உடலோட்டம்


பத்து பதினைந்து தடவை தினம்
பார்க்கைச் சுற்றிவந்தால்
தொப்பை கரையும் எடை குறையும்
துளிர்க்கும் ஆரோக்கியம்
துணையாக ஓடிவரும் என
உடற்தகுதிப் பயிற்சியாளனோ
உன் பக்கத்துவீட்டுக்காரனோ
பகர்ந்திருக்கக்கூடும்
காரணம் இதுதானா, இல்லை –
முன்னால் ஓடிக்கொண்டிருக்கும் பெண்ணின்
முதுகோடு சேர்ந்த விஷயங்களில்
முனைப்புக் காட்டுகிறாயா – தெரியாது
பச்சையாய்ப் பரந்து கிடக்கும் பார்க்கில்
பாந்தமாய்க் கால்பதித்து வட்டப்பாதையில்
கச்சிதமாய் உடம்பிருக்கும் அவளோ
காற்றைப்போல மிதந்துசெல்கிறாள்
கட்டையைப்போல் அவள் பின்னே நீ
புஸ் புஸ் என மூச்சுவிட்டு
உருண்டு பிரண்டு செல்வது பார்ப்பதற்கு
நன்றாக இல்லை என நான் நவின்றால்
நன்றாக இருக்காதுதான் கேட்பதற்கு உனக்கு
சுற்று.. சுற்று..
முடிந்தவரை சுற்றிச் சுற்றி வா
வெற்றுத்தனமான வாழ்க்கையில்
வேறென்ன பெரிதாக நடந்துவிடப்போகிறது ?

*

17 thoughts on “உடலோட்டம்

  1. முதுகு பார்க்கும் அனுபவத்துக்கு
    மூச்சு முட்ட நடக்க வேண்டுமா?
    கடைத்தெருவில்
    காலாற நடந்தால் போதுமே…
    கண்ணில் படும்
    கால் டஜன் முதுகு!

    Liked by 1 person

    1. @Sriram: அடடா! வியாழக்கிழமை எபி-யில் வந்திருக்கவேண்டிய கவிதை இங்கு வந்துவிட்டதே..!

      Like

  2. முதுகு பார்க்கும் ஆவலை எடுப்பாய் நிற்கும் முன்பார்க்க செலவிட்டால் ரசிக்கும்

    Liked by 1 person

    1. @Balasubramaniam G.M :
      நீங்கள் சொல்வது நன்றாக இருக்கிறது! முன்னழகை ரசித்துக்கொண்டிருந்தால் பின்னோக்கி ஓடவேண்டியிருக்குமே.. இனி, அதுவும் வந்தாலும் வந்துவிடும், ஃபிட்னெஸ் எனும் பெயரில்!

      Like

  3. நடைபயிற்சியில் பேசாமல் நடக்க சொல்வார்கள்.இனி இப்படி மனதுகுள்ளும் நினைக்க கூடாது என்று சொல்ல வேண்டும் போல!

    Liked by 1 person

    1. @கோமதி அரசு :

      பார்க்கில் ஓடுகையில், உடம்புக்குத்தான் ஃபிட்னெஸ் எனப் பார்க்கிறார்கள். மனது அதன் இஷ்டத்துக்கு ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. நிற்காத வண்டி அது!

      Like

  4. //இனி இப்படி மனதுகுள்ளும் நினைக்க கூடாது என்று சொல்ல வேண்டும் போல!//

    ஹா… ஹா… ஹா… ! கோமதி அக்கா!

    எந்த நினைப்பும் இல்லாமல் இருக்க முடியுமா அக்கா? அதுதான் ‘சிவனே என்று இரேன்’ என்பார்கள். அப்போது கூட சிவனை நினைக்கவேண்டுமே!

    சும்மா இருக்கிறேன் என்று சொன்ன ஒரு முனிவருடன் அரசன் போட்டி போட்டது போல ஒரு புனைவு உண்டு!

    Liked by 1 person

    1. @ ஸ்ரீராம்/ கோமதி அரசு:

      செய்வது சக்தி. சும்மா இருப்பது சிவம் -இது வாரியார் !

      மனமே முருகனின் மயில்வாகனம் .. என்று அழகாகப் பாடிப் பார்க்கலாம்தான். ஆனால் அது எந்த மனிதனுக்கும் வாகனமானதாகத் தெரியவில்லை! அவுட்டாகாத ஆட்டம் அதனுடையது ..

