சென்னை க்ரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நாள் இன்று. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னையின் சேப்பாக் மைதானத்தில் ஆடுகிறது. எதிர் அணி தமிழ்நாட்டின் ஹாட்ஸ்டார் தினேஷ் கார்த்திக் தலைமை தாங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். மோதல் அதகளமாக இருக்கும் என ரசிகர்கள் சூடாக இருக்கிறார்கள். மும்பைக்கெதிரான ஐபிஎல்-இன் ஆரம்பப் போட்டியில் கடைசி ஓவர் சிக்ஸரினால் தப்பித்த சிஎஸ்கே, இன்று சொந்தமைதானத்தில் வெல்லுமா?
கல்கத்தா அணியின் ஸ்பின்னர்கள் சமாளிக்கக் கடினமானவர்கள். சுனில் நாராய்ன், குல்தீப் யாதவ் மற்றும் பியுஷ் சாவ்லா. கூடவே வேகப்பந்துவீச்சாளர்களாக மிட்ச்செல் ஜான்ஸன், வினய் குமார் மற்றும் ஆந்த்ரே ரஸ்ஸல். ஒருவேளை, 18-வயதான, அண்டர்-19 அணியின் வேகப்புயல் கம்லேஷ் நாகர்கோட்டி இன்று கல்கத்தா அணியில் விளையாடக்கூடும். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூரின் கை ஓங்கியிருந்தபோது, கல்கத்தாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மனான நிதிஷ் ரானாவை ஆஃப் ப்ரேக் போடச்சொல்லி திடீரென நுழைத்தார் தினேஷ் கார்த்திக். அதுவரை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டி வில்லியர்ஸ், கேப்டன் கோலி அசந்துபோனார்கள். இது யாருடா புது பௌலர்? கொஞ்சமும் எதிர்பாராதபடி, இருவரையும் ஒரே ஓவரில் காலி செய்தார் ரானா. அந்த அடியிலிருந்து
கோலியின் பெங்களூர் விடுபடமுடியாமல் மேட்ச்சையும் தோற்றது. இப்படி ஏதாவது செய்து, சென்னையை மெர்சலாக்கக்கூடும் தினேஷ் கார்த்திக்!
பேட்டிங்கில் சுனில் நாராய்ண் துவக்கி அதிரடி காண்பிக்க முயல்வார். க்றிஸ் லின் ஜோடி சேரக்கூடும். மிடில் ஆர்டர் ராபின் உத்தப்பா, நிதிஷ் ரானா, கார்த்திக், ஆந்த்ரே ரஸல் ஆகியோரின் கையில் இருக்கிறது. சென்னையின் தோனி அமைக்கும் பௌலிங் வியூகங்களை இவர்கள் சமாளித்தால், கல்கத்தாவுக்கு 180-190 என நல்ல ஸ்கோர் எகிறும்.
சென்னையின் மஞ்சள் சட்டைகளின் பலம் எப்படி? முதல் போட்டியில் படுமோசமாக ஆடிய சென்னை அணி, ப்ராவோ, ஜாதவின் அதிரடியால்தான் தப்பித்தது. இவர்கள் இருவரையும் தவிர மற்றவர்கள் அன்று தடவிக்கொண்டிருந்தார்கள். இன்றைய மேட்ச்சில் காயம் காரணமாக, கேதார் ஜாதவ் விளையாடமாட்டார். பேட்டிங்கில் முன்னேற்றம் காட்டாவிட்டால், சென்னையின் பாடு திண்டாட்டம்தான். தோனியோடு, ரெய்னா, ப்ராவோ, அம்பத்தி ராயுடு, வாட்ஸன், ஜடேஜா – இவர்களில் யாராவது மூன்று பேராவது பேட்டிங்கில் கலக்கியாகவேண்டும். இல்லையெனில் கல்கத்தா கமால்வேலை காட்டிவிடும். சென்னையின் வேகப்பந்துவீச்சாளர்களாக, டுவெய்ன் ப்ராவோ, தீபக் சாஹர், மார்க் உட் மற்றும் ஷர்துல் டாக்குர், இறங்குவார்கள் என நம்பலாம். ஸ்பின்னில் சர்தார்ஜி ஏதாவது செய்வாரா? சேப்பாக் ஸ்டேடியத்தை சரியாக அறிந்தவர் என்னைவிட வேறு யாரும் இல்லை என்று ட்வீட் விட்டவராயிற்றே! பந்துவீச்சு உண்டா, வெறும் வாய்வீச்சுதானா?
