ஐபிஎல்: மண்ணைக் கவ்விய மும்பை இண்டியன்ஸ்!

நேற்று (24-4-18) ஐபிஎல்-இல் குறைந்தபட்ச ஸ்கோர் போட்டியொன்று, காண சற்று விசித்திரமாக இருந்தது. மும்பை இண்டியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பையில் மோதிய போட்டி. எப்போதும் தோற்பதே நமக்கு வழக்கமாப் போச்சே..இந்தத் தடவையாவது ஜெயிச்சு, சச்சின் டெண்டுல்கரின் பிறந்த நாளில் அவருக்கு ஒரு வெற்றிப்பரிசு தரலாம் என நினைத்து மும்பை இண்டியன்ஸ் இறங்கியதாகத்தான் தோன்றியது ஆரம்பத்தில். நினைத்ததெல்லாம் ஒருவேளை, வாழ்க்கையில் நடந்துவிடலாம். ஆனால் ஐபிஎல்-இல் அப்படியெல்லாம் நடக்காது!

முதலில் ஆடிய ஹைதராபாத், ஆரம்பத்திலிருந்தே தடுமாறி ஒவ்வொரு விக்கெட்டாகப் பரிதாபமாகப் பறிகொடுத்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. முதல் மூன்று போட்டிகளை கம்பீரமாக வென்ற ஹைதராபாத், தோற்பதையே பொழுதுபோக்காகக்கொண்டிருக்கும் மும்பையை எதிர்த்து ஆடுகிற லட்சணமா இது? நம்பமுடியவில்லை. மிட்செல் மெக்லனகனின் (Mitchel McClenaghan) முதல் ஓவரிலேயே ஹைதராபாத்துக்கு மணி அடித்திருக்கவேண்டும். ஷிகர் தவனையும் சாஹாவையும் ஒரே ஓவரில் அவர் அலட்சியமாகத் தூக்க, கேப்டன் வில்லியம்சனும், மனிஷ் பாண்டேயும் பௌண்டரி அடிக்க ஆரம்பித்தனர். இந்த வருட ஐபிஎல்-லில் தன் முதல் மேட்ச் விளையாடிய ஆஃப்கானிஸ்தானின் முகமது நபியும், யூசுஃப் பட்டானும் இன்னும் ஆடவேண்டியிருக்க, ஒரு மதிக்கத்தக்க ஸ்கோரை ஹைதராபாத் எட்டும் எனவே தோன்றியது. ஆனால் பாண்டே, ஷகிப்-உல்-ஹசன், வில்லியம்சன் என அடுத்தடுத்து சரிந்து விழ, ஹைதராபாத் எக்ஸ்ப்ரெஸ் ஆட்டம் கண்டது. மும்பையின் தரப்பில் நன்றாக பந்துவீசிய மெக்லனகன், ஹர்திக் பாண்ட்யா, மயங்க் மார்க்கண்டே தலா 2 விக்கெட்டுகள் எனப் பலிவாங்கினர். ஹைதராபாத் 118 ரன் மட்டுமே எடுத்து, இன்று தொலைந்தோம் நாம் என மும்பையின் இரவு வானைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டது.

மும்பைக்கான இலக்கு 119 ரன் மட்டுமே. பூ! இவ்வளவுதானா..ஊதிருவோம்! என நினைத்து ஆட இறங்கியது மும்பை. ஹைதராபாதின் பௌலிங், வேகப்பந்துவீச்சாளர்களான புவனேஷ்வர்குமார், பில்லி ஸ்டான்லேக் (Billy Stanlake) இல்லாததால், பலகீனமாகத் தெரிந்ததும் ஒரு காரணம். ஆனால் அந்த இரவு மும்பை இண்டியன்ஸுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை மடியில் வைத்துக் காத்திருந்தது. பந்துவீச்சை ஆரம்பித்த சந்தீப் ஷர்மா அபாரமாக ஸ்விங் செய்ததோடு, கஞ்சத்தனமாக 3 ஓவரில் 9 ரன் மட்டும் கொடுத்து, மும்பையை தொடக்கத்திலேயே மூச்சுத் திணறவைத்தார். கூடவே எவின் லூயிஸையும் காலி செய்தார். ஸ்பின்னர்கள் ரஷித் கான், முகமது நபி, ஷகிப்-உல்-ஹசன் என ஹைதராபாத் குத்தாட்டம் போட, மும்பைக்கு அவசர ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. துவக்க ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் 34, ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்ட்யா 24, என்பதைத் தவிர மும்பையிடம் காட்டிக்கொள்ள ஸ்கோர் ஏதுமில்லை. ரோஹித் ஷர்மா உட்பட யாருக்கும் பிட்ச்சில் என்ன நடக்கிறதென்றே கடைசிவரை புரியவில்லைபோலும். ஒரு கட்டத்தில் 78 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பரிதவிக்க, ஹர்திக் பாண்ட்யா இன்னும் இருக்கிறார்..இலக்கை அடைந்துவிடலாம் என்கிற நப்பாசை மும்பை கேம்ப்பில் அப்போது கொஞ்சம் இருந்தது. ஆனால் டெஸ்ட் மேட்ட்ச்சிலேயே அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா இங்கே செய்ததென்ன? 19 ரன்களில் வெறும் 3 ரன். இலக்குப் பக்கம் வரவே முடியாமல், 19-ஆவது ஓவரில் 87 ரன்னில் ஆல்-அவுட்டாகிக் கேவலமாகத் தோற்று தன் தோல்விப் பட்டியலை நீட்டிக்கொண்டது மும்பை இண்டியன்ஸ். ஒரு கடினமான போட்டியை, 31 ரன் வித்தியாசத்தில் வென்றது ஹைதராபாத்.

