விட்டிருந்தாள்.

விதவிதமான டிசைன் கவர்களில் கொழுகொழுவென்று சிலவும், ஃபிட்டாக மிடுக்காக மேலும் சிலதுகளும், சரியாகச் சாப்பாடில்லாமல் இளைத்துப்போன மாதிரி ஏகப்பட்ட புத்தகங்களும் – அடுக்கப்பட்டும், ஓரமாக இஷ்டத்துக்குச் சரிந்தும் விசித்திரக் காட்சி தந்தன. சில ஸ்டால்களில் எழுத்தாளர் வரிசைப்படி, சப்ஜெக்ட் வரிசைப்படி அடுக்கியிருந்தார்கள் புண்ணியவான்கள், ஒழுங்குமுறைபற்றிக் கொஞ்சம் சிந்திப்பவர்கள்போலும். பார்க்க, தேட எளிதாயிருந்தது. நாவல்கள், சிறுகதைகள் என எடுத்துக்கொண்டால் பிரதானமாக சுஜாதா, கல்கி, ஜெயகாந்தன் போன்றோரின் படைப்புகள் பளிச்சென்று வெவ்வேறு ஸ்டால்களில் காட்சிதந்தன. தற்போதைய எழுத்தாளர்களில் ஜெயமோகன் தாராளமாகக் கிடைத்தார். அவருடைய புத்தகங்களில் பல குண்டுகுண்டாக மற்றவைகளை நெருக்கித்தள்ளி நின்றிருந்தன. கூடவே, எஸ்.ராமகிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், ஆதவன், தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன், மௌனி, கி.ராஜநாராயணன், நா. பார்த்தசாரதி, சாண்டில்யன், ஜோ டி க்ரூஸ், பெருமாள் முருகன், லக்ஷ்மி, சிவசங்கரி, ராஜம் கிருஷ்ணன், அம்பை ஆகியோரின் படைப்புகளையும் சிரமமின்றிப் பார்க்கமுடிந்தது. கவிஞர்களில் பாரதி, பாரதிதாசன், கண்ணதாசனைத் தாண்டி, பிரமிள், ஆத்மாநாம், கலாப்ரியா, தேவதச்சன், ஞானக்கூத்தன், விக்ரமாதித்யன் போன்றவர்களும் காணக்கிடைத்தார்கள்.

நற்றிணைப்பதிப்பகத்தில் அதிக நேரம் செலவழித்தேன். அவர்களிடமிருந்து இலக்கியக் காலாண்டிதழ் வர ஆரம்பித்திருப்பதை அறிந்திருந்தேன். அந்தப் பத்திரிக்கையை அங்கே காண, புரட்ட நேர்ந்தது. தரமான வெள்ளைக்காகிதத்தில், அழகான ஓவியங்களுடன் பழைய தினமணிகதிர் போன்ற பெரிய சைஸ் இதழ். முதலிதழில் வண்ணதாசன், வண்ணநிலவன், காலபைரவன். யுவன் சந்திரசேகர், உமா மகேஸ்வரி, குட்டி ரேவதி, அழகிய பெரியவன் ஆகியோரின் படைப்புகள். உற்சாகமானேன். அடுத்த காலாண்டிதழும் பாலித்தீன் கவரில் தயாராக இருப்பதைக் காண்பித்தார் கடைக்காரர். பிரதி ரூ.100 என்றிருப்பினும் இங்கு ரூ.50-க்குக் கிடைக்கும் என்றார். கொடுங்கள் என இரண்டையும் வாங்கிக்கொண்டேன். பெங்களூர் போனவுடன் நிதானமாகப் படிக்கக் கொஞ்சம் கனமான மெட்டீரியல் தேவை. மேலும் சற்று நேரம் அங்கு பார்த்துவிட்டு வேறு ஸ்டால்களை நோக்கி நகர்ந்தேன்.

ராமகிருஷ்ண மடம் பதிப்பித்திருந்த உபநிஷதத் தொடர் சுவாரஸ்யமானது. சமஸ்க்ருத அசலிலிருந்து சுவாமி ஆசுதோஷானந்தாவின் அழகான தமிழாக்கம். தேடுபவனை ஒருமையை நோக்கி அழைக்கும் மாண்டூக்ய உபநிஷதத்தையும், ஆன்மாவை அறிமுகம் செய்ய முயற்சிக்கும் கேன உபநிஷதத்தையும் வாங்கினேன். நுனிப்புல் மேய்ந்துகொண்டு பொழுதுபோக்கித் திரியாமல் ஆழத்துக்குள் போய்விடுவதே நல்லது.

