தோல்விக்கு அடுத்த நாள் . .

பயந்தபடியே, தோல்விப் பிசாசு ஓடிவந்து இந்தியாவை இறுக்கமாகக் கட்டிக்கொண்டுவிட்டது நேற்று எட்ஜ்பாஸ்டனில். இருந்தும் சிலிர்த்துத் தலைநிமிர்த்தி, கம்பீரமாக முகத்தை வைத்துக்கொள்ள முயற்சி செய்து, மீடியா மூஞ்சூறுகளுக்குப் படபடவெனப் பொறிந்து தள்ளிவிட்டு, டின்னர் என எதையோ விழுங்கிவிட்டுப் போய்ப்படுத்திருப்பார்கள் கோஹ்லி & கோ.

இதோ வந்துவிட்டது அடுத்த நாள் காலை. நேத்திக்கி என்னதான் நடந்துச்சு? என்னவோ ஒரு எழவு.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை. அவ்வளவுதான். கொண்டுவா அந்த ப்ளாக் காஃபியை. ப்ரவுன்-ப்ரெட் சாண்ட்விச், டபுள், ட்ரிபிள்-எக் ஆம்லெட், சிக்கன் நக்கிட்ஸ் (chicken nuggets).. கொத்திக்கொத்தி உள்ளே தள்ளு. இந்தமாதிரிக் கொத்திக் கிழித்து சாப்பிட்டிருக்கணும் இந்த இங்கிலீஷ்காரனுங்களை.. ம்ஹூம். தப்பிச்சிட்டானுங்க. இப்போ ஒன்னும் குடிமுழுகிப்போய்விடவில்லை. இன்னும் நாலு இருக்கிறது. பாத்துடுவோம் ஒரு கை. இவனுங்களுக்கு நம்ம கையிலதான் சாவு. அதுல சந்தேகமில்ல..

இப்படி இருக்குமோ இன்றைய இந்திய அணியின் மூடு? நல்ல வேளையாக, துவண்டுபோய் மூலையில் உட்கார்ந்துவிடும் அணியல்ல இது. கேப்டனும் ஒரு சூப்பர்-எனர்ஜி கில்லி. காலையிலேயே அணியை நெட் ப்ராக்டீஸுக்கு இழுத்துப்போயிருப்பார். கொஞ்சம் ரிஃப்ளெக்ஷன், ரீ-க்ரூப்பிங் தேவைப்படுகிறது. இருக்கிறது இன்னும் மூன்று, நான்கு நாள் இடைவெளி. வந்துவிடலாம் மீண்டு. அடுத்த டெஸ்ட் லண்டனின் லார்ட்ஸில் (Lord’s, London). கவாஸ்கர், வெங்க்சர்க்கார், விஷ்வனாத், அஜருத்தீன், கங்குலி, திராவிட், ரஹானே என இந்தியர்கள் ஏற்கனவே நொறுக்கியிருக்கும் மைதானம்தான். பார்ப்போம் இந்தமுறை என்ன காத்திருக்கிறதென்று. கோஹ்லியைத் தாண்டியும் யாராவது ஒரு இந்திய பேட்ஸ்மன் அடித்து நொறுக்காமலா லார்ட்ஸ் டெஸ்ட் முடிவடையும்?

தோல்வி முடிவிலும் சில வலுவான ப்ளஸ்கள் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கின்றன. இங்கிலாந்துக்கு இடுப்புவலி கொடுத்த கோஹ்லியின் அபார ஃபார்ம். அஷ்வினின் புதுப்பந்துச் சுழல் தாக்குதல், 7 விக்கெட் அதிரடி. ஏனோதானோ எனப் போட்டுக் குழப்பும் அல்லது ரன்களை எதிரணிக்கு தாரைவார்க்கும் இஷாந்த் ஷர்மா, இந்தமுறை காட்டிய முனைப்பான பந்துவீச்சு. இரண்டாவது இன்னிங்ஸில் அவர் சாய்த்த 5 விக்கெட்கள். மாறித்தானிருக்கிறார் மனிதர். இங்கிலாந்து கௌண்ட்டியான ஸஸ்ஸெக்ஸில் (Sussex) விளையாடிய அனுபவம் பந்துவீச்சை மெருகேற்றியிருக்கிறது.(பௌலிங் கோச் பாரத் அருணுக்கும் கொஞ்சம் பங்குண்டு). புவனேஷ்வரும், பும்ராவும் (Jasprit Bumrah) காயத்தில் தோய்ந்துகிடக்கிறார்கள். வேகப்பந்துவீச்சில், அடுத்த மேட்ச்சிலும் இஷாந்த், உமேஷ், ஷமிதான் இந்தியத் தாக்குதலை வழிநடத்தவேண்டியிருக்கும்.