சென்னை ரசிகர்களின் மனதில் ஒரு துறுதுறுக்கும் கேள்வி. சிஎஸ்கே-வுக்காக, தமிழன் ஒருவனாவது விள்சையாடுவானா இந்த மேட்ச்சில்? முரளி விஜய் துவக்க ஆட்டக்காரராக இறங்கினால்தான் உண்டு. விஜயையும், அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பரான ஜெகதீசனையும் விட்டால் வேறு தமிழர்களே இல்லை அணியில். சிஎஸ்கே முதலாளிகள் அணிவீரர்களை ஏலம் எடுத்திருக்கும் லட்சணம் இது. இப்படி மோசம் செய்துவிட்டு, விசில்போடு, அப்பிடிப்போடு, இப்பிடிப்போடுன்னு எனப் பாட்டுப்பாடி என்ன பிரயோஜனம்?
இதற்கிடையே – ஏய்! ஐபிஎல்-ஐ நிறுத்து.. ஏதாவது நடந்தால் நாங்கள் பொறுப்பில்லை! –என்றெல்லாம் ஞொய்..ஞொய்…என்று சுத்திசுத்தி ஓலமிடும் நுளம்புகள் வேறு. கொசுக்கடி தாங்கமுடியவில்லை சென்னையில்!
**
CSK vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி பற்றிய இந்தப்பதிவு மேலும் டென்ஷன் ஏற்றியுள்ளது. http://agharam.wordpress.com என்னுடைய அகரம் வலைதளத்தை மேட்சிற்குப் பிறகு முடிந்தால் பாருங்களேன்.
LikeLiked by 1 person
@முத்துசாமி இரா :
நீங்கள் சொன்னபடியே மேட்ச்சிற்குப்பின் உங்கள் தளத்திற்கு வருவேன்!
LikeLike
பலமாதங்களுக்கு முன்பே நிகழ்ச்சி நிரல் அறிவிக்க நேற்று வந்தவர்கள் வாய்ச்சவுடால் வீசுவது சரியல்ல என்றே தோன்றுகிறது
LikeLiked by 1 person
@ Balasubramaniam G.M :
நீங்கள் சொல்வது சரியே.
க்ரிக்கெட் -அதுவும் ஐபிஎல்-லோடு மோதினால் மலிவான பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதுதான் இத்தகையோரின் நோக்கம். நேஷனல் சேனல்களை செக் செய்தேன். அவர்கள் இதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.
இத்தகைய அர்த்தமற்ற அலம்பல்களினால் , சாதாரண மக்களுக்குத் துன்பம் வந்துவிடக்கூடாதே என்பதே நம் கவலை.
LikeLike
ஆட்டம் கலவரமாக நடக்க இருக்கிறது. மதியம் தொலைக்காட்சியில் பாரதிராஜா, கவுதமன் உள்ளிட்ட இயக்குனர்களும், மணியரசன், தமிமுன் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் கச்சை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். என்ன ஆகுமோ? என் மகன் வேறு அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு தல தரிசனத்துக்குச் சென்றிருக்கிறான். நானும் கலவரமாகவே உள்ளேன்.
LikeLiked by 1 person
தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்சி அன்று நன்றாயிருந்தது. அவர் பேசிய ஒரு வீடியோ வாட்ஸாப்பில் வளம் வருகிறது. ஆர் சி பியை வெற்றி கொண்ட அன்று யார் யாருக்கோ ஆட்டோகிராப் போட்டுக்கொண்டே “மாஸ் காட்டறாங்க ஸி எஸ் கே.. இல்ல?” என்று பேசிக்கொண்டிருக்கும் வீடியோ!
LikeLiked by 1 person
@ஸ்ரீராம் :
எத்தனையோ வருடங்கள் , எத்தனையோ கஷ்டங்கள். எத்தனை ஆட்சிகள். எத்தனை அக்கப்போர்கள். ஏதேனும் சாதிக்க முடிந்ததா இந்தவிஷயத்தில்? க்ரிக்கெட்டும் அதன் ரசிகர்களும் அதற்கென்ன செய்யமுடியும்? வேறெந்த நாட்டிலாவது இப்படி
அடாவடித்தனங்கள் நடக்குமா? ஹை-ப்ரொஃபைல் ஐபிஎல் போட்டிகளைச் சீண்டினால் நாமும் டிவி-யில், பத்திரிக்கையில் வருவோம் என்கிற அல்ப ஆசை. வேறென்ன ? நேஷனல் சேனல்களே கண்டுகொண்டதாகத் தெரியவில்லை -இதுவரை.(இரவு 7)
பயப்படாதீர்கள். உங்கள் பையன் தலயைப் பார்த்துவிட்டு, தலையைக் கோதிக்கொண்டு அமைதியாக வந்துசேர்வான்!
தினேஷ் கார்த்திக் – ஒரு under-rated star. நல்ல மனிதர். அவருடைய சிஎஸ்கே கமெண்ட்டை நான் மீடியாவில் படித்தேன்.
LikeLike