’பிரம்ம சூத்திரம்பத்தியும் சுஜாதா எழுதிருக்காராமே.. அது கிடைக்குமானு பாருங்கோ’ என்று சொல்லியிருந்தாள் மனைவி. பிரும்மத்தைத் தேடுவதற்குமுன் புத்தகத்தைத் தேடுவோம் என சுற்றிவந்ததில், விசா பதிப்பகத்தில் அது கிடைத்தது. மூன்றாவது பதிப்பு. வாங்கினேன். காலங்காலமாக ஆன்மிகர்கள் ஆராயும் பிரும்மம் எனும் இறுதி உண்மையைப்பற்றி சொல்ல எத்தனிக்கும் பாதராயணர் இயற்றிய (ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர் உரை எழுதியிருக்கும்) முக்கிய வேதநூல். இதற்கு,(சமஸ்க்ருத புலமை வாய்ந்த) தன் சகோதரர் ராஜகோபாலனுடன் இணைந்து சுஜாதா எழுதிய எளிய தமிழ் உரை இது. குமுதம் பக்தி இதழில் முதலில் தொடராகப் பிரசுரமானது என சுஜாதா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன் இறுதிக் காலகட்டங்களில், எழுத்துமூலமாக ஆன்மிகத்தை அணுக முயற்சித்த சுஜாதா நுழைந்த இரண்டு வாசற்கதவுகளில் பிரும்ம சூத்திரம் ஒன்று. இன்னொன்று நாலாயிர திவ்வியப்பிரபந்தம். மேற்கொண்டு இந்த வகைமையில் எழுதியிருக்கிறாரா எனத் தெரியவில்லை.

போதும். இந்தக் கணகணப்பில் இனியும் சுற்றமுடியாது. ராயல் கோர்ட் ஹோட்டலின் ஏசி சுகமே சரி எனப் புறப்பட எத்தனிக்கையில், நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் கண்ணில் தட்டுப்பட்டது ‘சரஸ்வதி காலம்’. என்ன, லக்ஷ்மி காலம், பார்வதி காலம் என்றெல்லாம்கூட இருக்குமோ நூல்கள்? எடுத்து ஒரு கண்ணோட்டம் விட்டதில் தெரிந்தது: 1950-களில் பிறந்து கொஞ்சகாலம் கோலோச்சிய தமிழின் சிறந்த இலக்கிய இதழ்களில் ஒன்றான சரஸ்வதி. அதில் வெளியான, பிற்பாடு ஜாம்பவன்களாக ஆகிவிட்ட எழுத்தாளர்களின் படைப்புகள், விமரிசனங்கள்பற்றிய கட்டுரைகள். வல்லிக்கண்ணன் எழுதியிருந்த அந்த கட்டுரைநூலையும் வாங்கிவந்தேன்.

வெளியே வருகையில் மணி ஆறாகியிருந்தது. ஆஃபீஸிலிருந்து புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள், மெல்ல வர ஆரம்பித்திருந்தனர். இந்தக்காலகட்டத்தில் இன்றிமையாயது எது – புத்தகங்களா இல்லை தொழில்நுட்பமா என்று ஒரு பட்டிமன்றம் பக்கத்துப் பந்தலில் தடதடத்துகொண்டிருந்தது. இடதுபுறமாகத் தூங்கி வழிந்துகொண்டிருந்த காஃபி ஸ்டாலை நெருங்கி, நாட்டு சர்க்கரையுடன் காஃபி கிடைக்குமா எனக்கேட்டோம். ’இருக்கு சார்!’ என்று சீட்டைக் கிழித்துக்கொடுத்தார் அந்தப் பெண். உட்கார்ந்து குடிக்கையில் காற்று சிலுசிலுவென்றது. நாங்கள் புறப்பட்டுவிட்டோம் என்பதால் இந்தச் சீண்டலோ என்னவோ!