      Like

  5. பின்னோக்கிய நடையும் வந்து விட்டது. அதற்கு வயதானவர்கள் தகுந்த துணையை அழைத்து செல்லுங்கள் என்று சொல்கிறார்கள் . பழகிய இடம், நடைபாதை பாதுகாப்பான இடம் இருப்பது அவசியம் என்று சொல்லப்படுகிறது. 20 நிமிடம் வாரத்தில் நாங்கு நாள் நடந்தால் போதுமாம். நான் வீட்டில் நடக்கிறேன் அப்படி.

    Liked by 1 person

  6. //எந்த நினைப்பும் இல்லாமல் இருக்க முடியுமா அக்கா? அதுதான் ‘சிவனே என்று இரேன்’ என்பார்கள். அப்போது கூட சிவனை நினைக்கவேண்டுமே!

    சும்மா இருக்கிறேன் என்று சொன்ன ஒரு முனிவருடன் அரசன் போட்டி போட்டது போல ஒரு புனைவு உண்டு!//

    சும்மா இருப்பது கஷ்டம், சும்மாய் இருக்கிறவனுக்கு இரண்டு பட்டை சாதம் அதிகம் கொடு என்றாராம் அரசனே!

    எந்த நினைப்பும் இல்லாமல் இருக்க முடியாதுதான் ஸ்ரீராம்.
    .ஆனால் சமீப காலமாய் வரும் மருத்துவ கட்டுரைகள். மலரை கையில் வைத்துக் கொண்டு மலர் தியானம் செய்யுங்கள். உணவை எடுத்துக் கோன்டு மனதை அலைய விடாமல் உணவில் தியானம் செய்யுங்கள். எந்த செயல் செய்தாலும் முழுமையாக கவனம் சிதறாமல் செய்தல் நல்லது என்கிறதே!

    முன்பு பெரியவர்கள் சொன்னதுதான்.
    சாப்பிடும் போது அதில் மட்டும் கவனம், (படிக்கும் போது அதில் மட்டும் கவனம்,பள்ளியில் வாத்தியார்) இப்படி எந்த செயல் செய்தாலும் மனதை அலைய விடாமல் ஸெய்தால் நன்மை கிடைக்கும் என்றார்களே!

    Liked by 1 person

    1. @ கோமதி அரசு:
      பின்னோக்கிய நடை வந்துவிட்டது; நீங்களும் செய்ய ஆரம்பித்துவிட்டீர்கள்! ஆஹா.. நல்லபலனை உடலுக்கு அது நல்குமாக.

      நமது இந்துமதம் பலவேறாக அப்போதிலிருந்தே சொல்லி வந்திருக்கிறது: செய்வன திருந்தச் செய், நிகழ்வில் எப்போதும் இரு, கடமையைச் செய்-பலன்பற்றி நீ சிந்திக்கவேண்டியதில்லை, எந்த செயலையும் எனக்கு அர்ப்பணம் செய்துவிடு, பிறகு நீ விளைவுகளைப்பற்றி அஞ்சவேண்டியதில்லை (கிருஷ்ணர்)) -இப்படி வாழ்வை மேம்படுத்தவேண்டி, எண்ணற்ற போதனைகள், அறிவுறுத்தல்களை, நமது மதம் சாஸ்திரங்கள் வாயிலாகச் சொல்லிவந்திருக்கிறது. இன்றைய விஞ்ஞானிகள், துறைசார் நிபுணர்கள் ஏதோ தாங்கள்தாம் முதன்முதலாக இவற்றைக் கண்டுகொண்டதுபோல், உலகத்திற்குச் சொல்வதாக எண்ணி ஏதேதோ சொல்கிறார்கள். அது ஆங்கிலத்தில் மொழிமறு உருவாக்கம் செய்யப்பட்டு, வண்ணம்தீட்டியும் வருவதால நம்மவர்களும் இது நம்முடைய சரக்குத்தான் எனத் தெரியாமலேயே, ஏதோ புதிதென எண்ணி ஏற்றுக்கொள்கிறார்கள் அல்லது சிலாகித்துப்பேசுகிறார்கள். எப்படியோ நல்லது நடந்தால் சரி..

      Like

Leave a comment