புஜாராவை பெஞ்சில் உட்காரவைத்தது தவறு என்று பெரும்பான்மையோர் முணுமுணுக்கிறார்கள். நானும்தான். (ச்)செத்தேஷ்வர் புஜாரா (Cheteshwar Pujara) இப்போது நல்லதொரு டச்சில் இல்லை என்றாலும், எதிரணியின் பௌலர்களைக் கட்டைபோட்டு அசரவைக்கும் திறனுள்ள டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட். அடுத்த மேட்ச்சுக்குக் கூப்பிடுவார்களா? அழைக்கப்பட்டால், ஷிகர் தவன், அல்லது கே.எல்.ராஹுல்- இருவரில் ஒருவருக்கு உட்கார பெஞ்ச் கிடைக்கும். எப்போதும் நின்று விளையாடும் முரளி விஜய்யும், ரஹானேயும் கூடத்தான் முதல் போட்டியில் சரியாக ஆடவில்லை? இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ் – யாராவது ஒருவர் உள்ளே வந்தால் பௌலிங் டெபார்ட்மெண்ட் வலுப்பெறும் எனத் தோன்றுகிறது. இவர்களை இஷ்டத்துக்கும் தூக்கி அடிக்க இங்கிலீஷ்காரர்களால் முடியாது. ஆனால் பதிலாக, ஹர்தீக் பாண்ட்யாவை எடுக்கவேண்டிவருமே? ம்ஹூம்..அது சரிப்படாது. யாரைப் போடுவது, யாரைத் தூக்குவது? இந்தியக் கேப்டனாய் இருப்பதைவிட பிஹாரின் முதல்வராக இருந்துவிடலாம் எனத் தோன்ற ஆரம்பித்துவிட்டதோ கோஹ்லிக்கு ?

*

10 thoughts on “தோல்விக்கு அடுத்த நாள் . .

  1. ஏகாந்தன் சார்… பேட்டிங் தெரியாத, 10 ரன் கூட எடுக்க முடியாத ரஹானே, தவான், ராகுல் போன்ற பலருக்கு சம்பளம் வேஸ்ட். ஒருவர் மட்டுமே அணியை வெற்றிக்கு இழுத்துச் செல்லமுடியுமா? அப்புறம் எதுக்கு 7 பேட்ஸ்மன்கள்?

    Liked by 1 person

    1. @நெல்லைத்தமிழன் :

      நியாயமான கேள்விதான். எதிரணியின் ஸாம் கர்ரன் அடித்தாடியதைப் பார்த்தபின், தவன், ராஹுல், ரஹானே க்ளிக்காகாது போனது சோர்வைத் தருகிறது. தவனை விட புஜாரா டெஸ்ட் அரங்கில் highly rated. அனேகமாக அடுத்த போட்டியில் ஆடக்கூடும். லார்ட்ஸ் இந்தியாவுக்கு ராசியாக அமையட்டும். வேறென்ன சொல்வது?

      Like

      1. ஏகாந்தன் சார்…. ஒரு 30 ரன் அடிக்கத் தெம்பில்லாத கும்பலை வைத்துக்கொண்டு நாம என்ன செய்யறது? ரஹானே வைஸ் கேப்டன் பதவியை உதறித்தள்ளவேண்டாமா? தண்டம். டிரா ஆகிற மேட்சில் 100 அடித்தாலும் மனம் ஆறாது. இந்திய டீமில் உள்ள தண்ட கும்பல் டி 20 ஆடத்தான் லாயக்கு. என்னவோ நீங்கள் உங்களுக்கு ஆறுதல் சொல்லிக்கிறீங்க என்று நினைக்கிறேன்.