*படம்: இணையம். நன்றி.

Advertisements

About Aekaanthan

writer, poet , freelancer
This entry was posted in அனுபவம், இலக்கியம், புனைவுகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

25 Responses to மதுரைக் காட்சியில் புத்தகங்கள்

 1. மதுரை புகழ் ஜிகிர் தண்டாவைக் குடும்பத்தினருக்கு அறி முகப்படுத்தவில்லயா

  Liked by 1 person

  • Aekaanthan says:

   @Balasubramaniam G.M : மதுரை-புகழ்களான ஜிகிர் தண்டா, முருகன் இட்லி மற்றும் கமகம மல்லிகை யாவற்றையும் ரசித்தோம். குறிப்பிடவில்லை!

   Like

 2. விஷால் மால் கோரிப்பாளையத்தில் இருக்கிறதா? புத்தகத் தேடல் சுவாரஸ்யம். ஐந்திணைப் பதிப்பகம் கண்ணில் பட்டிருந்தால் தி. ஜா நிறையாக கிடைத்திருப்பார்! டயல் ஃபார் புக்ஸ் கதிரேசன் சென்னையில் வீடு தேடி புத்தகங்கள் தருவார் – 10% தள்ளுபடியிலேயே…​

  திருமலை நாயக்கர் மஹால், திருவாதவூர், மாணிக்க வாசகர் பிறந்த ஊர், திருபுவனம், மடப்புரம், திருப்பங்குன்றம் போன்றவை மதுரையில் பார்க்கத்தக்க இடங்கள்.

  அங்கிருந்து பிள்ளையார்பட்டி கூட பக்கம்தான்!

  Liked by 1 person

  • Aekaanthan says:

   @ ஸ்ரீராம்:
   விஷால் டி மால் சொக்கிக்குளத்தில் (தமுக்கம் மைதானத்தருகில்) இருக்கிறது. இன்ஃபோ, ஓலோக்காரர் கைங்கர்யம்!

   கதிரேசன் பணிபற்றி அறிந்து சந்தோஷம். சென்னையில் வசிக்கவேண்டியிருக்கிறதே இதையெல்லாம் அனுபவிக்க.

   மதுரையில் அதிகம் சுற்றவில்லை. எனக்கே ஊர் தெரியாது. அழகர் கோவிலுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் சென்றிருந்தோம். பிள்ளையார்பட்டி 2015-ல் போயிருக்கிறேன், காரைக்குடியிலிருந்து.

   Like

 3. எங்க ஊருக்கு வர பிடிக்கவில்லையா…?

  Liked by 1 person

  • Aekaanthan says:

   @திண்டுக்கல் தனபாலன் :

   தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் நிதானமாக காலையில் திண்டுக்கல் ஜங்ஷன் வந்தபோது வண்டி திண்டுக்கல்லில் நிற்கிறது எனத் தெரிந்தவுடன் உங்கள் ஞாபகம்தான் வந்தது. என்னைப்பொறுத்தவரை திண்டுக்கல் என்றால் தனபாலன் தான்!

   வடநாட்டில் அலிகர் போல, தென்னாட்டில் திண்டுக்கல் பூட்டுகளுக்குப் புகழ்பெற்றது என என் பெண்ணிடம் கூறியபோது அவள் ஆச்சரியப்பட்டாள். அவளுக்கு திருச்சி, சென்னை, வேலூர் (வி.ஐ.டி.யில் படித்ததால்) -ஐத் தவிர தமிழ்நாட்டில் ஒன்றும் தெரியாது. குற்றம் என்னுடையது. நான் தான் கூட்டிச்சென்றிருக்கவேண்டும் பல இடங்களுக்கு. எங்கே டயமிருந்தது? வெளிநாட்டு வேலை. உலகம் சுற்றியபின் நம்மூர் சுற்ற முனைபவன் நான். நம்ப ஜாதகமே கொஞ்சம் விசித்திரமானது!