இறுதியில் பார்த்தால், அப்படி என்னதான் நடந்தது? 118-க்குள் ஹைதராபாதைக் கட்டுப்படுத்தியதை, மும்பைக்கு அதனாலேயே நம்பமுடியவில்லை! தான் ஆடவரும்போது, பிட்ச்சில் ஏதோ பேய், பூதம் ஒளிந்திருக்கிறது என ஒரேயடியாகப் பயந்துவிட்டது. விளைவாக மிகையான ஜாக்ரதை உணர்வோடு அவ்வப்போது மும்பை பேட்ஸ்மன்கள் தடுப்பாட்டம் காண்பிக்க, ஹைதராபாத் பௌலர்கள் உள்ளே புகுந்து, பின்னிப் பெடலெடுத்துவிட்டார்கள். சித்தார்த் கௌல் 3 விக்கெட் சாய்க்க, பஸில் தம்பி, ஆஃப்கானிஸ்தானின் ரஷீத் கான் –தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 17 –ஆவது ஓவரை வீசிய ரஷீத், ஒரு ரன்னும் கொடுக்கவில்லை-அப்போது விளையாடிக்கொண்டிருந்தது ஹர்திக் பாண்ட்யா! இதிலிருந்தே எந்த மனநிலையில் இலக்கைத் துரத்தவந்தது மும்பை என்பது புரிந்துவிட்டிருக்கும். முடிவாக வெற்றிஇலக்கு, மும்பையைத் துரத்தி விரட்டிவிட்டது!

ஜொலித்த ஸ்பின் நட்சத்திரங்கள்: மயங்க் மார்க்கண்டே (மும்பை இண்டியன்ஸ்). ரஷீத் கான் (சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்)

**

4 thoughts on “ஐபிஎல்: மண்ணைக் கவ்விய மும்பை இண்டியன்ஸ்!

  1. http://www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    Like

  2. சாதாரணமாகவே ‘லோ ஸ்கோரிங் மேட்சு’களில் இரண்டாவதாய் ஆடும் அணி தோற்று விடுவது பெரும்பான்மை வழக்கம். நாம் நமது முதல் உலகக் கோப்பையையே அப்படிதான் பெற்றோம்! பாவம் ரோஹித் மனைவி…. கண்கலங்கிப் போயிருப்பார்.

    டெல்லி அணி கேப்டன் பதவியிலிருந்து காம்பிர் இறங்கி ஷ்ரேயஸ் ஐயருக்கு அந்தப் பதவியைக் கொடுத்து விட்டதாகத் தகவல்! ஒன்று தெரியுமோ…? நான் ஐ பி எல்லே பார்ப்பதில்லை!

    Liked by 1 person

    1. @sriram:
      ரோஹித் மனைவிக்குக் கண்கலங்குவதே வேலையாகிவிட்டதே. அப்பா ரோஹித்..கொஞ்சம் அடித்து விளையாடு!

      கம்பீர் கேப்டன்சியைக் கழட்டிவிட்ட செய்தியை நானும் மாலையில் கண்டேன். ஷ்ரேயஸ் ஐயர் ஓகே. அவருடைய பேட்டிங் பாதிக்கப்படாமல் இருந்தால் சரி.

      ஐபிஎல்-ஏ நீங்கள் பார்ப்பதில்லையா? ஐபிஎல் செய்த பாவந்தான் என்ன!

      Like

  3. இவை கிரிக்கெட் மேட்ச் போலவே இல்லை. எப்படி தோற்பது என்று விளையாடுவது போல இருக்கிறது. யாரோ கதை எழுத விளையாடுபவர்கள் நன்றாக நடிக்க நாம் பார்க்கும் நாடகம் என்று தோன்றுகிறது!

    Like

Leave a comment