        Liked by 1 person

      2. @நெல்லைத்தமிழன் :

        வைஸ் கேப்டன் பதவியை உதறித் தள்ளுவதா! ரஹானே என்ன லால் பகதூர் சாஸ்திரியா?
        இன்னும் டி-20 மைண்ட்செட்டிலிருந்து நமது டாப்-ஆர்டர் விடுபடவில்லையோ என்னவோ! (விஜய்யைத் தவிர- ஐபிஎல்-இல் செஞ்சுரி அடித்த அவரை நமது செலக்டர்கள் டி-20-ல், ஒன் -டே மேட்ச்சுகளில் போடுவதில்லை)

        Like

  2. இந்த இந்தியன் டீமில்பௌலர்கள் எதிர்பார்த்ததைவிட நன்கு ஆடினார்கள் ஆனால் பாட்ஸ்மென் கொஹ்லியைத்தவிர சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை கன்சிஸ்டென்ஸீ இல்லையே விழுந்தவர் எழுவார்கள் என்று நம்புவோம்

    Liked by 1 person

    1. @Balasubramaniam G.M :

      தொடரின் ஆரம்பத்தில் பேட்டிங் நமது வலிமை எனக் கணிக்கப்பட்டது. ஆனால் பௌலர்கள் பிய்த்து உதறியும், டாப் ஆர்டர் பேட்ஸ்மன்கள் சொதப்பிவிட்டார்கள்.
      லார்ட்ஸிலாவது கதை நம் பக்கம் திரும்பட்டும்.

      Like

  3. ராகுல் டிராவிட் இரண்டுக்கு ஒன்று என்று ஜெயிக்கும் என்று ஆரூடம் சொல்லி இருக்கிறார். பார்ப்போம்… ஆனால் இந்த மேட்சே ஜெயிக்க வேண்டியது… கரன் றன் எடுக்காமலிருந்திருந்தால்… அவரை தவான் சனியன் முதலிலேயே கேட்ச் கோட்டை விடாமல் பிடித்திருந்தால்…. ரஷீத் கேட்சையும் தவான் சனியன் விடாமல் இருந்திருந்தால்… இஷாந்த் மறுபடியும் ரெவியூ கேட்டு முதல் இன்னிங்சில் தொடேன்ற்து கொஞ்சம் ஆடி இருந்தால்… கார்த்திக் நேற்று வந்த உடனேயே தூக்கி அடிக்க முற்படாமல் பொறுமை காட்டி இருந்தால்… தால்…. தால்… தால்….

    Liked by 1 person

  4. என் மகன் )ஃபேஸ்புக்கில்) சொல்லி இருப்பது போல ஒரு டெஸ்ட் மேட்சை ஒரு பேட்ஸ்மேன் ஜெயிக்க முடியாது. ஆனால் அதற்கும் வாய்ப்பு இருந்தது. அ கம்ப்ளீட் கோஹ்லி ஷோ.

    Liked by 1 person

  5. இஷாந்த் ஷர்மா இங்கிலாந்தில் நன்றாகவே பந்து வீசுவார். ராகுல் இருக்கலாம். தவான் சனியன் வேண்டாம். ஆனால் கோஹ்லிதான் அவருக்கு சப்போர்ட். குல்தீப் உள்ளே வரலாம். பாண்டியா ரெஸ்ட் எடுக்கட்டுமே….

    Liked by 1 person

  6. @ஸ்ரீராம் :
    For fans, Cricket may be a game of ‘ifs’ and ‘buts’. Its also a game of golden uncertainty! எதுவேண்டுமானாலும் நடந்துவிடும் நொடியில். என்ன செய்வது? தவன் விட்ட கேட்ச் மடத்தனமானது. இளிப்பு வேற, எரிச்சலைக் கொட்டிக்கொண்டது!

    கோஹ்லி இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்தது நிறைவானது. அவர் அவுட்டானபின், பாண்ட்யாவைவிட்டு ரஷீத் போன்றோரை அட்டாக் செய்யச்சொல்லியிருக்கலாம். ரஷீதை ரெண்டு சிக்ஸர் விடுவார் பாண்ட்யா என்று எதிர்பார்த்தேன். ஒரு சிக்ஸரும் இல்லை..

    புஜாரா வந்தால், குல்தீப் வந்தால்.. யார்யார் போவார் என்பது கேள்விக்குறி. ரவி சாஸ்திரி வேறு கோஹ்லியின் மண்டையைக் குழப்பாமல் இருக்கவேண்டும்.

    Like

Leave a comment