   Like

 4. சுஜாதா, கல்கி, ஜெயகாந்தன் போன்றோரின் படைப்புகள் பளிச்சென்று வெவ்வேறு ஸ்டால்களில் காட்சிதந்தன. தற்போதைய எழுத்தாளர்களில் ஜெயமோகன் தாராளமாகக் கிடைத்தார். அவருடைய புத்தகங்களில் பல குண்டுகுண்டாக மற்றவைகளை நெருக்கித்தள்ளி நின்றிருந்தன. கூடவே, எஸ்.ராமகிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், ஆதவன், தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன், மௌனி, கி.ராஜநாராயணன், நா. பார்த்தசாரதி, சாண்டில்யன், ஜோ டி க்ரூஸ், பெருமாள் முருகன், லக்ஷ்மி, சிவசங்கரி, ராஜம் கிருஷ்ணன், அம்பை ஆகியோரின் படைப்புகளையும் சிரமமின்றிப் பார்க்கமுடிந்தது. //

  ஆமாம் ஏகாந்தன் அண்ணா இங்கும்புத்தக விழாவில் இவர்களைப் பளிச்சென்று பார்க்க முடியும் தேட வேண்டிய அவசியமே இருக்காது.

  கீதா

  Liked by 1 person

  • Aekaanthan says:

   @ கீதா :

   வாங்கோ.. ரொம்ப நாளுக்கப்புறம் தரிசனம்!

   புத்தகக்கடைகளிலும், காட்சிகளிலும் சுற்றிக்கொண்டு, விதவிதமான எழுத்துக்களைப் புரட்டிக்கொண்டிருந்தால் நேரம் போவது தெரியாது எனக்கு. சில எழுத்தாளர்களின் பெயர்களைப் பார்க்கும்போது, இவர்களுக்கு எத்தகைய பின்புலமோ, குடும்பத்தில் என்னென்ன கஷ்டங்களோ – எல்லாவற்றையும் தாண்டித்தானே கம்ப்யூட்டர் இல்லாத காலத்தில் இங்க் பேனாவை உதறிக்கொண்டு, உட்கார்ந்து எழுதியிருப்பார்கள் என்று தோன்றி மலைக்கவைக்கும்.

   Like

 5. அண்ணா, ஆம்மா சுஜாதா அவர் அண்ணாவுடன் சேர்ந்து பிரம்ம சூத்திரம் புத்தகம் அதில் அறிவியலும் கலந்து கட்டி எழுதியிருப்பார் ஃபிசிக்ஸ்…அணுவிலும் அணுவாய் என்பதன் விளக்கம் கூட விளக்கப்பட்டிருந்த நினைவு. நெட்டில் எப்போதோ கொஞ்சம் அரைகுறையாக வாசித்த நினைவு. எனக்கு இதெல்லாம் ஒரு முறை வாசித்தால் மண்டையில் ஏறுமா என்ன? பல முறை வாசிக்கணும்….சுஜாதா ….பிரம்ம சூத்திரம் என்றதை வாசித்ததும் கருத்து எழுதிட்டேன் அப்புறம் வாசித்தால் நீங்களே சொல்லிட்டீங்க…நான் சொல்ல வந்ததை….//தன் இறுதிக் காலகட்டங்களில், எழுத்துமூலமாக ஆன்மிகத்தை அணுக முயற்சித்த சுஜாதா நுழைந்த இரண்டு வாசற்கதவுகளில் பிரும்ம சூத்திரம் ஒன்று. இன்னொன்று நாலாயிர திவ்வியப்பிரபந்தம்.//

  ஆமாம்….ஆழ்வார்களைப் பற்றி அரையர் சேவை பற்றியும் தான் சென்று அதைப் பார்த்ததும் கூடக் அவர் தன் எழுத்துகளில் குறிப்பிட்டதாக நினைவு கற்றதும் பெற்றாதும்???!!

  கீதா

  Liked by 1 person

  • Aekaanthan says:

   @ கீதா:
   ஆமாம். கல்கியில் சுஜாதா எழுத ஆரம்பித்திருந்த தொடர்: வாரம் ஒரு பாசுரம். அதை இரண்டாவது வருடம் தொடர ஆரம்பிக்கையில் மறைந்துவிட்டார் என நினைவு. அவருடைய ‘ஆழ்வார்கள்- ஒரு எளிய அறிமுகம்’ சிறுநூல். ஆனால் திவ்யப்பிரபந்தத்தை ஆரம்பவாசகனுக்கும், என்னை மாதிரி அசடுகளுக்கும் சுவாரஸ்யமாக அறிமுகம் செய்திருக்கிறார்.

