FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா வென்றுவிடுமா?

மத்திய ஐரோப்பாவின் ஏட்ரியாட்டிக் கடலின் ஓரத்தில் சுமார் 45 லட்சம் மக்களைக்கொண்ட நாடு. 1991-ல் முன்பிருந்த யுகோஸ்லேவியாவிலிருந்து, கடும்போரில் ரத்தம் மிகச்சிந்தி விடுதலைபெற்றபின், குறிப்பாக விளையாட்டில் வீறுநடை போடும் குட்டி நாடு. இருந்தும், முன்னாள் சேம்பியனான ஜெர்மனி, மற்றும் உலக கால்பந்து ஜாம்பவான்களான பிரேஸில், அர்ஜெண்டினா, ஸ்பெயின், ஃப்ரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து போன்றவற்றிற்கிடையே க்ரோஷியாவை யாரும் ஒரு வலுவான கால்பந்து தேசமாக, ரஷ்யாவில் நடைபெறும் உலகக்கோப்பையின் ஆரம்பத்தில் நினைக்கவேயில்லை. மிஞ்சி மிஞ்சிப்போனால் இரண்டாவது ரவுண்டு வரை வரலாம் என்பதே பலரின் யூகமாக இருந்திருக்கும். (க்ரோஷியா, சுதந்திரம் அடைந்த எட்டாவது வருடத்திலேயே -1998-ல், உலகக்கோப்பையின் அரையிறுதியில் பிரவேசித்திருந்ததை பலர் மறந்திருக்கக்கூடும்).

ரஷ்யாவில் நடந்துவரும் ஃபிஃபா (FIFA) உலகக்கோப்பை பலருக்கு விதவிதமான அதிர்ச்சிகளைத் தந்துவருகிறது. சிலரின் ஆணவத்தை சின்னாபின்னமாக்கியது. இன்னும் சிலரை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடியது. நடப்பு சேம்பியனான, ஜெர்மனி இறுதி லீக் மேட்ச்சில் கொரியாவிடம் உதை வாங்கி ஆரம்பசுற்றிலேயே அலறி ஓடிவிட்டது. லியோனெல் மெஸ்ஸியின் புகழில் நெஞ்சு நிமிர்த்திய அர்ஜெண்டினா, ஆரம்பத்திலேயே எல்லாம் மெஸ்-அப் ஆகி அரண்டு மிரண்டு ஓடியது. ஸ்பெயினும், க்றிஸ்டியானோ ரொனால்டோவை நம்பியிருந்த போர்ச்சுகலும், நெய்மாரின் பிரேஸிலும், பெரிதாக ஒன்றும் சாய்த்துவிடமுடியாமல் மற்ற நாடுகள் பார்த்துக்கொண்டன. போட்டி நடக்கும் நாடான ரஷ்யா, நன்றாக ஆடி, காலிறுதிவரை வந்து ரசிகர்களைக் குஷிப்படுத்தியது. அரையிறுதிவரை வந்த பெல்ஜியம் ப்ரான்ஸிடம் தோற்றது. ஒரேயடியாகக் குதித்துக்கொண்டிருந்த இங்கிலாந்து, அரையிறுதியில் க்ரோஷியாவிடம் எசகுபிசகாக மிதிபட்டு அழுதுகொண்டே வெளியேறியது.

விளைவாக, நடந்ததோ ஒரு கால்பந்து அதிசயம்! க்ரோஷியாவின் கண்மூடித்தனமான ரசிகர்களையே திக்குமுக்காடவைத்திருக்கும் நிகழ்வு. உலகக்கோப்பைக் கால்பந்து இறுதி ஆட்டத்தில் க்ரோஷியா இன்று ப்ரான்ஸுடன் மோதுகிறது. முடிவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதே நிலை. அரையிறுதிக்கப்புறம் தங்கள் நாடு திரும்பவிருந்த க்ரோஷிய ரசிகர்கள் தங்கள் தங்கள் டிக்கெட்டுகளை மாஸ்கோவில் மறுபதிவு செய்துவிட்டு ஓட்காவை உறிஞ்சிக் காத்திருக்கிறார்கள், ஞாயிறு ஃபைனலுக்காக!

க்ரோஷிய அணியில் மிட்-ஃபீல்டர்களான லுகா மோத்ரிச் (Luka Modric), இவான் பெரிஸிச் (Ivan Perisic) மற்றும் இவான் ரேகிடிச் (Ivan Rakitic) அசகாய சூரர்கள். மறக்கமுடியாத செண்டர்-ஃபார்வர்ட் மரியோ மாண்ட்ஸுகிச் (Mario Mandzukic). கூடவே அசத்தும் கோல்கீப்பர் டேனியல் சுபாஸிச் (Danijel Subasic). இவர்களது அபரிமிதத் திறமையினால்தான் க்ரோஷியா இன்று மாஸ்கோ ஃபைனலில் பிரவேசித்துள்ளது.

இதுவரை சிறப்பாக ஆடி இறுதியில் நுழைந்திருக்கும் ஃப்ரான்ஸிற்கு உலகக்கோப்பையைக் கைக்கொள்ளும் திறனனைத்தும் உள்ளதெனலாம். இந்த அணியின் கவனிக்கப்படவேண்டிய முன்னணிவீரர்கள் கில்யன் ம்பாப்பே (Kilyan Mbappe), ஆந்த்வா(ன்) க்ரீஸ்மான் (Antoine Griezmann), மிட்-ஃபீல்டர் பால் போக்பா (Paul Pogba) ஆகியோரோடு, கோல்கீப்பர் ஹூகோ யோரிஸ் (Hugo Lloris).