   Like

 6. உங்கள் புத்தகத் தேடல் மற்றும் அனுபவங்களைச் சுவைபடச் சொல்லியிருக்கின்றீர்கள். கடைசி வரியையும் இடையில் இருந்த சிறிதாக இழையும் கேலியுடன் கூடிய நகைச்சுவையையும் ரசித்தேன்.

  துளசிதரன்

  Liked by 1 person

  • Aekaanthan says:

   @ துளசிதரன்:

   வாருங்கள். கேரள வெள்ளம் வேதனையின் கூர்முனையில் நாட்டையே சில வாரங்கள் வைத்திருந்தது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கை திரும்ப ஆரம்பித்திருக்கும். இருந்தும் இத்தகைய பேரிடர்களின்போது, தனிமனிதனின் இழப்பும், சோகமும் விவரிக்கமுடியாதவை.

   வெயில் இத்தனைக் கடுமையாக இல்லாதிருந்தால், மேலும் புத்தகங்களைக் கிண்டியிருப்பேன். நேரமும் குறைவு.

   Like

 7. நானே மதுரைப் புத்தகத் திருவிழாவிற்குச் சென்று வந்த உணர்வு. தேர்ந்தெடுத்த புத்தகங்களை நானும் குறித்துக் கொண்டேன். மதுரை பற்றிப் பயனுள்ள தகவல்.

  Liked by 1 person

 8. எப்போப் போனீங்க மதுரைக்கு? மதுரையில் பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் ஸ்ரீராம், யானைமலை யோக நரசிம்மரையும் திருமோகூர் சக்கரத்தாழ்வாரையும் விட்டு விட்டார். 🙂 பரங்குன்றமே ஒரு பக்கம் தான் பார்க்க முடியும். இன்னொரு பக்கமும் இருக்கு. மலை மேலேயும் இருக்கு பார்க்க. ஓரிரு நாட்கள் எல்லாம் போதாது. யானைமலையில் சமணர்கள் படுக்கைகள் பல இருக்கின்றன. தீர்த்தங்கரர் சிற்பங்களும் உள்ளன. அழகர் கோயிலில் மலை மேல் நூபுரகங்கை வரை சென்றீர்களா? ஔவைப் பாட்டியின் நாவல்மரம்னு ஒண்ணைக் காட்டுவாங்க திருமாலிருஞ்சோலை முருகன் கோயிலில். அது புராதனமரமானு தெரியலை! 🙂

  Liked by 1 person

 9. முன்னெல்லாம் மதுரையில் நியூ செஞ்சுரி புக் கவுஸ் இல்லைனா மீனாக்ஷி பதிப்பகத்தார் புத்தகத் திருவிழா நடத்துவார்கள். அந்தப் பக்கம் போனால் ஆர்வமுடனும், ஏக்கத்துடனும் பார்த்ததோடு சரி. வாங்க முடியாது! இப்போ வாங்க முடியும்னாலும் எனக்கப்புறமாப் பார்த்துக்க யாரும் இல்லை என்பதால் வாங்கவே யோசனை! நண்பர்களிடமிருந்து பரிசாக வருபவைதான் புதிய புத்தகங்கள். மற்றபடி சமீபத்திய புத்தகங்களே இல்லை! இங்கேயும் புத்தகத் திருவிழா இரண்டு இடங்களில் நடந்தது. 😦

  Liked by 1 person

  • அப்போது மதுரையில் நான் அடிக்கடி ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது சர்வோதய இலக்கிய பண்ணை!

   Liked by 1 person

   • Aekaanthan says:

    @ ஸ்ரீராம்: சர்வோதய இலக்கியப் பண்ணையா? காந்தீயப் புத்தகங்கள் மட்டும்தான் விற்பனைக்கு வந்திருக்குமோ!