கடந்த ஒரு மாதமாக உலகக்கால்பந்து ரசிகர்களை போதையில் ஆழ்த்தியிருக்கும் ஃபிஃபா உலக்கோப்பை, கடைசியில் யாருடைய கையில்போய் இறங்கும்? தென்னமெரிக்க, மற்றும் மேலை ஐரோப்பிய நாடுகளுக்கிடையே இதுவரை சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கும் கோப்பை, சீறும் சிறுத்தையான க்ரோஷியாவிடம் சிக்கிவிடுமா இம்முறை?

**

9 thoughts on “FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா வென்றுவிடுமா?

  1. I always back under dogs வெக்கலாமா பெட் அதை அதிகார பூர்வமாக ஏற்றுக் கொவார்கள் போலிருக்கிறதே

    Liked by 1 person

    1. @Balasubramaniam G.M : கிட்டத்தட்ட நானும் அப்படித்தான். சில மேட்ச்சுகளில் கால்பந்துலகின் குட்டிகளான நைஜீரியா, தென்கொரியா, ஜப்பான் போன்றவை சிறப்பாக ஆடியதை ரசித்தேன்.
      இப்போது என் மனம் க்ரோஷியா என்றே ஆசைப்படுகிறது!

      Like

    1. @ஸ்ரீராம் :
      இதென்ன கேள்வி? க்ரோஷியாவுக்குத்தான். ஏற்கனவே செமிஃபைனலில் ஜெயிக்கையில் க்ரோஷியாவின் தலைநகர் ஸாக்ரப்பில் (Zagreb)மட்டுமல்லாமல், நாடே வீதிக்கு வந்து இரவெல்லாம் கொண்டாடியது. அந்த ரஷ்யாவுக்கெதிரான காலிறுதி மேட்ச்சை ரஷ்ய ஸ்டேடியத்தில் பார்த்துக்கொண்டிருந்த க்ரோஷிய லேடிஜனாதிபதி அங்கேயே ஆட ஆரம்பித்துவிட்டார்! Passion for Soccer. இன்று அவர்கள் ஜெயித்தால் நாடே நாட்டியமாடும்! போரினால் சின்னாபின்னமாகித் தலையெடுத்து வளர முயற்சிக்கும் சிறுநாட்டிற்கு சந்தோஷம் கிடைக்கட்டும் இந்த இரவினில்!

      Like

      1. அச்சச்சோ ஏ அண்ணன் என் வோட் ஃபிரான்ஸ்க்கு என பிட் பண்ணிட்டேன்ன்.. ஃபிரான்ஸ் வின் பண்ணினால் நேக்கு 35 பவுண்ட்ஸ் கிடைக்கும் ஹா ஹா ஹா:)).. பார்ப்போம்ம்

        Liked by 1 person

  2. @ athiramiya : நீங்க காலைல கரிக்குருவியாப் பாத்ததிலேதான் க்ரோஷியா தனக்குத்தானே கோல் போட்டுக்கும்படியா ஆயிருச்சு. இல்லாட்டி மேட்ச்சே வேறமாதிரி திரும்பியிருக்கும். ஞாயமில்லே இது! இருந்தாலும் அடுத்தாப்லயும் இன்னொரு உலகக்கோப்பை வரும்கிறதை மறந்துட்டுத் துள்ளப்படாது, 35 ஜெயிச்ச ஆனந்தத்தில..!

    Like

    1. ஹா ஹா ஹா ஏ அண்ணன், நான் ஃபிரான்சுக்காக சப்போர்ட் பண்ணல்லே:) தெரிஞ்சோ தெரியாமலோ பிட் பண்ணிட்டேன்ன்.. அதனாலதான் வெல்லோணும் என எதிர்பார்த்தேன் .. இருந்தாலும் என் கட்சியிலயே எப்பவும் இருந்த நீங்க.. கடசி நேரத்தில இப்பூடி ஓடிப்போய் எதிர்ணியினருடன் இருந்ததை அந்த கதிரமலை பழனியாண்டவர்கூட மன்னிக்க மாட்டார்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா ஹையோ மீ பழனிக்கு ஓடிடுறேன்:).

      Like

  3. க்ரோஷியாதான் வெற்றிபெறும் என்று எதிர்பார்த்தார்கள் என் கணவரும். ஆனால்.
    ஃபிரான்ஸ் ஜெயித்து விட்டது. தனக்கு தானே கோல் போடாமல் இருந்து இருந்தால் முடிவு க்ரோஷியாவிற்கு சாதகமாய் முடிந்து இருக்கும்.

    வெற்றி, தோல்வி நிலையில்லை தானே!

    Liked by 1 person

    1. @கோமதி அரசு s:

      நேற்று ஃப்ரான்ஸின் நாள் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டது. மேலும் இந்த டூர்னமெண்ட் முழுதுமே அவர்கள் நன்றாக ஆடியே ஃபைனலுக்கு வந்தார்கள். கப் அவர்களிடம் சென்றது சரிதான். இருந்தும் க்ரோஷியா இதை விட சிறப்பாக ஆடிவந்த அணி. நேற்று அவர்களின் ஃபார்வர்டுகளிலிருந்து கோல்கீப்பர்வரை அவ்வப்போது முழித்தார்கள் என்பது வேதனையான அம்யூஸ்மெண்ட்!

      Like

Leave a comment