    Like

  • Aekaanthan says:

   @Geetha Sambasivam :

   மதுரைக்கு பெரிய சுற்றுப்பயணமெல்லாம் இல்லை இது. சும்மா ஒரு ரவுண்டு வரவே 3,4 நாள் பிடிக்கும். இந்த வெயிலில் அதெல்லாம் சாத்தியமில்லை. திருமாலிருஞ்சோலைக்குப்போகும் போதே மாலை 6 மணி. பெருமாள் சேவித்துத் திரும்புகையில் ஒரே இருட்டு. பக்கத்துக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துவிட்டு அடுத்த பஸ் வந்தவுடன் பிடித்து, ஹோட்டலுக்குத் திரும்பிவிட்டோம். இன்னொருமுறை போக நேர்கையில் கொஞ்சம் விஸ்தாரமாகப் பார்க்கலாம்.

   நானும் கொஞ்சமாக புஸ்தகம் வாங்குபவன். என்னுடைய தேர்வு செய்த பல ஆங்கில, தமிழ் புத்தகங்கள், குறிப்பாக 80-களில் வாங்கியவை -சென்ற இடம் தெரியவில்லை-நாடு நாடாக பயணித்ததில் எங்கெங்கோ சென்றுவிட்டன! வீட்டில் கிடக்கும் கார்ட்டன்களில் ஏதாவது மிஞ்சியிருக்கிறதா எனப்பார்க்க இன்னும் நேரம் வரவில்லை. எனக்கப்புறமும் இவற்றை சீந்துவார் யாருமில்லை!

   Like

   • //எனக்கப்புறமும் இவற்றை சீந்துவார் யாருமில்லை!//

    எல்லோர் வீட்டிலும் இது ஒரு பிரச்னைதான்.

    Like

   • //சர்வோதய இலக்கியப் பண்ணையா? காந்தீயப் புத்தகங்கள் மட்டும்தான் விற்பனைக்கு வந்திருக்குமோ!//

    இல்லை… பெரும்பாலும் எல்லாப் புத்தகங்களும் கிடைக்கும் வாய்ப்பு இருந்தது 80 களின் கடைசியில்…

    Liked by 1 person

 10. Aekaanthan says:

  @ஸ்ரீராம்:
  //எல்லோர் வீட்டிலும் இது ஒரு பிரச்னைதான்.//

  என் மற்றும் என் அண்ணா, தம்பிகள், தங்கை குழந்தைகள் யாருக்கும் தமிழ் படிக்கத் தெரியாது. பேசுவதோடு சரி. என்ன ஒரு சோகம். இருக்கிற கொஞ்சம் புத்தகங்களை யாரையாவது தேடிப்பிடித்துக் கொடுக்கவேண்டும். அல்லது ஏதாவது நூலகங்களில் சேர்க்கலாம்.

  இந்த சர்வோதய இலக்கியப்பண்ணை இப்போதிருக்கிறதா, வேறெங்கும் புத்தகக்காட்சி நடத்துகிறதா?

  Like

  • //இந்த சர்வோதய இலக்கியப்பண்ணை இப்போதிருக்கிறதா, வேறெங்கும் புத்தகக்காட்சி நடத்துகிறதா?//

   இப்போதும் இருக்கும்தான். ஆனால் இப்போதுதான் புத்தகக் கண்காட்சி வருடம் முழுவதும் சுழற்சி முறையில் ஒவ்வொரு ஊராக நடத்தி வருகிறார்களே…

   டயல் ஃபார் புக்ஸ் நம்பர் குறித்து வைத்திருந்தீர்கள் என்றால் உங்கள் விருப்ப புத்தகங்களை கூரியரில் அனுப்புவார்கள்.

   ஃபேஸ்புக்கில் இந்த இரண்டு பக்கங்களை பாருங்கள். குறிப்பாக கதிரேசன் சேகர். வாட்ஸாப்பிலேயே புத்தகங்கள் ஆர்டர் செய்யலாம்.

   https://www.facebook.com/kathiresan.sekar?fb_dtsg_ag=AdymklNy5GBYRFm0kRqJIPDOEW53P0kJ4KjDkqd-W51M-A%3AAdwdADaDOdFCm2bb2hKIetwN8PjYTck5unGIxw-zeC7mAA

   https://www.facebook.com/groups/477376995713157/?ref=group_browse_new

   Liked by 1 person

   • Aekaanthan says:

    @Sriram:நன்றி. கதிரேசனின் லிங்க் பார்க்க முயற்சிக்கிறேன். ஏதாவது நல்ல புத்தகம் வாங்கலாம்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s